ஶ்ரீ:
பதிவு : 544 / 737 / தேதி 03 நவம்பர் 2020
* எல்லைகளை அறிய *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 22.
பாலன் வீட்டில் கூடும் இரவு நேர சந்திப்புகளில் கலந்து கொள்பவர்கள் பேசிக் கொள்ளும் சம்பவங்களை ஒட்டு மொத்தமாக தொகுத்துக் கொண்டு பின்னர் அதை மாற்றி போட்டு அடுக்குவதும்,அவர்களது உணர்வுகளை என்னுள் மீள மீள நிகழ்த்தி பார்ப்பது ஒருவகை கிளர்தலை கொடுத்திருந்தது .அவர்களின் உணர்ச்சிகளை அதில் இருந்து கழித்துவிட்டு வெறும் தகவலாக அடுக்கி வைத்துக் கொள்வதும் , பின்னர் அடுக்கப்பட்டவைகளில் இருந்து அவர்கள் எப்படி அதில் பிணக்கப்படுகிறார்கள் என்பதையும்,அதில் உள்ள தொடக்கம் இறுதி விளைவும் , முடிவுறாத பின்விளைவுகளையும், ஒரு நாவலைப் போல நினைவில் விரித்தெடுத்துக் கொள்ள முயன்றிருக்கிறேன். தொடக்க காலத்தில் அவற்றில் இருந்து சரியாக நிகழ்த்தப்பட்டவை, நிகழ்த்தப்படாதவை என எனது புரிதல் இரண்டாக பிரிந்திருந்தது . ஆனால் அவை பிழை என மிக விரைவில் தெரிந்து போனது . காரணம் அரசியலில் யாரும் எதையும் நிகழ்த்திவிடுவதில்லை ,நிகழ்வதில் இருந்து தங்களின் நிலைகளை கண்டடைகிறார்கள். அவற்றை தங்களின் உரையாடல் வழியாக பேசி பேசி புனைந்து அதில் தன்னுடைய பங்காக அதன் அர்த்தத்தை மாற்றி சொல்ல நினைப்பவர்களின் அத்தனை சாத்தியகூறுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து பிரித்துப் பிரித்துப் பார்ப்பது பிறிதொரு அனுபவமாக இருந்தது .ஆனால் அவை மேலும் மேலும் வினாக்களையே உருவாக்கி வைத்தது . ஒரு போதும் விடைகளை அல்ல .
எந்த ஊரில் சிறு கூடுகை நடத்தினாலும் அந்த ஊரைச் சேர்ந்த சுதந்திர போராட்ட பெரியவர்களை தேடிச் சென்று சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். புதுவை அரசியல் வரலாற்றில் அவர்களுக்கான இடம் தவிர்க்க இயலாதது என்று கருதினேன்.அவர்கள் அனைவரையும் , அனைத்தை பற்றிய செய்திகளையும் தெரிந்து வைத்துக் இருப்பது எனக்கு மிக முக்கியமானதாக கருதினேன்.அவர்களுடன் அரசியல் பற்றிய உரையாடல்களுக்கு அவர்கள் அளித்த புதிய அரசியல் கோண விதைகளைப் போல இருந்ததன . அவற்றில் சில அப்போதே முளைத்தன , சில காலம் கழித்து முளைத்தவை இன்னும் முளைக்காதவைகள் என்று .முளைக்கவே முடியாத சில எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன . அரசியலை விட்டு வெளியேறிய பின்னரும் சில முளைத்துக் கொண்டே இருக்கின்றன . இப்போது அந்த அரசியல் தகவல்களை உலகியல்லில் போட்டுப் பார்த்து அவற்றை உளவியல் குறித்த நுட்பங்களாக பார்க்கத் தொடங்கினேன் . அவை முளைத்து காடாக விரிந்து கொண்டே இருக்கின்றன . காடு ஆழ்மனத்திற்கு அனுக்கமானது . தன்னை உள்நோக்கிய பார்வையை கொடுப்பது .அனைத்து அரசியல் நிகழ்விற்கும் புதிய அர்த்தம் கொடுப்பாதக இருக்கிறது .
சுதந்திர போராட்டகாரர்களுடானான உரையாடல்களில் அவர்கள் முதலில் அவர்கள் நடப்பு அரசியல் குறித்து பேச விரும்பாதவர்களாக அல்லது தயங்குபவர்களாக, அதன் மீது கடும் காழ்ப்பும் வெறுப்பும் கொண்டிருந்தனர். அவற்றை பற்றி இப்போது அது பேசி ஆவது என்ன? என்பது போல எண்ணம் இருந்தாலும் பேசத் துவங்கிய பின்னர் அதில் அடித்து செல்பவர்களாக மெல்ல சரளமாக பலவற்றை தங்களது நினைவில் இருந்து எடுத்து வைத்துக் கொண்டே இருந்தனர் . அனைவரிடமும் பொதுவாக இருந்த காணப்பட்ட ஒன்று, ஒரு நிகழ்வை சொல்லி முடித்து பின்னர் தாங்கள் நினைத்தது,பின்னர் அது என்னவாக நடந்தது முடிந்தது என எப்போதும் சொன்னார்கள் . அனைத்திலும் அவர்களின் விரக்தி ஒன்று போல இருந்தது. அரசியலின் கொடும் முகம் அது . அவ்வப்போது தயக்கத்தை கொடுத்தாலும் நினைத்ததை நோக்கி பயணப்படும் வாய்ப்பை,உற்சாகத்தை அது ஏன் குலைக்கவில்லை எனக் யோசித்ததுண்டு .மறுமுறை தேடிச்சென்று சந்திக்கும் போது அவர்களின் மனநிலை பெரும் மாற்றமடைந்திருந்தது.கட்சியின் முக்கிய நிகழ்விற்கு அழைக்கும் போது தவறாமல் கலந்து கொள்வதை பார்த்திருக்கிறேன்.அவர்களை கட்சி நிகழ்வில் மீளவும் பார்க்க நேரும் போது தலைவர் சண்முகம் அடையும் திகைப்பு எனக்கு உற்சாகத்தை தருவதாகவும் மேலும்மேலும் அவர்களை போன்றவர்களை தேடிச் சென்று சந்திப்பதை தீவிரமாக்கியது.
அவர்களிடமிருந்து பெறும் தகவல்களில் உள்ள அரசியல் குறித்த விடை தெரியாத கேள்விகள் அனைத்தையும் அதன் மையப்புள்ளியான தலைவர் சண்முக்கத்திடமே கேள்விகளாக எழுப்பிய போது, அவரிடம் மெல்ல படரும் பதற்றமும், அந்தக் கேள்விகளை எங்கிருந்து அடைகிறேன் என்று திகைப்பும் எழுவதை கவனித்து இருக்கிறேன்.அவை அனைத்திற்கும் பிறிதொரு நோக்கத்தை முன்வைத்தார் . தொடர் உரையாடல் எங்களை இன்னும் அனுக்கமாக்கியது. அவர் எங்கு பயணப்பட்டாலும் நான் அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவர் எனக்கு தந்து கொண்டே இருந்தார் . முக்கியமாக இரவு நேரக் கார் பயணத்தின் போது தனிமையில் நடைபெறும் உரையாடல்கள் மிக மிக அகவயமானதாக நெருக்கத்தை கொடுப்பதாக இருந்தது .அவை சட்டென கேள்விகளில் உள்ள புதிய முதல் புள்ளியை கண்டடைய வைத்து விடும் .அவை மட்டும்தான் உண்மையா? என்றால் , இல்லை அதுவும் உண்மை. அதையும் கடந்து நமக்கு புரியாத உன்மை பிறிதொன்று இருக்கிறது . அரசியலில் அவர் எல்லாவற்றிலும் முடிவெடுப்பதோ, தன் கருத்தை அழுத்தமாக முன்வைப்பதோ வழக்கமில்லை . கால சூழலை ஓட்டி உருவாகி வருபவைகளில் இருந்து எதிர்காலத்தில் அவை என்ன நெருக்கடியை உருவாக்கும் ,அதில் தன்னை எதிர்ப்பவர்களின் எதிர்விணை என்னவாக இருக்கும் என்பதுடன் அதில் தனக்கானதை கண்டுகொள்வதும் அதை ஒட்டி புதிய கணக்குகளை உருவாக்கிக் கொள்வதையும் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன் . அது பிறிதெவரின் கணக்கை விட பெரியது. அவற்றில் சிலவற்றிற்கு அவர் விடையைப் போல ஒன்றைத் தந்தாலும் கேள்வியின் பிசிறு எப்போதும் உறுத்தலைப் போல இருந்தது கொண்டிருந்து . அதன்பின் எனக்கான விடையை நான் அவரிடம் முனைந்து தேடுவதில்லை. அதற்கான தேடுவிசை என்னிடம் இல்லை என்பதும் , அதன் கச்சாப் பொருளான தகவல்கள்களும் அதன் தொகுப்பும் முழுமையாக என்னிடம் இல்லை என்பது முக்கிய காரணம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக