அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு அரிகிருஷ்ணன் அவர்களுக்கு
தங்கள் கடிதம் கிடைத்தது, நன்றி. நான் இன்றுதான் ஊர்திரும்பினேன். கோவையிலிருந்து கண்ணனூர் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டு வந்தேன்.
தாங்கள் என்னிடம் பேசியதை நினைவுறுகிறேன்.அப்போதே என்னுடைய சில தயக்கங்களைச் சொல்லிவிட்டேன் மீண்டும் எழுத்தினூடாகச் சொல்கிறேன்
என் வழி பக்திமார்க்கம் அல்ல. நான் பலநூறு கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். சிற்பங்களையும் கட்டிடக்கலையையும் பிற நடைமுறைகளையும் பதிவுசெய்துள்ளேன். ஆனால் வழிபட்டதில்லை. எனக்கு சோதிடம் சடங்குகள் ஆகிய எதிலும் நம்பிக்கை இல்லை. தூய அத்வைதமே என் வழி. அறிவும் அறிதலும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றேயாகும் நிலை என்பதே அதன் நோக்கு என நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
ஆனால் தமிழகத்தில் சென்ற ஆயிரமாண்டுக்காலமாகவே பக்திதான் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. பக்தி என்பது கேள்விகளற்ற, அறிவுக்கு இடமற்ற மூர்க்கமான அர்ப்பணமாகவே இங்குள்ளது. பக்தி இங்கு பல்லாயிரம் நம்பிக்கைகளை உருவாக்கி அவற்றை வளர்த்து வருகிறது. நான் பக்தியை எதிர்ப்பவன் அல்ல, அதை மறுப்பதுமில்லை. ஆனால் பக்தி அற்றவன் என்பதே பக்தர்களை சீறச்செய்கிறது. எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பதனாலேயே ஒருவர் கோவை கீதைக்கூட்டத்தில் என்னிடம் வருத்தம் அடைந்தார்.
விசிஷ்டாத்வைதம் இந்தியாவின் மகத்தான தத்துவசிந்தனைகளில் ஒன்று என்பதே என் எண்ணம். அது தொன்மையான வேதாந்தத்தின் வளர்ச்சிநிலைகளில் ஒன்று. வேதாந்தம் கொள்ளும் பல்வேறு தோற்றங்களில் முக்கியமானது. ராமானுஜர் வேதாந்தத்தை அழகியலுடன் இணைக்கமுயன்ற தத்துவஞானி. ஆனால் வேதாந்தத்தை ‘ஒரே’ மெய்ஞானமாகவும் ராமானுஜரை தெய்வ வடிவம் கொண்ட ஆசாரியனாகவும் கருதும் ஒருவர் என்னுடன் ஒத்துப்போக மாட்டார். அது பரவாயில்லை, அவர் என்னிடம் முரண்பட்டு என்னை முதல் எதிரியாக எண்ணவும்கூடும்.
இச்சூழலில் நீங்கள் அமைக்கவிருக்கும் அமைப்பில் நான் என்ன பங்களிப்பாற்றமுடியும் என புரியவில்லை. நான் எந்த மடாதிபதிகளையும் பணிவதில்லை. எங்கும் தலைவணங்குவதுமில்லை,என் குருநாதர்களைத் தவிர. அதெல்லாம் கசப்புகளை உருவாக்கலாம்.
இதையெல்லாம் நீங்கள் யோசித்திருந்தீர்கள் என்றால் நான் உங்களுடன் இணைந்து பணியாற்றமுடியும்
இன்னொன்று, நான் மகாபாரதத்தை முழுமையாக மறுஆக்கம் செய்யும் பெரும்பணியில் இருக்கிறேன். கூடவே வேறுநூல்களையும் எழுதுகிறேன். கீதை உட்பட நூல்களுக்கு நவீன தத்துவயியலின் வெளிச்சத்தில் உரையெழுதும் முயற்சியில் இருக்கிறேன். ஒருநாளில் 10 மணிநேரம் வேலை. இப்போதுதான் கோவை நண்பர்கள் சிலர் கூடி எனக்கு பேச்சை தட்டச்சு செய்துதரும் நண்பருக்கு முறையான ஊதியமளிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை மாதம் 20000 ரூபாய் நானே அளித்துவந்தேன். அதை சினிமாவில் சம்பாதிக்கவேண்டும்.
ஆகவே என்னால் நிறைய கலந்தாலோசனைகளில் பங்கெடுப்பது போன்றசெயல்களில் நேரம் செலவழிக்கமுடியாது.ஆக்கபூர்வமாக மட்டுமே செயல்படமுடியும்
இவற்றை எண்ணிப்பார்த்தபின் எனக்கு எழுதவும். அனைவருக்கும் ஒப்புதல் என்றால் நாம் சேர்ந்துசெயல்படலாம்.
நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று எனக்குப்புரிகிறது. ராமானுஜர் ஆயிரமாண்டு விழாவை இந்திய அளவில் கவனிக்கப்படத்தக்க நவீன நிகழ்ச்சியாகவே ஒருங்கிணைக்க முடியும். பல்லாண்டுகளாக நான் அந்தச்சூழலில்தான் இருந்துவருகிறேன்
ஜெ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக