https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 12 மார்ச், 2017

அடையாளமாதல் -2 (கட்சியில் இனைதல்)


அரசியல் களம் -2

கட்சியில் இனைதல்



அது ஒரு செவ்வாய் கிழமை நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்று சேகர் சொன்னான்,எனக்கும் அதில் நம்பிக்கை இருந்தாலும் பரபரப்புக்கு முன்னிலை கொடுக்கும் போது வேறு எதுவும் முக்கியமல்ல என்று தோன்றியது. பின் காலை பதினொரு மணிக்கு மேலிருக்கும் என் எஸ்டி வண்டியில் சேகருடன் புறப்பட்டேன்.எனக்கு காரில் செல்வதை விட பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் .என் வண்டி புல்லட் மாதிரி இருக்கும் ஆனால் அவ்வளவு எடைமிகுந்ததாக இருக்காது சிற்சில விசேஷங்கள் உண்டு.அப்பா வாங்கிக் கொடுத்தது. இப்போது அது இப்போது தயாரிப்பில் இல்லை.

சேகர் எனது சிறு வயது நண்பன் கோபாலுடன் பஞ்சாலையில் ஒன்றில் வேலை செய்பவன்.இளைஞர் காங்கிரஸில் சேரப்போவதாக கோபாலிடம் சொன்ன போது , தலையிலேயே அடித்துக்கொண்டான் என் புத்தி ஏன் இப்படி போகிறது என்று ஆரம்பித்து ஏகத்துக்கு உபதேசம்.இளைஞர் காங்கிரஸ் தலைவர் அவன் ஊர்காரர் . அவர்மேல் அவனுக்கு எந்த மரியாதையும் இல்லை என்று எனக்கு முன்பே தெரியும் .அவன் சொன்ன எதையும் நான் பொருட்படுத்தமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன் , ஒரு கட்டத்திற்கு மேல் ஒழி, என்று சேகரை அறிமுகம் செய்து வைத்தான். சேகர்,மெலிதாக  வெள்ளை கஞ்சிபோட்ட கதர் சட்டையும் வேட்டியில் தோரணையாக தெரிந்தான்.

சேகரிடம் என்னை கட்சியில் சேர அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தார்கள்.அது முதலியார்பேட்டையில் கடலூர் சாலையும் உப்பளம் சாலையும் சந்திக்கும் இடத்தில் இருந்தது. ஒரு முக்கோண மனை . பக்கவாட்டில் சின்ன இரும்பு கேட் நுழைவாயிலுக்கு உள்ளே திட்டு மாதிரி சிறிய திறந்தவெளி.பின்பக்க சாக்கடை ஓரமாக இரண்டு பெரிய மரம் ,என்ன மரமென்று நினைவில்லை, இரண்டிற்கும் இருந்த சிறிய இடைவெளியில் இரண்டையும் இனைத்து ஒரு பலகை அடிக்கப்பட்டு இரண்டு சவுக்கு கால்களில் பென்ச் மாதிரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

தலைவர் இன்னும் வரவில்லை என்று சேகரிடம் அங்கு பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஒரு பெருசு சொல்லிக் கொண்டிருந்தார். கிராமத்து வயதானவர், கரும்பலகை போல நிறம் கஞ்சி போடாத வெள்ளயும் சொள்ளையுமாக இருந்தார். இங்கு கிடைக்கும் ஓசி டீ பேப்பருக்கு வந்திருப்பார் போல. என்னை காட்டி சேகர் அவரிடம் ஏதோ சொன்னான் , சுவாரஸ்யமில்லாது என்னை ஒருமுறை பார்த்து பின் விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.

நான் எதிலும் கவனம் செலுத்தாது அந்த மரப்பலகையில் மேல் உட்கார்ந்து கொண்டேன்.கொஞ்சம் உயரமாக இருந்ததால் கால் தரையில் படியவில்லை . விழுந்து விடவோமோ என்ற பயம் எழுந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்த போது , யாரும் என்னை கவனிக்கவில்லை என்றதும் சிறிது நிம்மதியாக இருந்தது.

யாரோ சிலர் வருவதும் போவதுமாக இருந்தனர் . பின்புறம் சாக்கடையில் இருந்து நீராவி எழுந்து நாற்றமடித்தது . அலுவலகத்தை ஒட்டி கீற்று இறக்கி பலகை அடித்து ஒரு சின்னதாக ஒரு பூக்கடை .அங்கு ஒரு ஆள் உட்கார்ந்தபடி கால் கட்டைவிரலில் மாட்டி மேலேயிருந்து நார்வழியாக மிக இயல்பாக யாருடனோ பேசியபடி மாலை கட்டிக்கொண்டிருந்தார். நான் சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த ஆதராத்தில் அந்த பூக்கள் நிற்கின்றன எனப் புரியவில்லை. நளசம்பங்கி துலுக்க சாமந்தி வாசனை சாக்கடை நாற்றத்தை மீறி வீசியபடி இருந்தது.

கட்சி அலுவலகத்திற்கு வந்த சிலர் சுவாரஸ்யம் ஏற்பட்டு தங்களுக்குள் யார் என்று விசாரிக்க ஆரம்பித்தனர். பின் அவர்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டே என்னைத் தாண்டி வெளியே சென்றனர் .இந்த கோபால் நாயி ஏதாவது சொல்லியிருப்பான் போல, அவனை செருப்பாலே அடிக்க வேண்டும் என்று தோண்றி கோபமாய் வந்தது .

கல்கட்டட கட்சி அலுவலகம், ஏசி ரூம் ,தலைவர்களின் கூட்டம் என்று ஏகத்திற்கு கற்பனையோடு வந்த எனக்கு , கிராமத்து பஞ்சாயித்து டீ கடை மாதிரி இருந்த அந்த இடம் சற்று திகைப்பை கொடுத்து. சேகர் அருகில் வந்து தலைவர் வருவதற்கு சிறிது நேரமாகும் , வெளியில் உட்காரந்திருக்க வேண்டாம் அலுவலகத்திற்கு உள்ள காத்திருக்கலாம் என்றான்.

அந்த சிறிய திறந்தவெளிக்கு மேற்கு புறமாக ஒரு கீற்று கெட்டகை. வாசல் சிறிதாக ஒருவர் குனிந்து செல்லும் படி இருந்தது . உள்ளே நுழைந்ததும் , அப்படி ஒன்றும் சிறியதாக இல்லை . நான்கு பக்கமும் ஓரால் உயரத்துக்கு மன் சுவர் எழுப்பி சிமன்ட் ஜாலி வைத்து இருபதுக்கு முப்பது அளவில் பெரிதாக இருந்தது . உள்சுவர் முழுக்க போஸ்டர் ஒட்டபட்டு பழயதாகி இருந்தது . எங்கோ மைதாமாவு வாடை போஸ்டர் ஒட்டுவதற்கு பசை காய்ச்சி வைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன் . அது தேர்தல் நேரம்.

உள்ளே இரும்பு மடக்கு நாற்காலியை யாரோ விரித்துப் போட நானும் சேகரும் அருகருகே அமர்ந்து கொண்டோம். அங்கு ஏற்கனவே சிலபேர் டீ குடித்தபடி சத்தமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் , நாங்கள் உள்ளே வந்ததும் எங்களைப் பார்த்து சிறிது நேரம் பேச்சை நிறுத்தி, பின் எந்த பாவனையும் இன்று திரும்பவும் சத்தமாக பேச ஆரம்பித்தனர். அவர்களுக்கு சேகரை தெரிந்திருக்கவில்லை என்று புரிந்தது .ஏனோ சிறிது ஏமாற்றமாக இருந்தது.

என்ன பேசுவது எனப் புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்த என்னிடம் சேகர் டீ சாப்பிடலாமா? என்றான்.நான் டீ குடித்ததில்லை காபிதான். அனால் அதை சொல்ல வேண்டாம் என்பதால் , வேண்டாம் என்று சொன்னேன்.நேரம் சென்று கொண்டே இருந்தது, என்ன செய்வது எனப் புரிவில்லை. பிறகு மெல்ல நான் டீ சாப்பிடலாமா என்றதும் சேகர் என்னை வெளியே உப்பளம் ரோடில் இருந்த சின்ன டீ கடைக்கு அழைத்துச் சென்றான் .

டீ சாப்பிட்டு விட்டு கட்சி அலுவலகம் அருகில் வந்ததும், சிறிய மாற்றத்தை உணரமுடிந்தது. சேகர் தலைவர் வந்து விட்டார் என்று கட்சி அலுவலக நுழைவாயில் அருகே யாருடனோ பேசிக் கொண்டிருந்தவரை காட்டினான். பின் அவரை நோக்கி வேகமாக நடந்து சென்றான் . நான் சிறிய தயக்கத்துடன் பின் தங்கிவிட்டேன்

கஞ்சி போட்ட கதர் சட்டை கரையில்லாத வேட்டி . நல்ல சிகப்பான நிறம் நடுத்தர உயரம் லேசான தொப்பை ,முழுக்கை சட்டையை சிரத்தையாக மடித்து கை முட்டி வரை ஏற்றி விடப்பட்டு தாடிவைத்த முகம். பேசும் போது எச்சில் தெரித்தபடியே இருந்தது. வாய் அமைப்பில் ஏதோ சரியில்லை என அனாவசிய சிந்தனையுடன் நெருங்கியதும் சேகர் அவர் அருகில் சென்று ஏதோ சொன்னான். திரும்பி என்னை பார்த்தவரை நோக்கி நான் வணக்கம் சொன்னேன். எந்தவித முகபானையும் இல்லாமல் திரும்பவும் தன் பேச்சை தொடர்ந்தார் .சேகர் அவரிடமிருந்த வலகி என்னை நோக்கி வந்தான் .

கட்சி அலுவலகம் உள்ளே மறுபடியும் காத்திருக்க தொடங்கினோம். எனக்கு தலைவரிடமிருந்த ஒரு அலட்சியம் உறுத்த தொடங்கியது. மெல்ல ஒரு குரங்கு மனதிற்குள் ஏற ஆரம்பித்தது . அதை அடக்கிவிட்டு, ஒன்றும் பேசாது சேகருடன் அலுவலகத்திற்கு உள்ளே தலைவருக்காக காத்திருந்த நேரத்தில் திடீரென எழுந்து சென்றுவிடலாம் என்று ஒரு எண்ணம் எழுந்தது. அந்த பத்து பதினைந்து நிமிடத்திற்குள் ,உள்ளே என்னை  நோக்கி வந்த தலைவர் , என்னை தனியாக அழைத்து சிமென்ட் ஜாலி ஓரம் சென்றார் . ஆளும் அரசாங்கத்திடம் எனக்கு என்ன ஆகவேண்டும் என்றும் தான் அதற்கு என்ன செய்யவேண்டும் என கேட்டபோது . நான் என்னவென்று புரியாது பிங்களனைப் போல கட்சியில் சேரவந்திருப்பதாக சொன்னேன் . என்னை உறுத்துப் பார்த்துவிட்டு கூடத்தின் நடுவே போட்டிருந்த நாற்காலியில் சென்று உட்கார்ந்தார், பக்கத்தில் அமர்ந்திருந்து பெருசு இன்னும் மும்முரமாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தது.

என் அருகில் வந்த சேகர் நான் கொண்டுவந்திருந்த சால்வையை தலைவருக்கு போடச் சொன்னான் . சிறிது தயக்கத்துடன் அவருக்கு சால்வை போர்த்த அருகனைந்ததும் அவர் சிரித்தபடி எழுந்து என்னிடம் தனக்கு போடவேண்டாம் என்றும் கட்சி முக்கியஸ்தருக்கு போர்த்த சொன்னார்.

அதற்குள் சுமாரான கூட்டம் கூடிவிட்டுருந்தது. எனக்கு அங்கு யார் அந்த முக்கியஸ்தர் ?என வினா எழந்த முகத்துடன் தலைவரை பார்த்த போது அவர் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அந்தப் பெருசை காட்டி அண்ணன் என்று ஏதோ சொல்ல, நான் திகைப்புடன் அவருக்கு சால்வை போர்த்தினேன். கூட்டம் படபடவென்ற கைத்தட்டியது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக