https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 மார்ச், 2017

ஜெ கடிதம் -3


அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ,



வணக்கம் , கடும் எழுத்து பணிகளுக்கு நடுவே என்னை சந்தித்தில் என்னை கவர்ந்தது ,மிக நீண்ட உரையாடல் மூலமுமாக , என் திட்டம் மற்றும் எண்ணங்களை தெரிந்து கொள்வதில் காட்டிய பொறுமையும் , மாற்று திட்டத்தை சமூகப் ப்ரக்ஞையினூடே  முன்னெடுத்ததுப் பேசியதையும் ,அதில் அடிநாதமாக வற்றாத உற்சாகத்தையும் , கடந்த கால புது முயற்சிகளால் விளைந்த  கசப்புகளையும் ,கடந்து பேசிக்கொண்டே போனதை .      .....அனைத்தையும் உள்வாங்கும் நோக்கத்தின் பொருட்டு , எந்த சித்த விருத்திக்கும் இடங்கொடாமே கேட்டு மட்டுமே இருந்து விட்டு , இப்பொழுது அவை குறித்த உரத்த சிந்தனையோடே இருந்து கொண்டிருக்கிறேன். அவை என்னிடமிருந்து கழன்று சொற்களாக , கருத்துகளாக விண்வெளியில்  பொருள் போலே என்னை சுற்றி மிதந்து கொண்டிருக்கிறது . நான் மிக நிதானமாக  ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஆயிரம் வருடமாக ஏன் எவரும் இதுகுறித்து  முயறசிக்கவில்லை?, இது நடந்தால் சரித்திரம் என்று ஆச்சரியத்துடன் கூறும் போதுதான் அதன் விஸ்வரூபம் எனக்குள் மெல்லத் துலங்கிவரத் தொடங்கியது.  இது ... இது ...இது தானா என்மேல் இத்தனை காலமாக விதிக்கப்பட்டு அலைக்கழித்து  என்னை இங்குவரை செலுத்தியது ? இதுதானா நான் தேடி கொண்டிருந்தது?......அறியேன். ஆனால் எனக்குள் ஒன்று உயிர்பெற்றெழுந்து இதுதான் அது என என்னை நம்பவைக்கும் முயற்சியில் ஓயாது ஈடுபட்டுள்ளது . நான் நிதாணமாகவே இதனுள் நுழைந்து கொண்டிருக்கிறேன்.


முடிவெடுத்து விட்டேனா ? . காலவெல்லத்தில் சுழன்று கொண்டிருக்கும் பொருளுக்கு தனக்கான இலக்கென்று ஒன்று ஏது ?  எது என்னை இத்தனை தூரம் கடக்கவைத்ததோ , இங்கு கொண்டு வந்து சேரத்ததோ, அதுவே, என்னை இனி எதிர் வரும்  தாண்டுதலுக்கும் உடன்வருவதாக .
ஆம்  , இது முதல் படியாவதும் , முடிந்த படியாவதுமாகுக என விலகி நிற்கின்றேன்.
நாகர்கோவில் வரும் வரை ,எண்ணம்மெல்லாம் இந்திய ஞானமரபு பற்றியும், அது  தொடர் உரையாடல்கள் மூலம் , எப்படி அடுத்த தலைமுறைக்கு மடைமாற்றமடையும் இதில் என்பங்கென்ன ? தங்களின் பங்கை எப்படி ?எங்கே? நுழைப்பது என்கிற எண்ணமே மிக பிரமாண்டமாக என் முன் எழுந்து நின்றுகொண்டிருந்து. ஆனால் தங்களின் பார்வையை உணரும்பொழுது, நடைபெறுங்கால் இது சரித்திரம் என்றும் ,தங்களின் கதாபாத்திரம் போல் "நான் சரித்திரத்தில் ஈ " என்றும் உணர்கிறேன் .
அடுத்தடுத்துள்ள திட்டத்தினால் நிகழவுள்ள விஷயகாம்பீர்யத்தையும் அதை நிழலானதாக பின் படிந்து தொடரும் சர்ச்சைகளையும் , அதை நோக்கி , நோக்காதே , கொண்டும்  , கொள்ளாதே, மதித்தும் , மதியாமே கடக்கவுள்ள பாதைகளின் ; மைல்கற்களாக, தடைக்கற்களாக, படிக்கற்களாக ,தெரிந்த, தெரியாத பல முகங்களின் தொகுப்பைக்  பேருவாகக் காண்கிறேன் .
ஆம், நான் "சரித்திரத்தில் ஈ". எனில் கொள்வதென்? கொடுப்பதென்?
இருப்பதையும் கசக்கிக்கொள்ளலாகாது ,என விடுவதே நான் என் பனியை தொடங்கும் விதமாக இருக்கப்போகிறது .
தங்களின் "புதியவர்களின் சந்திப்பு மற்றும் விஷ்ணுபுர , வெண்முரசு விவாதங்களைப்  புதுவையில் சிறு தொடக்கமாக  தொடங்கும் நாள் அனைத்திற்கும் தொடக்கமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் தொடங்கப்பட இருப்பது என்னை நம்பியல்ல...     உங்களை நம்பி .
தங்களின் வழிகாட்டுதலை எதிர் நோக்குகிறேன் .

மெத்தப் பணிவன்புடன்
க்ருபாநிதி அரிக்ருஷ்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசுகூடுகை 76 அழைப்பிதழ்