https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 15 மே, 2017

அடையாளமாதல் - 68 *சிதையுறு வேலி

ஶ்ரீ:





அடையாளமாதல் - 68
சிதையுறு வேலி 
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 41
அரசியல் களம் - 18




அகில இந்திய அளவில் காங்கிரசின் செல்வாக்கு அப்போது சரிந்திருந்தது. பீரங்கி ஊழல் பற்றிய குற்றச்சாட்டும் , VP சிங்கின் வெளியேற்றமும் , அதன் பிறகு ஜனதா வகையறாக்கள்  நிகழ்த்திய கோமாளித்தனமும் மிக பிரசித்தமானது . அந்த தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருந்தது  . மத்தியிலும் ஏக குழப்பமேற்பட்டு மிக சிறிய எண்ணிக்கை பலம்கொண்ட கொண்ட சந்திரசேகர் , காங்கிரசின் ஆதரவுடன் பிரதமரானார் .

அனைவருக்கும் தெரிந்த ரகசியம் அவர் நீண்டநாள் ஆட்சியிலே நீடிக்கப்போவதில்லை என்பது. அதனால் மத்தியில் ஆட்சி கவிழும் போது உபரியாக புதுவையிலும் அதுவே நிகழும் என அனைவரும் அறிந்திருந்தனர்.

அதற்கேற்ப ராமசந்திரனின் மந்திரிசபை பல தலைகளைக் கொண்ட விலங்கு போல ஆட்சியை பலதிக்குகளுக்கு இழுத்துக்கொண்டு இருந்தது. அது தானாகவே தன் முடிவை தேடிக்கொள்ளும் என்பதால், விசேஷித்து தாம் இதில் ஆற்ற வேண்டியதொன்றில்லை என்றிருந்தார் சண்முகம்

அவர் மத்தியில் முன்புபோல தன் சொல்லுக்கு என்ன மதிப்பிருக்கும் என அவதானிக்கும் பொருட்டு காத்திருந்தார். மேலும் இது முன்புபோல வெறும் எண்ணிக்கை விளையாட்டல்ல . இதற்கு பலகட்ட முனைப்பு தேவைபடுவது. அகில இந்திய தலைமை இதை எப்படி எதிர்கொள்ளும் என தெரியவில்லை

ராஜீவ்காந்தி ஒரு இளம் தலைவர் . இந்திராகாந்தியின் மறைவினால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வந்தவர். புதிதாக கட்சித் தலைமை பதவிக்கு வந்தவருக்கு , அகில இந்திய அரசியல் என்ன என்பதை புரியவைக்க வார்த்தைகளில் வடித்தெடுக்க இயலாது . அது ஒருவிதமான அனுபவங்களின் தொகுப்பு , காலம் மனிதர்களின் மிகச்சிறந்த குரு , வாழ்வியலில் அதை செறிவாக சொல்லித்தரும்.அதை வாழ்ந்துதான் அறியமுடியும்

ராஜீவ்காந்தி திடீரென அரசியலுக்கு வந்ததால் அசல் அரசியல் சார்புகளை, நிலைகளை,விலகல்களை, யூக, வியூகங்களை அவர் புரிந்து கொள்ளக்கூடிய அளவில் , தனக்கு நேர்ந்த அறிய வாய்ப்பாக அந்த பாராளுமன்ற தேர்தல் தோல்வியை குறிப்பிட்டார்

அகில இந்திய காங்கிரசின் மாநாட்டை ஒட்டி சில தனிப்பட்ட கூடுகைகளில் அவர் பேசியபோது இதைக் குறிப்பிட்டார் . எனக்கு அப்போது அதை கேட்க  வியப்பாக இருந்தது. ஆம், அது ஆகப்பெரும் உண்மை.பெரும் தோல்வியும் , உதாசீனப்படுவதும் ,அவமானமும் , மனிதர்களின் நிஜமுகத்தை அறியும் வாய்ப்பை ,  வாழ்கை கற்றுத்தருவது போல் பிறிதொன்று தராது

மாநில அரசியல் நலன்களையும் , நிலைகளையும் அவருக்கு விளக்க மிக அனுபவம் வாய்ந்த , அதே சமயம் கண்டிப்புமிக்க செயளாலராக ஷீலாதீக்ஷித் இயங்கிக்கொண்டிருந்தார் . அவரின் நம்பத்தகுந்த விசுவாசமான காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலில் சண்முகத்திற்கு இடமிருந்தது. ஆரம்பத்தில் சண்முகத்துடன் ராஜீவ்காந்தி முரண்பட்டாலும் ஷீலாதீக்ஷித்தின் முயற்சியால் அவரது மதிப்பு கூடியது.

ஆனால் அதுவே சண்முகத்திற்கு சாதகமான புதுவை அரசியல் இயல்பான களநிலை சமன்பாடுகள் குலைந்து போவதற்கான சூழலாகவும் எழுந்தது ஊழின் ஆடல் . ஆட்சியை கவிழ்ப்பதென்பது வழமையாக சண்முகம் செய்து வருவது. ராமசந்திரன் ஆட்சியோ உற்றுப்பார்த்தாலே கவிழ்ந்துவிடும் அளவிற்கு முரண்பாடுகளின் கூடாரமாக இருக்கும்போது ,சண்முகத்தின் மௌனம் மரைக்காருக்கு சந்தேகத்தை கிளப்பியது .

ராமசந்திரன் - சண்முகம் இடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூட சந்தேகப்பட்டார். இந்தமுறை அதை தான் முயன்று பார்க்கலாம் என நினைத்ததற்கு இரண்டு காரணமிருந்தது, ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது . ஒன்று; சண்முகம் தில்லியின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் . தன் நீண்டநாள் இலக்காகிய முதல்வர் பதவியை நோக்கி பயணப்பட துவங்கியிருக்கலாம் என்கிற சந்தேகம் அவரை வாட்டத்துவங்கியது. அது தன்னுடைய மாநில இருப்பை நிர்மூலமாக்கக்கூடியது

இரண்டு; ஆட்சி கவிழ்ப்பு பாதையில் பொது  தேர்தல் தடைகல்போல நின்றிருக்கிறது . அஃது  மற்றொரு மூளைச்சூடேறும் உட்கட்சி கணக்குகள் . மரைக்கார அதற்கு தயாராக இல்லை .ராமச்சந்திரன் ஆட்சிக்கு வந்து முழுதாக ஒரு வருடமாகவில்லை .ஆட்சிமாற்றம் தான் சரியான தீர்வு . மேலும் அது தன் தளத்திலேயே ஆடக்கூடியது . ஓரளவிற்குமேல் சண்முகம் அதில் தலையிட முடியாது . இன்னும் நான்கு வருடங்கள் மிச்சம் உள்ளது . அதன்பின்......... ?........... அதை பின்னர் பார்த்துக்கொள்ளாம்.


அதற்கான வேளைகளைத் தொடங்கினார் .ஒருகட்டத்தில் அவரைநோக்கி மடைதிறந்த வெள்ளமென மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குவியத் தொடங்கினர் . மரைக்கார் தில்லி விரைந்தார் அனைத்து மாற்றுகட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் சென்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக