https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 11 மே, 2017

அடையாளமழித்தல் - 10 (முற்றாக தனித்திருப்பது )

ஶ்ரீ:


அடையாளமழித்தல் -  10
(முற்றாக தனித்திருப்பது )
நீர் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி பாயும் இயல்பைப் போல மனம் ஆனந்தத்தையும் ஞானத்தையும் புறவயமாக பொருள் இடம் காலம் நோக்கியே ஓடுகிறது . ஆனால் பின்பே அறிகிறது அது அகவயத்தை நோக்கி பயணப்படத் தக்கதென .

என்னுடை பதிவிற்கு திரு.துரைவேலுவின் கருத்தை திரு.ஜெயமோகன் இப்படி எதிர்கொண்டார் . "எல்லா நல்ல வாசிப்புகளும் ஒருவகை நிலைகுலைதல்தான். இடித்துச்சரித்தல் நிகழாத வாசிப்பு ஆழமானது அல்ல. மீண்டும் கட்டி எழுப்புவது அவரவர் விழைவு

வெண்முரசின் நாவல்கள் நம் மரபான மதமனநிலையை இடித்து புரட்டுபவை. அதை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொள்பவர்களாகவே பெரும்பாலான வாசகர்கள் இருக்கிறார்கள். விதிவிலக்குகள் உண்டு. அவர்கள் பின்னர் கண்டடைவார்கள் என நம்பவேண்டியதுதான்.

என் மத நம்பிக்கைகளை குலைக்கூடியதாக வெண்முரசின் பதிவுகளை கண்டு நான் பதறி விலகியது பற்றி முன்பே கூறியிருந்தேன்  . இப்போதெல்லாம் அப்படி தோன்றுவதில்லை , அதை ஆக்கப்பூர்வமானதாக சிந்தனைக்கு எடுப்பதே எனக்கு உகந்ததாக எண்ணுகிறேன்
சிந்தனைப்பெருக்கு காலாதீதமானது அது அனைவரையும் எண்ணவெளியில் இணைக்கிறது . புடவியில் ஓரிடத்தில் நிகழ்ந்தது மற்றொருவிடத்தில் நிகழக்கூடியதே . எனவே எதையும் உலகியல் கண்ணோட்டத்தில் பகுப்பது சரியானதாகவே இருக்க வாய்ப்புள்ளது

பெரும்பாண்மை களத்தில் நிழ்வதே நெறியென கொள்ளத்தக்கது , அது முரணியக்கத்தால் சரித்திரமென்றாகிறது . சரித்திரமோ புனைவென இலக்கியத்தில் பிரதிபலிப்பது , அது மீண்டும் மிகச் சிறிய குறுங்குழுவின் பேசுபொருளாக நிலைநிற்கிறது.

"ஒவ்வொரு நெறியும் கண்ணீரால் குருதியால் கண்டடையப்பட்டது. பெருங்கருணையால் வகுக்கப்பட்டு வாளேந்திய சினத்தால் நிலைநிறுத்தப்படுவது. அவ்வுணர்வுகளாக நெறிகளை அறியாதவர்களுக்கு நெறிகள் வெறும் மொழியலைகள் மட்டுமே. நெறியை மொழியாக அணுகுபவர் நெறியின்மையையே சென்றடைவர்என்கிறது வெண்முரசு.


"ஒரு தேனீயை ஏன் யாழென்றும் பறக்கும் சுடர் என்றும் எண்ணிக்கொள்ள வேண்டும்? அது தேனீ என்றே இருந்தால் என்ன குறைந்துவிடப்போகிறது? முதல் கவிதை எழுதப்பட்ட நாள் முதல் கவிஞரிடம் கேட்கப்படும் கேள்வி இதுஎக்கவிஞனும் இதற்கு நிலையான மறுமொழியை சொன்னதில்லை. ஏனென்றால் அவனும் அதே வினாவை தனக்குள் கேட்டுக்கொள்கிறான். இருந்தும் ஏன் அவன் கவிதை எழுதுகிறானென்றால் அவன் கவிஞன் என்பதனால், அவனால் எழுதாமலிருக்க இயலாதென்பதனால்என்கிறார் ஜெ .

"ஆடல் என்பது உடலின் விடுதலை. விடுதலை கொள்கையிலேயே உடல் முற்றிலும் ஒத்திசைவை அடைகிறதுஅதை விஷ்ணுபுரம் வாசிக்கும் போது உணரலானேன் .

விஷ்னுபுரம் விவாதப் பகுதியை ஆழ்ந்து படிக்க முற்படும் போதுதான் எனக்கு ஒருவிஷயம் புரிபட ஆரம்பித்தது. அது எனக்கு ஒரு மின்னலின் பொறி எனவும் அதே சமயம் புரியாமை என்கிற ஆயாசத்தையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தியது. சிக்கலான கோட்பாடுகளை புரிந்து கொள்ள அது தன் உள் அடுக்குகளிலில் துழாவத் தொடங்கியது ஆழ்படிமங்களில் அது இருப்பதாக உணர்த்திய பின் அதுஅகப்பையில் இருந்தும் புறப்பைக்குவர மறுத்தது.அது ஒரு வகையான வதை. நானே இரண்டாக பிளந்தது போல ஒரு உணர்வு.

இப்படித்தான் என்னை அதிகம் கவர்ந்தது அவரின் பதிவுகள். காரணம் அவர் எழுத்துக்கள் என்னை கருத்துக்கள் ரீதியாக அதிர்வுகளுக்கு ஆளாக்கியது கருத்துகளை பரிசீலிக்கும் முன்பு அதை சொல்லுபவரை அவதானிக்க எனக்கு அவரது பதிவுகளையே என் விரல்களென தடவி மெல்ல புரிந்து கொள்ள முயன்ற காலம்

எழுத்தாளர் திரு.ஜெயமோகனை அவரின் தளத்தின் வழியாக நான் தேடி ,தடவி ,தடுமாறி ,புரிந்து ,பதறி விலகி பின்பு மீண்டுவந்து வாசித்துக் கொண்டிருந்த போதுதான் என் தேடல் ஜெயமோகனை பற்றியது அல்ல அது இதுவரை எதிலும் நிறையாத என்னைப்பற்றி . ஒரு பனிமூட்டமென மெல்ல விலகித் துலங்கி வெளிவரத் துவங்கியது


ஏன் என்னால் எதிலும் நிறைவுற இருக்க இயலவில்லை? அனைவருக்கும் பொதுவான உளநிலை இதுதானா ? இல்லையே அவர்கள் நிறைவுற்றதாக தருக்கி நிமிர்கிறார்களே , வெறும் நடிப்புதானா அது ? தன்னையே ஏமாற்ற முயலவது எளிய மானிடர் செய்கை .அது இன்னும் சிக்கலான மற்றொரு நகர்வை செய்தது .சோம்பியிருப்பதும் முற்றாக தனித்திருப்பதும் ஒரே செய்கையின் வெவ்வேறு நிலைகளா? எதை விரும்புகிறேன் . என்ன மாற்றம் இது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக