https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 மே, 2017

பகவத்விஷயம் -1

ஸ்ரீ பகவத்விஷயம் என்றால் என்ன?



சங்க காலப் புலவர்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் கூறும் திருமால் நெறியைப் பற்றிய தெளிவு இருந்தது. அவர்கள் தம் பாடல்களில் பல கடவுள்களைப் பற்றிப் பாடினாலும், திருமாலைப் பற்றிப் பாடும் போதெல்லாம் ஸ்ரீ பாஞ்சராத்திர ஆகம வைணவக் கருத்துகளை ஒட்டியே பாடியிருப்பதை நாம் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. உலகளந்த உத்தமனைப் பற்றிய குறிப்புகளும்,நான்கு வியூஹங்களாகத் திருமால் உலகு புரக்கும் வண்ணமும், கண்ணன், பலராமன் என்று இரட்டையர் வழிபாடும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகைப் பாடல்களில் பல இடங்களிலும் காணக் கிடைக்கின்றன. சங்க காலத்திற்குப் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம் திருமால் நெறியையும், நாரணன் தன் பெருமையையும் பேசுவது மக்கள் மத்தியில் ஸ்ரீவைஷ்ணவ ஆகம கருத்துகள் நன்கு பரவியிருந்தமையைக் காட்டுகின்றது.
சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகியவற்றிற்குப் பின் இயற்கையின் உற்பாதங்கள், சமுதாய, அரசியல் குழப்பங்கள் காரணமாகத் தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பான பொருளதிகாரம், அதிலும் குறிப்பாக அகத்திணை இலக்கணம் பற்றிய ஆழ்ந்த இயல்கள் மறைந்துபட்டன. பெரும் வேந்தர்கள் கூடப் புலவர்களை அழைப்பித்து மறைந்த அகத்திணை இலக்கண நுணுக்கங்களை மீட்பதற்கான வழிவகைகளை நாடினார்கள் என்பதை இறையனார் களவியல் உரைகளினின்றும் அறிய முடிகிறது. ’இல்லது, இனியது,நல்லதுஎன்று அன்பின் ஐந்திணையின் சாரமாகக் களவியலைத் தேர்ந்து, உலகியலோடு மாறுபட்ட ஒழுக்கத்தின் நுட்பமாக விதந்தோதுகின்ற முயற்சியை நக்கீரனார் உரை தெற்றெனக் காட்டுவதால் போலும் உருத்திர சன்மன் என்னும் மூங்கைப் பிள்ளை கண்வார்ந்து, மெய்பொடிந்து அந்த உரையை உவந்து காட்டினான் என்று நாம் அறிய முடிகிறது.
பல புலவர்களும் தமிழின் தனிச்சிறப்பான அகத்திணையின் நுட்பங்களை மீட்டெடுக்க முயன்றாலும் சங்கப் புலவர்கள் செறிவாக உள்பொதிந்து வைத்திருந்த அகத்திணை நுட்பங்களை மிகத் திறமையாகவும், அதே நேரத்தில் மிகத் தெய்விகமாகவும் மீட்டெடுத்தவர் சடகோபர் என்னும் நம்மாழ்வார் எனலாம். சங்கப் புலவர்களின் இலட்சியக் காதல் மொழியாக வளர்க்கப்பட்ட அகத்திணை திருமாலைப் பரவித் தொழும் பக்திக் காதல் மொழியாக மலர்ந்தது வகுள பாஸ்கர உதயத்தில் என்பது உண்மை. நம்மாழ்வார் செய்த அந்த அரும்பெரும் சாதனை பாரதம் எங்கணும் பெரும் பக்தி இயக்கங்களாகப் பின்னால் மலர அடிப்படையாகியது. இன்றைய ஹிந்து மதத்தின் ஆணிவேரொன்றை, பெரும் அஸ்திவாரம் ஒன்றை அமைத்தவர் திருக்குருகூர் நம்பி என்னும் நம்மாழ்வார் என்றால் அது சற்றும் உயர்வு நவிற்சியில்லை.
பக்திக்கான காதல் மொழியைக் கண்டது அரும்சாதனை என்றால் அதனினும் பெரும் சாதனைகளும் இயற்றியவர் சடகோபன். வேதங்களின் தத்துவ முடிவுகளான உபநிஷதங்களை அலசி ஆய்ந்து வேதாந்த சாத்திரம் இயற்றினார் வியாசர் என்றால் அறிவைக் கொண்டு ஆய்ந்து தெளியும் அந்த வேதாந்த மறை விளக்கத்திற்கும், பக்தியின் காதல் மொழியில் திருமாலை உன்னித்துணர்ந்து கலக்கும் உள்ளத்தின் ஊக்கத்திற்கும் உற்றதொரு சமன்பாட்டையும் சாதித்தவர் நம்மாழ்வாரேதான். அதனாலேயே அறிவு, நம்பிக்கை என்னும் இரு பிளவான பார்வைகளுக்கிடையே ஒரு பெரும் ஒற்றுமையைக் கண்டவரும் அவரே. வேதம் தமிழ் செய்த மாறன் என்று அவரை திருமால் நெறியின் வரவாறு பரவியேற்றும் காரணமே அவர் வேதங்கள் கூறும் உபாஸனம் என்பதை சங்கத் தமிழ் காட்டும் காதல், அன்பின் ஐந்திணை, களவியல் என்பதில் பொருத்திக் காட்டியமையாலேயாகும்.

அவர் எப்படிப் பொருத்திக் காட்டினார் என்பதை நுட்பங்கள் ஒன்றும் சிந்தாமல் சிதறாமல் 13ஆம் நூற் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆசார்ய ஹ்ருதயத்தில் ஏடுபடுத்தினார். அந்த நுட்பங்கள் நம்மாழ்வார் தொடங்கி மதுரகவியாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீராமாநுஜர், சுவாமி நம்பிள்ளை அளவும் வந்து அந்த மறைபொருட்கள் நம்பிள்ளையின் சிஷ்யரான ஸ்ரீவடக்குத் திருவீதிப் பிள்ளை அவர்களின் இரண்டாவது குமாரரான ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனாரால் நூலாக்கப் படுகிறது என்றால் உயர்ந்த தத்துவங்களின் சாரங்களை கால ஓட்டத்தில் மறைந்து போகாமல் காப்பாற்றிப் பேணித் தகுந்த காலம் வாய்க்குங்கால் அவற்றை வெளிப்படுத்தும் உள்வலிவு எத்துணை செறிந்ததாக இருக்கிறது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் என்பதுதான் நாம் வியக்க வேண்டிய ஒன்று. இத்தனைக்கும் அன்றைய காலங்களில் இன்று உள்ள எந்த வசதிகளும் இல்லை. இடர்ப்பாடுகளோ அதிகம். ஆயினும் காலத்தை வென்று திருமால் நெறி தன் கருவூலங்களைப் பேணிக் காத்துத் தமிழகத்திற்குத் தந்திருப்பதாலேயே காலமெல்லாம் தமிழர்களின் நெஞ்சின் நன்றியைப் பெறும்.


courtesy:ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக