https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 மே, 2017

பகவத்விஷயம்-4



பகவத்விஷயம்-4



இந்த ஐந்து வியாக்கியானங்களும் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்கு எழுந்த உரைகள். இந்த ஐந்து உரைகளும், இவற்றுக்குப் பின்னர் எழுந்த அரும்பதங்கள் மூன்றும் சேர்ந்து ஸ்ரீபகவத் விஷயம் என்று குறிக்கப்படும் என்றாலும் சிறப்பாக ஸ்ரீபகவத் விஷயம் என்று ஈடு வியாக்கியானத்தைக் குறிப்பதும் உண்டு. ஆனால் உண்மையில் நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள் என்னும் அருளிச்செயல், அதன் வியாக்கியானங்கள், அவற்றின் அரும்பதங்கள், இந்த நூல்களின் அடிப்படையில் எழுந்த மூன்று ரஹஸ்யங்களைப்பற்றிய நூல்கள், அவற்றின் வியாக்கியானங்கள் ஆகிய இந்த முழு கருத்துலக எழுத்துகளுமே ஸ்ரீபகவத் விஷயம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவதும் பொருத்தமே. (மூன்று ரஹஸ்யங்கள் - அஷ்டாக்ஷரம் என்னும் திருமந்திரம், த்வயம் என்னும் மந்திரம், ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 ஆவது அத்யாயத்தில் உள்ளஸர்வ தர்மான் பரித்யஜ்யஎன்னும் சுலோகம் ஆகிய மூன்றுக்கும் சேர்ந்து ரஹஸ்யத் திரயம்,மூன்று ரஹஸ்யங்கள் என்று பெயர்.)
அதாவது பிரபத்தி நெறி என்பதைப் பற்றி ஆழ அகலமாகத் தத்துவ இயலாக ஆக்கி வைத்திருக்கும் திராவிட வேதம், திராவிட வேதாந்தம் என்று சொல்லத்தக்கவை இந்த நூல்கள். இன்னும் சொல்லப்போனால் திவய ப்ரபந்தம் என்னும் தமிழ் வேதத்தையும், அதன் தத்துவ முடிபுகளான தமிழ் வேதாந்தத்தையுமே ஸ்ரீபகவத் விஷயம் என்னும் சொல் சிறப்பாகக் குறிக்கிறது எனலாம்.
வடமொழி வேதாந்தமானது சுய முயற்சியின்பாற்படும் பக்தி உபாஸனத்திற்கு முக்கியத்துவம் தரும் வேதாந்த விஷயம் என்றால், முற்றிலும் பகவானின் அருள் என்பதையே அடையும் இலக்காகவும், அடைவிக்கும் வழியாகவும் கொண்ட பிரபத்தி நெறி என்பதை முக்கியத்துவம் தந்து அசைக்க இயலாமல் நிறுவிய தமிழ் வேதாந்தம் ஸ்ரீபகவத் விஷயம் என்று கொண்டாடப்படுவது பொருத்தம்தானே!.
***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

குறிப்பு
மிக அற்புத பதிவாக இதை சில ஒப்பீட்டிற்காக பதிவிட்டிருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக