https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 மே, 2017

பகவத்விஷயம்-2

நம்மாழ்வாரின் மிக்குயர்ந்த கொடையின் ஆழ்ந்த பொருள் சிறப்பை நன்கு உணர்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள் அந்த அருங்கொடையைத் தமிழ்ச் சமயமாக்கிப் பின் வந்தோர் அனைவரும் பயன் பெற வேண்டும் என்று கனவு கண்டார். மக்கள் இயக்கமாக ஒன்று ஆகவேண்டுமெனில் அது முதலில் கோயில் உற்சவ நிகழ்வாக ஆகவேண்டும் என்பதை உணர்ந்தார். கோயில் உற்சவத்தில் தமிழ் ப்ரபந்தங்கள் இடம் பெற வேண்டுமெனில் முதலில் கோயில் ஆகமங்கள் அதற்குத் தகுந்தால் போல் அமைய வேண்டும். பிரதேச மொழிகளில் எழுந்த அருட்பாடல்களுக்கு வரவேற்பு அளிக்கும் ஆகமம் ஸ்ரீவைஷ்ணவ பாஞ்சராத்திர ஆகமம் என்பதை உணர்ந்தார். ஆனால் பெருமபாலான கோயில்களில் வேதத்திற்கே முக்கியத்துவம் தரும் வைகானஸம் இருந்ததை மாற்றி பாஞ்சராத்திர ஆகமத்திற்குக் கொண்டுவர அவர் காலத்தில் இயலவில்லை. அதற்கு முதலில் பாஞ்சராத்திர ஆகமங்கள் தமது தத்துவ போதனைகளில் வேதாந்த ரீதியான சான்றாண்மை உடையது என்பதை நிலைநிறுத்த வேண்டும். அதற்குத் தம் பேரன் ஆளவந்தாரை உரிய பக்குவம் வரும் காலத்தில் இந்த அரும் பணியில் ஈடுபட வைக்கத் தம் சீடர்களுக்கு வேண்டிய குறிப்புகளைத் தந்து தாம் பகவத் பக்தியில் திருமாலிடம் கலந்து விட்டார்.
யாமுனர் ஆளவந்தாராக ஆகி ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தின்பால் திரும்பிஆகம ப்ராமாண்யம்என்னும் நூலை எழுதியது வரலாறு. ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் வேதாந்த சம்மதம் உடைய உபாஸனா மார்க்கம் என்று அதில் பலபட நிறுவியிருக்கிறார்.
ஆயினும் கோயில்களில் பாஞ்சராத்திர ஆகமங்களின் நடைமுறையைக் கொண்டுவந்தால்தான் தமிழும், தமிழின் அருளிச் செயல்களும் அன்றாட உற்சவங்களில் இடம் பெற முடியும். அதுவும் வழிவழியாகத் தடைப்படாமல் தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் திவ்ய ப்ரபந்தங்கள் வேதங்களுக்குச் சமமான அந்தஸ்து உடையவை என்பதைப் புரியவைக்க வேண்டும். அதற்கு வேத வேதாந்தங்கள் மற்ற வடமொழி சாத்திரங்கள் அனைத்தினுடைய ஆழ்பொருள்களும் திவ்யப்ரபந்தங்களின் உள்ளே பொதிந்து கிடக்கின்றன என்று விரிவாக நிரூபிக்க வேண்டும். அந்த நிரூபணத்தை வேத வேதாந்த விதவான்கள் உலகம் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும்படி வைக்க வேண்டும். அதற்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமம்,திவ்ய ப்ரபந்தங்கள், குறிப்பாக நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகிய இவற்றைக் கொண்டு வியாஸரின் வேதாந்த தர்சன நூலான ஸ்ரீப்ரும்ஹ சூத்ரங்களுக்கு ஒரு விரிவுரையே செய்தால்தான் அறிஞர் உலகம் அன்று ஏற்றுக்கொள்ளும்.
வேதங்கள் காட்டும் வைணவம் வேள்வியை வடிவமாகக் கொண்டது. ‘வேள்வியின் வடிவே உண்மையில் விஷ்ணுஎன்பது வேதம் கூறும் கருத்து. அனைத்துப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய தத்துவ நுட்பங்களைத் தம் உட்கிடையாகக் கொண்டது வேதங்கள் காட்டும் வைணவம்.
வேள்வியை மையமாகக் கொண்ட வேதங்களின் வைணவத்தை அனைத்து மக்களுக்கும் பொதுமையாக்கும் பெரும் பணியைச் செய்தவர்கள் பலர். அவர்களில் வேத வியாசரின் பங்கு மிகப் பெரியது. வேதங்களை வகைதொகைபட வகுத்ததோடன்றியில்,வேதங்கள் காட்டும் வைணவ நெறியைக் கோயிலில் வழிபாட்டை மையமாக வைத்து ஆகப்பெரும் சிறந்ததொரு வழிபாட்டு மார்க்கத்தை பாஞ்சராத்திர ஆகமங்களாகவும், நாராயண சம்ஹிதைகளாகவும்,சாத்வத சம்ஹிதைகளாகவும் பல்க வைத்தவர் ஸ்ரீகிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசரே எனலாம்.
இவரேதான் வேதங்களின் தத்துவ முடிவுகளை அறுதியிட்டுரைக்கும் உபநிஷதங்கள் அனைத்தையும் ஸ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதையின் துணைகொண்டு ஆய்ந்து, தேர்ந்து, நேரிய இயலாக்கி, வேதாந்த சாஸ்திரமாக ஸ்ரீபிருஹ்ம சூத்திரங்கள் என்னும் நூற்பா நூலாக ஆக்கியவர். அனைத்து சாத்திரங்களையும் ஐயம் திரிபறக் கற்று வேத வியாசர் ஒரு தேர்ந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார். அது என்னவென்றால், ‘வேதங்களைக் காட்டிலும் மிக்க சாத்திரம் இல்லை;கேசவனைக் காட்டிலும் மிக்கதோர் பரதெய்வம் இல்லைஎன்பதாகும். அத்தகைய தீர்மானமான விஷ்ணு பக்தியில் நிலைநின்று அவர் வளர்த்த வழிபாட்டு நெறியே ஸ்ரீபாஞ்சராத்திர ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் ஆகும்.

அவர்வழி படிந்து பல வேதம்வல்ல முனிவர்கள் ஆகம நெறியாகிய ஸ்ரீவைஷ்ணவத்தைக் கைக்கொண்டனர். வேதங்கள் தம்முள் மறைபொருளாய்ப் பொதிந்து வைத்துள்ள ஸ்ரீவைஷ்ணவ கோட்பாடுகளை,ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் தெள்ளத் தெளிவாகத் தம்மைக் கற்போருக்கு விளக்கி அவர்கள் படும் அயற்சியை நீக்குகின்றன என்பது அந்த முனிவர்களின் உள்ளக் கருத்தாய் இருந்தது. அந்த முனிவர்கள் டங்கர்,திரமிடர், போதாயனர் போன்றோர். இதில் போதாயனர் என்பவர் வியாசர் அருளிய ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்கள் என்னும் வேதாந்த சாத்திர நூற்பாக்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகம நெறிப்படி ஒரு விரிவான வியாக்கியானமே எழுதியிருந்தார். அந்த வியாக்கியானம் வேத வியாசரின் உள்ளம் உகந்த கொள்கைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் தன்மைத்தாய் அமைந்திருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மறைக்க இயலாத காதல்

மறைக்க இயலாத காதல் பெண்களின் கண்களில் இருந்து காதலர்கள் தப்பிப்பதல்லை . என் மனைவி என்னிடம் கேட்டார் “ அது தான் அஜி திருமணம் செ...