https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 மே, 2017

பகவத்விஷயம -3



பகவத்விஷயம -3


போதாயனர் போன்றவர்களின் காலத்திற்குப் பிறகு வேத வியாசரே வளர்த்தெடுத்த ஸ்ரீபாஞ்சராத்திர நெறிப்படி வேதாந்த சாத்திரத்தைப் புரிந்து கொள்ளும் அணுகுமுறை அருகிப்போய், வேதாந்தமும், ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களும் வெவ்வேறானவை, ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் வேதாந்த முடிவுகளுக்கு முரணானவை என்றெல்லாம் வித்வான்கள் மத்தியில் அபிப்ராயங்கள் நிலவத் தொடங்கின. சமண,பௌத்த தத்துவங்களின் தாக்கங்களைச் சமாளிக்க வேண்டி ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைத சித்தாந்தமும், அதன் துணைக் கருத்தான ஜகம் அனைத்தும் மாயை என்னும் கோட்பாடும் பெரும் பிரசாரம் அடைந்து, வேதாந்தம் என்றாலே அது அத்வைத சித்தாந்தம் கூறும் வேதாந்த விளக்கம்தான் என்ற எண்ணம் வித்வான்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியது.
பல காலத்திற்கு முன்னம் போதாயனர் என்பவரால் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமக் கருத்துகளுக்கு ஏற்ப வேதாந்த சூத்ரங்களுக்கு ஒரு விரிவுரை இயற்றப்பட்டு அந்த உரைநூல் காஷ்மீரத்தில் பிரதி இருந்ததாக அறிஞர் மத்தியில் கருத்து இருந்தது. அதைச் சென்று கண்டு படித்து அதன் வழியில் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய ரீதியாக வேதாந்த பாஷ்யம் இயற்றுவதும், அதை அறிஞர் உலகம் மறுக்கவொண்ணாமல் நிலைநிறுத்துவதும், அதன் பின்னர் பாஞ்சராத்திர ஆகம நெறியைப் பெருவாரியான கோயில்களில் அமுல்படுத்துவதும், ஆகம் அனுமதியின் அடிப்படையில் தமிழ் வேதமான திவ்ய ப்ரபந்தங்களை அநவரதம் இடையீடின்றி கோயில்களில் உற்சவங்களில் முழங்கச் செய்வதும் ஒரு பெரும் மகானின் வல்லமையால்தான், வருகையால்தான் முடியும். அதற்கான உழைப்புக்கு வேண்டிய காலம் ஆளவந்தார் விஷயத்தில் கடந்து விட்டிருந்தது. எனவே ஆமுதல்வன் யார் என்று அவாவுடன் அரங்கனை வேண்டியபடி எதிர்நோக்கியிருந்தார் ஆளவந்தார். லக்ஷ்மணமுனி என்றும், இளையாழ்வார் என்றும் பெயர் பெற்ற ஸ்ரீராமாநுஜராகிய எம்பெருமானார் கிடைத்ததும் நேரடியாகச் சந்திக்க முடியாமலேயே ஆளவந்தார் திருநாடு எய்திவிட்டார்.
ஸ்ரீமந்நாதமுனிகளின் கனவையும், ஸ்ரீஆளவந்தாரின் திட்டங்களையும் நனவாக்கி, நடைமுறைப்படுத்தி ஸ்ரீவைஷ்ணவ தர்சனமே எம்பெருமானாரின் தரிசனம் என்று அரங்கனும் அடியார்களும் கொண்டாடும் வகையில் போரப்பொலிய வளர்த்தவர் ஸ்ரீராமாநுஜர். அவரை நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத அடியார்கள் வேண்டிய போது, ‘தாம் உரை எழுதினால் நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு அவ்வளவுதான் பொருள் என்று வரம்பு கட்டியதாக அடியார்கள் நினைத்து மேலும் ஆழ்ந்த பொருள் காணத் தயங்குவர் என்பதற்காகத்தாம் உரை எழுதாமல் தமது சீடர்களை விட்டு உரை எழுதப் பணித்தார். அதனால் திருவாய்மொழிக்குத் தொடர்ந்து பொருள் வளம் கண்டு துய்க்கும் வியாக்கியான சம்ப்ரதாயமானஸ்ரீபகவத் விஷயம்என்னும் பேரனுபவ மொழிப்பெருக்கு ஒன்றிற்குத் தொடக்கம் செய்தவர் எம்பெருமானாரே ஆவார். வடமொழி வேதாந்த உரைகள் சாத்திரப் பொருள் விளக்கம் என்றால், தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு வாய்ந்த மணிப்ரவாள உரைகள் ஸ்ரீபகவத் விஷய அருள் விளக்கம் எனலாம்.
திருவாய்மொழிக்கு முதன்முதலில் தோன்றிய வியாக்கியானம் திருக்குருகைப்பிரான் பிள்ளான் இயற்றிய ஆறாயிரப்படி வியாக்கியானம். பராசர பட்டரால் வாதில் வென்று ஆட்கொள்ளப்பட்ட மாதவ வேதாந்தி என்னும் நஞ்சீயரால் எழுந்த உரை ஒன்பதினாயிரப்படி. நஞ்சீயரால் நம்பிள்ளையோ என்று உகந்து உரைக்கப்பட்ட நம்பூர் வரதராசர் என்னும் நம்பிள்ளையின் கட்டளையால் பெரியவாச்சான்பிள்ளை வரைந்தது இருபத்திநாலாயிரப்படி வியாக்கியானம். பெரியவாச்சான்பிள்ளையின் சீடரான வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் செய்தது பன்னீராயிரப்படி வியாக்கியானம்.

நம்பிள்ளையின் சொற்பொழிவுகளில் கேட்டவற்றை அப்படியே ஏடுபடுத்திய வடக்குத்திருவீதிப் பிள்ளை தாம் பதிந்தவற்றை நம்பிள்ளைக்குக் காட்ட நம்பிள்ளை அவற்றைப் பிரசாரப்படுத்தாமல் நிறுத்திவிட்டார். ஒருவர் சொல்லி ஒருவர் கேட்கும் வழியில் பலருக்கும் தெரிய வாய்ப்பு இன்றி அந்த உரையானது நெடுங்காலம் வந்துகொண்டிருந்தது. ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்தில்தான் நம்பெருமாளின் சந்நிதியில் அருளப்பாடு என்னும் தெய்வ ஆணையால் ஒரு வருஷ காலம் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள் விரித்துரைக்க நம்பெருமாளே தம் உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி அமர்ந்து கேட்டது என்னும் பெருமையுடையதாக ஆனது வடக்குத்திருவீதிப் பிள்ளையினால் பதியப்பட்ட நம்பிள்ளையின் உரைப்பெருக்கு. ஸ்ரீபகவத் விஷயத்திற்கே ஒரு கவசம் போல் திகழ்கிறது என்பதால்ஈடுஎன்னும் பெயருடைத்தாகி, ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானம் என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக நம்பிள்ளை ஈடு என்பதும் இதுவேயாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்