https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 24 ஜனவரி, 2018

சென்னை,பாண்டிச்சேரி,கடலூர், கோவை -முகங்களின் அலை . ஜெயமோகன்

 சென்னை,பாண்டிச்சேரி,கடலூர், கோவை -முகங்களின் அலை

jeyamohanJanuary 24, 2018

pastedGraphic.png

சென்ற பதினைந்துநாட்களாகவே கடுமையான வேலை. வெண்முரசு தொடங்கியபின் இது ஒரு நோன்பு போல. பத்துநாள் பயணம் என்றால் பத்து வெண்முரசு அத்தியாயங்கள் முன்னால் சென்றுவிட்டிருக்க வேண்டும். அதற்கு நாளொன்றுக்கு இரண்டு அத்தியாயங்கள் எழுதவேண்டும். கூடவே வேறு எழுத்துவேலைகள். வெண்முரசு இப்போது நிறைய குறிப்புகள் தேடி எழுதவேண்டிய நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே நாளொன்றுக்கு எட்டுமணிநேரமாவது எழுதியாகவேண்டிய நிலை.

19 ஆம் தேதி முதல் ஒருவாரம் ஊரில் இருக்கமுடியாதபடி பயணங்கள். நடுவே வீட்டுக்கு வாசகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். பாளையங்கோட்டையிலிருந்து இசக்கிராஜா அவருடைய நண்பர்களுடன் வந்தார். உற்சாகமான ஒரு சந்திப்பாக இருந்தது அது. நண்பர் சமஸ் வீட்டுக்கு வந்தார். இரு சினிமாச்சந்திப்புகள் வேறு. பதினெட்டாம்தேதி கிளம்பும்போது பத்து வெண்முரசு முன்னால் சென்றுவிட்டிருந்ததை ஒரு ஆனந்த அதிர்ச்சியுடன்தான் நினைத்துக்கொண்டேன்.

pastedGraphic_1.png

19 ஆம் தேதி சென்னையில் விகடன் விருதுவிழா. காலையில் சென்றிறங்கியதுமே குளித்துச் சாப்பிட்டுவிட்டு நேராக சமஸ் வீட்டுக்குச் சென்றேன். காலையுணவு அங்கே. ஆர்கே நகர் தேர்தல் முதல் ரஜினிகாந்த் அரசியல்பிரவேசம் வரை அவருடைய கருத்துக்களை தெரிந்துகொண்டேன். நேராக சம்பந்தப்பட்ட இடங்களுக்கே சென்று தங்கி உணர்ந்தவற்றை எழுதுவது அவருடைய பாணி. அதில் பெரும்பகுதி உள்ளுணர்வு சார்ந்த பதிவுகள். கூடவே தரவுகளைச் சேர்த்துக்கொள்கிறார்

சமஸின் மனைவி நவீன சிகிழ்ச்சைமுறைகள் சிலவற்றில் பயிற்சி பெற்றவர். ஒவ்வாமை முதலிய நோய்களுக்கு சிகிழ்ச்சை அளிக்கிறார்.  அவர் என்னிடம் சொன்ன ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தேன். நன்றாகப் பசித்தபின் அல்லாது உணவுண்ணாமலிருப்பது. உணவை தவிர்த்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. பசிக்காமல் உண்ணவே கூடாது. உண்மையில் நான் பசித்து உண்பதில்லை. நேரம் அமையும்போது, எவரேனும் ஞாபகப்படுத்தும்போது சரி அதையும் முடிப்போம் என்றே சாப்பிட அமர்கிறேன். இனிமேல் பசித்துச் சாப்பாடு என முடிவெடுத்து அன்றுமாலையே அதை மீறினேன். ஆனால் முடிவு முடிவுதான், பார்ப்போம்.

pastedGraphic_2.png

மதியம் அறைக்கு நண்பர்கள் சௌந்தர், காளி, ராஜகோபால், கே.பி.வினோத், சுரேஷ் பாபு ஆகியோர் வந்திருந்தார்கள். பேசிக்கொண்டிருந்துவிட்டு கே.பி.வினோதின் காரில் கிளம்பி விகடன் விழாவுக்குச் சென்றேன். வழக்கமான மாபெரும் விழா. தொலைக்காட்சிகள் இதேபோன்ற விழாக்களை நடத்துவது இன்று பெருகிவருகிறது. இலக்கியத்தையும் சமூகச்செயல்பாடுகளையும் இணைத்துக்கொண்டிருப்பது இவ்விழாவின் சிறப்பு.

அனேகமாகத் தமிழின் அனைத்து முக்கியமான முகங்களும் இருந்தனர். ஸ்டாலின், தமிழிசை போன்ற தலைவர்கள், தியாகு, .மார்க்ஸ் போன்ற அரசியலாளர்கள், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் போன்ற எழுத்தாளர்கள். பரிசுபெறவும் வழங்கவும் அழைத்துக்கொண்டே இருந்தார்கள். நான் சிறந்த பத்துமனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசனுக்குப் பரிசு வழங்கினேன். ஓரிரு சொற்கள் பேசினேன்.

பொதுவாக பெரியவிழாக்களில் நான் கொஞ்சம் பதற்றமாக, எனக்குத்தெரிந்தவர்களிடம் மட்டுமே பேசிக்கொண்டு அமர்ந்திருப்பது வழக்கம். கவிஞர் நரன், குழந்தை எழுத்தாளர் விருதுபெற்ற வளர்ந்த குழந்தையான  ரமேஷ் வைத்யா , என பல நண்பர்களைச் சந்தித்தேன்.தமிழச்சி தங்கபாண்டியன் சமீபத்தில் ஆற்றிய கம்பர் பேருரையை பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்

pastedGraphic_3.png

ரமேஷ் வைத்யா

இரவில் நாஞ்சில்நாடனுடன் கிளம்பி விடுதிக்கு வந்தேன். மாலையில் சாப்பிட்ட இரு காப்பிகளால் இரண்டுமணிவரை தூங்கவில்லை. காலை ஐந்துமணிக்கு எழுந்து குளித்துக்கொண்டிருக்கையிலேயே நண்பர்கள் வந்துவிட்டார்கள். காளிபிரசாத், ஜானகிராமன்,அனந்தமுருகன்,சதீஷ், சிறில் அலெக்ஸ், சுரேஷ் பாபு ,ரகுராமன், பிரபாகர்,சிவக்குமார் ஆகிய நண்பர்களுடன் மூன்று கார்களிலாக பாண்டிச்சேரி. காலையில் கிழக்குக்கடற்கரைச் சாலை வழியாக பாண்டிச்சேரி செல்வது ஒரு நல்ல பயணம். ஒருபக்கம் கடல் வந்து வந்து மறைகிறது. ஆனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இருபுறமும் கட்டிடங்கள் மட்டுமே தெரியும்.

pastedGraphic_4.png

சமஸ்

பாண்டிச்சேரி செல்லும் வழியில் மகாபலிபுரத்தில் இறங்கி கடற்கரைக்கோயிலை மட்டும் பார்த்தோம். பயங்கரமான நெரிசல். மேல்மருவத்தூரின் செவ்வாடை பக்தர்கள் எங்கும் முட்டிமோதினர். பேருந்துநிலையம், கார்தரிப்பு நிலையம் எங்கும் மலக்குவியல் வேறு. அங்கே செப்பனிடும் பணிகள் நிகழ்வதனால் கோயிலைச் சும்மா சுற்றிவந்து பார்க்கவேண்டியிருந்தது.

பாண்டிச்சேரி நண்பர் அரிகிருஷ்ணன் கோவையில் நான் நடத்திய கீதையுரைகளின் போது வந்து என்னைச் சந்தித்தவர். இலக்கியம்சார்ந்து ஏதேனும் செய்யவேண்டுமென ஆர்வம் கொண்டவர். தற்செயலாக வெண்முரசு வாசிக்க நேர்ந்து தீவிர வாசகராக ஆனவர். அவருடைய இல்லத்தில் வெண்முரசு விமர்சன அரங்கு ஒன்று ஓராண்டாக நடந்துவருகிறது. அதில் கலந்துகொள்வதே பாண்டிச்சேரிப் பயணத்தின் முதல் நோக்கம்.

pastedGraphic_5.png

ராஜகோபாலன்

ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனுடன் பாரி, மணவாளன், அந்தியூர் மணி விஜயராகவன் ஆகிய நண்பர்கள் வந்திருந்தனர். திருச்சியிலிருந்து செல்வராணி வந்திருந்தார். மாயவரத்திலிருந்து யோகேஸ்வரனும் பிரபு மயிலாடுதுறையும் வந்திருந்தனர். கோவையில் இருந்து தீபன் சக்கரவர்த்தி, கார்த்திக், கணேஷ் பெரியசாமி ஆகியோர். சுரேஷ் பிரதீப் திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்திருந்தார்.

மதியம் 12 மணிக்கு விடுதியிலேயே ஒரு முறைசாரா சந்திப்பு. முப்பது நண்பர்கள் இருந்தனர். பொதுவான இலக்கிய உரையாடல். வழக்கமான வேடிக்கைகள், கேலிகள், சிரிப்புகள். மதியம் நண்பர் சிவாத்மா என்னும் சிவராமனின் இல்லத்திற்குச் சென்று சாப்பிட்டோம்- ஏறத்தாழ நாற்பதுபேர். ஒவ்வொருவேளையும் நாற்பதுபேருக்கு உணவு ஒருங்குசெய்வதே அவர்களுக்கு பெரிய வேலையாக இருந்திருக்குமென நினைக்கிறேன்.

pastedGraphic_6.png

மாலை 6 மணிக்கு வெண்முரசு கூட்டம் அரிகிருஷ்ணனின் இல்லத்தில் நடந்தது. அங்கே வெண்முரசு வாசகர்களின் சிறந்த குழு ஒன்று உள்ளது. எழுபத்தைந்துபேர் பங்கெடுத்தனர். அரிகிருஷ்ணனின் தங்கை செல்வி அழகானந்தன் போன்று வெண்முரசின் வாசகர்களாக பல பெண்களும் கலந்துகொண்டார்கள்.முதற்கனலின் இறுதிப்பகுதி குறித்து அவர்களின் உரையாடல் நிகழ்ந்தது.

அதன்பின் ராஜகோபாலன் வெண்முரசு நாவல்தொடரை வாசிப்பதன் முறைமையை பற்றிப் பேசினார். சென்ற பத்தாண்டுகளில் நான் கேட்டவற்றில் மிகச்சிறப்பான உரைகளில் ஒன்று என தயங்காமல் சொல்வேன். வகுப்புகளை நடத்தித்தேறிய முகம், தடுமாற்றமில்லாத சொற்கோவை. நன்கு தயாரித்துக்கொண்டு நுட்பமான தகவல்களுடன் உரையாற்றினார். உரைக்கு எப்போதுமே ஒரு கட்டுமானம் இருக்கவேண்டும், அப்போதுதான் அது முழுமையாக நினைவில் நிற்கும் என எண்ணுபவன் நான். ராஜகோபாலனின் உரை கச்சிதமான அமைப்பு கொண்டிருந்தது.வெண்முரசின் நாட்டாரியல், புராண, காவிய அடிப்படைகளையும் நவீன இலக்கியவடிவத்திற்குள் அவற்றை அமைத்துள்ள வகையையும் அவர் விளக்கிச் சொன்னார்.

pastedGraphic_7.png

சுரேஷ் பிரதீப் வெண்முரசு வாசிப்பின் அடிப்படைகளைப் பற்றிப் பேசினார். தனித்தன்மை கொண்ட அவதானிப்புகள் அடங்கிய சுருக்கமான உரை. முனைவர் நாகராஜன், அரிகிருஷ்ணன்,தண்டபாணி துரைவேல், திருமாவளவன் ஆகியோர் பேசினார்கள். மணிமாறன் ஒருங்கிணைத்தார். ராதாகிருஷ்ணன், மன்றவாணன் போன்ற பாண்டிச்சேரி நண்பர்களைச் சந்தித்தது உற்சாகமாக இருந்தது.பாண்டிச்சேரியின் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் சுருக்கமாக வெண்முரசின் மீதான அவருடைய ஈர்ப்பைப்பற்றிப் பேசினார். உரையாடல்களுக்குப்பின்னர் நான் வெண்முரசு குறித்த வாசகர்களின் ஐயங்களுக்கு பதிலளித்துப் பேசினேன்.

pastedGraphic_8.png

அன்றிரவு ஒருமணிவரை அறையில் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தோம். எல்லா பேச்சுமே இலக்கியம் என்பது எங்கள் கொள்கை. சினிமா அரசியல் சாப்பாடு என்னும் பிற தலைப்புகள் அவ்வப்போது கிண்டலுக்கு மட்டுமே. மறுநாள் காலை ஒரு கடற்கரை நடை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தூங்கி எழ ஏழுமணி ஆகிவிட்டது. பாண்டிச்சேரியிலேயே கூட காலையில் நல்ல குளிர் இருந்தது. கூட்டமாக டீ குடிக்கசென்றோம். பாண்டிச்சேரியே உரிக்கப்பட்ட ஆடுகளால் சிவப்பாக ஆகிவிட்டிருந்தது. இரு கசாப்புக்கடைகள் நடுவே நின்று டீ குடித்தோம்

காலையில் சென்னை நண்பர்கள் கிளம்பினர். நாங்கள் கார்களில் கடலூர் சென்றோம். அங்கே சீனு சென்ற சில ஆண்டுகளாக ஒர் இலக்கியச் சந்திப்பை தன் நண்பர்கள் இதயத்துல்லா, நஜீர், வேல்முருகன் மற்றும் புரவலரான ஆறுமுகம் ஆகியோருடன் சேர்ந்து நடத்தி வருகிறார். நற்றிணை இலக்கியவட்டம். விட்டல் பள்ளிவளாகத்தில் வாதாம் மரங்களின் நிழலில் ஐம்பதுபேர் கூடியிருந்தனர். நான் இலக்கியவாசிப்பைப் பற்றியும், பண்டைய இலக்கிய வாசிப்புக்கும் இன்றைய இலக்கிய வாசிப்புக்குமான வேறுபாட்டைப்பற்றியும் பேசினேன். அதன்பின் கேள்விகளுக்கு பதில் அளித்தேன். வழக்கமாக இத்தகைய சந்திப்புகளில் வரும் வாசிப்புச்சிக்கல்கள் சார்ந்த வினாக்கள், அரசியல் வினாக்கள்.

pastedGraphic_9.png

யாழி கிரிதரன், கனிமொழி.ஜி, இளங்கவி அருள் ஆகிய படைப்பாளிகளைச் சந்தித்தேன். கனிமொழி.ஜி தமிழில் கவனிக்கத்தக்க கவிதைகளை எழுதிவருபவர். சமீபத்தில் சீனிவாசன் நடராஜனின் நூல்வெளியீட்டுவிழாவில் சந்தித்தேன். அன்றைக்கே அவர்கள் ஆம்பல் என்னும் அமைப்பின் சார்பில் இன்னொரு இலக்கிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்கள்.

கடலூர் சீனு விட்டுக்குச் சென்றோம். அங்கே மதிய உணவு. சீனுவின் புத்தகச்சேகரிப்பை நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள். என் இருபத்தைந்தாண்டுகால நண்பர் வளவதுரையனின் வீட்டுக்குச் சென்றுவிட்டு பாண்டிச்சேரிக்கு வந்தேன். அவர் இல்லத்தில் சற்றுநேரம். ஈரோடு நண்பர்கள் கிளம்பிச்சென்றார்கள்.

pastedGraphic_10.png

ரமேஷ் பிரேதன்

ரமேஷ் பிரேதனை அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தோம். ஓரளவு உடல்நிலை தேறியிருக்கிறார். மெல்ல நடக்க முடிகிறது. மற்றபடி வழக்கமான உளச்சோர்வும் கூடவே எழும் உளஎழுச்சியுமாகப் பேசிக்கொண்டிருந்தார். தனிமைதான் அவருடைய பிரச்சினை. அவரை எவரேனும் தேடிவந்து பேசினால் மட்டுமே அந்தத் தனிமை கலைய முடியும். வருபவர்கள் அரிது என்றார். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்

அங்கிருந்து கி.ராஜநாராயணன் இல்லத்திற்குச் சென்றேன். அங்கே கி.ராவின் மகனும் அவருடைய நண்பர்கள் புகைப்பட நிபுணர் புதுவை இளவேனிலும் வெங்கட சுப்புராய நாயக்கரும் இருந்தார்கள். வெங்கட சுப்புராய நாயக்கர் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு முக்கியமான மொழியாக்கங்களைச் செய்தவர். புதுவைப் பல்கலையில் பணியாற்றுகிறார்.

pastedGraphic_11.png

இளவேனில்

கிரா 95 தொகைநூலையும் இளவேனில் எடுத்த புகைப்படத்தொகுதிநூலையும் கிரா அளித்தார். கிரா எப்போதுமே உற்சாகமான மனநிலையில் இருப்பவர். நினைவுகள் துல்லியமானவை. பழைய தீவட்டிக்கொள்ளையர்களில் தொடங்கி சுந்தர ராமசாமியின் வீட்டின் அமைப்புவரை நினைவிலிருந்தே எடுத்து விரித்துக்காட்டினார்.  குறிப்பாக அந்தக்கால திருமணச் சடங்குகளின் பகுதியாக இருந்த பாலியல்பாடல்களைத் தேடி இடைச்செவல் வரை வந்த ஜப்பானியரின் சித்திரம் அபாரமான ஒரு சிறுகதை

எனக்குத்தெரிந்து 80 வயதுக்குமேல் சுவாரசியமாகப் பேசுபவர்கள் மிகக்குறைவு. கிரா, இந்திரா பார்த்தசாரதி இருவருமே விதிவிலக்குகள். சிரித்து மேலும் வெடித்துச்சிரித்துக்கொண்டுதான் அவரிடம் பேசிக்கொண்டிருக்கமுடியும். விளாத்திக்குளம் சுவாமிகள் குறித்த நிறைய செய்திகளைச் சொன்னார். என்..எஸ்.சிவக்குமார்  எழுதிய நூலையும் சி.மகேந்திரன் இயக்கிய ஆவணப்படத்தையும் அளித்தார். கிராவிடம் பேசிவிட்டுக்கிளம்பியபோதுதான் புதுவைப்பயணம் நிறைவடைந்த எண்ணமே எழுந்தது

ஸ்ரீனிவாசன்

புதுவையிலிருந்து இரவு பத்துமணிக்குக் கிளம்பி பேருந்தில் கோவை வந்தேன். நண்பர் சௌந்தர் ராஜன் அவர்களின் மகள் இல்லத்திருமணம். மரபார்ந்த வைணவமுறை திருமணம். மணமகள் போட்டிருந்த ஆண்டாள் கொண்டை அழகாக இருந்தது.செண்டர் பார்க் ஓட்டலில் தங்கினேன். காலைமுதல் நண்பர்கள் வந்தனர். சிட்னி கார்த்திக் விடுப்பில் வந்திருக்கிறார். அவர் பாண்டிச்சேரிக்கும் வந்திருந்தார். விஜய் சூரியன்,செல்வேந்திரன், ராஜமாணிக்கம், நரேன், ராதாகிருஷ்ணன், நடராஜன் , அரங்கா என நண்பர்கள் சூழ அரட்டை.நண்பர் .ஸ்ரீனிவாசன் அவர்கள் வந்துசந்தித்தார். அவர் எழுதிய இரு விமர்சனநூல்களை சிறுவாணி வாசகர் வட்டம் வெளியிட்டிருக்கிறது. [காணக்கிடைத்தவை, எதைப்பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது ]

pastedGraphic_12.png




கோவையில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசக மையம் இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறது. இவ்வாண்டுமுதல் நூல்களையும் வெளியிடுகிறார்கள். நாஞ்சில்நாடன் விருது ஒன்றை நிறுவி இவ்வாண்டு நண்பர் ஓவியர் ஜீவா அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

pastedGraphic_13.png

வெங்கட சுப்புராய நாயகர்

மாலையில் நாகர்கோயில் கிளம்பினேன். என் நண்பர் கனடா செல்வம் [காலம் இதழின் ஆசிரியர்] சென்னைக்கு 15 ஆம் தேதி வந்திருக்கிறார். அவர் 19 கிளம்பி வேளாங்கண்ணி சென்றுவிட்டு நாகர்கோயில் வர ஏற்பாடுகள் செய்திருந்தேன். நண்பர் யோகேஸ்வரன் மயிலாடுதுறை அனைத்தையும் ஒருங்கிணைத்திருந்தார். அவர் 23 ,14 தேதிகளில் நாகர்கோயிலில் இருப்பார். அவருடனான பயணங்களுக்குப்பின் நான் திருவனந்தபுரம் செல்லவேண்டும். 27 க்குப்பின்னர்தான் சற்று நிலைமீண்டு வெண்முரசுக்குச் செல்லவேண்டும். அதுவரை எத்தனை பறந்தாலும் வந்தமரவேண்டிய மண் போல அது காத்திருக்கும்

ஊர் வந்து சேர்கையில் எத்தனை முகங்கள் என்னும் பிரமிப்புதான் எஞ்சியிருந்தது. ஒரு காலகட்டம் என்பது மானுட முகங்களால் ஆனது. அந்த அலையில்தான் நீச்சலடித்துக்கொண்டிருக்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்