ஶ்ரீ:
வணக்கம் , நீங்கள் புதுவை வந்து சென்றதையும் அதை ஒட்டி நிகழ்ந்து முடிந்ததையும் பற்றிய நினைவுகளில் இருந்து விடுபட இயலவில்லை. அந்த இரண்டு நாட்கள் மிக இனிமையாக என்னுள்ளே தனித்து எப்போதும் இருந்து கொண்டேயிருகப்போகின்றன . நான் முன்பு எழுதிய கடிதம் உங்களுக்கு கிடைக்காமல் spam க்கு சென்றுவிட்டதென நினைத்தேன். அதை நீங்கள் பார்ததாக , மேலும் வெண்முரசின் தாக்கம் என் எழுத்தில் இருப்தாக புன்னகையுடன் சொன்னீர்கள் . நன்றி . உங்கள் ஆக்கங்களின் பாதிப்பால் எழுந்தது அந்த வலைப்பூ தளம் , அவை எப்படி பிறிதொருமுறையில் இருக்க முடியும் .
கடலூர் “நற்றினை” கூடுகை பேச்சிற்கு பிறகு உற்சாகமாக என்னை நோக்கி வந்தபோது சட்டென உங்களுக்கும் எனக்குமான இடைவெளி காணாமலாகி ஒரு இறுக்கமான, நீண்டநாள் பழகியது போலதொரு நட்பின் தொடர்ச்சியை ,புரிதலை எங்கிருந்து அடைந்தேன் என தெரியவில்லை .
“இலக்கிய வாசிப்பு ஒரு மனிதனை உள்ளும் புறமுமாக பாதிக்கிறது , அவனை கனியவும் ,பண்படவும், அவனது தனது ஆழ்மனத்துடன் உரையாடவும் வைக்கிறது” என மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக யாராவது என்னிடம் சொல்லி இருந்தால் , நான் அவரை நோக்கிய புன்னகையுடன் புறந்தள்ளி கடந்து சென்றிருப்பேன் . ஆனால் “வெண்முரசை” நான் சந்தித்தபோது அதுதான் நிகழ்ந்தது . எனக்கான ஆப்த்த சொல்லாக , முரணியக்கம் , ஆழ்மனப்படிமம் , ஒற்றைமனப்பரப்பு , சொற்களின்வெளி போன்றவற்றை நான் உங்களிடமிருந்தே பெற்றுக் கொண்டேன். இனி எந்தக் கருத்தை நான் அடைந்தாலும் அவைகளை இவற்றிலிருந்தே எனக்கான புரிதலை அடைந்துவிடுவேன் என நினைக்கிறேன் . பிறவி குறை என்னை பேசவைத்ததில்லை . அதை அரசியலின் பொருட்டு ஒரு வேகத்தில் உடைத்து வெளிவந்தேன். இப்போது இலக்கியத்தின் பொருட்டு அதை செய்ய இயலுமா என தெரியவில்லை . மேற்கோள்களை உச்சரிக்க அது எப்போதும் எனக்கு தடையேற்படுத்தும் .
புதுவை வெண்முரசு கூடுகையில் நான் முன்வைக்க இருந்த பதிவை சரியாக பதிந்துவிட முடியும் என்றே நினைத்திருந்தேன் . அதில் வழமைபோல முதல் சில நிமிடங்களுக்கு சிக்கி , பிறகு மெல்ல வெளிவந்துவிடேன். சொல்ல விழைந்தது சொல்லியாகி விட்டது . அவை அணிச்சொற்காளால் இணைக்கப்படவில்லை அவ்வளவுதான் இனி எழுத்தில் அவற்றை கொண்டு வரலாம் என்கிற நிறைவோடு அமர்ந்து விட்டேன்.
வாழ்கையில் ஒரு முதிரா சிறுவனின் உள்ளம் போல எதையாவது முயற்சித்துக் கொண்டே இருப்பதால், நான் கண்டடைந்த உலகம் மிக குழப்பம் மிகுந்ததாக , நிறைவின்மை கொண்டதாக இருந்தது. அதிலிருந்து வெளிவர எனக்கென சில புதிய பாதைகள் தென்படத் துவங்குவதும் , அதில் பயணப்படுவதினாலேயே , புதிய இலக்குகளை , அடையாளங்களை , உயரங்களை அடைந்தபடி இருந்தேன். இந்த கூடுகையையும் அதன் அற்புதமான நண்பர்களையும் அப்படியொரு தருணத்தில்தான் அடைந்தேன் , சென்னை நண்பர்கள் ராஜகோபால் , காளிபிரசாத் வழியாக கடலூர் சீனு , சிவாத்மா , நாகராஜ் , மணிமாறன், துரைவேல் , ராதாகிருஷ்ணன் , கண்ணன் மற்றும் பலரை குறிப்பிட்டு சொல்லவேண்டும் .
காலசந்தி என ஒன்று இருப்பது போல , தமிழ் இலக்கிய வரலாறு ஒரு சந்தியாக ஜெயமோகனை முன்வைக்கிறது போலும் . மரபும் அறிவுசால் உலகும் இணைந்த காலம் என்கிற ஒன்று , இனி தன்னை உங்களுக்கு முன் பின் என அடைப்பிற்குள் வைத்துக்கொள்ளலாம் .
அறிவார்ந்த உலகு மரபான நம்பிக்கையில் வாழும் உலகிற்கு தனது பெறுப்பற்ற எள்ளலையே எப்போதும் கொடுத்து வந்தஇருக்கிறது . அதன் பயனாக அவர்கள் பேசுகிற இலக்கியத்தை புறக்கணிப்பதன் வழியாக தமிழ் உலகம் அந்த முற்போக்குவாதிகளை அவமதிக்கிறது என நினைக்கிறேன் . தொடர்ந்த புறக்கணிப்பால் தங்கள் நிலையை தக்கவைக்க அவர்களுக்கும் அரசியலை நாடிப்போவதைத் தவிர வேறு வழியில்லை . அரவணைக்கும் அரசியல் அவர்களின் அறிவார்ந்த திறனை சீரழிப்பதை அவர்களுக்கான தண்டனையென வெளிபடுவது “ காலத்தின் நகைசுவை “, பாவம் அவர்கள் அறிவதில்லை .
பிற மொழி இலக்கியத்தில் இல்லாத வெறுமையும் , இன்றைய தமிழ் இலக்கிய இழிநிலைக்கும் இதுவே முழுமையான காரணமாக நான் எப்போதும் உணர்ந்திருகிறேன் . கோடிக்கணக்கானவர்களின் மரபான நம்பிக்கையை உடைத்து வீசுவதுதான் முற்போக்கு என்றால் அதை போன்றதொரு மடமை பிறிதொன்றில்லை என்றே நான் கருதுகிறேன் .
பக்தி இலக்கியத்திற்கும் ,சொற்பொழிவுகளுக்கும் இன்றளவும் கோடிக்கணக்கான மக்களிடம் செல்வாக்கை பெற்றிருப்பதையும் , அவர்கள் தமிழ் இலக்கியத்தை ஆதரிக்காததன் வழியாக அதை பேசும் இந்த முற்போக்குவாதிகளை புறக்கணிப்பதையும் , உற்று நோக்கினால் சில உண்மைகள் தெரியலாம் . பௌரானிக மரபின் ஆழ்நம்பிக்கை தொன்மங்களால் சூழப்பட்டு, அவற்றை நடைமுறைக்கு எடுத்து உபயோகப்படுத்துவதில் உள்ள தடையை ஆன்மீகப் பெரியவர்கள் உணர்ந்திருந்தாலும் அவற்றை சொல்லப்போவதில்லை. அதை கலைந்து கொடுக்கவேண்டிய அறிவுசார் உலகம் தன்வால் தன்வாயிலென உலகில்லா ஊழ்கத்திலிருக்கிறது, அல்லது தன் முற்போக்கு கருத்தென்னும் குப்பைகளுக்குள் மூழ்கிப்போயிருக்கிறது .
திரவிட “பரப்பியல்” கலாச்சாரம் மரபார்ந்த நம்பிக்கைகளை சிதிலமாக்கியதால் , நல்ல சிந்தனைக்கு வேறு மாற்று இல்லாத போதுதான் “நீங்கள் எழுந்து வந்துள்ளீர்கள்” . மரபை ஒதுக்காத உங்களின் நவீன சிந்தனை போக்கு இனி உங்கள் பின்தொடரும் சித்தனையாளர்களால் முன்னெடுக்கப்படும் என நினைக்கிறேன்.உங்கள் காலகட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதை இப்படி தொகுத்துக்கொள்வேன் .
- நவீன தமிழ் இலக்கியம் முற்போக்கானது , என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கான மனிதர்களின் நம்பிக்கையை உடைப்பது , பலரை பதற வைப்பது . மேற்கோள் அரசியலால் தனது கருத்துக்களை இருட்டில் புதைப்பது , சர்ச்சை என்கிற ஒன்றுதான் , தான் தனித்து தெரிவது என்கிற கோட்பாட்டில் வாழ்கிறார்கள் . அவர்களை நோக்கிய அறைகூவலாக உங்கள் எழுத்துக்களை பார்க்கிறேன் . என் போன்று மரபியல் ரீதியில் வளர்க்கப்பட்டவர்கள் தேடலின் பொருட்டு வெளியே வந்தால், நொதித்து கிடக்கும் முற்போக்கு கருத்தியல் எங்களுக்கு வந்தவழி திரும்ப சொல்லி கைகாட்டுகிறது. உங்கள் எழுத்துக்கள் முக்கியத்தும் பெறுவது இங்குதான் என நினைக்கிறேன. அவை அசலான முற்போக்கை நோக்கிய வரலாற்று நகர்வாக கருதுகிறேன்.
- மரபார்ந்த மகாபாரதம், வெண்முராசாக மாற்றுரு கொண்டபோது அது மகாபாரத இடைவெளிகளை அறிவுசார்ந்து, நவீன உலகியல் சார்ந்து , உளவியல் நுட்பத்துடன் இட்டு மீறலற்று நிரப்புகிறபோது அதன் பிரமாண்டம் திகைக்க வைக்கிறது.வெண்முரசு , காலம் சார்ந்த கருத்தியலின் முரணியக்கதால் மரபார்ந்த மனம் படைத்தவர்களின் வாரிசுகளுக்கு நம் தொன்மத்தை கொண்டு சேர்கிறது. அதன் படைப்பாளியின் கண்முன் தன் படைப்பு மரபார்ந்த மனங்களால் அங்கீரிக்கப்படும் வாய்ப்பு மிக சமீபத்தில் இருப்பதாக கருதுகிறேன். என்றால் அது ஒரு விதி முகூர்த்தம் .
- வெண்முரசை மரபு சார்ந்த மனம் மறுக்கும் பல கோணங்கள், புராணங்களில் காணக்கிடைப்பவைகள்தான் .அவை பாமரர்கள் குழம்புவதை தவிர்க்க தத்துவங்களாக மேலெழுந்து வருபவை . இன்றைய நவீன மனம் அவற்றை விலக்கி அறிந்துகொள்ள வல்லது . அவர்களுக்கானதுதான் வெண்முரசு. இன்று இங்கிருந்து கொண்டு அந்த புராணங்களை நோக்கினால் இரண்டின் இணைவுகளின் பிரமாண்டங்கள் வாசிப்பவர்களுக்கு பரவசத்தைக் கொடுப்பவை.ஶ்ரீ.கிருஷ்ண பிரேமி ஸ்வாமி ஜெ யை விட இன்னும் ஆழமான சர்சைக்கிடமான பல கருத்துக்களை சொல்லியிருப்வைகளை இன்று அவற்றை என்னால் வெண்முரசிற்குள் பொருத்தி அனுக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது .
பல கட்டமாக உங்கள் ஆக்கங்களுடன் உரையாடியபடியே இருக்கிறேன் . அவற்றில் முக்கியமாக சொல்லப்போனால் மூன்று கட்டத்தை சொல்லலாம் . முதலில் அது என்னை பதற வைத்தது அதைவிட்டு விலக வைத்தது . பின் நெருக்கம் கொள்ள வைத்தது . இப்போது நான் வெண்முரசை கடந்து பார்த்தது ஜெயமோகன் என்கிற ஆளுமையைதான் , நான் கடந்த மூன்று வருடங்களாக அவரது ஆக்கங்களின் வழியாக படிப்பது அவரைத்தான் . என் தேடலின் பொருட்டு கருவியாக வாய்த்தது ஜெயமோகன் எனபேன் .
அத்தேடலின் கருவி உலகத்து எழுத்தையெல்லாம் கொண்டுவந்து என் வீட்டு வாசலில் கொட்டியது . அதில் எனக்கானதை நான் கண்டடைய வேண்டும் . அதன் பொருட்டே இந்த புதுவை வெணமுரசு கூடுகை உருவாகி வந்தது. ஒரு தருணத்தில் வெண்முரசை அறிந்து அதில் எளிய வாசகனாக நுழைந்த போது அதன் நுட்பங்களை அறிய நேர்ந்தது . திரு.ராஜகோபால் கற்பித்த வாசிப்பு முறை எனக்கு முன்பே அனுக்கமாக இருந்தாலும் . அவரது அடுக்குமுறை அவற்றை இன்னும் ஆழத்திற்கு இட்டுச்செல்ல வல்லது. எல்லோருள்ளும் உறையும் ஆதி இதை முன்பே அறிந்திருந்ததை உணர்ந்து கொண்டேன்
இலக்கிய வாசிப்பை வாழ்வியலிலும் வாழ்வியலை இலக்கியத்தில் போட்டுப் பார்ப்பது குறித்து நீங்கள் சொன்னது அனேகமாக இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். எந்த அதீத தொன்மம் பாரமார்திக கருத்தியலை நோக்கி ஆஸ்திகர்களை நகர வைத்ததோ அதுவே பிற்காலத்தில் இளந்தலைமுறையினரை அதலிருந்து விலகல் மனப்போக்கை கொடுத்துவிட்டிருக்க வேண்டும். வெண்முரசுன் கண்ணனின் தொன்மத்தை கலைதலை நான் இங்கிருந்துதான் பார்க்கிறேன் . இப்போது அவை என்னை பதறவைப்பதில்லை . வெண்முரசால் கண்ணனை இன்னும் அனுக்கமாக உணர்கிறேன். நான் உங்களை கண்டடைந்தது இங்குதான் என நினைக்கிறேன்.
“நவீன மனத்தால் இலக்கியம் “வாழ்க்கையை நோக்கி வைக்கப்பட்ட ஆடி அதன் முதல்தளம் என்றுமே காம-குரோத-மோகங்கள் எனும் அடிப்படை உணர்ச்சிகள்.
எழுத்தின் அடுத்த தளம் என நீதியுணர்வின் இலக்கியம் மீண்டும் மீண்டும் மானுடநீதியை, பிரபஞ்சமளாவிய ஒரு நீதி அதன் அறச்சீற்றம், உச்சகட்ட உணர்வெழுச்சிகள் பலவும் நீதியுணர்வு சார்ந்தவையே எழுதப்படுகிறது . அவற்றுள்
இலக்கியமே முதன்மைவிசை.அதற்கும் அப்பால் சென்று இலக்கியம் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டமைக்கிறது. அடிப்படை மானுட உணர்வுகளையும் அதனுடன் மோதும் நீதியையும் ஊடும்பாவுமாக நெய்து ஒரு மாபெரும் சித்திரத்தை உருவாக்கி எடுக்கின்றன பெரும்படைப்புக்கள். அவையே மானுடசாசனங்களாகக் கொள்ளப்படுகின்றன.அதற்கும் அப்பால் செல்வது, இலக்கியத்தின் உச்சமெனக் கருதப்படுவது, ஆன்மிகமே. என்பதை தாண்டி இலக்கிய பயன்பாட்டை யாரும் சொல்லிவிட முடியாது . அதன் பொருட்டே இந்த 11 ஆவது கூடுகை ...
பக்தியும் தியானமும் ஒரு நதியின் ஒழுக்குபோல ஒரு காலத்தில் சபலமாகும் . எந்த முன்திட்டமும் இன்றி , வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொள்ள துவங்கிய வெண்முரசு கூடுகை என்கிற ஒன்று , உங்களை இந்த நெருக்கத்திற்கு கொண்டுவரும் என நான் நினைக்கவில்லை. சென்னை வெண்முரசு கூடுகையில் நான் சந்தித்தது ஒரு தேடலின் தொடர்ச்சி போல . அதை புதுவை வெண்முரசு கூடுகையில் மாற்றி வாசிப்பனுபவ பகிர்வு மற்றும் வியாச பாரதத்தின் இடைவெளிகளை நிரப்பும் அற்புதம் பற்றிய விமர்சனமாக வடிவமைக்கப்பட்டது . உங்கள் வருகையை ஒட்டி முதலில் சிவாத்மா இதை பிரமாண்டமாக வெளியரங்கில் நடத்தும் திட்டத்தை முன்வைத்த போது , ஒரு கொண்டாட்ட மனநிலையில்தான் துவங்கினோம் . ஆனால் எனக்கு சட்டென, கடந்த 10 கூடுகைகளில் உச்சரிக்கப்பட்ட ஜெ யின் சொல்லால் நிரம்பிய அந்த கூடத்தின் நுண்மையை விட மனமில்லாததால் அதே இடத்தில் நடத்துவது என முடிவானது. அனைவரும் அதற்கு ஒத்துழைத்ததாலேயே அந்த கூடுகை வெற்றியாக நிறைவுற்றது.
நன்றி
ஆழ்ந்த நட்புடன்.
கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
புதுவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக