https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 1 ஜனவரி, 2018

அடையாளமாதல் - 285 * தடையங்கள் *

ஶ்ரீ:



பதிவு : 285 /       / தேதி :- 01 ஜனவரி  2018



* தடையங்கள் *




ஆளுமையின் நிழல்   ” - 31
கருதுகோளின் கோட்டோவியம் -03








தலைவரின் நுட்பமான அரசியல் கணக்கை சிந்தித்தபடி அங்கிருந்து வீடு நோக்கி கிளம்பினேன் . என்ன ஒரு தீர்க்கமான கணக்கு . இத்தகைய நுட்பங்களே அவரின் பலமாக இதுவரை இருந்திருக்க வேண்டும் . தேர்தலாரசியலில் வெற்றி தோல்வி என்கிற ஒற்றைபடையான கருத்தை தாண்டி அதற்கு பலவித பரிமாணங்கள் இருப்பதை இப்போதுதான்  என்னால் புரிந்து கொள்ள முடிந்ததது . இந்த தேர்தலின் வெற்றி தோல்வி தற்போது அவரால் கணக்கில் கொள்ளப்படவில்லை . அதைக் கடந்து இதை மாநில தலைமைக்கான சவாலான கணக்காக  அவர் பார்ப்பதை புரிந்துகொள்ள முடிந்தது  . 

தமிழகம் போன்ற மாநிலத்தில் உள்ள பெரிய தலைவர்களால் செய்ய முடியாததை , தான் இங்கு புதுவையில் சாதித்திருப்பதை மேலிடத்திற்கு தன் தனித்திறமையாக சொல்லும் சந்தர்ப்பமிது . கட்சியை தொடந்து வழி நடத்தவும் , அதை நிர்வகிக்கவும் தடையற்ற அதிகாரம் வழங்கும் இடத்தில் மேலிடமிருந்தால் மட்டுமே இனி புதுவையில் கட்சியை தன்னால்  வழி நிறுத்த இயலும் என்கிற முடிவிற்கு வந்திருந்தார். கட்சிக்கு தனது நேர்மையையும் , நம்பகத்தன்மையையும் நேரு  காலத்திலிருந்து நிரூபித்துவருகிறவர் , இந்தமுறை தனது தேர்தல்  தோல்வியையும்  கடந்து , அவர் சோனியா காந்திக்கும்  அதையே மீளவும் அதை  தெளிவாக ஒரே ஒரு முறை  சொல்ல விழைகிறார் .

புதுவையின் நிஜமான தலைமை யார் என்றும்அது எப்படிப்பட்டது என்றும் காட்ட அவருக்குள்ள கடைசி வாய்பிது  . அதனால் அந்த  இலக்கை நோக்கிய தனது ஆபத்தான பயணத்தை தொடங்கிவிட்டார், ஆனால் மனுடக்கணக்குகளுக்கு அப்பாற்பட்டது  ஊழ்அது தனக்கென தனித்த கணக்கொன்றை வைத்திருப்பதை தலைவர் அன்று அறிந்திருக்கவில்லை . அந்த தேர்தலில் கூட்டணி பலமில்லாததாலும் வழமையான கட்சி உட்சிக்கலால் அவர் தோல்வியுற்றார் . அந்த தோல்விதான் அடுத்த வந்த தேர்தலில் நிற்க  தடையாக நின்றது . அவர் அரசியல் கணக்கு பிறழ்ந்து போனது. கட்சி அவரது பிடியிலிருந்து மேலும் ஒரு படி விலகியது. அதை பின்னர் ஒருபோதும்  அவரால் சரி செய்யவே முடியவில்லை.

நான் அவரை சந்தித்த மறுநாள் தலைவர் தில்லி கிளம்பிவிட்டார் , அதற்கு அடுத்த ஒருவார காலம் புதுவையில் எங்கும் பலவிதமான வதந்திகளின் புழங்கிக் கொண்டிருந்தது , முக்கிய எதிரியாக மரைக்கார் இருப்பார் என்பது விலகி விட்டாலும் நாராயணசாமி அந்த இடத்திற்காக  முழு முயற்சியில் இருக்கிறார் என்பதுதான் அது . இம்முறை அது நடந்தால் மாநில கட்சி அரசியலில் பல அனர்த்தங்களை விளைவிக்கும். இது விபரீதமான காலத்தைத்தான் எனக்கு  பார்க்க கொடுத்தது , இரண்டு வார இழுபறிக்குப்பிறகு தலைவர் பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அனைத்தும் முடிவிற்கு வந்தது

இப்போது எனக்கான சிக்கல் தில்லியில் நிகழ்ந்ததை முழுமையாக அறிந்து கொள்வது முக்கியமாக்கப்பட்டது . அதிர்ஷ்ட வசமாக காந்திராஜ் தலைவருடன் தில்லியில் இருந்ததால் அவரிடம் எனக்கான முழு விபரமும் கிடைக்கும் . நான் காந்திராஜை சந்தித்தேன் . தில்லி எப்போதும் தந்திரபூமி , அதன் ஆடல்களை புரிந்துகொள்ள நிறைய அனுபவம் வேண்டும் . தலைவர் 1991 பிறகு இப்போதுதான் தனக்கு சீட்டு என சென்றிருக்கிறார் , தில்லியை போன்ற அரசியல் மையத்திற்கு ஒரு நாள் நிகழ்ந்தை தொடுத்து புரிந்து கடக்க வாழ்நாள் அனுபவம் தேவைப்படுவது . எட்டு ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி என்பது யுகாந்திர கணக்கு போல சரி செய்யமுடியாத இடைவெளியை தலைவரால் நிரப்ப இயலாமையை , தான் ஒரு கணம் உணர்ந்ததாக காந்திராஜ் என்னிடம் கூறினார் , என்னால் அதை புரிந்து கொள்ள முடிந்தது .

காந்திராஜ் சொன்ன முழுத் தகவல்கள் என்னை திணறிப் போகவைத்தது , தில்லியில் இருக்கும் அகில இந்திய  தலைவர் சீத்தாராம் கேசரி, இந்திரா காலத்திற்கு முன்பிருந்து கட்சியின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக அறியப்பட்டவர் . தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்து வந்து தனது நிலையான அரசியலினால்  தலைவராக அடையாளம் காணப்பட்டு மேல் நிலைக்கு வந்தவர் . தலைவர் சண்முகத்துடன் நல்ல பரிட்சயமுள்ளவர் . அகில இந்திய தலைமையகத்தில் சீதாராம் கேசரியை சந்திக்க சென்ற தலைவர் நாராயணசாமியால் எதிர்கொள்ளப்பட்டு , தலைமையை சந்திக்க தான் ஏற்பாடு செய்வதாக சொல்லி அவரை வெஸ்டன் கோர்ட்டில் சென்று  காத்திருக்கும் படி  அறிவுருத்தியதாகவும் அதன் அடிப்படையில் தலைவர் காத்திருந்ததாகவும் காந்திராஜ் சொன்னார் .

தலைவர் பிறிதொருவருக்காக சிபாரிசு செய்யும் பதவியில்  இருப்பவர் . தனக்கென சீட்டு கேட்டு தன்னை முன்னிருத்திக் கொள்வதை போல ஒரு இழிவு பிறிதொன்றில்லை என்கிற எண்ணமுள்ளவர் . இயற்கையிலேயே சங்காஜி. இவரால் எப்படி தலைமை பொறுப்பை  வகிக்க முடிகிறது , என நான் பலமுறை ஆச்சரியப்பட்டதுண்டு . அதே சமயம் என்னை உத்வேகம் கொள்ள வைத்ததும் அதுவே தான் . நான் பிறவியால் பேசுவதில் தடையுள்ளவன் , கூச்சமும் தயக்கமுமாகவே வாழ்வின் இளமையை தொலைந்துபோனது . என்னை போன்ற குறைபாடு உடையவர்கள்  அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்பது பொது எண்ணம். நான் என் இயலபிறகு பொருந்தா துறைக்கு வந்துவிட்டதாக உணராத தருணங்கள் இல்லை. அப்போதெல்லாம்  , நான் தலைவரின் சுபாவத்தையும் அவரது வெற்றிகளையும் எண்ணி , என்னை ஆற்றுப்படுத்திக் கொண்டதுண்டு

தில்லியில் என்ன  நிகழ்ந்தால் அனைத்தும் ஒரு முடிவை நோக்கி நகரலாம் என அஞ்சினேனோ அது நிகழவிருக்கும் வாய்ப்பே தெளிவாக தெரியத் துவங்கியது . அதன்தடயங்களையும் , அதிலிருந்து விளையவிருப்பதையும் , ஆழ்ந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...