https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 1 நவம்பர், 2017

அடையாளமாதல் - 224 * நகல் மரியாதை *

ஶ்ரீ:



பதிவு : 224 / 310 /  தேதி :- 31 அக்டோபர்    2017


நகல் மரியாதை *




வாய்ப்புகளில் புரியாமை - 10 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.

மேலும் அரசு அதிகாரமின்றி நகர்ப்புற இளைஞர்களை கவருவது சாத்தியமில்லை , அவர்கள் அனைவரும் உதிரிகளாக சிதறிக்கிடப்பதால் , தங்களுக்காகக்கூட அவர்கள் போராடுவதென்பது நடவாது . இன்று வந்து நாளை பதவி இழக்கும் அரசு அதிகாரத்தைவிட குடிமை சமூகம் தரும் அங்கீகாரம் என்றைக்குமானது . அதுவும் அவர்களுடன் பேணும் நல்ல நட்பையும் நேர்மையையும் பொறுத்து . பல விதமான் பேதங்களில் சிதறிக்கிடக்கும் இந்தியக் குடிமை சமூகம் அரசியலை சார்ந்து சித்தும்போது மட்டும் ஆச்சர்யமாக ஒற்றை  மனப்பரப்பை அடைகின்றது . அதுவே இந்தியாவை இன்னும் ஜனநாயக நாடாக வைத்திருக்கிறது.




-குடிமை சமூகம் தனக்குடனான உரையாடல்களில்  அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து உணர்வுகளும் அந்த ஒற்றை மனப்பரப்பை அடையும் வழியாகிறது . அவை உணர்வுகளுக்கே முதன்மை இடம் என்பதால் அவை உண்மை நிகழ்வை சார்ந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லாதது . தவறினால் கூட அது திரும்பவும் தனது தவறுகளை திருத்திக்கொண்டு மறுபடியும் துவங்குகிறது . இதுவே இன்றுவரை இந்திய ஜனநாயக மரபை மத்திலும் மாநிலத்திலும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது . தனிநபர் வசீகரத்தை தாண்டி செயல்பாடுகளே அரசியலின் தலைமையை முடிவு செய்கிறது . தமிழகம் போன்ற சில மாநிலங்கள்  அதற்கு விதிவிலக்கு . அல்லது மூன்றாவது தலைமை எழ வாய்ப்பில்லாதபோது இரண்டிற்கும் இடையே சிக்கி கொண்டிருப்பது ஊழ் என முடிந்துபோகிறது . மற்றோரு கோணத்தில் அனைத்தும் பொது சமூகத்திலிருந்து எழுந்துவருவதே . அரசியல் இந்த இரண்டிற்குமான முரணியக்கத்தின் விளைவுகள்

இருப்பினும் நடைமுறை சிக்கல்களை அவர்களுக்கு எப்போதும் புரியவைத்து விட முடியும் என்பது எல்லா சந்தர்ப்பத்திலும்  சாத்தியமில்லாதது. எதுவும் ஒரு காலத்திற்கும் ஆதீனமானது . அரசியல்சரிநிலைகளை போல பல சரிநிலைகள் சமூகத்தில் காணக்கிடைக்கின்றன . எல்லா காலத்திலும் நடைமுறை அரசியலுக்கும், அறம்சார்ந்த சரிநிலைகளுக்கும் தருணங்களை பொறுத்து எதிர் திசையாக பேணப்படும் வாய்ப்புகளை, அல்லது அனைத்து ஆதரவையும் இழக்குக்கும் ஒரு தருணம் எழுவதை யாராலும் தடுக்க இயலாது . அப்போது நிலைமை திரும்பிவர காத்திருப்பது ஒன்றே அதில் நீடிக்கும் வழி . ஒருகால் அது திரும்பாமலே போய்விடின் அதுவே விண்ணகத்து தெய்வங்களின் விருப்பமென அதைவிட்டு ஒதுங்குதலை தவிர வேறு வழி இல்லை

பால் விலை உயர்வு எதிர்ப்பு போராட்டம் நான் திட்டமிட்டதில்லை , அது ஒரு தற்செயல் நிகழ்வு . அதை ஒரு பேரத்திற்கு அழைப்பாக மாற்றி அமைபிற்குள் சிலர் லாபமடைந்தார்கள் என்றெல்லாம் நான் பின்னொருகாலத்தில் அறிந்துகொள்ள நேர்ந்தது . அவை அரசியலின் பிறிதொருமுகம் . அவர்கள் மட்டுமே அதை மிக நேர்த்தியாக கையாளுகிறார்கள் . அரசியல் ரிதியான விளைவுகளை கட்சி  தரப்பிலிருந்து  வேறொரு முனையில் அதன் உட்கூறுகளில்  பயன்படுத்திக்கொள்ள விரும்பம் அவரகளுக்கானது. அதற்கான திட்டங்களுடன் அவர்கள் காத்திருக்கும் போதுதான் , என்னுடைய  துரதிஷ்டம்  நான் தலைமை பொறுப்பில் வரநேர்ந்தது .

எல்லாருடைய திட்டமும் பிறிதெவரையோ அந்தப் பதவிக்கு கொண்டு வருவதை பற்றிய திட்டத்தில்  இருக்க, நான் ஏன் அந்த இடத்திற்கு  கொண்டுவரப்பட்டேன் என உண்மையில் எனக்கு இன்றும் புரியவில்லை . ஆனால் பலருடைய கனவை கெடுத்தது என் நியமனம் என்பதை வெகு விரைவில் எனக்கு கிளைத்தெழுந்த உட்கட்சி எதிர்பிலிருந்து புரிந்துபோனது . எனக்கு அணுக்கமான நண்பன் ஒருவனுக்கு இந்த நிர்வாக கமிட்டியில் இடம்பெறும் விருப்பத்தை என்னிடம் சொன்னபோது மிகவும் வியப்பாக இருந்தது . அவனுடன் எனக்கு சுமார் பதினைந்து வருட நட்பு . எந்த சந்தர்ப்பத்திலும் தனக்கு அரசியலில் வருப்பமிருந்ததாக சாதாரண பேச்சில்கூட அவன் சொன்னவனில்லை . எதிலும் பிடிமானமின்றி கட்டற்ற வாழ்கையில் விருப்பமுள்ளவன்.

முதல் முறையாக என்னிடம் தனது அரசியல் விரும்பம் பற்றி பேசியபோது நான் ஏதோ விளையாட்டிற்கு சொல்லுகிறான் என நினைத்தேன் . ஆனால் அவனது தீவிரம் சிறிது நேரத்தில் எனக்கு புரிந்தது. அவனது அடிப்படை குணத்திற்கு அரசியல் எப்படி சரிவராது என்பதை நான் சொன்னேன் . அவன் விடுவதாக இல்லை . ஒரு முடிவோடு வந்திருந்தான். கட்சியில் இப்போது நிலவும் சிக்கலும் , அதன் எதிரொலியாக என்னால் சுதந்திரமாக  எங்கும் செயல்பட முடியாத தன்மை நிலவுவதையும் , எனது உளச்சோர்வையும் அவனுக்கு வரிவாக சொன்னேன். ஆனால் அவன் தான் சொல்லவந்ததில் பிடிவாதமாக நிற்க , அவனுக்கு புரியும்படியாக சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை

நான் எனது பதவி சம்பந்தமாகவே யாரிடமும் கேட்பதில்லை என்கிற மனோபாவத்தில் இருந்தேன் . மேலும் நிஜமான அரசியலின் வேகம் அதன் பல உட்கூறுகளினால் நான் அலைகழிக்கப்பட்டு இருந்தேன் . யாரை நம்புவது என புரியாமையால் யாரிடம் எதை சொல்லுவது என்கிற குழப்பமான நாட்களவை. நான் எனது குழப்பத்தை அவனிடம் தெளிவாக பேச முயற்சித்தது என் குற்றம் . நான் சொல்லவந்ததை அவன் புரிந்து கொள்ளவில்லை என்பதை விட ,நான் அவனுக்கு உதவ மறுப்பதாக சந்தேகம் கொண்டு என்னை தவிற்த்து வேறு சில வழிமுறைகளின் மூலமாக அவனும் அந்த நிர்வாக கமிட்டியில் இடம்பெற்றான்

இப்படி அடிப்படையில்லாமல் பெரிய பொறுப்புகளில் வருவதெல்லாம் காங்கிரஸில் ஒரு விஷயமேயில்லை . இப்படிப்பட்டவர்களால்தான் அதன் திசைகள் மாறிப்போனது . அவற்றால் கசப்படைதல் காட்டிலும் மடமை பிறிதொன்றில்லை . அதுவும் ஒரு நிகழ்வின் பெருக்கு, முரணியக்கத்தில் ஒரு அலகு , பெரும் முடிவுகளின் சாயல்களில் அதுவும் ஒரு துளியாக எஞ்சுவதை விண்ணகத்து தெய்வங்கள் விரும்புகின்றானபோலும் . அதன் குறுக்காக நிற்க எப்போதும், எவராலும் இயலுவதில்லை . ஆனால் சில சமயம் அவர்களுக்கு கிடைக்கும் நகல் மரியாதையில் உள்ள எள்ளலே அவர்களுக்கு அவர்கள் யார் என காட்டிவிடுவதுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்