https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 27 நவம்பர், 2017

அடையாளமாதல் - 251 * அகத்தினால் புறவயம் நிறுவுதல் *

ஶ்ரீ:





பதிவு : 251 / 337 / தேதி :- 27 நவம்பர்    2017

* அகத்தினால் புறவயம் நிறுவுதல்  *


முரண்களின் முனைகள் ” - 20
கருதுகோளின் கோட்டோவியம் -02



விரைவில் நடைபெற இருக்கும் ராஜ்யசபை தேர்தலில் கட்சி பங்கெடுக்கப்போகிறதா? என்பது பற்றிய விவாதக் கூடுகை அது . அந்தக்கூட்டத்தில் பல மாறுபட்ட குரல்கள் ஒலித்ததை தலைவர் அமைதியா கவனித்து கொண்டிருந்தார் . பலவித சமன்பாடுகளுடன் கட்சியின் தலைமைப் பொறுப்பை தொடர்ந்து முப்பதி ஏழு வருடங்களாக நிர்வகித்து , தக்கவைத்தபடி இருந்த தலைவருக்கு இன்று மாறிவருகின்ற சூழலிலிருந்து புதிய சமன்பாடுகள் எழுந்துவரவேண்டி இருந்தது . பலவித நிலைகளிலிருந்து மேற்பார்வையிடப்படும் அகிலஇந்திய அரசியல் கட்சிகளின் மாநில தலைவர்களின் நிலை மிக  சிக்கலானது . அதனால்  அமைப்பிற்குள் முறைமைகள் மாறியபடியே இருக்கும் . அன்றைய கூடுகையில் எதிர்நோக்கியது போல தலைவரால் தனது நிலையை அழுத்தமாக வைக்க முடியவில்லை . அது எதிர்பார்க்கப்பட்டதுதான் , ஒரு மௌன பார்வையாளனாக  நான் மிகுந்த மனவழுத்ததுடன்  இருந்தேன் . இறுதியில் கட்சி சார்பாக தேர்தலை எதிர்கொள்வதென முடிவாயிற்று . நான் இன்னதென்று புரியாத உணர்வு பெருக்குடன் அமர்ந்திருந்தேன்.

கூட்டம் கலைந்தது பலர் உடன் எழுந்து சென்றனர் . நாராயணசாமியை வாழ்த்துவதற்காக இருக்கலாம். சிறிது நேரத்தில் அனைவரும் சென்றுவிட நானும் தலைவரும் மட்டுமே இருந்த  அந்த அறை மிகுந்த எடை கொண்டதானது. தலைவர் என்னிடம் வண்டி ஒருங்கச் சொன்னார் நானும் அவருடன் காரில் ஏறிக்கொண்டேன். கார் கிளம்பி தலைவர் வீட்டை அடைவது வரையில் அவர் ஒன்றும் பேசவில்லை . மிகுந்த சீற்றம் கொண்டிருந்தார் .

ராஜ்யசபை தேர்தலுக்கான மனு தாக்கல் முறைகள் வேறுவிதமானவைகள் . சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தோடு அவை தாக்கல் செய்யப்படவேண்டும். காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக்கூடுகையில் தீர்மானம் இயற்றப்பட்டு , முறையாக தேர்தல் வேலைகள் துவங்கின. வல்சராஜ் நாராயணசாமிக்கு சார்பாக அனைத்து ஒருங்கிணைப்பையும்  பார்த்துக்கொண்டார். அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துகொடுக்க வேண்டியது அவரது கூடுதல் பொறுப்பென்றானது

நாராயணசாமி அதிகாரப்பூரவமான வேட்பாளராக அறிவிக்கப் பட்ட பிறகு , நான் மரியாதை நிமித்தமாக அவரை ஒரு முறை சந்நித்து வாழ்த்து சொன்னேன். அது நான் வல்சராஜுடன் இணைந்து இளைஞர் காங்கிரஸ் கட்சி வேலைகளை செய்து கொண்டிருந்த நேரம் , நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முற்றும் எதிர்நோக்காத சந்தரப்பத்தில் நாராயணசாமியை மீளவும் சந்திக்குமாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது . நான் அவரை சந்திப்பதை தவிற்க முனையும் காரணம் அவருக்கு தெரிவுமளவிற்கு நான் அத்தனை முக்கியமானவனில்லை.  

நராயணசாமியுடனான என் மனவிலக்கத்தின் பின்னனியை வல்சராஜ் அறிந்திருந்தார் என நினைக்கிறேன் . நேடியாக என்னிடம் அதை வெளிக்காட்டாது , அரசியலின் குரு சிஷ்ய நிலைப்பாட்டில் இருக்கும் யதார்ததம், எதிர்பார்ப்பு , ஆசை, துரோகம் போன்றவைகள் எவர் கண்கள் கொண்டு பார்க்கப்பட வேண்டும் , போன்ற நிறைய நுட்பமான விஷயங்களை பேசியிருக்கிறோம் . அது பெரும்பாளும் தலைவர் மீது அவருக்குள்ள வருத்தமாக அவை வெளிப்பட்டபடி இருக்கும் . என்னால் அவற்றை துல்லியமாக புரிந்து கொள்ள முடிந்தாலும் , அதில் எனக்கென தனித்த தகவல்கள் இருப்பதை அவர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை . நான் மிகை உணர்வுடன் என் முடிவுகளை எடுப்பதாக அவர் நினைத்திருக்கலாம். ஆனால் நாராயணசாமியுடனான என் கடந்த கால அனுபவங்கள் அவருடன் என்னால் நெருங்க இயலாத தடுப்பு சுவர் போல குறுக்கே நின்று கொண்டிருந்தது .

கட்சிவேலையாக நானும் வல்சராஜும் காரில் கிளம்ப கொண்டிருந்த போது நாராயணசாமி அவரை பார்க்க விழைவதாக தொலைபேசியில் அழைத்தும்  , கார் சட்டென நாராயணசாமியின் வீட்டை நோக்கி திரும்பியது . என்னை வல்சராஜுடன் அவர் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன் , என்னைப் பார்த்ததும் அவர் கண்கள் மாறுபடுவதை உணர முடிந்தது. என்னை மரியாதைக்கு தலை அசைத்து  வரச்சொல்லிவிட்டு, அவர் தனது தனி அறைக்கு சென்றார் . வல்சராஜ் அவருடன் இயல்பாக பேசியபடியே உள்ளே செல்ல , நான் வெளி அறையில் அமர்ந்து கொண்டேன் . அங்கு பாண்டியன் இருந்தான் . என்னை பலமுறை உள்ளே போகச்சொல்லியும் நான் மறுத்து வெளியிலேயே அமர்ந்திருந்தேன். நாராயணசாமி தலைவருக்கு மிக நெருக்கமானவர்களை , தனக்கு சற்று தூரத்தில் வைப்பவர் என அறிந்திருந்ததே , நான் உள்ளே செல்லாததற்கு காரணம்.

சிறிது நேரத்திற்கெல்லாம்   இருவரும் பேசியபடி வெளியில் வந்தனர் . நான் மரியாதைக்கு எழுந்து கொண்டேன் . நாராயணசாமி என்னிடம்ஏன் உள்ளே வரவில்லைஎன்றார் , ஒரு உபச்சார முறைமைக்காக. நான் சிரித்தபடி அதற்கு ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருந்தேன் . சற்று நேரத்திற்கெல்லாம் , நானும், வல்சராஜும் அங்கிருந்து புறப்பட்டோம். காரில் சிறிது  நேரம் மௌனமாக இருந்த வல்சராஜ் பின் மெல்ல பேசத்துவங்கினார். "நம்மை யார் எங்கு வைக்க நாம்தான் முடிவு செய்யவேண்டும் .சில தயக்கம் நாம் எங்கு நிற்கிறோமோ அங்கேயே நம்மை கொண்டு நிறுத்திவிடும் . யாரும் யாரையும் தூக்கிவிடுவது அரசியலில் இல்லை" என்றார் . "வேகமாக வளர்ந்து வருகிறவர்கள் தடைகளெனக் கருதுவதை உடைத்து கொண்டு நகர மறுத்தால் , அதுவே ஒரு சிறையென மாறிப்போகும்"   என்றார் . "நமது ஆதரவை யாராக இருந்தாலும் நாம் கொடுத்தே பிறர் பெறுவது . ஆதரவு என்பது நிலைப்பாடுகளிலிருந்து எழுந்து வருவது . யாரும், யாருக்கும் அதை சாஸ்வதமாக கொடுப்பதோ பெறுவதோ முடியாது . இதை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார் .

அடிப்படையில் அவர் சொன்னது ஏற்கத்தக்கதே அதில் ஏதும் மறுப்பதற்கில்லை . ஒரே மாறுபாடு அது வளர்த்துவிட்ட தலைவர்களுக்கானது . என்னைப்போல வளர்ந்து வருபவர்களுக்கானதில்லை . இருந்தும் நான் அமைதியாக அவர் பேசியதை கேட்டபடி இருந்தேன் . நான் என்னை என் ஸ்தானத்தை அறிந்து கொள்ளாது சிறிய வட்டத்திற்குள்ளேயே நின்றுவிடுவதாக அவர் நினைத்திருக்கலாம் . என் நிலை இரண்டு பகுதிகளிலானது. அதில் வல்சராஜ் சொன்னது ஒருபாதிக்கான உண்மை . ஆனால் எங்கு ஏன் அப்படி ஒரு குறுகிய வட்டத்திற்குள் என்னை நிறுத்திக்கொள்கிறேன் . என்பதை நான் அவரிடம் விளக்கிக்கூற முடியும் . ஆனால் இப்போது அதற்கு அவசியமிருப்பதாக நினைக்கவில்லை . என்னை நான் என் அகத்திலிருந்து வெளிப்படுத்தி ஒரு தனி ஆளுமையாக முன்னிறுத்த முயல்கிறேன் . ஆனால் என்னை அடிப்படையில் அங்கீகரிப்பவர்கள்  மட்டுமே அதை ஏற்க முடியும் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்