ஶ்ரீ:
பதிவு : 234 / 320 / தேதி :- 10 நவம்பர் 2017
* வடிவமைப்பில் மீறல் *
“முரண்களின் முனைகள் ” - 04 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02
நான் அவனுக்கு அதெல்லாம் ஒன்றில்லை என்று சொன்னாலும் , அன்று அவரை பற்றிய குறைகளை நிறைய சொன்னான் . இதுதான் அவரது குணாதிசயம் இதில் ஆதங்கப்படுவதில் ஏதுமில்லை என்று சொல்லிவிட்டு அவனை நாராயணசாமி வீட்டிற்கு அருகில் இறக்கி விடும்போது நாராயணசாமி வேறொருவர் காரில் வந்து இறங்கி உள்ளே சென்றார் . என்னால் இங்கு தலைவரோடு அவரை ஒப்பிடாமல் இதை கடக்க இயலவில்லலை . தலைவர்கள் உருவாவதில்லை , பிறக்கிறார்கள்.
அரசியல் பல தரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் எண்ணங்களையும் மையமாக கொண்டது . ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட விழைவுகளை பொதுதளத்தில் தினித்து அதை முயங்கவிடும்போது எழும் முரணியக்கம், அரசியலின் பாதையாகத் தேர்வதாக இருப்பது . குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் , சமூகத்தில் தவறான கருத்தினை அடைந்திருப்பவர்கள் அரசியலை தங்களின் கடைசி புகலிடமாக கொள்வதும் , பெரிய தலைவருடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை பொது சமூகத்தில் வெளிப்படுத்தனூடாக தங்களின் விழைவுகளுக்கு ஒரு தவறான அழுத்தம் கொடுக்க முயல்வதும், அரசியலில் ஏதாவதொரு வகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை.தன்னைப்பற்றிய எதிர்மறையான கருத்துருவாக்கம் எழுவதை ஆளுமையுள்ள எந்தத்தலைவரும் அரசியல் லாபத்திற்காக கூட விழைவதில்லை. அது செய்திகளை முந்திக்கொண்டு செல்வது .அதை சிதறடிக்கும் எந்த சிறு பொறியையும் அவர்கள் எப்போதும் தன்னை நெருங்க அனுபதிப்பதில்லை தன் உடமைகளின் உடன் , தன் அருகில் இருக்கவேண்டியவர்களையும் அவர்கள் சேர்த்தே முடிவு செய்வார்கள் .
பேரத்தின் வழியாகவே அரசியல்; என பொதுவிதியாக நினைப்பவர்க்கு மத்தியில் , அது பிழைத்திருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் மட்டுமே உபயோகப்படுவது . அதையே பிழைப்பாகக் கொண்டவர்களில் இருந்து அது மாறுபட்டது என்கிற நம்பிக்கைதான் , எங்களை போன்றவர்களை இதில் முழுவேகத்துடன் ஈடுபடவைப்பது . தலைவரிடத்தில் யதார்த்த அரசியலின் வழிமுறைகள் இருந்தாலும் நுண்மையான நேரங்களில் அவர் மரபான அரசியல் நிலைகளில் நிற்பதை பார்த்திருக்கிறேன் .
தலைவர் சண்முகம் தான் இன்னாரென ஒரு அடையாளத்தை எப்போதும் சூடி இருப்பவர் . தான் வந்த அமர்ந்து சென்ற இடங்கள் தோறும் ,அவர் சென்ற பிறகும் அவர் அங்கு விட்டுச் சென்றது அங்கேயே நின்று கொண்டிருப்பதை அனைவரும் தங்களின் உள்ளுணர்வால் அறிந்து கொள்வார்கள் . தங்கள் தலைமை இதைச் செய்யும், இதைச் செய்யாது என்கிற எண்ணமும் அதை ஒட்டி தன் செயலை முன்னெடுக்கிற துணிவு அவரது நிரையாக நிற்பவருக்கு வாய்த்து விடுவது நல்லூழ்.
வார்த்தைகளால் விளக்க முடியாத ,அந்த எண்ணம் அவரை சார்ந்தவர்களை இணைக்கும் கண்களறியாத பிணைப்பு என எப்போதும் இருந்து கொண்டிருப்பது . பல களங்களில் தங்கள் தலைமை இதை ஆற்றும் அல்லது ஆற்றாது என்கிற தெளிவுக்கே முதலிடம் கிடைக்கும் . இதுவே பிறிதெவருக்கும் தன் தலைமையை எங்கு வைக்கவேண்டும் என முடிவு செய்ய வைக்கிறது . நிரையின் அலைக்கழிப்பு என்பது தலைமைக்கு எவ்வகையில் ஏற்புடையதாக இருக்க முடியாது.
தனியர்களின் வாழ்வியல் பிறரிடம் இருந்து தனக்கு வேண்டுவதை எதிர்பார்ப்பதை ஆணவம் எனப்படுவது , நல்ல தலைமைக்கு அதை ஈடு செய்வதை இங்கு அதை முறைமைகள் என சொல்லுகிறது . காற்று வீசும் திசையெல்லாம் பயணிக்கும் ஒருவரை முதன்மை தலைமைக்கு முன்னிறுத்த முடியாது . நான் நாராயணசாமியின் செயல்களுக்கு பின்னல் உள்ள அவரது நிறைவின்மையை காண்கிறேன் . பெரும் பலம் பெற்ற பதவிகளில் அமர்ந்தவர் . தென்னகத்தின் பெரும் தலைவர்களாக உருவாகக்கூடிய அனைத்து காரணிகளையும் தன் வாழ்நாளில் அடைந்தவர் .அதை தனது தலைமைப் பண்பாக முன்னிறுத்தி , அவருக்கு நிரையென அவர் பின்னின்று குடிமை சமூகம் இன்றுவரை அங்கீகாரமளிப்பதாக என்னால் கருத முடியவில்லை . அதுவரை நான் கொண்டிருந்த மனவிலக்கம் மேலும் அழுத்தமடைந்தது . அதன் பின் என்னிடம் பாண்டியன் பலமுறை விளக்கமளிக்க முயற்சித்த போதும் எனது பல சந்தேகங்களுக்கு அவனிடம் விளக்கமில்லை .
நாராயணசாமியை திருபுவனையிலிருந்து அழைத்து சென்றவர் மீது பாண்டியன் கடும் காழ்ப்பிலிருந்தான் . “அவருக்கு நாராயணசாமி எப்படி உடன்படுகிறார் ,இவர்கள் போல சிலர் செய்யும் செயல்களுக்கு அவர் உடன்பட வேண்டிய நிர்பந்தம் என்ன” ? . என்றெல்லாம் பிதற்றியபடி வந்தான் . அவன் சொல்லும் அந்த நபரை நான் நன்கு அறிவேன் . அவர் சர்வ கட்சிக்கும் சொந்தமானவர். அவரிடம் நாராயணசாமி காட்டும் நெருக்கம் அமைப்பை சிதைக்கிறது . அரசியலென்பது பல வித பேரத்தின் அடைபடையிலானது என்பது மறுப்பதற்கில்லை . ஆனால் ஒரு தருணத்தில் தன் கட்சிசார்ந்து மட்டுமே நிற்பது கற்பெனப்படுவது . அந்த இடத்தில் தலைவர்களுடன் இவர்களை போன்றவர்கள் காணப்படும்போது அது வலைபேசப்படுவதாகவே பொருள் கொள்ளப்படும். அதை வேறு வார்த்தைகளில் சொல்லிவிட இயலாது . மரபை மீறி வளர்தலும் சிதைதலே .
அவர் அதை அறிந்திருக்கிறார் இல்லையா? என்பதல்ல இப்போதைய சிக்கல் . அது அவர் வழியாக இருக்கலாம், ஆனால் அது நான் அவருடன் பயணிக்க முடியாத ஒரு மனத்தடை உருவாக்கி விட்டது . நான் பாண்டியனிடம் “இது உன்னுடைய சிக்கல் . இதில் நான் செய்யக்கூடியதென ஒன்றில்லை”என்றேன் . அதன் பிறகு அவரை சந்திப்பதிப்பதில்லை . நீண்ட இடைவெளிக்கு பிறகு வல்சராஜ் என்னை அவரது ராஜயசபா தேர்தலின் போது அழைத்து சென்றார் . வல்சராஜிக்கு நான் நாராயணசாமியுடன் இணக்கமாக இருப்பது என் அரசியலுக்கு உகந்தது என பலமுறை சொன்னதுண்டு . நான் அப்போதெல்லாம் மெளனமாக இருப்பதை வழமையாக கொண்டிருந்தேன் . பாண்டியன் மற்றும் வல்சராஜின் கோணங்கள் வேறுவேறானவை . பாண்டியனிடம் சொன்னதை வல்சராஜிடம் சொல்ல முடியாது . பாண்டியனுக்கு தான் செய்யநினைப்பதை செய்ய முடியாது என தெரியாது , ஆனால் அனைத்தையும் ஆற்றும் இடத்துள்ள வல்சராஜ் நாராயணசாமியை விட அரசியல் ரீதியான பலம்வாய்ந்தவர் . இது எனது தனிப்பட்ட அவதானிப்பு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக