ஶ்ரீ:
பதிவு : 240 / 326 / தேதி :- 16 நவம்பர் 2017
* முதிராச் சிறுவன் *
“முரண்களின் முனைகள் ” - 10 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02
திருவகீந்திர புரத்தில் ஶ்ரீமணவாள மாமுனிகள் சண்ணதி எனது தேடல்களுக்கு பாதைகளை கொடுத்துக் கொண்டிருப்பது மிகத் தாமதமாகத்தான் புரிந்தது .அன்று திரு. சதுர்வேதிகளுடைய உபன்யாசம் , வேறுவிதமான திறப்பை அன்று கொடுத்தது . அது திருவாய்மொழியைப் பற்றியது . அதை மூன்றாகப் பிரித்து , மொழி , வாய்மொழி , திருவாய்மொழி என்றார் . அற்புதமாக திறப்பாக இருந்தது நான் அங்கிருந்துதான் எனது மொழியை தேடிக் கிளம்பினேன் . அது எவ்வகையில் அடைவது என்பதைப் பற்றிய எந்த இலக்கும் இன்றித்தான் வளைத்தளங்களை தடவிக் கொண்டிருந்தேன் . ஜெயமோகனை வந்தடைந்து அங்கிருந்துதான். அவருடைய ஆக்கங்களே என் மொழியையும் அதை பெற்றுக்கொள்ளும் ஆற்றலையும் வழங்கியிருக்கவேண்டும். ஒரு கிறுக்கல் போலவே நான் அதை தொகுத்த படி இருக்கிறேன்.
மொழியின்மையால் என்னிடம் நான் உரையாடும் நுண்மையை அடையவில்லை என்பதுதான் எனது அலைகழிப்பின் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஜெயமோகன் ஆக்கங்களின் வாசிப்பை தொடரும் போதெல்லாம் அதில் சொல்லப்படும் அனைத்து கருத்துக்களும் என் தனிப்பட்ட அவதானிப்புகளாக என்னிடமிருந்து சொல்லென எழாத கருக்குழந்தைகாளாக என்னுள் பலகாலம் உறைந்திருந்தவைகள் என தோன்றிவிடும் . அவை இன்று கருத்துக்களாக எழுந்து ஒத்திசைவு பெற்றன. அவை அனைத்தும் என் எண்ணங்கள் என்றும் , இதை சொல்லுபவன் நானே என்கிற அனுபவத்தை அடைந்ததால் அவை என்னுடையவைகள் என்று ஆகிப்போனது . ஆனால் அதன் சொற்களும் சொல்லப்படுகிற முறைகளும் ஜெயமோகனுக்கானவை என்கிற எண்ணம் எழுந்ததும் , மேலும் அவை கிளர்ந்தபடி இருந்தது . திரு.ஜெமோகனின் கருத்துகளுக்கு நான் உடன்பட வேண்டிய அவசியமே எழவில்லை ஏனெனில் சொல்பவன் நான் என்கிற விசித்திர உணர்வை அடைந்து கொண்டிருந்தேன் .அதனுடனான நான் அறியா ஒத்திசைவினால் அதனுள் சொல்லப்படாத மறைந்திருக்கும் வார்த்தைகள் , விதைகள் என முளைக்க காத்திருப்பதை பார்க்க முடிந்தது . ஒரு வாசிப்பு அனுபவம் இத்தகைய உரையாடல்களை என்னுடன் நிகழ்த்த முடியும் என நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. திறப்பு எனப்படுவது இதுதான் போலும் . தொடர் வாசிப்பு எனக்கு மொழியையும் என் கருத்துக்களை ஒரு திறப்பின் வழியாக பல திறப்புக்களை கொடுத்தபடியே இருந்தது . இரு செற்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி ஒரு முடிவிலியாக, எனக்கு அவற்றிலிருந்து சொல்லாக வடித்தெடுத்துக்கொள்ளும் முறையை கற்றுக் கொடுத்தது .
அதன் மூலமாக என் வாசிப்பு அனுபவங்களை ஆழ்மனப்படிமங்களுடன் உரையாடி அவற்றை என் அனுபவத்திற்குள் கொண்டு வந்து இன்னும் ஆழமாக அனுகி புரிந்து கொள்ள முடிந்தது. அவற்றை என் அனுபவங்களிலிருந்து தனிப்பட்ட கருத்துக்களாக மாறியது. இயல்பாக அவற்றை உள அலைகழிப்பிலிருந்து , ஒரு பதிவாக அதை தொகுத்துக்கொள்ள முடிந்தது.
பெற்ற மொழியிலிருந்து நான் என்னுடன் உரையாட முயன்று , எனது முதல் பதிவாக உருவெடுத்து “அழகியலாகும் வாழ்வியல்” என வெளியானது. என மனக்கொந்தளிப்பை அதில் சொற்களென என்னால் பார்க்க முடிந்தது. அதில் சொல்லப்பட்டவை எனது அகநிலை கொந்தளிப்புக்கள் . அவை அனைத்தும் ஜெயமோகனிடமிருந்து கடன் வாங்கியவை . அந்த காரணத்தினால் என் வலைதளம் அவருக்கு அர்ப்பணமாக சொல்லப்பட்டது. எனது எழுதும் பாணியும் அவரை நகல் செய்பாவையாக இருப்பதில் வியப்பில்லை .ஆனால் அதை எழுதி எழுதி எனக்கான பாணியை நான் கண்டடைய வேண்டும்.
“அழகிலாகும் வாழ்வியல்” நான் என்னை அகவயமான தொகுத்துக்கொண்டவை . பல்துறைகளின் வழியாகவும் என் தனிப்பட்ட வாழ்கையிலும் அடைந்தது கசப்பைத்தவிர பிறிதொன்றில்லை, என ஓயாமல் எனக்குள் ஒன்று புலம்பிய படி இருந்ததை நான் பலகாலம் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன் . ஆனால் என் மனம் ஏனோ அவற்றின் பாதிப்பால் கசப்படைய மறுத்தது . இது எனது வாழ்க்கை , எவர் பொருட்டும் நான் இதை கசப்பாக்கிக்கொள்ள போவதில்லை .
வாழ்வியல் மிக அழகானது, அனுபவமும் மிக அழகியாலானவை , அதில் உள்ள மாதுர்யத்தை மட்டுமே நுகர்வது என முடிவு செய்தேன் . எக்காலத்திலும் வெறுப்பும் காழ்ப்பும் கசப்பும் அடைவதில்லை என முடிவெடுத்தேன். பல்வேறு நிறம் மனம் ருசி உள்ள பூக்களின் தேன் ஒரே ருசியாக இருப்பதைப்போல, வாழ்க்கையில் கிடைக்கும் அணைத்து அனுபவத்திலிருந்து ஆசாரம் சாரம் சாரதரம் சாரத்தமம் என்கிற வைசித்திரியம் எங்கும் மலிந்து கிடக்கின்றன . நான் அனைத்திலிருந்தும் சாரத்தமத்தை தொகுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் . அந்தத் தேடலை நிகழ்த்துபவன் என்னுள் எப்போதுமிருக்கும் ஒரு "முதிர சிறுவன்". அவனை வாழ்த்துகிறேன் . அவனைத்தவிர பிறிதொருவர் உண்டெனில் அது எனது மனைவி என்னை முற்றாக புரிந்து கொண்டவள். அதனாலேயே நான் என் அனுபவங்களை சுதந்திரமாக அடைய முடிந்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக