https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 7 நவம்பர், 2017

அடையாளமாதல் - 231 * முழுமையடையாது முற்றுப்பெற்றது*

ஶ்ரீ:


பதிவு : 231 / 317 / தேதி :- 07 நவம்பர்    2017

* முழுமையடையாது முற்றுப்பெற்றது*


முரண்களின் முனைகள் ” - 01 ”
கருதுகோளின் கோட்டோவியம் -02நாராயணசாமியையும் சேர்த்து நாங்கள் அனைவரும் தலைவரின் ஆதரவாளர்கள்தான் , இருப்பினும் தலைவரா?, நாராயணசாமாயா? என்கிற கேள்வி எழுந்தால், வல்சராஜ் எப்போதும் நாராயசாமியை நோக்கிய மனச்சாய்வு கொண்டவர் . தலைவர் தரப்பில் நாங்கள் மூவர் மிச்சப்படுவோம் என்றாலும் எங்களுக்குள் ஸ்தான பேதமிருக்கிறது . ஆனால் ஒன்று தெளிவாக தெரிந்தது பெரும் புயலின் தொடக்கமிது . அனைத்து நிலைகளையும் புரட்டிப் போடக்கூடியது. இதை ஒட்டி தன்னிலை மறந்து அவசரத்தில் ஏற நினைப்பவர்களை சுற்றி எழும் பதட்டம் உள்ள  கூட்டமும் , அதைசுற்றி நிகழவிருக்கும் அனர்த்தங்களையும் அப்போது  என்னால் யூகிக்க முடிந்தது . புயலின் மையம் நாங்கள் உருவாக்க நினைக்கும் எங்களின் எதிர்காலத்தை சிதைக்கக் கூடியது என நினைத்தேன்.ஆனால் முற்றாக அழிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை 


சூரியநாராயணன் கொண்டுவந்த செய்தியின் தாக்கம் நான் உணர்வு பூர்வமாக  வல்சராஜிடம்  பேசிக் கொண்டிருத்தவற்றை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது . அது இப்போது பேசக்கூடிய ஒன்றியில்லாமல் போனாலும், என்னளவில் அது முடிவிற்கு வந்து விட்டதாகவே கருதினேன் . இங்கிருந்து கிளம்பி தலைவரை சந்தித்து எனது ராஜினாமாவின் நகலை அவரிடம் அளிப்பதாக இருந்தேன். அதை இப்போது செய்வது அறிவீனம் . பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாக இருந்து விட்டேன் . இப்பொது எனது மனதில் ஓடுவது நாராயணசாமியை பற்றிய கணக்குகள் மட்டுமே . அவரை பற்றிய எனது புரிதல்களை பழைய நினைவுகளிலிருந்து எடுத்து தொகுத்துக்கொள்ள துவங்கினான் .

பாலனை விட்டு பிரிந்து வெளியேறிய சூழலில் தாமோதரன் சேகர் கமலக்கண்ணன் மற்றும் அனைவரின் எண்ணமும் அடுத்த தலைமை எனில் , அது  மரைக்காயர்தான் என இருந்தது . நான் ஒருவன் மட்டுமே தலைவர் சணமுகம் நாராயணசாமி மூலமாக என சொல்லிக்கொண்டிருந்தேன் . அந்த சந்தர்ப்பத்தில் நான் சொன்ன எந்த விஷயமும் எங்கள் குழுவில் எடுபடவில்லை . மரைக்காயரை அணுகுவதற்கு அவருடைய  தம்பி இக்பாலை பயன்படுத்த நினைத்து ,அவரை சந்திக்க சென்னை சென்றோம் . பேச்சுவார்த்தை எல்லாம் மிக சிறப்பாக சென்றாலும் , எனக்கு ஏதோ ஒரு இடத்தில் அவை முழுமை பெறாமல் இருப்பது போலவே தோன்றியது . அனைவருக்கும் இது எதை நோக்கிய பயணம்? ,அதற்கான திட்டம் என்ன ? என்கிற சிந்தனை ஏதுமில்லாது , தங்களைப் பற்றிய மிகை கற்பனையில் , வெறுமே தலைவர்களை சந்திப்பதில் கிடைக்கும் சந்தோஷத்திலேயே திளைத்துக்கொண்டிருந்தார்கள்

அவர்கள் மிக எளிய மக்கள் . பாலனை தாண்டி வெளி உலகம் என்ற ஒன்றை இது வரை அறியாது இருந்துவிட்ட சூழலில், யாருக்கும் கட்டுப்படவேண்டாம் என்கிற சுதந்திரமே அவர்களை உவகை கொள்ளச்செய்தஇருந்தது . ஆகவே எல்லா பேச்சுவார்த்தைகளில் ,பாலனை குறைசொல்லுவதை தாண்டி அரசியல் ரீதியாக எங்கள் நிலைப்பாடு என்ன?,  அதற்கு நங்கள் அவர்களிடமிருந்து என்ன எதிர் நோக்குகிறோம்?,அதில் எங்களுக்கு  அவர்கள் செய்யக்கூடியது என்ன? என்கிற விஷயங்களை அந்த பேச்சுவார்த்தைகள் சென்று தொடவே இல்லை

முதல் சுற்று பேச்சவார்த்தையில் தெளிவாக பேசப்பட்டு முன்னெடுக்கப்படும்  விஷயங்களே அடுத்தடுத்த சுற்றுக்கு இட்டு செல்வது . ஆனால் அவர்கள் அனைத்து பேச்சும் ஒருவித யாசகம் போல மன்றாட்டு போலவே இருந்தது . சந்தித்த தலைவருக்கும் இவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என தோன்றியிருந்தாலும், என்ன வேண்டும் என்பது குறித்து அங்கு பேசப்படாததால் எதுவும் நிர்ணயமாகாது போனது  துரதிர்த்தடவசமானதுநான் தொகுத்த பேச முனைந்த விஷயத்தையும் ,என்னை பேச விடாது செய்யவே, நான் சொல்லவந்தது எங்கும் சொல்லப்படவே இல்லை . நாராயணசாமியை நான் சந்திக்க நினைத்தது என்ன காரணத்தினாலோ தள்ளி போய்க்கொண்டே இருந்தது . அது நிகழாதவரையில் , என்னால் அந்த கூட்டத்தை கட்டிக்காக்க முடியும் என நான் நினைக்கவில்லை . அந்த கூட்டம் ஒரு வாரம் கூட நின்று நிலைக்காது , திரும்பவும் பாலனை சரண் அடைந்து வீணாய்போனது

நாராயணசாமியை முதலில் நான் புரிந்துகொள்ள முயன்றது அப்போதுதான் .அதற்கு முன்பாக  சில முறை நான் அவரை சந்தித்திருந்தேன் . முதல் முறை பாலனுடன் .அவரது சீட்டு சம்பந்தமாக .1991 தேர்தலுக்கு முன் . தலைவரை பாலனுக்கு சாதகமாக மாற்றும் பொருட்டு, நாங்கள் இருவரும் அவரை சந்தித்தோம் .அன்று நாராயணசாமி பேசியது மிக வெளிப்படையானது . அவர் சொல்லியதிலிருந்து அவரை பற்றிய புரிதல் எனக்கு மிக உயர்வாகவே இருந்தது . அவர் தன்னால் இயன்றதை செய்வதாகவும், ஆனால் அது எத்தகைய பலனைத் தரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் சொல்லமுடியாது என்றார்

காரணம்சண்முகம் ஒரு குரங்கைப்போல பிடித்த பிடி விடமாட்டார் , இருந்தாலும் நான் பேசிப்பார்க்கிறேன்”. என்பதே அன்று அவரின் கூற்றாக அன்று இருந்தது . ஒருபுறம் அவர் தெளிவாக தலைவரின் குணத்தை சொன்னாலும் அவர் உபாயகப்படுத்திய பதம் ஆழமான குறியீடாக உணர்ந்தேன் . அது நாராயணசாமியை பற்றி எனக்கு குறிப்பால் உணர்த்தியிருந்தது. தலைவர் அமைப்பில் அவரது செல்வாக்கு , அதில் தலைவரையும்  மிஞ்சிய இடம் . அவரது தொண்டராக தன்னை வெளிக்காட்டிக்கொள்வதை தவிர்த்து, அவருக்கு சமானமான தலைவாக தன்னை உருவாகப் படுத்திக்கொள்வதில் அவர் இருந்திருக்க வேண்டும் . அன்று அதைத்தான் உணர்ந்தேன். எனக்கு அவர் இருக்கும்  ஸ்தானத்தின் வலிமையையும் அவருக்கு தனது அரசியலின் மீதுள்ள  தன்நம்பிகையும் பார்க்க முடிந்தது . அதுவே என்னை அவரை நோக்கிய மனச்சாய்வை கொடுத்திருக்க வேண்டும் .


பாலனை விட்டு விலகிய சந்தர்ப்பத்தில் , நாராயணசாமியுடன் நான் எதிர்நோக்கிய இரண்டாவது சந்திப்பு நிகழவில்லை. அந்த சந்திப்பை நான் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன் . ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் எங்களை சந்திக்கவேயில்லை . பலமுறை தாமோதரன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அதில் காட்டிய அலட்சியம் என்னை திகைக்க வைத்தது . அவரை பற்றிய மனதின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய துணுக்குறுதல் இந்த சந்தரப்பத்தில்தான் பெரிதாக எழுந்துவந்தது . அவரது முகமாக நான் கற்பித்துக் கொண்டது . முழுமையடையாமல் முற்றுப் பெற துவங்கியது. குழு அரசியலில் பிளவு ஏற்படும் போது சிதறிப்போகும் நபர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் மாற்றுக்குழு ஈடுபடத்துவங்கும் . ஆனால் பாலனின் குழு உடைந்த போது அது சீந்துவரின்றி கிடந்தது , நான் காங்கிரஸ் உட்கட்சி அரசியல் பற்றியும் அதன் செயல்பாடுகளில் உள்ள முழுமையற்ற தன்மையை பற்றியும் ஆழ்ந்த திறப்புக்களை அடைந்தது அப்போதுதான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...