ஶ்ரீ:
அடையாளமாதல் - 171
பதிவு : 171 / 249: தேதி :- 27 ஆகஸ்ட் 2017
* நாற்கள வித்தகர் *
“ தலைவரை உணர்தல் ”
( 1996 தேர்தல் களம் - 07 )
நான் குளித்து முடிப்பதற்குள் ஒரு முடிவை மனம் எட்டியிருந்தது . பாலனை சந்திக்கும் போது என்ன நினைத்தேனோ அதுவே இப்போதும் என் மனதில் நிழலென தோன்றியது . எனக்கான வாய்ப்புகளும் அதை சார்ந்து எழுந்துவரயிருக்கும் மனவருத்தங்களும் புரிந்தே இருந்தன . இதில் ஒரு ஆகப்பெரும் மாற்றம், பாலன் தலைவர் போல ஆனால் சண்முகம்முற்றும் தலைவரே . ஆகவே அவ்விடம் எனக்கு கிடைக்காத அனுபவங்கள் முற்றாக இங்கு கிடைக்கலாம் . சவாலை ஏற்றுக்கொள்வது மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது . அது எனக்கான அனுபவங்களை வைத்துக்கொண்டிருக்கிறது . நான் காந்திராஜுடன் சண்முகத்தை பார்க்க புறப்பட்டேன்.
“இந்த உலகில் முதன்மையான இன்பம் என்பது தன்னையறிதலே. தனது ஆற்றலை மட்டும் அல்ல எல்லைகளை அறிதலும் இனியதே”. “போரும் தவமும்தான் தன்னையறிவதற்கான இரு வழிகள் என்பார்கள்” . ” வெற்றி ஆணவமாகச் மாற்றிக்கொண்டால் தெய்வங்கள் எதிரணியில் சென்று சேரவும்கூடும். அத்தருணங்களுக்கு பிறகு நமக்கான போர்களை வெல்லப்போவது நாம் மட்டுமே. அதற்கு பயிற்சி ஒன்றே கைகொடுக்கும்” என்கிறது வெண்முரசின் நீர்கோலம்.
தன்னையறிந்து கொள்ளும் அந்த முள்முனை கணத்தில் தெய்வமெழுந்து அவனுக்கு அவனையே திறந்துவைத்து வெற்றிக்கு கூட்டிச்செல்கிறது. உச்சங்களைத்தான் தெய்வம் என்றார்கள் .அங்கு செல்ல அஞ்சித்தான் மனிதர்கள் இங்கு எளிதென வாழ்கிறார்கள் . இரண்டு உச்சத்தையும் காணும் தருணங்களில் உணர்ச்சியைத் தவிற்ந்து , கருத்தாக அதைப் பொதிந்து கொள்வதின் வழியாக என்னை பலகாலமாக தொகுத்து, நிறைந்து வந்திருக்கிறேன் .
என் வாழ்கையின் மூன்று பகுதியில் முதலிறுதியை நானே வடிவமைக்கும் வாய்ப்பை பெற்றேன். சரியென்றும் தவறென்றும் பல நிகழ்வுகளின் வெளியையைக் கடந்து இதோ இங்கென்று வந்து சேர்த்திருக்கிறேன் . எடுத்தவையும் இழந்தவையும் கணக்கில்லாதது . ஆனால் நான் அடைந்திருக்கும் வாழ்வின் பொருள் , அது அளித்த நிறைவு , எனக்கு என்னை ஒவ்வொரு கணத்திலும் தெரிந்திருந்ததனால் நிகழ்ந்தவை .
என்னால் சில விஷயங்களை எண்ணவோ ,பார்க்கவோ, ஆற்றவோ முடியாது.காரியமாக வேண்டும் என்கிற நோக்கத்திற்காக எதையும் முயற்சிப்பவர்களைக் கண்டு எனக்கேற்ப்படும் அருவருப்பும்,ஒவ்வாமையும் என்னை சிறுக்க வைத்ததுண்டு . அவர்களை மிக இழிந்தவர்களாக பார்த்திருக்கிறேன் . அவர்களில் ஒருவனாக என்னை பிறிதொருவர் எண்ணிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பேன். அது நரகத்தினும் இழிந்தது. என்னை எப்பொதும் அப்படி நோக்காது இருபதற்கான வாழ்கையை நான் வடிவமைத்து கொள்ள எப்போதும் முயன்றபடியே இருக்கிறேன் .அருளப்பட்ட வெளியில் நிறைவாக வாழ்வதற்கு ஆற்றியவை என் நெஞ்சத்தில் எழுந்து நின்று நிறைக்கையில் , இன்று வந்தாலும் இறப்பு இனியதே .
ஒவ்வொரு நிகழ்வின் போதும் என்னால் அறியப்பட்டவை, உணரப்பட்டவைகளை புரிதலின் எதார்தத்தினூடாக என்னை தொகுத்துக் கொள்வதை வழமையாக கொண்டேன் . வாழ்வியல் அனுபவங்கள் உணரவுப்பூர்வமானவை . உணர்வுகள் எப்போதும் கொப்பளிப்பபதும் கொந்தளிப்பதுமாக வழியே நம்மை கடக்கவைப்பவை . அவற்றை கருத்துக்களாக மாற்றிக்கொள்வதினூடாக அவற்றை அர்த்தப்படுத்தவோ திருத்தி அமைக்கவோ இயலுகிறது . என் சம்மந்தப்பட்ட எல்லாவற்றிலும் எனக்கான எனக்கான கோணத்தை கண்டடைந்து தொகுத்துக்கொள்ளுதல் , வாழ்க்கையை எளிதில் கடக்க இயலுகிறது .
மனம் வீரம் தீரமென இரண்டு நிலைப்பாட்டை உருவாக்கப்படுத்திக் கொள்ளும் வழியாக எண்ணத்தை தூண்டுபவை . இரண்டும் வெவ்வேறு வகையில் மனவுறுதியை சொல்லவந்தவை வாழ்க்கையில் எதுவும் சிறிதென பெரிதென எடுக்காது எதையும் புறவயமாக எதிர்கொள்வது . தீரம் அதை அகவயமாக பொருத்திக்கொள்வது . காலம் எப்படி வழிநடத்துகிறதோ ,அதை ஒத்து வாழ்க்கையை நிறைவனுடன் வாழ்வது .தொகுத்தறிதல் அகவயமானது அதை எப்போதும் புறவய அனுபவங்கள் அலைகழிக்கப்பபட்டு நிலையழிதலை கொடுத்தபடி இருப்பின் எதையாவது பற்றி ஏறி அடுத்த நாளுக்கு சென்றாலும் , உணர்வுகள் ஒவ்வொரு உறவு முறைகளயும் இணைத்து வீர்யம் கொள்ளுவது . .
பலவித கலவையான நினைவுகளுடன் நான் காந்திராஜுடன் காரில் மௌனமாக அமைந்தபடி சென்றுகொண்டிருந்தேன் . இது நான் கணக்கிடாதது. என் கடந்து சென்ற நாளில் எந்த இடத்தில் இதற்கான விதை விழுந்திருக்கும் என யோசித்து பார்த்தும் ஏதும் பிடிகிடைக்கவில்லை . என்னைப்போல ஒருவனுக்கு சண்முகம் போன்ற ஒருவரிடம் என்ன வேலை இருக்க முடியும் . ஒரு புள்ளியில் யோசிப்பது எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை . நெடுந்தூரம் வந்துவிட்டிருக்கிறேன் .
சண்முகத்தின் வீடு கடற்கரை சாலையில் அமைந்திருந்தது . பலமுறை பலரால் பலவிதமாக பார்க்கப்பட்ட வீடு . பலருக்கு அங்கு உட்கார்ந்து அவருடன் பேசுவதை ஒரு வாழ்நாள் லட்சியமாக இருந்ததை நான் அறிவேன். இரண்டொரு முறை இங்கு வந்திருக்கிறேன் , ஆனால் ஒவ்வொருமுறையும் பெரும் மனவெழுச்சியுடன் இருந்ததை இப்போது நினைவு கூர்ந்தேன் . காந்திராஜ் சற்று முன்னாள் சென்றுவிட நான் சற்று தயங்கி நின்றேன் . இதுதான் உனக்கான இடம் , இங்கு உனக்கு என்ன காத்திருக்கின்றதோ அதை அடைந்து நிறைவு கொள் . இந்த படிகளை தாண்டி உள்நுழைவதற்கு முன்பாக ஒரு விஷயம் , அதை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள் . இதுவரை நீ என்னவாக இருந்தாயோ அது கடந்த காலம் . முடிந்தது போனது அனைத்தையும் இதன்படிகளில் காலில் அணைந்ததை கழற்றி விடுவதைப்போல விட்டுவிட முடிந்தால் . உனக்கான இடம் இங்கு கிடைக்கலாம் . அனைத்தையும் ஏற்றுக்கொண்டு உள்ளேசெல் . இரு கைகளையும் உயர்த்தி சொல் உன்னிடம் ஒன்றுமில்லை என. ஆம் என் அனுபவங்களுக்கும் இங்கு ஆவது ஒன்றுமில்லை. அரசியல் நாற்கரத்தின் மைய மண்டபமிது. இங்க கணக்கில்லாத ஆடல்கள் நிகழ்ந்து , வென்றவரும் தோற்றவரும் அதை இங்கிருந்தே பெற்றுச் சென்றியிருக்கிறார்கள் . நான் இங்கு வெல்லவோ தோற்கவோ வரவில்லை . அனுபவம் வேண்டி வந்திருக்கிறேன் . அது ஒன்றினாலேயே நான் நிறைவடைவேன் என் நினைக்கிறேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக