ஶ்ரீ:
பதிவு : 168 / 242 : தேதி :- 24 ஆகஸ்ட் 2017
* அனத்திலிருந்தும் தனித்திருத்தல் *
மாநில தொடர்பை மறுத்தல்
1996 தேர்தல் களம் -4
தொழில் நிமித்தமாக முதல் நாள் சென்னை சென்று அதிகாலை திருப்பியிருந்தேன் . நல்ல உறக்கத்தில் இருந்தபோது தங்கை வந்து எழுப்பினாள். காலை 6:00 மணி இருக்கும் ,எரிச்சலுடன் “என்ன” என்றதும், “காந்திராஜ் வந்து ஹாலில் காத்திருக்கிறார்” என்றாள் . ஒரு திடுக்கிடலால் தூக்கம் சட்டென களைந்து மனம் கூர்மை கொண்டது .கடந்த வாரம் முழுவதும் அவரை சந்திக்கவில்லை . அதற்காகவா அதிகாலை தேடிக்கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டார்? இதை என்னவென்று சொல்வது? . எங்களுக்குள் நல்ல நட்பு உருவாகியிருந்தது . ஆனால் அது என்னை வீடுதேடிவந்து சந்திக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. அவர் அறுபதுகளின் தொடக்கத்தில் நானோ முப்பதுகளின் மத்தியில் . இருப்பினும் அந்த வித்தியாசம் எங்களிடையே உணரப்பட்டதில்லை . சில அரசியல் விஷயங்கள் பேசும்போது கடைபிடிக்கப்படும் முறைமைகளை மீறுவது என் பாணியாக இருக்கும் . அதெல்லாம் திட்டமிட்டு அப்படி அமைத்துக்கொள்வதில்லை .
பொதுவாக அரசியலில் பதவியில் இருப்பவருடன் பேசுபவர் , துவங்கிய சிறிது நேரத்தில் முகக்குறிப்புணர்ந்து அவர்களுக்கு ஏற்றாற்போல சொல்ல விழைந்ததை மாற்றி அதை முடித்து , இறுதியில் பதவியில் உள்ளவர்கள் சொல்வது சரி என எழுந்துகொள்வார்கள் . சிலர் “நரி வலமோ இடமோ போனால் என்ன? மேல்விழாதவரை சரி” என்கிற மனப்பான்மை . இவர்கள் அனைவரும் சொந்தக் கருத்தென எதையும் உருவாக்கிக் கொள்ளமாட்டார்கள். தங்களின் தனிப்பட்ட வாழ்கையிலும் அப்படி ஒன்றிருந்தால் வியப்பே. பொதுவாக வந்து அமர்ந்த இடத்தில் எது பரவலாக ஒப்புக்கொள்ளபடுகிறதே அதுவே அவர்கள் சொந்தக் கருத்தென்றாகும் . வழியில் அது பிறிதொன்றாக மாறிப்போகும் .
நான் செய்திகளோ தகவல்களோ என்னை வந்தடையும்போது எனக்கான கருத்து ஒன்று உருவாகியிருக்கும் . பெருபாலும் அவை சார்ந்த தொடர்புடையவர் அல்லது அவர்களின் அணுக்கர்களிடமிருந்து ஒரு வடிவம் கிடைத்துவிடும் . அவை பெரும்பாலும் செய்தி தாள்களில் வருபவைகளுக்கு சம்பந்தமில்லாது இருப்பதை பார்த்திருக்கிறேன் . பத்திரிக்கை துறை சேர்ந்த எனது நண்பர்கள் ,சரியாக தகவல்களை சொல்லிவிடுவார்கள் . நான் அதைக் கொண்டு உருவாகியிருந்த என் கருத்தின் இறுதிவடிவத்திற்கு வந்துவிடுவேன் . அது பிறிதொருவரால் சரியாக மறுக்கப்பட்டால் மேலும் கூர்கொள்ளும். அரசியலில் என்றில்லை என் தனிப்பட்ட வாழ்விலும் இதை கொண்டுவர முற்சித்தப்படி இருக்கிறேன் .
என் கருத்துக்கள் அரட்டை கும்பலுக்கோ , அரசியலின் வேடிக்கை மனிதர்களுக்கோ உகக்காத செய்தியாய் இருக்கும் .அவர்கள் விரும்பும் ரசம் எதுவும் அதில் இருப்பதில்லை . நான் கும்பலில் என் கருத்துக்களை வெளியிடுவதில்லை . அவர்களுடன் முரண்படத்துவங்கினால் பதில் சொல்லி மாளாது . தனிப்பட்டு கருத்து சொல்வது அவர்களின் தனிமையில் . கருத்து முதலில் சொல்பவரின் தரத்தை நிர்ணயிப்பது என்பது எனது பார்வை , அதை நான் என்னிடமிருந்தே தொடங்க முற்படுகிறேன் . அதைக்கொண்டே அதைப்பற்றி மேலெழுந்து வந்து சகல தர்க்க நியாயத்தை முன்வைக்க முடியும். வாயாடிகள் மத்தியில் நான் பேசுவதில்லை . காரணம் அவர்களுக்கு தகவல் தேவை இல்லை அதிலிருந்து அவர்கள் அடையப்போவது ஒன்றில்லை . நாம் நிரூபிக்க விரும்பும் தகவலும் அதன் பிறகு நடக்கலாம் என்கிற கணிப்பையும் . நம்மை காயப்படுத்தவே பயன்படுத்துவார்கள் . நான் அவர்களிடமிருந்து தொலைவில் நிற்பவன் .
ஒருமுறை காந்திராஜன் அணுக்கர் சொன்ன தகவல் முற்றிலும் தவறானவை . அவர் சொல்லிக்கொண்டே போனார் . நான் மௌனம்காத்தேன் . நான் ஏதாகிலும் சொல்வேன் என் எதிர்நோக்கிய காந்திராஜ் , அவர் எழுந்து சென்றதும் ,விட்ட இடத்திலிருந்து அதை அவர் தன் கருத்தாக அவர் சொன்னதையே சொன்னார் . நான் அவரிடம் என் அபிப்ராயத்தை சொல்லி அதன் பின்புலன்களில் உள்ள ஆட்கள் யார் . அடுத்து என்ன நிகழலாம் ,என சில கோணங்களை சொன்னதும் அவரது வக்கீல் மூளை என்னையும்விட பலபடி முன்நகர்நது ,இன்னும் அதை கடந்துபோய் பார்க்கமுடிந்தது. அதுமாதிரியான கற்பனை அவருக்கு அவரது தொழில் சார்ந்து இயல்பாக உருவாகி வந்திருப்பது . இருவருமே அதை குறித்து நெடும்தூரம் பயணமானோம் . அன்று அது ஒரு நல்ல உரையாடலாக முடிந்தது . அவரைப் பற்றிய என் எண்ணத்தில் மாறுதலை அது உருவாக்கியது . அவருக்கும் என்னைப்பற்றிய வேறு சில புரிதல்கள் ஏற்பட்டிருக்கலாம் . அதன் பிறகு அவர் என்னை அணுகும் முறை மாறியது . அதற்குபிறகு ஒன்றிரண்டு முறை தனிமையில் மாநில அரசியல் , தேர்தல் வெற்றி தோல்வி பற்றி நிறைய பேசினோம் . ஒரு நல்ல நட்பு உருவாகிவந்தது.
பிறகு அன்று நிகழ்ந்த விவாதத்தினால் ஏற்பட்ட மனசோர்வினால் பிறகு அந்த வாரம் முழுவதும் நான் அவரை சந்திக்காததற்கு, வீடு தேடி வரும் அளவிற்கா அது வளர்ந்து விட்டது?, என்கிற திகைப்போடு ஹாலுக்கு வந்தேன். இரவு நேரம்கழித்த உறக்கத்தால் கணகளில் தூக்கம் நிறைய மிச்சப்பட்டிருந்தது . வெறுமனே முகத்தை கழுவி வீங்கிச்சிவந்த கண்ணும் ,கலைந்த தலையுமாக , சட்டையை மட்டும் மாற்றி கொண்டு கிழே வந்தேன் . வந்ததும் அவரிடம் நேற்றைய இரவு சென்னையிலிருந்து திருப்பியதை சொல்லி பின் சில முறைமை வார்த்தைகளுக்கு பின் . அவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் . அன்று அது ஒரு அற்புதமான உரையாடல் என்றுதான் சொல்லவேண்டும் . அன்று நான் கிளம்பி சென்ற பிறகு அவர் ரவியிடம் என்னை பற்றிய முழுத்தகவலும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும் . அது அவருக்குள் என்ன மாதிரியான மாற்றத்தை விளைவித்திருக்கும் என என்னால் அறியமுடிந்தது. ஆனால் இவ்வளவு அதிகாலை கிளம்பி வர அளவிற்கு அதிலிருந்து இவர் என்ன கண்டடைந்தார் என்பதுதான் என்னால் அறியமுடியவில்லை .
காந்திராஜ்சு ருக்கமாக “உங்களைத் தலைவர் அழைத்துவர சொன்னார்” என்றார் . எனக்கு சட்டென என்ன சொல்வது என்று புரியாமல் அவரை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன் . ஓரிருமுறை அவர் இப்படி சொல்லியிருந்தார் . அதை நான் பெரிதுபடத்தவில்லை . ஆனால் இப்போது அதன் தீவிரத்தை உணர முடிந்தது . நான் குளித்து பூஜை முடிக்காது அன்று வேலைகளை துவங்குவதில்லை என்கிற காரணத்தை சொல்லி . அவரை வீட்டில் சந்திக்கிறேன் என்றேன் . அதில் கிடைக்கும் சிறிது நேரத்தில் என்ன சொல்லி இதிலிருந்து விலகலாம் என்பதற்கான ஒரு காரணத்தை அதற்குள் கண்டடைந்து விடலாம் .
காந்திராஜ் மௌனமாக சிரித்துக்கொண்டார் “என்னைவிட உங்களைத் தலைவர் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்” , என்றார் . “நீங்கள் இதைப்போல ஏதாவது சொல்லுவீர்கள் என தலைவர் நேற்றே என்னிடம் சொன்னார்” மேலும் இதை தவிர உங்களிடம் வேறு எதையும் பேசவேண்டாம் என்றும் சொல்லி அனுப்பினார் . “எனக்கு இன்று காலை வேலையே உங்களை அழைத்துக்கொண்டு தலைவரை சந்திப்பதுதான்” . “நீங்கள் குளித்து பூஜை முடித்து சாப்பிட்டு வாருங்கள் நான் காத்திருக்கிறேன். இதில் ஒன்றும் தப்பில்லை நாம் நல்ல நண்பர்கள் தானே . காத்திருப்பதெல்லாம் ஒன்றுமில்லை . சங்கடப்படாமல் உங்கள் வேலையை முடித்துவாருங்கள்” என்றார் .
எனக்கு நன்றாக புரிந்துபோனது . இன்று தப்பிக்க முடியாது வசமாக சிக்கிக்கொண்ட உணர்வு மேலிட அதேசமயம் என் உறுதியும் எழுந்து வந்தது . இல்லை என முடிவெடுத்ததை , முடியாது என் சொல்ல ஒரு உரம் வேண்டும் அதில்லாது போனால் அவன் அரசியலுக்கு லாயக்கில்லை . நான் குழைந்த என் மனதை தொகுத்துக்கொண்டேன் . என்ன சொல்லவேண்டும் என்கிற கருத்தும் மெள்ள எழுந்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக