https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 158 * பொய் வெளிச்சப் பாய்ச்சல் *

ஶ்ரீ:




பதிவு : 158 / 232     தேதி :- 14 ஆகஸ்ட்  2017

* பொய் வெளிச்சப் பாய்ச்சல்   *

இயக்க பின்புலம் - 81
அரசியல் களம் - 47


நாளை காலை சட்டமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரிந்தவர் மீளவும் இணைந்ததை நிரூபித்து பின் செல்லலாம் என முடிவாயிற்றுஅது ஒரு பலிகளத்திற்கு செல்லும்பாதை போல , எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளாது , நான் சென்று கொண்டிருந்தேன்பாலன் வந்து சென்றதை தங்களின் வெற்றியாக கருதி , நான் பக்கத்திலிருப்பதை மறந்து தங்களையும் கடந்து அவர்களுக்கும் முன்னே அவர்கள் தங்கள் பலிகளத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.




நாங்கள் முதலில் முதல்வரின் அறையில் சந்தித்தோம். கிருஷ்ணமூர்தியும் முதலவருடன் அடவுகட்டி ஆட தயாராக இருந்தார் . இருவரும் சொன்னது நிறைய அறிவுரை , வேடிக்கை போன்றவைகள் . பின் அங்கிருந்து பத்திரிக்கையாளர் கூட்டம் . அதில் அதே நாடகம் . பிரிந்தவர் மீளவும் கூடினர் . பேச அங்கு ஒன்றுமேயில்லை . அதுதான் எவ்வளவு நிஜம் . காதலர்களுக்கு மட்டுமல்ல எவர்க்கும் பொருந்துவதே. அதைவிட வேடிக்கை முதல்வர் அலுவலகத்திலும் , பத்திரிக்கையாளர் கூட்டத்திலும் தாமோதரனின் குழு வெளிப்படுத்திய நெடுநாள் ஏக்கம் , அந்த முன்னுரிமை பகட்டு , புகழ் வெளிச்சம் பாய்ச்சப்படல் என்கிற விண்ணகத்தேர் வந்திறங்கும் தருணம்போல , ஒரு புள்ளிக்குப்பிறகு ஒரு காட்சிப்படுத்துதல் . அதை பார்க்கமட்டுமே முடிந்தது . பாவம் இவர்கள் எளிமையான மனிதர்கள் . ஆகவே பரிதாபத்திற்கு உரியவர்கள்.அனைவரும் கிளம்புமுன்னதாக பாலன் என்னை அலுவலகத்திற்கு அழைத்தார் .நான் வருகிறேன் என சொன்னேன் , சொன்னபடி சென்றும் வந்தேன் . ஆனால் முதல்வர் இதில் நடுநிலை வகிக்காதது , பெரிய வருத்தத்தை கொடுத்தது ,ஆற்றாமை பெறுக இனி எனக்குரிய மரியாதை இல்லாது இந்த சட்டமன்றத்தில் நுழைவதில்லை என்கிற வெஞ்சினத்துடன் வீடு திரும்பினேன். அனைத்திலிருந்தும் ஒதுங்கி எனக்கான மற்றொரு வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தேன். இனி இது என்களம் . இம்முறை நாற்களத்தில் நான் தோற்க மாட்டேன்.

இந்த ஆட்டத்தை பாலன் சரியாக பயன்படுத்திக்கொண்டார். முதல்வர் இயக்கத்தை பாதுகாக்க பாலன் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார் . இப்போது நிலுவையில் உள்ளது கலைக்கப்பட்ட கமிட்டி மறுபடி அமைக்கப்படவேண்டும். தற்போது நிகழ்வதை கொண்டு தனக்கு முற்றிலும் சாதகமாக மாற்ற , முன்பே பலமுறை சிந்தித்து முடிவெடுத்ததை , பெரும் வேகத்துடன் பாலன் செயலில்காட்டத் துவங்கினார் . தொண்டர்களும் மக்கள் திரளின் ஒரு பகுதியே அவர்களை அமைப்பென நிகழ்த்துவது , தொடர் பயிறசியும் , நிகழ்வுகளும் . முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்குபெறும் அமைப்பின் "பயிற்சி முகாமிற்கு" நாள் குறிக்கப்பட்டது . ஆளும்கட்சியாக இருப்பதால் போராட்டம் நிகழ்த்தி தொகுத்துக்கொள்ள முடியாதென்பதால் , இந்த வழி முன்னெடுக்கப்பட்டது . மிக சிறந்த நகர்வு இது . ஒரே களத்தில் ,காலத்தில் அனைத்தையும் சரி செய்ததாக முடியும்

பயிற்சி முகாம் அது ஒரு கொண்டாட்டம் போல,களியாட்டம். எல்லோருக்கும் அரங்கில் பேசும் வாய்ப்பளிக்கப்படும். கிடைக்கும் வாய்ப்பை அவர்கள் முதல்வரையும் அமைச்சர்களையும் பாலனையும் விதந்தோதுவர் . அதே சமயம் அமைப்பை பிளவு படுத்தியவர்களை கரித்துக்கொட்டி துரோகிகளாக அடையாளமிடுவார்கள் . அனைத்தும் முடிந்ததும் சலியாத உணவும் பிறவும் எங்கும் வழிந்தோடியபடி இருக்கும் . இரண்டுநாள் நிகழ்வாக அது வடிவமைக்கப்பட்டு, அறியாங்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தேறியது . முகாமிற்கு முதல்நாள் இரவு , பாலன் தனிப்பட்ட முறையில் சிலரை அழைத்து அங்கு என்ன நிகழவேண்டும் என்பதை தெளிவாக வரையறுத்தார் . அனைவருக்கும் பேசும் வாய்ப்பு அதில் சிலருக்கு மட்டிலும் கலகம் விளைவித்தலுக்கு கடுமையான சாடல் சொல்லப்பட அறிவுறுத்தப்பட்டது . இந்த நிகழ்வு நடந்த ஒருமாத காலத்திற்குள் அனைத்து கமிட்டிகளும் மறு நியமனம் செய்யப்படும் . அப்போது மிகச்  சிறப்பாக செயற்படும் பேசும் அனைவருக்கும் பதவிகள் பரிசளிக்கப்படும் . ஆளுங்கட்சியாக இருக்கும்போது அளிக்கப்படும் காட்சிப்பதவிகளுக்கு எப்போதும் பெரும் மரியாதை எழும் என்பதால் , அவர்கள் இதில் அபாரத் திறமை காட்டுவார்கள் என்பது  ஆச்சர்யப்பட ஒன்றில்லை.

அந்த பயிற்சிமுகாம் இரண்டுநாள் ஒரு கொண்டாட்டம், காளியாட்டமென நடந்தேரியது . ஆட்சியாளர்களின் முன்பாக சிறப்பாக நிகழ்ந்தது . ஆட்சியாளர்கள் மகிழ்விக்கப்பட்டதில்  பாலன் பெருமிதமடைந்தார். அவரால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட இடத்தில் சரியாக  வெடித்து முடித்தனர் . சிலர் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை வைத்தனர்,சிலர் பாலனுக்கு வாரிய பதவி கொடுக்க வலியுறுத்தினர் , சிலர் அடுத்த தேர்தலுக்கு சீட்டு கேட்டனர்

அப்போது சிலர் கருங்காலிகளை இப்போதே வெளியேற்றவேண்டுமென்றனர். இதை ஆமோதித்து பலமான ஆர்ப்பரிப்பு எழுந்து எங்கும் சுழன்று அடித்தது . பாலன் அவசர அவசரமாக எழுந்து தொண்டர்களை எச்சரித்தார் . தாயுள்ளம் கொண்டு அவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்று பாசம்பொங்க பேசினார் . தாமோதரன் குழுவினருக்கு பேசும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை அதுவரை பெரிதாக எண்ணாதவர்கள்  இதை தாங்க முடியாது அங்கிருந்து மௌனமாக வெளியேறினர் . பாலன் பேச்சுவார்த்தையின் போது சொல்லப்பட்ட எதையும் கண்டுகொள்ளத்துடன் , முகாமில் அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டது , அவர்கள் அனைவரையும் திகைக்கவைத்தது . ஒரு வார்த்தையும் பேசாது அனைவரும் பாதி முகாமிலிருந்து வெளியேற்றினர் . அன்று இரவு சந்தித்த சிலர் என்னிடம் பாலன் வரம்புமீறி நடந்துகொண்டதை சொல்லி வருத்தப்பட்டனர்.

இதில் வரம்புமீற என்ன இருக்கிறது . இது அரசியல் . அவரின் இருப்பை கேள்விக்குறியாக்கிய பிறகு தன்னை மீளவும் நிலைநிறுத்திக்கொள்ள என்னமாவது அவர் செய்துதான் ஆகவேண்டும் . இணைப்பு என்கிற ஒன்றை அவரிடம் கொடுக்கும்போது , இவர்கள் தங்களின் நிகர்நிலையை பேணியிருக்கவேண்டும். தாயை நோக்கி ஓடும் பிள்ளைகளைப்போல பாலனிடம் தேவையற்று குழைந்துபோயினர். ஆனால் பாலன் அவர்களுக்கு தாயாக இல்லாதக் காரணத்தால் , தாமோதரன் குழு பலவீனப்பட்டுப்போன நிலையை பட்டவர்த்தனமாக வெளியிட்டு இந்த பரிபவத்தை அடைந்தனர் . மறுநாள் காலை தாமோதரனும் கமலக்கண்ணனும் என்னை சந்திக்க அலுவலகம் வந்தனர் . வந்ததும் வராததுமாக பாலனை கரித்துக்கொட்டினார் . பாலன் ஒரு நபிக்கை துரோகி என வசைபாடினர் . நான் ஏதும் சொல்லாது அவர்கள் பேசிமுடிக்கும்வரை , இவர்களிடம் என்ன பேசுவது என்பதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன் . மிக எளியவர்கள் , எதையும் உணர்வுபூர்வமாக மாற்றிக்கொள்வதனூடாக , வாழ்க்கையை கடந்துபோகிறார்கள் , வருத்தமும் சந்தோஷமும் , வன்மமுமாக வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள் , உலகில் செய்யவே கூடாது என ஒன்றிருந்தால் அது இவர்களுக்கு அறிவுரையும்  வழிகாட்டுவதும் .

எதையும் ஒரு யாசகம் போல மன்றாட்டு போலவே கேட்கப்பழகிகிவிட்டனர் , அதிலிருக்கும் இளிவரலை அவர்கள் அப்பொது கவனிப்பதில்லை . ஆனால் அதற்கென ஒருநாள் வைத்திருப்பார்கள் . அன்று குமுறி எழுந்து கொல்லவும் தயங்காதவர்கள் . எதையும் உணர்வுபூர்வமாக மாற்றிக்கொள்வார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...