https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 2 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 146 *ஏறிட்டதை கலைதல் *

ஶ்ரீ:





பதிவு : 146 / 220 தேதி :- 02 ஆகஸ்ட்  2017

*ஏறிட்டதை கலைதல் *

இயக்க பின்புலம் - 71
அரசியல் களம் - 42





நான் முடிவுசெய்துவிட்டேன் , என்னை அவ்வளவு எளிதில் தூக்கியெறியமுடியாது . இதை இப்போது செய்யாது  விடுத்து நாளை என்னை  நொந்து வருத்திப்பயணில்லை. பூங்காவனம் போல கண்கள் நீர்மை கொள்வதால் தீருவதல்ல அரசியல் . அது என்னால் முடியாது . விலகி சென்றாலும்  எதிர் வருவது  வலியவந்து உன்னை மோதுமென்றால் . அத்துடன் மோதிப்பார்ப்பதே ஆற்றக்கூடியது.

வருத்தமும் வெறுமையுமாக மனதில் பலவித எண்ணங்கள் எழுந்து கொண்டே  இருந்ததாலும்  , ஒரு கட்டத்தில் இதுவும் நல்லதர்க்கே என தோன்றியது . இது ஒரு விடுதலை . இத்தனை ஆண்டுகாலம் அமைப்பிலிருந்து தவறி வெளியே விழுந்த இயக்கத்தை மறுபடி அதன் இடத்தில் வைக்க யோசித்து யோசித்து  என்னவெல்லாம் செய்தாகிவிட்டது .ஆங்கீகாரத்திற்கே உடலின் அனைத்து சக்தியையும் வரண்டடித்தும் வெற்றிக்கு அருகில் கூட செல்லாத நிலையில் , பாலன் என்ன என்னை எறிவது? நானும் எறிகிறேன் அவரை. இயக்கம் இன்றிருக்கும் நிலையிலிருந்து அதை முன்னகர்த்துவது இமாலயப்பணி . ஏனெனில்  ஏற்றிருக்கும் தலைமைக்கு நோகாது அனைத்தையும் ஆற்றவேண்டும் . முதல் நிலை சவாலே இதுதான். இனி அப்படி ஒன்றும் இல்லை.இப்போது சுதந்திரமாக யாருடனும் பேசலாம் . வாழவும் சாவும் நமக்கு தெரிந்தே நிகழும்என்ன தேவை என்பது தெளிவு . எப்படி செய்வது என்பதுதான் எடுக்கப்பட வேண்டிய ஆகப்பெரும் முடிவு

அந்த முடிவெடுப்பதற்கு முன்பாக நானே என்னை கலைத்துக்கொள்ளவேண்டும், பின்னரே என்னை என்னால் தொகுத்துக்கொள்ள முடியும்  . எனக்கு கொஞ்ச காலம் அமைதி வேண்டும் . என் பாரம்பரிய தொழில் ரீதியாகவும் எனக்கு அது  வேண்டியதாக இருந்தது . மனம் லயிக்கூடிய பிரதேசங்கள் எனக்கு  மலை , ஆறு, காடு போன்ற பசுமையும் குளிர்சியும் . எங்காவது செல்லலாமென தோன்றியதும் ,அன்றே நண்பர்களுடன் புறப்பட்டேன், எங்கே போவது என்கிற திட்டமில்லாமல் . ஜாக்ரதையாக கனகராஜ் சேகரை உடன் அழைத்துக்கொண்டேன் .அவன் ஒரு மிக சிறந்த ஆயுதம். அது நல்லதற்கு அவ்வளவாக பிரயோஜனமில்லை ஆனால் கெட்டதற்கு அவனை தவிர பிறிதொன்றை எண்ண முடியாது

அந்த நிமிடம்வரை எங்கு செல்வது என முடிவற்றது போல, அரசியலில் என்ன செய்யப்போகிறேன் என்பதை பற்றியும் எந்த சிந்தனையும் இன்றி நல்லிரவு 12:30 மணிக்கு புறப்பட்டோம். நான் சேகர் மற்றும் அரசியலுக்கு சம்பந்தமில்லாத என் இரண்டு நண்பர்கள்.தெற்கு நோக்கிய பயணம் . எனக்கு மிகப் பிரியமான திசையும் கூட , விழுப்புரத்தில் இரவு உணவை முடித்தபிறகு, எனக்கு திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லவேண்டும் என தோன்றியதும்  உடன்  அங்கிருந்து புறப்பட்டோம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றடைய அதிகாலையாகிவிட்டது. காலை கூட்டமின்றிய சேவை மனதிற்கு புத்துணர்வை கொடுத்தது .எல்லாவற்றையும் நிதானமாக தரிசிக்க இயன்றது .திருமஞ்சன சேவைக்காக முயன்ற போது மறுநாள்தான் கிடைக்குமென்றார்கள் . ஒருநாள் அங்கு இரவு ஒரு விடுதியில தங்கி அதிகாலை திருமஞ்சண சேவையை முடித்தோம்.

பிறகு எங்கே என்கிற சிந்தனை எழுந்ததும் , மிக அருகில் உள்ளது கேரளம். எனக்கு என்றுமே கேரளம் மிக அணுக்கமான பிரதேசம் என்பதால் மலை,ஆறு,காடு என மூன்றும் இணைத்ததேக்கடிசென்றோம் . “ஆரண்ய நிவாஸ்காட்டுக்குள் இருக்கும் விடுதி . முன்பதிவெல்லாம் செய்திருக்கவில்லை  என்பதால் வனத்துறை அதிகாரிகளிடமிருந்து காட்டிற்குள் நுழையும் அனுமதி கிடைக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதியத்திற்கு மேல் கிளம்பியதால் , மாலை ஆறு மணிக்குதான் அங்கு வந்து சேரமுடிந்தது  . காட்டிற்குள் தங்க முடியாது என்றதும் ஏமாற்றமாக இருந்தது , வனத்துறை செக்போஸ்ட் அருகிலேயே தொலைபேசியில் ஆரண்ய நிவாசற்கு பேசியபோது, தங்குவதற்கு இடம் கிடைத்து பதிவு செய்ததும் அந்த அனுமதியுடன் காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டோம்

ஆரண்ய நிவாஸ்” . தேக்கடி ஏறியை ஒட்டிய சொகுசு விடுதி. அங்கு மூன்றுநாள் தாங்கியிருந்தோம் . சுற்றிலும் பசுமை சூழ்ந்த காடு .இரவு காட்டின் நுண்ணிய வாசனை, பலவித ஒலிகள் , குளுமை மனதிற்கு இதமாக இருந்தது . எங்கும் சூழ்ந்திருந்த அந்த நீர்மை, பலவித பச்சைகளின் பல்வேறு வர்ண பேதங்கள் . கண் உடல் மட்டுமின்றி மனதிற்கும் மருந்துபோல இருந்தது . மனம் உளையும் அரசியலிலிருந்து அதை ஆரோக்கியமான திசைக்கு மாற்றுவதற்கான முடிவை அந்த மூன்று நாட்களில் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்

நடந்ததை சிறு சிறு பகுதியாக பிரித்து சேகரிடம் சொல்ல நிறைய நேரமிருந்தது. கணகராஜ் சேகர் எனது நண்பன் கணேசன் மூலமாக எனக்கு அறிமுகமானான் , இவனை கொண்டுதான் என் அரசியல் நுழைவு நிகழ்ந்தது . நட்பின் இரு எல்லைகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் வாழ்பவன். தொடர்புறுத்தலை மிகைத்திறமையாக கையாளக்கூடியவன் . அவன் அன்று இன்றும்  பெரும் புதிராக தெரிபவன் . மக்கள் திரளின் ஒட்டுமொத்த பிரதிநிதி . தனக்கு எதிலும் ஒரு பங்கோ பலனோ இல்லையெனில் அதை கொட்டிக்கவிழ்க்க தயங்காதவன் .அதற்கு நட்பு பகை என்கிற எந்த கோட்பாட்டிற்கும் வரமறுப்பவன் . தான் செய்தது தவேறென தெரியாது என்பதைப் போன்ற  பாவனை கொண்டாலும்அனைத்தையும் மிக தெளிவாக உணர்ந்தே செய்பவன் .மிக சிறந்த ஆயுதம் . அதன் இருபக்க கூர்மையை சரியாக  கையாளத்தெரியாது போனால் உபயோகப்படுத்துபவனையும் அது பலி கொள்ளும்

அவன் தனது அடிப்படையான குணத்தினால் என்மீது காழ்ப்பிலிருந்தான் . அவனால்தான் நான் அரசியலில் நுழைந்தேனெனவும் , என் அசுர வளர்சசிக்கு அவனதான் காரணமெனவும் எண்ணியிருந்தான். இவற்றை அவன் மூலமாக நான் நிகழ்த்திக்கொண்டேன் என்பதால். அதற்குரிய அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் உண்டு. நான் அங்கு யாருக்கும் அங்கீகாரம் அளிக்கும் இடத்தில்லை . அதை பாலன் செய்யவேண்டும் . பாலன் இந்த அளவிறகேனும் சேகரை பக்கத்தில் வைத்திருந்ததற்கு அவன் எனக்கு மிகவும் நெருக்கமானவனென காட்டிக்கொண்டதனால். அதன்  காரணத்தினாலே என் நட்பை விட துணிந்ததில்லை . அவனுக்கு நிகழ் அரசியலின் அனைத்து நுன்மடிப்பையும் விரித்துச் சொல்லி புரிதலை ஏற்படுத்தி  தீர்ப்பது நடவாது. எனினும் நான் என்பாணியில் அவனுக்கு விளக்கமளித்தபடி இருந்தேன்


நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை அழைத்து வந்ததால்  மிகவும் மகிழ்ந்திருந்தான். அவனை பொறுத்தவரை அது ஒரு விடுமுறை போன்றுதான் நினைக்கிறான் என காட்டிக்கொண்டாலும் , தற்போதைய அரசியல் சிடுக்கான சூழலில். நான் ஏதோ பெரிதாக திட்டமிடுகிறேன் என்பது அவனுக்கு தெரிந்திருந்தது


இரண்டு நாள் மிக மகிழ்வாக சென்றபடி இருந்தது. தேக்கடி ஏரியில் படகில் தனிப்பட்ட சவாரிகள்தான் செல்ல இயலும். இன்றையைப்போல பெரும் கூட்டமெல்லாம் இருந்ததில்லை , தனிப்பட்ட படகை அமர்த்திக்கொண்டு ஏரியை வலம்வந்த பிறகு ஏரிக்கு மத்தியில் அமைந்திருந்த அந்த விடுதி மிக அற்புதமானதாக இருந்தது . அன்று ஒரு இரவு அங்கு தங்க முடியுமா என முயறசித்தேன் . பதிவு காலையில்  மட்டுமே செய்யப்படும் என்றார்கள். முன்பதிவிற்காக மற்றோரு நாள் தங்க வேண்டிவரும் . என்னால் முடியாது . நாளை கிளம்புவதாக திட்டம்

2 கருத்துகள்:

  1. நடை மிக இயல்பாக உள்ளது வாசிக்க சு வாரசியமாக உள்ளது தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள ஐயா வணக்கம் .தங்களின் விமர்சனத்தை பார்த்ததும் ஆச்சர்யமும் அதிர்வையும் ஒருங்கே அடைந்தேன் .இது போன்ற அபத்தங்களும், உங்களை போன்றவர்களின் கவனத்திற்கு வரும் என நான் நினைக்கவேயில்லை .விளையாட்டாக எதையோ எழுதி இருக்கும் மொழியை அபிவிருத்தி செய்துகொள்ளும் முயற்சியாக இதை துவங்கினேன் . பல இலக்கியவாதிகளுக்கு எழுதிய தங்கள் எனக்கும் எழுதியது அச்சத்தை கொடுக்கிறது. இருப்பினும் இதை தங்களின் ஆசியாக நெஞ்சிலே பொதிந்து கொள்கிறேன். நன்றி - தாசன் - கிருபாநிதி அரிகிருஷணன்.

    பதிலளிநீக்கு