https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அடையாளமாதல் - 166 * கடலெனும் குறியீடு *

ஶ்ரீ:



அடையாளமாதல் - 166
பதிவு : 166 /  240    தேதி :- 22 ஆகஸ்ட்  2017
* கடலெனும் குறியீடு *

வீழ்ச்சியின் எல்லை
1996 தேர்தல் களம் - 2

நான் காந்திராஜ அலுவலகத்திறகு வந்தபோது அலுவலகம் அலராக இருந்தது . அன்றைய பரப்பான செய்தியாக “இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலன் கட்சியைவிட்டு ஓட்டம்” என வந்திருந்ததை குறித்து  . கண்ணன் தலைமையில் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் அன்று மதியம் இணைந்திருந்தார் . அன்று அதை குறித்து காரசாரமாக பலர் விவாதித்தபடி இருந்தனர் . நான் பொதுவில் இவர்கள் என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என அவதானிப்பதற்கு அவர்களை கவனித்தபடி இருந்தேன் . நல்லவேளை ரவி அங்கு இல்லை . அவன் அங்கு இருந்திருந்தால் இவர்களை பேசவே விட்டிருக்க மாட்டான் . அது ஒரு நிம்மதி . நான் பழைய நினைவுகளின் மத்தியில் கற்பனையாக வாழ்ந்து கொண்டிருந்தேன்.






அன்று மாலை நான் காந்திராஜ் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு அன்றைய பேசுபொருள் “கட்சியை விட்டு ஓடிப்போன பாலன்” . அவரை ஒருக்குழு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது , அதற்கு பதில்சொல்லியபடி பிறிதொன்று . இரண்டிற்கு நடுவாக ஒன்றும்பேசாது வேடிக்கை பார்த்தபடி சிலர் . நான் அங்கு நுழைந்தபோது சப்தம் உச்சத்திலிருந்தது . காந்திராஜ் வழக்கு சம்பந்தமாக யாருடனோ தனது உள்ளறையில் பேசிக்கொண்டிருந்ததால் அவருக்கு இந்த கொந்தளிப்பு கேட்க வாய்ப்பில்லை . நான் ஆர்வமாக அவர்கள் என்னப்பேசிக்கொள்கிறார்கள் என்பதை கூர்ந்து கேட்க துவங்கினேன் . நல்லவேளையாக ரவி அங்கு இல்லை . இருந்திருந்தால் இவர்களை பேச அனுமதித்திருக்க மாட்டான் . நமக்கு அணுக்கமாக தெரிந்த ஒன்றை அதுபற்றி ஒற்றைபடையாக புரிந்து கொண்ட ஒரு கும்பல் அலசுவதை நான் நேரடியாக கண்டதில்லை. அது ஒரு புது அனுபவம் . இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் நம்மை கண்டால் ஒன்று சட்டென அமைதியாகி விடுவார்கள் , அல்லது நமக்கு ஏற்றார்போல மாற்றி பேசுவார்கள் . உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என தெரிய வாய்ப்பில்லை . இன்று அந்த இடமே அதகளப்பட்டது . "அனைவரும் கைவிட்டதால் பாலனுக்கு இந்த நிலை . இந்த கட்சி யாரையும் வாழவைக்காது" என்றொரு தரப்பு . “முதல்வரை வைத்து என்னவெல்லாம் லாபமடையமுடியுமோ அனைத்தையும் சுருட்டிக்கொண்டு இனி கட்சி ஜெயிக்காது என்றவுடன் ஓடிப்போகிறவரை எவன் நம்புவான்” , இது சிலர் . “அதிகாரத்திலுள்ள போது இவரைப்போல ஓடுகாலிகளைத்தான் பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள் நல்லவர்களை எவன் கண் தெரிகிறது” இப்படி சிலர். 

“இது ஒரு புளிச்சேப்பக்காட்சி , ஓடிப்போன மாட்டை தேடாது , வந்தமாட்டையம் கட்டி வைக்காது” , என்று சிலர் . வலுவாக ஒருவருக்கு ஒருவர் மாற்றாக புதுப்புது ராகத்தில் ஏதாவது சொல்லியபடி இருந்ததை பார்ப்பது வேடிக்கையாய் இருந்தது . யார் தரப்பு சரி தப்பு என நிர்ணயிக்கும் ஆள் அங்கு எவருமில்லை . திடீரென உள்நுழைந்து ரவி எல்லாரையும் அமைதிப்டுத்த உரத்த குரலில் ஏதோ சொன்னபிறகும் கூட்டம் அவனுக்கு கட்டுப்படவில்லை , மேலும் சப்தம் ஓங்கி வலுத்தபடி இருந்தது . அமைதிப்படுத்த வந்த  சப்தமமும் அத்துடன் இணைந்து கொண்டு அது கார்வையாக  அதிகரித்ததும், காந்திராஜ் வெளியில் வந்தார் . அங்கு சட்டென அமைதி மீண்டது . “அவர் என்ன” என கேட்டதும் கூட்டம் பழையபடி உரத்தக்குரலில் பேசத்துவங்கியது . அவரும் அவர்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு பேச ஆரம்பித்தார் . மறுபடி கூட்டம் தனது கருத்துக்களை வைத்தபடி இருந்தது . பல திக்குகளில் பயணித்து அடுத்த தலைவராக யார் வருவார்கள் என்கிற கேள்வியை அடுத்து அவரவர் எண்ணங்களை தொகுத்து சொல்ல ஆரம்பித்தார்கள் . ரவி என்னை திரும்பிப்பார்த்தான். நான் எழுந்துகொண்டேன் . இனி அங்கிருப்பது சரிவராது . நான் மெள்ள எழுந்து வெளி ரேழிக்கு வரும்போது ,உள்ளே சட்டென அமைதி திருப்பியிருந்தது, ரவி உரத்தக்குரலில் நான்தான் அடுத்த தலைவராக வர இருந்ததைப்பற்றி ஏதோ சொல்ல, காந்திராஜ் அவனிடம் வியப்பாக ஏதோ கேட்டார் . நான் வாசலுக்கு வந்துவிட்டேன். என்னால் அங்கு பொருந்தியிருக்க முடியவில்லை . கொஞ்ச காலம் இங்கு வருவதை தவிற்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அங்கிருந்து வெளியேறினேன்.

ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டிருந்த உளச்சிக்கலின் முடி கட்டவிழ்ந்து போனது . நான் , என் , எனக்கேயாக இட்ட வேலிகள் உடைந்தும் , மனம் அந்த நொடி விம்ம ஆரம்பித்தது. வாழ்க்கையில் கடந்து வந்த நிகழ்வுகளினால் நிகழ்ந்த பல விஷயங்கள் சிந்தனையை தொடாத அடியாழத்திலேயே எப்போதும் வைத்திருப்பது சாத்தியமில்லை . சிறு விரிசல் எதன்பொருட்டாக எழுந்தால் அதை வைத்தே அது  மேலெழுந்தது வரும் , பின் சிந்தனையால் அதை தரிக்க முடியாததாகிவிடுகிறது.இப்போது அது உக்கிரமாக எழ கண்கள் நீர்மைகொண்டன . பைக்கை உதைத்து கிளப்பி அந்த தெரு முனைக்கு வருவதற்குள் கண்களில் நீர் திரண்டு கண்களை மேலும் குளிரவைத்து வழியை மறைத்தது . வண்டி ஓட்டுவதை கடினமாக்கியது . 

நான் என்னை தொகுக்கும் முகமாக எனக்குள் பித்தனைப்போல ஏதேதோ பேசியபடி வண்டியை கடற்கரையை நோக்கி செலுத்தினேன் . மனம் கட்டுப்பாடில்லாது பாயும்போது கடற்கைக்கு வந்துவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். சமுத்திரம் என் கொந்தளிப்பை அடக்கவல்லது . கம்பீரமான சமுத்ரம் பல குறீடுகளின் தொகுப்பை போலே எனக்குத் தோன்றுவதுண்டு . ஒவ்வொன்றாக விரித்து பலத் திறப்புகளைக் கொடுத்த அதன்பின் கலைந்து பிறிதொன்றென விரிவதாக ஆழ்மனம் எடுத்து சொல்லிக்கொண்டேயிருக்கும். ரத்ணாகரமான சமுத்ரம் செல்வங்களை உள்ளே குவித்து வைத்திருப்பினும் அது கிளிஞ்சலகளையே வெளித்தள்ளுகிறது ஆனாலும் தகுதியுள்ளவனை தவிற்காது . கடக்கவும் ஆழங்காணவும் இயலாததாக இருப்பினும் . நீந்தத் தெரிந்தவனை அது தடுப்பதில்லை. நான் அதனுடனான சிந்தனைக் கடலில் நீந்துவது. எனக்கும் அது மறைக்காமல் கொடுத்தது ஏராளம் .

அது நான் வழமையாக அமரும் “லே கஃபெ” கடற்கரைப்பகுதி , அங்கு கொட்டியிருந்த செயற்கை மணற்பரப்பில் மூழ்கிய யானைகளின் மத்தகம் போல எங்கும் கரிய பாறைகள் அலையின் வேகத்தை முட்டித்தடுத்தன . சோ சோவெனும் கடலின் ஆலோலம் , அவற்றில் பட்டு நுறையாய் நுறையாய் எங்கும் தெறித்து வழிந்தபடி இருக்கும் . எப்போதெல்லாம் என்னை தொகுத்துக்கொள்ளும்படி நேருமோ, அப்போதெல்லாம்  இங்கு பலமணிநேரம் அமர்ந்திருப்பேன் . அலையின் முடிவில்லா பெருக்கு வந்து வந்து என் கொந்தளிப்பை வாங்கி , வழித்து என்னை வற்ற அடித்ததும் . விரைவிலேயே மனக் கொந்தளிப்பு அடக்கிவிடும் . ஆனால் அன்று அது அடக்கமுடியாமல் பீறிட்டபடி இருந்தது . என் தனிப்பட்ட சிக்கலுடன் இன்று பாலனின் செய்தியும் சேர்ந்து கொண்டது . 

பலருக்கு ஆதரவாய் , பலமாய் வழிகாட்டி அழைத்து செல்லும் ஒரு தலைவன் தனது போதாமையால் அனைத்து பாதையையும் சிதைத்து , சிறுபிள்ளையென காண்பதையும் அறிவதையும் தனக்கு மட்டுமேயாக என்னுவதும் . பிறிதெவற்கும் தாராது கைமுழுவதும் பற்றி கொட்டிச்சிதறி வீண்டிப்பது போல . கற்பனையால் கணக்கிட்டத்தை நிஜத்தில் விரித்தெடுக்க இயலாமல் தோற்று ,உள்புழுக்கம் தாங்காது வெளியே ஓடிப்போவது எந்த மாதிரியான தலைமைப்பண்பு ?. அதுவரை பாலன்மீது இல்லாத கோபம் அன்று தாங்கமுடியாத வலியாக வெளிப்பட்டது . பல்லாயிரம் தொண்டனை கூட்டி ஆர்பாட்டமாய் முழங்கிய கூட்டம் நிகழ்ந்த களம் இதோ எனது முதுகு பின்னல் வெறுமையாய் வறண்டு கிடக்கிறது. அனைவரையும் கட்சியெனும் கடலில் கரைத்துவிட்டு  தான் மட்டும் மிச்சமென உதிர்ந்து , இரண்டு அம்பாசிடர் காரில் பத்துப்பேருடன்  கண்ணனுடன் சென்று ஐக்கியமானார் . மனித சக்தியை வீணடித்த ஒரு ஊதாரியின் வீழ்ச்சி , இதோ கல்லாக இந்த சமுத்திரத்தின் ஓரத்தில் கொட்டப்பட்ட கல்லிடையே இதுவும் ஒன்றாக ஓயாத அலைகளை தடுத்து தேய்ந்து ஒரு நாள் இல்லாமலாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...