https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 25 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 278 * ஒருங்கிய புது அமைப்பு *

ஶ்ரீ:பதிவு : 278 /  365  / தேதி :- 25 டிசம்பர் 2017


* ஒருங்கிய புது அமைப்பு *
ஆளுமையின் நிழல்   ” - 24
கருதுகோளின் கோட்டோவியம் -03


புதிய தலைவர்கள் கிராமப்புறங்களில் இருந்து எழுந்து வருவது அசாதாரமானது. தலைவருக்கு அது நிகழ்ந்ததில் பெரும் மகிழ்ச்சி . அவர் அங்கு கூடியிருந்தவர்களுடன் நிகழ்த்திய உரையாடலின் வழியாக உற்சாகம் வழிந்து கொண்டிருப்பதை ,அமைதியாக பார்த்தபடி இருந்தேன் . பழைய நண்பர்களின் கூடுகைபோல , வயதை மறந்த மகிழ்வு எங்கும் பரவி இருந்தது . இரவு வெகுநேரம் நீடித்த அந்த மகிழ்வு , ஒருவர் பின் ஒருவராக கிளம்பி செல்ல , மெல்ல வடிந்து  சிறிது நேரத்திற்கு பிறகு நானும் தலைவரும் தனித்து விடப்பட்டோம் . “ நீ செய்திருக்கும் இவை அனைத்தின் பின் விளைவை  நீ அறிவாயா?” என்று அவர் என்னிடம் கேட்ட அந்த கேள்வி, நீண்ட நாட்கள் என் காதில் ஒலித்தபடி இருந்தது . தனித்த கவனத்தை கொண்டு நிகழ்த்தும் எதற்கும் ஒரு செயற்கை தன்மை வந்துவிடுவதால் , இயற்கை அதில் வினையாற்றும்போது எழுந்துவருவது எப்போதும் பிறிதொன்றகவே இருக்கும் . தலைவர் சொல்ல விரும்பியது அதுதான் போலும் .......

நடந்து முடிந்தது எங்களுக்கு வெற்றியாக இருந்தாலும், இதன் பின்னணியில் இருந்து நான் செயல்பட்டது மிக விரைவில் பழைய நிர்வாகிகளுக்கு தெரிந்து போகும் . அவர்கள் ஆற்றும் எதிர்வினைக்கு பதில் சொல்லவேண்டி காலம் சமீபத்தில் இருக்கிறது என்கிற உள்ளுணர்வு ஒரு உறுத்தலைப் போல எப்போதும் இருந்து கொண்டிருந்தது.   அந்த முக்கிய நகர்த்தலுக்கு பின்புலத்தில் என்ன நிகழ்ந்தது? யார்யார் முன்னிலை வகித்தார்கள்?. அவர்களுக்கு என்ன சிக்கல்கள் நேர வாய்ப்பு ? என்பதை பற்றிய நினைப்பில்,கடைசி நேர நிகழ்வை மட்டும் மீள மீள நினைத்தபடி இருந்தேன் . எனது அணுக்கர்கள் இந்த துறைக்கு என்னால் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டவர்கள் , ஆகையால்  அவர்கள் எத்தகையோரை எதிர்க்கிறோம் என்றும் ,அவர்களின் செல்வாக்கை பற்றியும் அவர்களுக்கு  தெரிந்திருக்கவில்லை. இந்த இரண்டு காரணத்தினாலேயே   அச்சமில்லாதவர்களாக அவர்கள் அந்த நிகழ்வினை நடத்தி சென்றனர் .

அச்சமின்மையே செய்கிற காரியத்தில் மன ஒருமையைக் கொடுத்து விடுகிறது. ஆலோசனை கூடுகை ஒரு கட்டத்தில் சமாதான வழியை நோக்கிய பயணமாக இருந்தது . இறுதியில் பதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்ததும் , எனது அணுக்கர்களுக்கு நான் சொன்ன முக்கியமான குறிப்பு , “ முடிவெடுக்க பிறிதொரு தேதியில் கூடுகையை ஒத்திவைப்பது நடக்காவே கூடாது . முடிந்தவரை முதல் கூடுகையிலேயே சுமூகமான நிலைப்பாட்டை அடையாமல் போனால் , பின் எப்போதும் அடையவே முடியாது என்பது அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது . அவகாசம் கொடுக்கப்பட்டால் , அதுவரை நடந்த முயற்சியை  முறியடிக்க புது வழிமுறை பழைய நிர்வாகிகளால் கண்டடையப்பட்டு விடும் . அவர்கள் நடந்ததை முற்றாக  மாற்றியமைக்கும் வல்லமை உள்ளவர்கள், என்பதையும் சொல்லியே இருந்தேன் . அனைத்தையும் முதல் கூடுகையிலேயே முடிவெடுத்தபடி பிசிறில்லாது  செய்துவிட்டார்கள்

இரண்டாவது தடை , பிரித்தாளுப்படுவது . இளைஞர் அமைப்பினருக்கு பதவிகளை பிரித்து தரும் திட்டம் வரும் என எதிர்நோக்கி இருந்ததால், நான் அவர்களிடம் முன்னமே அது பற்றி பேசியிருந்தேன் . இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் வெகு விரைவில் வெளியாக இருப்பதால் அனைவருக்கும் அதில் சேர்க்க முடிவெடுத்து இருப்பதை பற்றி சொன்னதும் , பிரதேச காங்கிரஸில் இணைகிற திட்டத்தை அவர்கள் உடன்படவில்லை . முதல் வெற்றி ஊசுடுவில் நடந்து முடிந்தது . அதுவே பிறிதெல்லா தொகுதிக்கும் வழிமுறையாகி , கணிசமான தொகுதிகளை எங்களுக்கு பெற்றுத்தந்தது

புதிதாக தேர்தெடுக்கப்பட்டவர்களின் பின்புலத்தில் இளைஞர் அமைப்பிருப்பதை தலைவர் உணர்ந்து கொண்டார் . இது பற்றி ஒருமுறை கூட என்னை அழைத்து பேசியதில்லை. அதே சமயம் தனக்கு தெரிந்ததாக கூட ,அவர் அதை என்னிடம் அடையாளப்படுத்தவில்லை . எனக்கும் அது தேவையுமில்லை . ஆனால் என்னிடம் தலைவர் இதுபற்றி பேசி அவர் வாயோயவில்லை என்றனர், தலைவருக்கு நெருக்கமான சிலர் . அதற்குள்  நான் அடுத்தகட்டத்திற்கு  நகர்ந்துவிட்டிருந்தேன்

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு சீதாராம் கேசரி தலைவராக இருந்தார் மத்தியில் வாஜ்பாய் வெற்றி பெற்றியிருந்த நேரம் நரசிம்ம ராவ் அனைத்திலிருந்தும் ஒதுங்கி விட்டார்  . பலவித சிக்கல் செயின்ட் கிட்ஸ் போன்ற வழக்கு , அந்த ஊறுகாய் வியாபாரி பதக் என பலவிதங்களில் கட்சி குழம்பியிருந்த நேரம் . தலைவர் சண்முகம் மீண்டும் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார் . பதவி ஏற்பு முடிந்த பிறகு தலைவர் வீட்டில் ஒரு விருந்திற்கு ஏற்பாடாகியிருந்தது . நான் அந்த சூழலில் ,அனைவருக்கும் ஒரு செய்தி சொல்ல விரும்பினேன்

நிகழ்வு ஒருங்கிணைப்பு என்பது கட்சி ரீதியாக அதுநாள் அவரை நிகழந்ததேயில்லை. தலைவரைத்தாண்டி பிரிதொருவர் அதை தலைவர் சார்பாக ஒருங்கிணைப்பதாக யாரும் வெளிப்பட்டதில்லை . அதைப்போல யாரும் வெளிப்பட தலைவரும் அதுவரை அனுமதித்ததில்லை . கட்சிக்காரர்கள்   பலவிதப்பட்ட மனிதர்களின் தொகை . எவ்வளவு எளிதாக கட்டுப்படுகிறார்களோ , அதே வேகத்தில் அதை உடைத்துக்கொண்டும் வெளிவந்துவிடுவார்கள் , உளவியல் ரீதியில் அந்த திரள் எதையும் உணர்வு பூர்வமாகவே அணுகுகிறது .தலைமையை சுற்றி உருவாகும் அமைப்பு எப்போதும் குறுங்குழுவாக பரிணமிப்பதே இயல்பு . அதற்கு அத்தகைய ஒருங்கமைவு நிகழ்ந்ததும் , அதைபோல ஒன்றாக  நான் உருவாக்கிய அமைப்பும் வெளிப்படும் என்கிற கணிப்பை பொய்யாக்க அதை மாநிலம் முழுவதுமாக வளர்த்தெடுக்க அடுத்த கட்ட நிகழ்விற்கு நகர்ந்து கொண்டோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக