ஶ்ரீ:
பதிவு : 266 / 352 / தேதி :- 13 டிசம்பர் 2017
* வெறுமையை கலைதல் *
“ ஆளுமையின் நிழல் ” - 12
கருதுகோளின் கோட்டோவியம் -03
உட்கட்சி தேர்தல் சம்பந்தமாக தில்லியிலிருந்து பார்வையாளர்களின் வரவு அதிகரித்த போது , வழமையாக நிகழும் நிகழ்வல்லை இது என அனைவருக்கும் புரிவதற்குள் , இறுதி தேதி நெருங்கி விட்டிருந்தது . அனைவரும் கடைசி நேரத்தில் செயல்பட்ட பிறகும் கூட அவர்கள் நினைத்தபடி முழுமையாக எவற்றையும் செய்யமுடியவில்லை . நான் அணுக்கமானவர்களிடம் அவர்கள் பதிந்த படிவங்களை தொகுதி தலைவர்களிடம் கொடுக்க வேண்டாமென சொல்லியிருந்தேன் . அவர்கள் எங்களை தேவையற்ற இடையூராக கருதுவதால் , இளைஞர் காங்கிரஸ் சார்பாக நாங்கள் தனியாக பதிந்ததை குறைத்துக்ட்டிகாட்டியோ அல்லது கொடுக்காமலேயோ விடுபடும் ஆபத்திருந்ததால்; அப்படி சொல்லியிருந்தேன் . இறுதி தேதி அறிவித்த பிறகு , கடைசிநாள் மாலை கட்சி அலுவலகத்தில் நேரடியாக அவற்றை தனித்தனி தொகுதிகள் சார்ந்து சமர்பிக்க செய்தேன் . நான் தேவையில்லாமல் உட்கட்சி தேர்தலில் தலையிடுவதாக தலைவரிடம் முறையிடப்பட்டது . அது எதிர்பார்த்ததே . படிவங்களை இளைஞர் காங்கிரசின் சார்பாக வல்சராஜின் கணக்கில் அவை ஆவணப்படுத்தப் பட்டிருந்ததால் , என் பெயரில் எதுவும எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதால் அவர்கள் எனக்கெதிராக முயன்ற முயற்சிகள் ஏமாற்றமளிப்பதாக இருந்தது .
அனைத்து படிவங்களை பெற்றதாக வல்சராஜின் கையெழுத்து இருந்ததால் , யாருக்கும் என்ன நிகழ்ந்து என புரியவில்லை . தலைவரிடம் சென்று முறையிட்டதற்கு அவர் “இளைஞர் கங்கிரஸ் இயக்கம் மாநில காங்கிரஸ் கட்சியின் இணை அமைப்பு; அவர்களுக்கு தனியாகதான் கொடுக்கவேண்டும், ஏதாவது முறைகேடுகள் நடத்திருந்தால் , அனைவரையும் நேரடியாக வல்சராஜை சென்று பாருங்கள் என சொல்லிவிட்டார் . வல்சராஜ் என்னிடம் இதுபற்றி கேட்ட போது , நான் பழைய செயற்குழு நிகழ்வைச் சொல்லி “நமது மாநில நிர்வாகிகள் நீங்கள் சொன்னபிறகும் என்னை படிவம் சம்பந்தமாக அனுகவில்லை, ஒருகால் அது அவர்கள் தங்களுக்கு கௌரவக்குறையாக புரிந்து கொண்டிருக்கலாம்” என்று சொன்னேன் ,அவரும் அதை புரிந்துகொண்டார் .
முறையிட வந்தவர்களுக்கு உண்மையில் நிகழ்ந்தது என்ன ? என்பதை பற்றியும் அதை தொடர்ந்து நிகழ இருப்பதையும் அனுமானிக்க இயலவில்லை . தொகுதிகளின் தலவர்கள் அனைவரும் , கட்சியின் தொகுதி நிர்வாகிகளின் பட்டியலையும் , தலைவருக்கான தேர்வையும் , வழமைபோல தலைவரிடம் சொல்லி பெற்றுக்கொள்ளலாம் என்கிற திட்டத்தில் அமைதியானார்கள். ஆனால் இது தேர்தல் , நேரடியான நியமனம் ஏதும் இனி இதில் செய்ய முடியாதென்பதும் , ஏகமனதாக தேர்ந்தெடுக்கபடும் வாய்ப்பில்லையேல், அது அந்த தொகுதியை தேர்தலில் கொண்டு விடும் என அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அன்று இரவு நானும் தலைவரும் உட்கட்சி தேர்தல் விஷயமாக அனைத்து கோப்புகளை தயார்படுத்தி வைக்க இரவு 1:30 மேலாகி விட்டது . நான் வாங்கிச் சென்ற அனைத்தும் வந்ததா என்றார் நான் பாதிக்குமேல் திருப்பவில்லை என்றேன் . அனைத்து ஆவணங்களையும் கட்சி கெஜெட்டில் பதிவு செய்யும் வேலையை நானும் சூரியநாராயணனும் செய்து கொண்டிருந்தோம் . மெல்ல எந்தெந்த தொகுதியில் எவ்வளவு பதிவுகள் திரும்பியது என்கிற கணக்கு என் கவனத்திற்கு வந்ததும், எனக்கு அது மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது .
அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை நான் நியமித்த 210 பேர்களில் நம்பிக்கைக்கு உகந்த முக்கிய நபர்களை மட்டும் அழைத்து பேசினேன் . அனைவரும் பிரகாசமானார்கள் . உட்கட்சி தேர்தல் பணிகள் உச்சகட்டத்தை எட்டியிருந்தது . தலைமை அலுவகத்திலிருந்து எல்லா தொகுதிகளுக்கும் மேற்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்துனர் நியமனம் என பரபரப்பாக இயங்கியது . நான் எந்தெந்த தொகுதியில் யார் யார் வரவேண்டும் என்கிற கணக்கிலும் . எங்களுக்கு பலமில்லாத தொகுதிகளில் எங்களை கலக்காது முடிவெடுக்க முடியாத நிலையை உருவாக்கி தக்க வைத்துக்கொண்டோம் .
நான் செய்து கொண்டிருப்பதை தலைவருக்கும் கடைசீ வரை தெரியாமல்தான் வைத்திருந்தேன் . காரணம் நினைப்பதை முழுமையாக களத்தில் என்னால் நிகழ்த்தமுடியுமா? என அப்போது உறுதியாகத் தெரியவில்லை . அதைவிட முதன்மை சவால் எனது திட்டத்திற்கு முதல் எதிர்ப்பே அவரிடமிருந்துதான் கிளம்பும் . அவரிடம் எந்த கோட்பாட்டையும் உருவாக்கிக்கொண்டு தர்க்கிக்க முடியாது . நம்புது முயற்சிகள் அத்தனையும் அவரது “சிறுபிள்ளை விவசாயம் விளையாது , விளைந்தாலும் வீடுவந்து சேராது” என்பதற்கு முன்பாக வெற்றி கொள்ளாது. இது அனைத்து முனைகளிலும் புது முயற்சிகளையும் ஒன்றுமில்லாதபடி செய்யும் வல்லமையுடையது . அனுபவத்திற்கு முன்பாக இளமையின் முயற்சி என்பது ஒன்றுமே இல்லை என்பதாகி விடுகிறது ,அவரது சிறப்புமிக்க கிராமத்து சொல்லாட்சி.
கடந்த சில காலமாக களத்தில் நான் கண்ட சில விஷயங்கள் எப்போதும் எனக்குள் நிழலாடியபடி இருந்தது . அவை தலைவரின் கைவிடப்பட்டு சிதிலமடைந்த பல முயற்சிகள். அவை யாவும் பருப்பொருள் என தேங்கிய காலத்தில் நின்று கொண்டிருக்கின்றன . ஒருகாலத்தில் தலைவரால் முன்னெடுக்கபட்டு , பின் ஏதோ சில பேரங்களில், சில சமாதனத்தை முன்னிட்டு விட்டுக்கொடுக்கப்பட்டவைகள் . அரசியலில் “இருபாதை பயணக்கோட்பாடு ” பற்றி சூரியநாராயணன் சொல்ல நான் கேள்விப்பட்டதுண்டு. ஒன்று ; ‘அரசியல் சரிநிலைகளுக்காக’ . பிறிதொன்று; ‘எந்த லாப நோக்கமுமில்லாது இருக்கும் நிலைக்கு உண்மையாக இருக்க முயல்வது’ .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக