ஶ்ரீ:
பதிவு : 284 / 371 / தேதி :- 31 டிசம்பர் 2017
* நிழலைத் தொடுதல் *
“ ஆளுமையின் நிழல் ” - 30
கருதுகோளின் கோட்டோவியம் -03
“சோனியா காந்தி தலைமை பெறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் முழு நிர்வாக அமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டுவிடும் , ராஜீவ் காந்தி தலைமை பொறுப்பில் இருந்தபோது தலைவருக்கு சாதகமாக இருந்த அமைப்பு இந்த பத்து வருட காலத்தில் பலவிதமான மாறுதல்களை அடைந்திருந்தது. ராஜீவ் காந்திக்கு அடுத்து வந்த நரசிம்ம ராவ் மற்றும் சீத்தாராம் கேசரி போன்றவர்கள் , பழம்பெரும் தலைவர்களானபடியால் நிர்வாக ரீதியாக தலைவருடன் நல்ல புரிதல் உடையவர்கள் . அகில இந்திய அரசியல் போக்கையும் மாநில தலைவர்களை பற்றியும் அவர்களின் விசுவாசம் தலைமைப்பண்பு அவருக்கு எதிர்நிற்பவர்கள் யார் என்பதை அனுபவபூர்வமாக அறிந்திருப்பவர்கள் , தங்களின் முடிவுகளுக்கு அறிக்கைகளையோ பிறிதொருவரின் வழிகாட்டலையோ எதிர்நோக்கி நிற்பவர்கள் அல்லர் .
மேலும் அவரிடம் தவறான தகவல்களை அளிக்க அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள நிர்வாகிகளும் அஞ்சுவர் . அலங்கார வார்த்தைகளுக்கு மயங்காதவர்களாக பெரும்பாலும் இருப்பதனால் தங்களை சுற்றி துதி கோஷ்டிகளையோ , குறுங்குழு அமைவதையோ அனுமதிப்பதில்லை . அதே போன்ற மனநிலையில் உருவாகி வந்த தலைமுறையை சேர்ந்தவர் தலைவர் சண்முகம் . அதனால் அணுகுமுறைகளும் முடிவுகளும் பெரும் மாற்றமடைந்துவிடுவதில்லை . ஆனால் சோனியா காந்தி போன்ற பெரும் ஆளுமைகள் தலைமை பொறுப்பிற்கு வருகிற போது அதிரடியான மாற்றங்கள் என்கிற புதிய முயற்சிகள் துவங்கும்போது புதிதாக பொறுப்பிற்கு வருபவர்கள் நிர்வாகத்தை கையிலெடுக்க முயல்வார்கள் . முற்றும் புதியவர்கள் வேகமிக்கவர்களாக , பெரும் மாற்றத்திறகு அறைகூவுபவர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயல்பவர்கள் . அனுபவங்களின் அடிப்படையில் பதவிக்கு வராததால் கட்சியின் பழைய நடவடிக்கைகளும் அதிலிருந்த விளைந்த நன்மை தீமைகள் போன்றவற்றை பற்றிய அனுபவம் இல்லாதவர்களாக இருப்பார்கள் , அவர்களின் அணுகுமுறை அதை ஒட்டி இருக்கும் . அவர்களுக்கு நுட்பங்களை எளிதல் புரியவைத்துவிட முடியாது . அவர்களுக்கு அது புரியும் போது கட்சி அனைவரின் கையிலிருந்து நழுவி இருப்பதை மிக தாமதமாக புரிந்து கொள்வார்கள்
“காந்திய வழியிலான போராட்டத்தின் இயல்பு என்பது மக்களை மீண்டும் மீண்டும் ஒன்று திரட்டுவதுதான். அப்போது அவர்கள் நடுவே உள்ள முரண்பாடுகள்தான் மேலெழுந்து வரும். அம்முரண்பாடுகள் நடுவே ஒய்யாமல் சமரசம் செய்துகொண்டே இருக்கும் அது. அந்தச் சமரசம் வழியாக ஒரு பொதுத்திட்டத்தை ஒரு பொதுக்கனவை அம்மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும். அதுவே அந்தப் போராட்டத்தின் அடிப்படை வலிமையாகவும் இருக்கும் இது நீண்டகால அளவில் நிகழும் ஒரு செயல்பாடாகும். ஆகவேதான் காந்திய இயக்கம் மிக நிதானமான சீரான படிப்படியான போராட்டத்தை முன்வைக்கிறது”
“காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஆங்கில அரசை வேருடன், வேரடி மண்ணுடன் ஒழித்துக்கட்டுவதற்கான ஒன்றாக இருக்கவில்லை. அது பிரிட்டிஷ் ஆதிக்கத்துடனான ஒரு நீண்ட உரையாடலாகவே இருந்தது என்பது இன்று வியப்பளிக்கிறது. எப்போதும் அவர் பிரிட்டிஷாருடன் பேச தயாராக இருந்தார். தன் தரப்பை அவர்களுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தார். அடைந்தார், அடைந்தவற்றை தக்கவைத்துக் கொண்டு மேலும் பேசினார். பிரிட்டிஷார் தன் எதிரிகள் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களை அசுரர்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிக்கவில்லை. அவர்களுக்காகவும் சேர்த்தே தான் போராடுவதாக அவர் சொன்னார். அதனால்தான் பிரிட்டிஷாரை இந்திய அதிகாரத்திலிருந்து அகற்ற அவரால் முடிந்தபோதும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையும் பிரிட்டிஷ் நீதிநிர்வாகத்தையும் பிரிட்டிஷ் இதழியலையும் அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது. இன்றும் இந்திய நாகரீகத்தின் செல்வங்களாக அவை நீடிக்கின்றன. யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார்”.
“இந்தியாவைச் சுற்றியிருக்கும் எந்தநாட்டிலும் இல்லாத வலுவான ஜனநாயகம் இந்தியாவில் இருக்கிறது. அதன் குறைகளும் போதாமைகளும் எத்தகையதாயினும் அதை சாதாரணமாகக் கூட நாம் பிறநாடுகளுடன் ஒப்பிட முடிவதில்லை. இந்த ஜனநாயக விழுமியங்கள் சுதந்திரப் போராட்டம் மூலமே இங்கே உருவாகியது. அது காந்தியப் போராட்டமாக இருந்ததே ஒரே காரணம்”. எனகிறார் ஜெயமோகன் தனது இன்றைய காந்தி என்கிற கட்டுரைத்தொகுப்பில்.
இந்த பகுதிகளை நான் மேற்கோள் காட்ட விழைகிறேன் . எந்த ஒரு நிர்வாகமும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவைகள் அல்ல , செயல்பாடுகளால் அடையும் தவறுகளிலிருந்தும் வெற்றிகளிலிருந்தும் தனது அணுகுமுறையை வடிமைத்துக்கொள்கிறது . அந்த அனுபவங்கள் கட்சிக்குள் கொள்கைகளாக கோட்பாடுகளாக சேமித்துவைக்கப்படுகிறது . தலைமை தனது புதிய முடிவுகளுக்கு பாதையை அந்த அனுபவத்திலிருந்து கண்டடைகிறபோது , அதில் தவறுகள் மிக சிறிய அளவில் இருப்பவை அதை அந்த பயணத்தில் சரிசெய்கிற வாய்ப்பு எபோதும் திறந்து வைக்கும் .
தலைவருக்கு தில்லியில் இருந்த நெருக்கமான தொடர்புகள் இந்த பத்துவருட இடைவெளி சிதைத்திருந்தது . மேலும் நாராயணசாமி இந்த காலத்தில் தன்னை மிகச்சரியாக வளர்த்தெடுத்திருந்தார். இப்போது தலைவருக்கு தில்லியில் அவரே ஒரு சவால். தன்னை மீளவும் நிறுவிக்கொள்ள வேண்டிய சூழலில் விபரீதமான அரசியலை கையிலெடுத்திப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது அவருக்கு வேறு வாய்ப்பல்லை. எனக்கும் அப்படித்தான் . நான் எனது கனவுகளை என் நிழலை போல துரத்திப்பிடிக்கும் முயற்சியை துவக்கினேன்.