ஶ்ரீ:
பதிவு : 222 / 308 / தேதி :- 29 அக்டோபர் 2017
* அரசியலின் விபரீத ஊடுபாவுகள் *
“வாய்ப்புகளில் புரியாமை - 08 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.
“அரசியல்சரிநிலைகள் ஏன் எதிர்க்கப்பட வேண்டியவை என்றால் அவை எப்போதுமே எளிமைப்படுத்தப்படுபவை என்பதனாலேயே. அவை மனிதாபிமானம் என்ற கோணத்தில் மிகுந்த உணர்ச்சித்தீவிரத்துடன் முன்வைக்கப்படுகின்றன. ஆகவே அவை மாற்றுக்கருத்துகளையே அனுமதிப்பதில்லை. உதாரணமாக மரணதண்டனை எதிர்ப்பு என்பது இன்று அரசியல்சரியாக ஆக்கப்பட்டுள்ள ஒரு விஷயம். தீவிரமான குற்றமனப்பான்மை என்பது ஒரு மனிதனில் இருந்து நீக்கவே முடியாத அடிப்படை இயல்பு என்றும் ஆகவே பெருங்குற்றவாளிகளை திருத்தியமைக்கலாமென்பது ஒரு எளிய இலட்சியவாதக் கனவு மட்டுமே என்றும் ஒரு நிபுணர் வாதிடப் புகுந்தால் உடனே அவர் பழமைவாதியும் மனிதாபிமானம் இல்லாத ஃபாஸிஸ்டும் ஆகிவிடுவார். அப்படி ஒரு கோணத்துக்கு கண்டிப்பாக இடமுள்ளது என்பதும் மனித இயற்கையை எளிமைப்படுத்திவிடக்கூடாது என்பதும் விவாதத்துக்கே வராமல் செய்யப்பட்டுவிடுகிறது." என்கிறார் திரு.ஜெயமோகன் தனது சாட்சிமொழி கட்டுரைத் தொகுப்பில் .
மக்களின் போராட்டமுகமாக அறியப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகர்புறங்களில் நல்ல அறிமுகமிருந்தாலும் , ஆதரவுதளம் என்பது கிரமாப்பகுதிகளிலிருந்துதான் . பால் விலை உயர்வு விஷயதில் அதன் இரட்டை நிலைப்பாட்டை பத்திரிக்கைகள் கடுமையாக விமர்ச்சித்து எழுதி இருந்தது . அவர்களின் ஆதரவுதளங்களில் கூட உணரப்பட்டது. முக்கியமாக அவர்கள் இதில் முதல்வரை விமர்சித்திருக்கவேண்டும் . ஆனால் அவரைத்தாண்டி கம்யூனிஸ்ட் அமைப்பு பெரும் கண்டனங்களை வாங்கி கட்டிக்கொண்டது .
அதில் தலைவர்கள் அளவில் மிகவும் முரண்பட்டு இருந்தாலும் அவர்கள் கட்சியின் அடுக்குமுறை மிக சாமானியர்களை கொண்டிருந்தது . அவர்களுக்கு அமைப்பில் இருந்து நம்பிக்கை மற்றும் தொடர் கூடுகை அவர்களை ஒரு குடும்பம்போல மாற்றி இருந்தது . ஆளும் அமைப்பின் அரசியல்சரிநிலைகளை வெறுத்து உருவாகும் உத்வேகமிது. அவர்கள் எண்ணிக்கையில் சிறிதானாலும் இலக்கை கொண்டதாக இருப்பதால் எக்காலத்திலும் நீர்த்துப்போவதில்லை . எனது அடிப்படை செயலபாடுகள் ஏறக்குறைய இந்த சித்தாந்தத்தை ஒத்ததாக இருப்பதை அறியமுடிந்தது . அதையே எனக்கானதுமாக வடிவமைக்கத் துவங்கினேன். பேரணில் எண்ணிக்கைக்கு பிரதானமின்றி , செயல்பாட்டிற்கு முக்கியத்துவமுள்ளதாக எல்லாவற்றையும் முன்னிறுத்தினேன். நண்பர்கள் முதலில் அதுபோன்ற ஊர்வலங்களில் பங்கு பெற கூச்சம் கொண்டார்கள் , அதன் அடிப்படை விசையை புரிந்து கொண்டதும் உற்சாகமானார்கள்.
மிக செறிவான போராட்டமாக அதை செய்திருந்தோம் . சுமார் முந்நூற்றுக்கும் அதிகமானோர் அதில் கலந்துகொண்டனர் . காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தலைவர் உற்சாகமாக கொடி அசைத்து துவக்கி வைக்க துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சென்று ஊர்வலம் முடிவடைந்தது . கட்சியினுடைய அனைத்து முக்கிய தலைவர்களும் அதில் கலந்து கொண்டதால் அந்த முதல் போராட்டம் கட்சிக்கும் உள்ளும் வெளியிலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை உற்றுப் பார்க்கவைத்தது . பத்திரிக்கை செய்திகள் மிக நல்லமுறையில் அதை எழுதி இருந்தது . நான் இதைப்போன்ற போராட்டங்களை அனைத்து கூடுகை நண்பர்களிடம் அவர்ரவர் தொகுதிகளில் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம் ,
விவசாய அமைச்சரை அவர்கள் பாணியில் காட்டமான அறிக்கை தயாரித்திருந்தேன் அதற்கு பத்திரிக்கையில் நல்ல வரவேற்பிருந்தது . அவை சிறிய அளவில் வெளிவரும் என நினைத்திருந்த சமயத்தில் முதல் பக்க செய்தியாக அந்த அறிக்கை வந்திருந்தது . தலைப்பு சரியாக இடப்பட்டதிலிருந்து பத்திரிக்கையின் மன சாய்வு எந்தப்பக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது . இளம் பத்திரிக்கையாளர்கள் சிலர் என்னை சந்திக்க விரும்பியது உற்சாகமூட்டுவதாக இருந்தது .பல பத்திரிக்கையாளர்கள் எனக்கு மிக நெருக்கமானது இந்த கட்டத்தில்தான் . பத்திரிக்கைகளை சார்ந்து பத்திரிக்கையாளரகளுக்குள் நிலவும் அரசியலை மிக நெருங்கி அறிந்து கொண்டது அப்போதுதான் .
பிரபல பத்திரிக்கை ஒன்று செய்திகளை போடுவதற்கு பதிலாக செய்திகளை உருவாக்ககும் இடத்தில் இருப்பதும் பத்திரிகையாளர்கள் போக்கில் மிகவும் மாறுபாடு அடைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது . முதிர்ந்த அரசியல்வாதி மற்றும் பத்திரிக்கையாளர்கள் இடையேயான புரிதல் செறிவாக இருந்த காலம் . “பிரசுரத்திற்கு அல்ல” என்கிற தலைப்பில் அவர்கள் மணிக்கணக்கில் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவை ஒளிவுமறைவின்றி இருக்கும். அவர்கள் அரசியல் கட்டுரைகளுக்கு மையக்கருவாக அவை இருக்கும். ஒற்றைபடையான செய்திகளுக்கு மிக விரிவான விளக்கமாக அவை அமைந்துவிடும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக