https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 208 * தனி ஆளுமையை களையும் கரங்கள் *

ஶ்ரீ:

பதிவு : 208 /  287 / தேதி :- 08 அக்டோபர்    2017


தனி ஆளுமையை களையும் கரங்கள்  *தனியாளுமைகள் - 34 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-12


வல்சராஜ் உங்களிடம் ஏதாவது பேசினாரா? என கேட்டார் . ஊருக்கெல்லாம் ஒரு ஜாதகமென்றால் எனக்கென ஒன்று தனியாக இருக்கும் . வாய்ப்புகளைப்போல, பாதைகளைப்போல , உபத்திரவங்களும் தனியானவைகள்தான். நான் அவரை கூர்ந்தபடி , “நீங்கள்தான் அவரை என்னிடம் பேசச்சொன்னதா?” என்றேன் . அவர் “ஐயையோ இந்த விளையாட்டிற்கு  நான் வரவில்லை” என விலகியவர் “நான் அப்படி சொல்வேன் என் நீங்கள் நினைக்கிறீர்களா “ என்றார்.
சூர்யநாராயணன் என்னிடம், வல்சராஜ் காலையில் கூப்பிட்டிருந்தாரா ? என்றார் . காலையில் என்னிடம் அவர் கேட்டதையும் நான் பதிலளித்ததையும் சொன்னேன் . முகத்தில் எந்த உணர்வுமின்றி அமைதியாய் இருந்தார் . நான் மெல்ல காலையில் இருந்த அதே மனநிலைக்கு சென்றுகொண்டிருந்தேன் .  “வல்சராஜிக்கு உங்கள் மனநிலை புரியும் , நீங்கள் அவரிடம் ஒன்றும் சொல்லாததுதான்  சரி என நினைக்கிறேன்” என்றார்.

சூர்யநாராயணனிடம் உள்ள பழக்கம், எந்த அரசியல் விளையாட்டினுள்ளும் அவர் நுழைவதில்லை . அனைத்திற்கும் வெளியே அவர் ஒரு மௌன சாட்சி மட்டுமே . ஆனால் அவரிடமுள்ள சிக்கல் நாம் எங்காவது முட்டி நின்று திண்டாடி மீண்டு வரும்போது, நாம் மீள வேண்டிய வழி இதுவல்ல ,இது என பிறிதொன்றை சுட்டுவார் . இதை முதலில் சொல்லியிருக்கலாமே? என்றால் , நீங்கள் என்னிடம் கேட்கவில்லையே என்பார் . நான் எப்போதும் அவரிடம் அறிவுரை கேட்பதில்லை . அரசியாலில் யாரையாவது கேட்டு நடக்கவேண்டுமென்றால் அவன் அமர்ந்திருக்கும் இடம் தாண்டி நகரவே இயலாது. சூர்யநாராயணன் என்னிடம் அவர் அறையின் பேக்ஸ் தொடர்பு சாதனத்திடம் அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும்  , தில்லியிலிருந்து முக்கிய தகவல் வரலாம் என தலைவர் தன்னிடம்   சொல்லியிருப்பதை கூறினார் , நான் அவரிடம் “நீங்கள் அறையை பூட்டிக் கிளம்புங்கள் , எனக்கு இதில் ஆர்வமில்லை” என்றேன் . ஒரு புது தகவல் வரலாம் என்று சொன்னார் . எதையும் கேளாது நான் கிளம்பி செல்வதை திகைப்புடன் பார்த்தார் . என்னை முன்னிறுத்தி தற்போது எனக்கு திட்டமேதுமில்லை என்பதால் . நான் அடுத்து ஆற்றவேண்டியதை என் ஊழ் எடுத்து கொடுக்கட்டும் என நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன் . 

காலை 5:45 மணி அலைபேசி  அழைப்பு . அது வல்சராஜ் என் யூகித்திருந்தேன் . அது அடித்துக்கொண்டிருக்கட்டும் என விட்டேன் . இவர்களின் விளையாட்டு என்னை எரிச்சலுற செய்தது  அலைபேசி சிறிது நேரம் அடித்து ஓய்ந்துபோனது . நான் தேவையற்று பிகு பண்ணுகிறேனோ என்கிற எண்ணம் எழுந்ததும் . நான் அவரை தொடர்பு கொள்வதற்குள் எழுந்தேன்  , மறுபடி அழைத்தார் . நான்  எடுத்தேன் . நேரடியாக “வாழ்த்துக்கள்” என்றார். எனக்கு சிறிது பதட்டமெழுந்தது . வெளிக்காட்டாது “எதற்கு” என்றேன் . “நீங்கள்  மூத்த பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்றார் . முதலில் கொஞ்சம் திகைத்தேன் . எனக்கான இடமென எனக்கு சரியாக கிடைக்கும் என உள் மனதின் ஆழத்தில் எங்கோ அறிந்திருந்தேன். ஆனால் இதை இப்படி எதிர்பார்க்கவில்லை. “நீங்கள் தானே பரித்துரைத்தீர்கள் . உங்களுக்கு எனது நன்றி” , என்னால் ஆற்றக்கூடியதை செய்வேன்” என்றேன் . 

சிறிது நேர அமைதிக்கு பிறகு , இந்த இடத்திற்கு தலைவர் வேறு ஒருவரை சொல்லியிருந்தார் . நான்தான் அவரிடம் சொல்லாது கடைசி நேரத்தில் இந்த மாற்றம் செய்தேன் என்றார் வல்சராஜ் , நான் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாதிருந்தேன் . “என்ன நான் சொல்வதை நம்பமுடியவில்லையா ?” என்றார் . “அரசியலில் அவரவர்க்கு ஒவ்வொரு கணக்கிருப்பதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்” . “எதன் அடிப்படையிலும் யார் மீதும் கசப்படைவதை நான் விரும்பவில்லை” , “குறிப்பாக பதவி விஷயத்தில் அது தேவையற்றது என நினைக்கிறேன் . ஆனால் நீங்கள் சொன்னது உண்மை என்பதை அறிந்திருக்கிறேன் . அதனால் தான் என்னளவில் நான் என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறேன் என முன்பே சொல்லோவிட்டேன்” என்றேன் . தான் மறுநாள்  காலை புதுவைக்கு வந்து நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு பின்னர் மாஹே செல்லவிருப்பதை சொன்னார் . நான் பிறிதொரு முறை என் நன்றியை தெரிவித்தேன்.

வழமை போல மறுநாள் காலை 6:00 மணிக்கு அலைபேசியில் என்னை வல்சராஜ் அழைத்தார் , தான் புதுவைக்கு வந்துவிட்டதையும் . காலை தலைவர் வீட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் பட்டியல் வெளியிட இருப்பதை சொன்னார் , நான் தலைவரை சந்திக்கும் முன்னராக தன்னை அவரது அறையிலிருந்து அழைத்துப்போக சொன்னார் . இருவரும் அவரது அறையிலிருந்து தலைவர் வீட்டை அடைந்த போது அங்கு எங்களை எதிர்நோக்கி பெரிய கூட்டம் கூடிருந்தது . எல்லோருக்கும் தகவல் போயிருக்கிறது . இப்போது அனைவரின் மத்தில் நாங்கள் இருவரும் எனது காரில் வந்திருங்குவதை பாக்கப்போகிறார்கள் . நான் வல்சராஜிடம் என்னோமோ செய்து இந்த பதவியை அடைந்ததாக அனைவரையும் குமையச்செய்யும் . வல்சராஜ் தான் எப்போதும் அனைத்திலிருந்து விலகி நிற்கும் அரசியல் நிலையிலேயே தான் என்றும் நிற்பதாக இப்போதும் சொல்லாமல் சொல்லியதாகிறது . 

இதை நான் வலராஜ் அறையிலிருந்து கிளம்பும்போது அறியாது போனாலும் . இங்கு வந்து சேர்ந்த அந்த நொடியில் அந்த புரிதலை அடைந்தேன் . இப்படி எல்லாவற்றிலும் கணக்கோடு செயல்படுபவர்களை பார்த்து நான் பரிதாபப்படுவதுண்டு . மனிதன் தன் விழைவுப்படியெல்லாம் நடந்து கொள்ளும் சுதந்திரன் அல்லன் , இப்புடவி பெருநெறியிக்கு கட்டுப்பட்டவன் . அதை எல்லோரும் உணரும் ஒரு காலம் வந்தே தீரும் அப்போது நரகமென்ற ஒன்று எங்கோ தனித்து இருப்பதில்லை வாழும் இந்த உலகில் நமக்கு அருகிலேயே இருப்பதை உணர்ந்துக்கொள்வார்கள் . 

நான் யாருடனும் பேசாது தலைவரை பார்த்து வணங்கி அவர் முன்பு போடப்பட்டிடுந்த நாற்காலியில் அமராது என் எதா ஸ்தானமான அவர் வீட்டின் பின்கட்டுக்கு சென்றுவிட்டேன் . வழமை போல என்னை பார்த்ததும் ரவி டீ தந்தார் . பிறகு வாழ்த்து சொன்னார் . எனக்கு அது ஆச்சயர்யமில்லை அவர்களுக்கு தெரியாத ரகசியமென்று  ஒன்றில்லை . நான் அமைதியாக அதை ஏற்றுக்கொண்டேன் . 

ஏனோ மிகவும் வெறுமையாக  உணர்ந்தேன் . தலைவர் யாரை சிபாரிசு செய்தாரோ அவரை நான் அறிவேன். அவர் அமரவேண்டிய பதவியிது . சபாபதி இன்னும் அந்த பழைய வஞ்சத்தை சுமந்தலைகிறார் . அப்படி செய்வதுதான் அரசியலென நினைகிறார்கள் போலும்  . அது அனாவசிய பொதி அதை தள்ளினால் அவர்களுக்கான உலகம் தனக்கென தனித்து விரிவதை ஒருநாளும் அவர்கள்  உணரப்போவதில்லை . எது எப்படி இருந்தாலும் இந்த பதவி பலரின் கண்களுக்கு எனது தகுதியற்று  இனாமாக பெற்றதாக இருகப்போகிறது. தலைவரும் வல்சராஜூம் தங்களின் கைகளால்  என்னை தாங்குவதாலேயே நான் இந்த உயரங்களை எட்டுகிறேன் என அவர்கள் நினைப்பதை போல என்னை அவமானமானமடையச் செய்வது   பிறிதொன்றில்லை . அது என் ஆற்றலை கொச்சைப்படுத்துவது . அது எப்போதும் எனக்கான பாதையை மலினப்படுத்துவது . என்னை எப்போதும்  சோர்வடைய செய்வது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக