https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 6 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 206 * திறவுகோல்களின் வனம் *

ஶ்ரீ:




பதிவு : 206 / 285 / தேதி :- 06 அக்டோபர்    2017


திறவுகோல்களின்  வனம்   *


தனியாளுமைகள் - 32 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-10


 1991 தேர்தல் களம் ‘அரசியல் சரிநிலை’ என்கிற கருதுகோள்   காங்கிரஸ் உட்கட்சி அரசியலின் பதையை வெகுவாக சீர்குலைத்து விட்டிருந்தது . அதன் வீழ்ச்சியின் எல்லையை 1999 ல் பார்க்க முடிந்தது. அதன் பிறகு உட்கட்சி அரசியல் வேறொரு முனையைநோக்கி பயணப்பட்டிருந்தது . இங்கிருந்து பார்த்தால் தலைவரின் கையறு நிலையை தெளிவாக பார்க்க முடிகிறது . எங்களுக்கான அரசியல் களத்தை வென்றெடுத்து தர கூடியவராக எங்களால் நம்பப்பட்டவர் , தனது அரசியல் வல்லமையால் மரபான அரசியலை தரவல்லவராக நம்பப்பட்டவரான தலைவர் , அப்போது முற்றிலுமாக தன்னம்பிக்கையை இழந்துவிட்டிருந்தார் என நினைக்கிறேன்.




1991 தேர்தல் களம் புதுவை கட்சி அரசியலில் அதுவரை இருந்த சமன்பாடை குலைத்துவிட்டதையும் அதன் போக்கில் மாறுபாட்டையும்  1995 என்னால் உணரமுடிந்தது . அது மரைக்காயருக்கும் சண்முகத்திற்குமான பலவருட நடைமுறை அரசியல் அனுபவம் அவர்களுக்குள்  உரசல்லிலாத போக்கை கொடுத்திருந்தது . அப்போதே இன்று பேசப்படுகிற "அரசியல் சரிநிலைகள் " போன்ற ஒரு போக்கு இருந்திருக்கவேண்டும். அவை எப்போதும் ஏதோ ஒரு வகையில் குடிமை சமூகம் , அவை எண்ணியிராத பக்கங்களில் காயபடுத்தக்கூடியதாவே இருந்திருக்கலாம்  . தலவரது அரசியல்  விழுமியத்தினாலோ அல்லது அனுபவத்தின் கனிதலாலோ அதன் ஊறு விளைவிக்கும் முனைகள் குறுகிய எல்லைகொண்டதாக இருந்திருக்க வேண்டும் . சண்முகத்திற்கும் மரபான அரசியலில் உள்ள நம்பிக்கை மரைக்காயரிடன் வேறுவிதமாக இருந்திருக்கலாம் , இருவரிடமும் ஒருவரை ஒருவர் நிகர்படுதிடக்கூடியதாக அந்த “ அரசியல் சரிநிலைகள்” இருந்திருக்கலாம். 1991 சமன்குலைதலுக்கு பின்னர் எழுந்த அரசியல் போக்கு முற்றிலும் வேறுவிதமான நிலைகொள்ளலுக்கு ஒட்டியே இருந்தது . இந்த சமயத்தில்தான் தலைவருடைய அரசியல் விழுமியங்கள் அடிபட்டிருக்க வேண்டும் . புதிய முயற்சிகளையோ அமைப்பின் சீத்திருத்தங்களிலோ அவருக்கு நம்பிக்கை குறைந்திருந்தது . வயதும் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது .

பொதுவெளியில் இந்த மாறுபாட்டினை நான் உணர்ந்திருந்தாலும் தலைவரை அது பாதிக்கவில்லை என்கிற உளப்பதிவிலேயே நான் இருந்தேன் . களத்தில் அதை சீர்செய்யும் வழிகளை அறிந்திருந்ததனால் , என்னுடன் இணைந்து பணியாற்றும் அமைப்பை நான் எதிர்நோக்கி இருந்தேன். இளைஞர் காங்கிரஸ்தான் எனக்கான இயக்கம்பென்பதனால் , அது இயங்கக்கூடிய வாய்ப்பிற்கு காத்திருந்தேன் .வல்சராஜ் புதுவையில் இருக்கும்போது  நான் தினமும் இரவு அவரை சந்திப்பதை வழமையாக இருந்தது . அந்த சந்திப்பு சுவாரஸ்யத்தில் சில சமயம் நடுநிசியாகிவிடுவதுண்டு . எனக்கான இரவு உணவு அங்கேயே தயாராயிருப்பது வழமை என்றானது . முதல்நாள் இரவுகூட பொதுவான அரசியல் குறித்த அரட்டையாகவே இருந்தது. இன்று காலை அவரது திடீர் அழைப்பு எனக்கு முக்கியமாகப்பட்டது. 

வல்சராஜ் பேசும்போது தனக்கு தில்லியிலிருந்து அழைப்பு வந்ததையும் தான் மாஹே  செல்லாமல் தில்லிக்கு காலை விமானத்தில் புறப்பட இருப்பதை பற்றி சொன்னார் . நான் மௌனமாக அவர் பேசுவதை கேட்டபடி இருந்தேன் . அவர் எதற்கு செல்கிறார் என்பது எனக்கு தெரியும். அவரும் அதை அறிவார் . புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய கணம் நெருங்குவதால், அது பற்றி என் கருத்தையோ , அல்லது நான் அவரிடம் எனது பதவியை குறித்த என்னுடைய விழைவையோ சொல்ல வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறார் என் யூகித்தேன் . அவர் மௌனமாக இருந்தார் , சிறிது மௌனம் என்னை பேசவைக்கும் என்பது அவருக்கு தெரியும் . நான் மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவருக்கு வாழ்த்துச்சொல்லி அலைபேசியை அணைத்தேன் . 

மனதில் ஒரு பக்கம் இதை எனது திமிர் என்றது ஒன்று  . நீ விழைவதை சொல்லியிருக்க வேண்டும் என்றது பிறிதொன்று . நான் விழைகிறேனா ? என் அடையாளத்தைப் பற்றிய பதட்டத்தில் இருக்கிறேனா ? என்ன சொல்லியிருக்க வேண்டும் நான்? , என்னை இந்தப்பதிவியில் நியமியுங்கள். நான் உங்களுக்காக இதை , அதை செய்வேன் என் உளற வேண்டுமா . என்னால் ஆகக்கூடியதில்லை அது . இப்போது யாருக்கு யார் தேவை ?, என்னால் அவருக்கு ஆகக்கூடியது என்ன ?என்பதே இப்போதுள்ள கேள்வி . 

திரளின் ஒரு துளியாக நான் எப்போதும் இருந்ததில்லை . எனக்காக ஒரு வாசல் திறந்து நான் ஆற்றவேண்டியது எனக்காக காத்திருந்த கணங்களே அதிகம் . அப்படியில்லாது போனால் எனக்கான பாதையை நான் கண்டடைந்திருக்கிறேன் .ஆனால் இன்று உண்மையிலேயே நான் எங்கிருக்கிறேன் என்பதை அறிய விழைந்த நாட்களவை . திறந்திருந்த கதவுகளினூடாக ஓடி, ஓய்ந்திருக்கிறேன் . நான் என் கற்பனையில் கண்ட இலக்குகள் பொய்யோ என் குழம்பியிருந்ததால் . பிறிதெவராவது சொல்லட்டும் நான் யாரென்று ? பணி என்னவென்று ? அதில் நான் ஆற்றவேண்டியது என்னவென்று ? . இனி அது தெரியாமல் ஓர்  அடி முன்வைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன் .

இயக்கத்தின் அகில இந்திய தலைவருக்கு இந்த புதுவையின் உட் கட்சி அரசியலால் ஆகக்கூடியது ஒன்றில்லாதிருக்கலாம் ,ஆனால் இயக்கத்தின் மாநிலத் தலைமை என்கிற இடத்தில அதே போன்ற மனநிலையை ஒருவர் வெளிப்படுத்த இயலாது. சண்முகத்திற்கு அல்லது அவரின் செயல்பாடாத தன்மையால் எழும் சிக்கலுக்கு ஒருநாள் வல்சராஜ் பதில் சொல்லியாகவேண்டும் . என்னை சுற்றி சிலந்திவளைப்போல பின்னப்பட்ட எதிர்ப்பினால் கடும் உளச்சோர்வடைந்துள்ளேன் . அது கடக்க முடியாததல்ல . ஆனால் என்னை வல்சராஜ் எங்கு வைக்கிறாரோ அதுவே நான் எனது அரசியலை துவக்கும் புள்ளியாக இருக்கப்போகிறது . என்னை வல்சராஜால் தவிர்க்க இயலாது . எனக்கு என்ன தரவேண்டுமோ அதை கொடுத்தேயாக வேண்டும் என என் ஆழ்மனம் சொல்கிறது . 

தானாக கொடுத்தால் அது அவருக்குள்ள நிர்பந்தமென அது காட்டிவிடும் என ,என்ன காரணத்தினாலோ எனக்கு நெருக்கடி கொடுப்பதுபோல நடந்து கொள்கிறார் . அதன் மூலம் என்னை எங்கோ உடைத்து பார்க்க முயலுகிறார் . அதை உடைப்பதன் வழியாக நான் அவரிடம் இறைஞ்சும் வாய்ப்பை எனக்கு தந்திருக்கிறார் . நான் எவரிடம் எதற்கும் மன்றாடுவதில்லை என்பதை வல்சராஜூக்கு  ஒருமுறை நான் உணர்த்தியேயாக வேண்டும் . அது இன்று . நான் மிக சரியாக நடந்து கொண்டதாக என் மனம் சொன்னது .

சோர்வைத்தரும் காலகட்டத்தில் அதை கடந்து போவதற்கான வழியும் தானே சேர்ந்தே வரும் என்பதுபோல . குன்றாத ஆர்வத்தை கொடுத்தது அரசியல்தான் . நான் பயணிக்க வேண்டிய பாதைகள் மூடபட்டுக்கிடந்தன. அவற்றின்  பூட்டுக்கள் சிக்கலானவை அதன் திறவுகோலை கண்டடைவது என்பது அவை செறிந்து ஓங்கி நிற்கும் வனத்தில் துழாவுவது , அது என் தகுதிக்கு மீறியவை , ஒவ்வொரு முறையும் அதை வென்றெடுக்க வேண்டிவரும் . வாய்ப்பு என்னை சுட்டுமானால் அதை முயற்சிக்க தயாராகவே இருந்தேன் . அதற்கு தலைவரிடம் கிடைத்த அதே கட்டுப்படுத்த முடியாத சுதந்திரம் எனக்கு வல்சராஜிடம் கிடைத்தால் மட்டுமே என்னால் நான் நினைத்ததை ஆற்ற முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்