https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 7 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 207 * தனித்த உபத்திரவங்கள் *

ஶ்ரீ:
பதிவு : 207 / 286 /  தேதி :- 07 அக்டோபர்    2017


தனித்த உபத்திரவங்கள்  *தனியாளுமைகள் - 33 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-11


சோர்வைத்தரும் காலகட்டத்தில் அதை கடந்து போவதற்கான வழியும் அதனுடன் சேர்ந்தே வரும் என்பதுபோல . குன்றாத ஆர்வத்தை கொடுத்தது அரசியல்தான் . நான் பயணிக்க வேண்டிய பாதைகள் மூடபட்டுக்கிடந்தன. அவற்றின்  பூட்டுக்கள் சிக்கலானவை அதன் திறவுகோலை கண்டடைவது என்பது அவை செறிந்து ஓங்கி நிற்கும் வனத்தில் துழாவுவது , அது என் தகுதிக்கு மீறியவை , ஒவ்வொரு முறையும் அதை வென்றெடுக்க வேண்டிவரும் . வாய்ப்பு என்னை சுட்டுமானால் அதை முயற்சிக்க தயாராகவே இருந்தேன் . அதற்கு தலைவரிடம் கிடைத்த அதே கட்டுப்படுத்த முடியாத சுதந்திரம் எனக்கு வல்சராஜிடம் கிடைத்தால் மட்டுமே என்னால் நான் நினைத்ததை ஆற்ற முடியும்.


அப்போது நான் அதுவரை கடந்துவந்த பாதையை நினைத்துபார்த்திருந்தேன் . பதிமூன்று வருடத்திற்கும் மேலாக இதில் இருந்து கொண்டிருந்தேன்  . சில காலம் அதிலிருந்து உடலளவில் ஒதுங்கியிருந்தாலும் மனதளவில் எனது பயணம் அறுபடாதுதான் இருந்தது . மூடிய கதவுகளுக்கு இப்பால் முயங்கிக்கொண்டிருந்தபோது   இருந்த நம்பிக்கை, அன்று பத்து  புறமும் திறந்து கிடக்கிற கதுவுகளை தாண்டி உள்ளிருப்பதை துல்லியமாக கண்டபோது இல்லாதிருந்ததை  உணருகிறேன் . விளையாட்டாக அரசியலென்று  நிகழ்த்திய எனக்கு அன்று எங்கும் அதுமட்டுமே நிறைந்து காணப்பட்டது  . சொற்களாகாத  எழுத்துக்களாக அவை அர்த்தங்களாகாது எங்கும் நிறைந்துள்ளதைக் காண்கிறேன் . ஒருக்கால் அனைத்தும் அனைவரின்  முடிவின் விதி,  அப்படி அங்கு எழுதப்படிருக்கலாம் . அதை அறிந்துகொள்ளும் ஆர்வம் போல, ஒன்று என்னை அதைநோக்கி எப்போதும் உந்தித்தள்ளியபடி இருந்தது .

தலைவரிடமும் மற்றும் வல்சராஜுடன் நெருக்கமான தொடர்பினால் , அரசியல் குறித்த எனது சிந்தனை மேலும் கூர்கொண்டிருந்தன என நினைக்கிறேன் . பலகாலம் இருவருடனும் நிகழ்த்திய பல நீண்ட உரையாடல்கள் என் ஆழ்மனப்படிமம் வழியாக அரசியல் செயல்படுமுறைகளை பற்றிய  மிக நுண்ணிய புரிதலை நான் அடைந்திருக்க வேண்டும் . அதனால் கிடைக்கப்பெற்ற திறப்புகள் , எதிர்காலம் குறித்து  என்னை மிகவும் சோர்வடைய செய்திருந்தன . 

சில நேரங்களில் நமக்கு ஏற்படுகிற புரிதல்கள் மூலம் அடையும் யதார்த்த நிலைகள் நம்மை முடக்கிவிடுவதுடன் . நெடுங்காலம் நம்மை செலுத்திவந்த மரபான  நம்பிக்கைகளை அவை உடைத்து வீசிவிடுகின்றன . எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள் சிதைந்து போவது மரணத்திற்கு இணையானது . தனிப்பட்ட வாழ்வில் சந்திக்க நேர்ந்த உளச்சோர்வை விலக்கிக்கொள்ள வந்த இடத்தில் அதைவிட வாழ்வியலை நோக்கி அடைந்த உளசிக்கல் இன்னும் பெரியதாக உருவெடுத்திருந்தது . நவீன மருத்துவத்தினால் தள்ளிப்போடப்பட்டு வந்த  அப்பாவின் மரணம் நிகழ்ந்தது இந்த காலகட்டத்தில் . எனக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பெரும் அழுத்தம் இருந்த காலம் . 

எனக்கான வாய்ப்புகளை பற்றி சிந்திக்கும்போது ,வந்தால் சந்தோஷம் வராவிட்டால் அதைவிட சந்தோஷமென்று இருந்தேன்  , இதைப்போல இரட்டை நிலை  விரும்பியாக நான் பலமுறை இருக்க நேர்ந்ததுண்டு . என்னுடைய பலமாக இதை கருதுகிறேன் . பெரும்பாலும் எனது முடிவுகளின் துவக்கம் இங்கிருந்தே ஆரம்பித்திருக்கின்றன . அரசியலில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது அடுத்தது என்ன நிகழ்வதற்கான வாய்ப்பு என நான் , எனது நேர்மறை எண்ணங்களினால் எனக்கு தோன்றுவதாக சிலதை சொல்லி, " இவன் எதற்கும் உதவாதவன் "என் பேர் எடுத்தாகிவிட்டது . என்ன முயற்சித்தும் நான் நினைபதை என் நட்பு வட்டத்தில் கூட புரியவைக்க முடிந்ததில்லை .ஒரு கட்டத்தில் தருக்க நியாயங்களுக்கு அர்த்தமில்லாமல், நம்பிக்கையை மட்டுமே சார்ந்திருக்கும் ஓர் இடமுண்டு . அங்கு நான் பரிபூரணமாக பலமுறை வந்து நின்றிருக்கிறேன்.

அன்று காலை எனக்கு தலைவரிடமிருந்து  அழைய்ப்பு வந்தது . தொலைபேசியில் எப்போதும் "உடனே வாருங்கள் " என்கிற இரண்டு சொற்களுக்கு மேல்  எப்போதும்   பேசும் வழக்கமில்லாதவர். நான் உடனே கிளம்பிச்   சென்றேன் , அங்கு  நிறைய பேர் வருவதும் போவதுமாக இருக்க, தலைவர் வந்திருந்த அனைவரிடமிருந்து சில கவர்களை பெற்றுக்கொண்டிருந்தார் . முதலில் அது என்ன என்பதை அறியும் ஆர்வமில்லாமல்தான் இருந்தேன் . வந்து சென்ற பலர் இளைஞர் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர் . எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியும் ஆர்வமெழுந்ததும் . மேஜைமீதிருந்த கவர்களை பார்த்தேன் அது என்ன என்பது புரிந்து போனது. தலைவர், நிர்வாகியாக வர விரும்பும் அனைவரிடமிருந்தும் "தற்குறிப்பு" வாங்கிக் கொண்டிருந்தார் . அனைவரயும் ஓரிரு வார்த்தை சொல்லி அனுப்பிவிட்டு, என்னிடம் இன்று மாலைக்குள் எனது தற்குறிப்பை கொடுக்க சொன்னார். நான் மெளனமாக சிரித்துக்கொண்டேன் . தலைவருக்கு இதுபோன்ற காரியங்களில் உற்சாகம் கொப்பளிக்கும் . நான் மௌனமா தலையாட்டிவிட்டு கிளம்பிச்சென்றேன் . 

இரண்டு நாள் என்னை பார்க்கும்போதெல்லாம் கேட்டபடி இருந்தார் அடுத்தநாள் அவரை சந்திப்பதை தவிர்த்தேன் . என்னை கட்சி அலுவலகத்திற்கு ஒரு காரியமாக சூர்யநாராயணன் அழைத்திருந்தார் . அவரை சென்று சந்திக்க உள்நுழையும் வாசலிலேயே தலைவரிடம் சிக்கிக்கொண்டேன் . மிகவும் கோபமாக “என்னிடம் எங்கே நான் கேட்டது” என்றார் . நான் தலைவரிடம் எனக்கு எந்த பொறுப்பிலும் இருக்க விருப்பமில்லை . என்றதுடன் இது என்ன வேலைவாய்ப்பா? என்றேன் . அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் அவை . ஒன்றும் சொல்லாமல் என்னை ஒருமாதிரி பார்துக்கொண்டு , அலுவலகத்தை விட்டு வெளியேறினார் . அவருடன் வந்த சூர்யநாராயணன் என்னிடம் அப்படி பேசவேண்டாம் என் சைகை காட்டினார் . நான் அதற்குள் சொல்லி முடித்துவிட்டேன் . 

தலைவர் சென்றவுடன் என்கையைப்பிடித்து இழுத்து தன் அறைக்கு சென்றார் . உள்ளே இருவரும் சிறிதுநேரம் மெளனமாக இருந்தோம் . பின் அவர் பேசத்துவங்கினார் . “சண்முகம் ஒரு பேய் அதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை . இந்தக்கால பசங்களுக்கு பொறுப்பும் கடைமையும் கிடையாது அது இதுவென கத்திக்கொண்டிருப்பவர் .என்னிடம் உன்னை தொடர்ப்புக்கொள்ள சொல்லி பலமுறை சொன்ன பிறகும் நான் உன்னிடம் பேசவில்லை ஏனென்றால்  நீ வேறுமாதிரி பேய்” என்றார். நான் சிரித்துக்கொண்டேன் . “அவர் நினைக்கும் இந்தக்கால பையன் நான் இல்லை” என்றேன் . அதற்கு அவர் “நீங்கள் ஒன்று தலைவர் வைத்திலிங்கத்தையே அப்படித்தான் சொல்லுகிறார்” என்றார் .

வல்சராஜ் உங்களிடம் ஏதாவது பேசினாரா? என கேட்டார் . ஊருக்கெல்லாம் ஒரு ஜாதகமென்றால் எனக்கென ஒன்று தனியாக இருக்கும் . வாய்ப்புகளைப்போல, பாதைகளைப்போல , உபத்திரவங்களும் தனியானவைகள்தான். நான் அவரை கூர்ந்தபடி , “நீங்கள்தான் அவரை என்னிடம் பேசச்சொன்னதா?” என்றேன் . அவர் “ஐயையோ இந்த விளையாட்டிற்கு  நான் வரவில்லை” என விலகியவர் “நான் அப்படி சொல்வேன் என் நீங்கள் நினைக்கிறீர்களா “ என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக