ஶ்ரீ:
பதிவு : 212 / 292 / தேதி :- 13 அக்டோபர் 2017
* சிறுபிள்ளை விளயாட்டின் ஆபத்து *
“தனியாளுமைகள் - 37”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-12.
நானோ ரஹமானோ தலைவருக்கு மிக அணுக்கமாக இருப்பவர்கள் , சிக்கல் எங்களை மையங்கொண்டால் அது பெரிய அரசியல் அநர்தத்தில் கொண்டுவிடும்.ரஹமானின் சிறுபிள்ளைவிளையாட்டை கண்டு தலைவர் பெரிதும் அஞ்சுகிறார் . அவன் ஒருவித சகுணத்தடையை உணரச் செய்யும் பல்லிப் போல சூழ்நிலையையோ நேரத்தையோ அறியாது குறுக்கே பாய்பவன் . எப்பவும் அவர் நாற்காலியில் ஒரு அங்கம்போல அமர்ந்திருப்பவனாக தலைவர் கருதுகிறார்.
ரஹ்மானின் அரசியல் போதாமை , மற்றும் விளையாட்டு குணம் அவனுக்கு மட்டுமின்றி கட்சிக்கும் சிக்கலை தோற்றுவித்துவிடும் என தலைவர் அஞ்சினார் . பொதுவில் அவர் யாரையும் நம்ப மறுப்பவர் என்பதும், ஒருவருடன் முரண்பட்டால் பின் ஒருகாலமும் அவர்களை பற்றிய மறு சிந்தனைக்கு அவர் வருவதில்லை என்பதும் ,பழைய வன்மத்தை எத்தனை காலமானாலும் மாற்றிக் கொள்ளாது அப்படியே வைத்திருப்பதும் வேறுவிஷயம் . என்மேலும் அவருக்கு நம்பாமையும் அஞ்சுதலுமுண்டு, அது பிறிதொரு தளத்தில் நான் செயல்படுகையில் . ஆனால் இப்போது என்னிடம் இதைப்பற்றி தலைவர் பேச வந்ததற்கு , என்னிடம் கையளிக்கபட்ட களத்தில் நான் எதிர்கொள்ளும் சவால்களுக்கு , அவரிடம் உதவி வேண்டி திரும்புவது எனது வழமையல்ல என்கிற நம்பிக்கையால் இருக்கலாம் . அவற்றைப் போல இதையும் நான் தூக்கி சுமக்கட்டும் எனவும் எண்ணியிருக்கலாம் .
அதன் பொருட்டு தலைவர் என்னிடம் “நாம் மிக சமீபத்தில் ஆட்சியை இழந்திருக்கிறோம்” நாராயணசாமி தோல்வியுற்றாலும், நாம் ஆளும் அமைப்பிற்கு ஒரு கெட்ட செய்தி சொல்லியிருக்கிறோம் . நாராயணசாமிக்கு “எதிர்பாராதவிதமாக” கிடைத்த ஓட்டுக்கள் தன்னுடைய கட்சியினுடையது என கண்ணன் ஆவேசம் கொண்டுள்ளார். இது குறித்து அங்கு மோதல் போக்கு துவங்கிவிட்டதை நீயும் அறிவாய்” . “கண்ணன் குழுவினர் இதில் முழுமையாக ஈடுபடுவதாக கேள்விப்படுகிறேன் . இது கடைசியில் வெத்து தெருச்சண்டையாய் முடியும் ” . “குட்டி குலைத்து நாய் தலையில் வைத்ததுபோல ,அது இங்குவரை வந்து நிற்கும்”என்றார் .
அவர் சொல்லுவது நூறு சதவிகிதம் உண்மை . ஆனால் ரஹமான் விடாப்பிடியாக சிலமணி போராட்டத்திற்கு பின் அடம்பிடித்து சாதித்து ,தலைவரின் ஒப்புதலை பெற்றான். ஆனால் அவர் ரஹமானிடம் “என்னையும் உடன் வைத்துக்கொண்டால் மட்டுமே” என்கிற வரம்பிற்குட்பட்ட நிபந்தனையுடன் அனுமதித்தார் . இதில் தேவையில்லாது தலைவர் என்னையும் கோர்த்ததும் , அவன் அந்த நிபந்தனையை ரசிக்கவில்லை , எனக்கும் இது சரியாகவராது என விலக எண்ணினேன் . நான் தலைவரிடம் “நாங்களும் கண்ணனின் ஆட்களும் மாநிலம் முழுவதும் முறுக்கிக்கொண்டிருக்கிறோம் . நான் இதில் ஈடுபட்டால் அதற்கு பிறிதொரு பரிமாணம் கிடைத்துவிடும்" .
"மேலும்க ல்லூரி தேர்தல் முடிந்து போட்டியாளர்கள் எல்லோரும் மாமன் மச்சானென்று முறை சொல்லி ஒருவர் தோள்மீது ஒருவர் கைபோடுக்கொண்டு போய்விடுவார்கள் . அங்கு துவங்கும் சண்டையை நாங்கள் பலகாலம் தொடரவேண்டி இருக்கும்” . “நான் இதில் ஈடுபடமாட்டேன்” என்று உறுதியாக கூறிய பிறகும் தலைவர் விடாப்பிடியாக , “அதனால்தான் உன்னை இதை பார்க்கசொல்லுகிறேன் . நீ நேரடியாக இதில் ஈடுபடுவது தெரியவந்தால் அனாவசிய சிக்கல்கள் முதல் நிலையிலேயே களையப்பட்டுவிடும். நீயும் உடன் சென்றால் கட்சி இதை முழுமையாக ஆதரிப்பதாக ஒரு தோற்றம் கொள்ளும் . முதல் நுலையிலேயே சிலதை தவிற்க முடியுமானால்தான் நம்மாலும் இதிலிருந்து சிக்கலில்லாமல் எவளியேற இயலும் . அவர்களும் எதையும் கொஞ்சம் யோசித்துச் செய்வார்கள்” என்றார் .அவர் சொல்லவருவதின் உட்கூறு எனக்கு புரிந்ததால் நான் ஒன்றும் சொல்ல முடியாத நிலையிலிருந்தேன் .
தலைவர் மேலும் “நான் உன்னை இப்போதே தேர்தல் வேலைகளைப் பார்க்கசொல்லவில்லை . நீ ரஹ்மானுடன் சென்று கள நிலவரத்தை அவதானித்து பின்பு சொல் ,நாம் இதில் ஈடுபடுவதா இல்லையா ?என. அதை வைத்து பின்னர் முடிவு செய்வோம்” என்றார் . எனக்கும் அது சரியென பட்டது. இப்போது மறுத்துக்கொண்டே இருந்தால் , “இல்லை நீ இதை செய்துதரத்தான் வேண்டும்” என வலிந்து தலையில் கட்டி விடுவார் . அது அவரது சுபாவம் .இப்போதைக்கு இதில் உள்நுழைந்த பின் ஏதாவதொரு கராணத்தைச்சொல்லி வெளியேறும் வழியை கண்டடையலாம் எனப்பட்டதால் ,நான் ரஹ்மானுடன் தாகூர் கலை கல்லூரிக்கு மாணவ வேட்பாளர்களை சந்திக்க கிளம்பினேன்.
முதல் கட்டம் . அது ஒரு மூன்றுநாள் ராத்திரி பகல் வேலை. முடிவில்லாது நீண்ட படியே இருந்தது . முதல் நாள் அவர்களுடன் என்னால் இயைந்து போக முடியாதது பளிச்சென்று புரிந்து போனது . நான் ஒரு பருவத்தை கடந்து பிறிதொன்றில் இருப்பதை முதல்முறையாக உணர்ந்தேன் , அந்த மாணவர்களின் எந்த செயல்பாட்டிலும் என்னால் பங்கெடுக்க இயலவில்லை . அவர்களின் ரசனையும் பேச்சும் , ஆகப்பெரிய நகைச்சுவையும் எனக்கு அவை ஒன்றுமேயில்லை என்றாகி அதனால் ஒவ்வாமையையும் எரிச்சலையும் கொடுத்ததுடன் . எனக்கும் அவர்களுக்குமாக பெரிய இடைவெளி இருப்பதை அறியமுடிந்தது . அவர்களுக்கு மத்தியில் எனக்கான இடத்தை நான் கண்டடைய முடியவில்லை என்பது வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.தேர்தல் விஷயத்தில் அவர்கள் என்னமாவது செய்துகொள்ளட்டும் வெளியிலிருந்து வரும் சிக்கலை எதிர்கொள்வோம் என முடிவு செய்தேன் .
இது சிறுபிள்ளை விளையாட்டு வலிந்து நாம் சொல்லும் எச்சரிக்கைகளுக்காகவே நம்மை வெறுப்பவரகள் தங்களின் அறியாமையால் விளையாட்டில் படும் அடிகளுக்கு பெரும் ஆதாரவை எதிர்நோக்குவார்கள் . இங்கு மரணம் கூட மௌனமாக கடந்து செல்லத்தக்கதென அறியாதவர்கள். இவர்களின் தவறுகளுக்கும் நம்மையே சுட்டுவார்கள். இது அனாவசிய வம்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக