https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 12 அக்டோபர், 2017

அடையாளமாதல் - 210 * தவறாத வாய்ப்புகள் *

ஶ்ரீ:




பதிவு : 210 / 290 / தேதி :- 11 அக்டோபர்    2017


*   தவறாத வாய்ப்புகள் *



தனியாளுமைகள் - 36 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-12

யாருக்கும் யாரும் அரசியல் பாடங்களை சொல்லிக்கொடுப்பதில்லை ஆனால் அது நிகழ்ந்து முடியும் நிகழ்வுகளின் அனுபவங்களை தொடுவதன் வழியாக கற்றுக்கொள்ளுதல் .இன்னதென விளக்க முடியாத ஒரு புரிதல்களை கொடுத்தபடி இருந்தது . ஒரு அமைப்பில் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டி வரும்போது , அதுவே அதை இயக்கும் ஆற்றலை கொஞ்ச காலத்திற்குள் அவர்களுக்கு கொடுத்து விடுகிறது  . இது காலத்தின் பெருநியதிகளில் ஒன்றென நினைக்கிறேன் . ஒருவித நிறைவின்மை , ஒருவித பசியை எப்போதும்  உணர்ந்து கொண்டிருந்ததனால், நான் பலவித முயற்சிகளையும் அதன் வழியாக பரவிய அனுபவங்களை பெற்றபடி இருந்தேன் என நினைக்கிறேன்.





“இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானுடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லாருக்கும் உரியனவாகி விடுகின்றன. அதாவது அனுபவங்களில் இருந்து நான் அகவெளிச்சம் ஒன்றை நோக்கிச் சென்று சேர்கிறேன். வாசகர்களுக்கு அவ்வக வெளிச்சத்தை அளிக்கிறேன். அதில் தொடங்கி என் அனுபவம் நோக்கி வாசகர் வர முடியும். இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான் என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்." என்கிறார் திரு.ஜெயமோகன், தனது “வாழ்விலே ஒருமுறை” என்னும் கட்டுரைத் தொகுப்பில். நான் அதை செய்ய முயற்சிக்கவில்லை . ஆனால் அதை பிறிதொரு கோணத்தில் கிடைக்கும் அகவெளிச்சமும் அது தரும் புரிதல்களை இப்படி தொகுத்துக்கொண்டே வருகிறேன்.

அரசியலில் விளையாட்டாக ஒரு சொல்லுண்டு .இளவரலான ஒன்றுக்கு  தலைமை தாங்க வாய்ப்பு கிடைத்து அதை இழப்பவன் அதை பின்தொடரும் ஆகப்பெரிய பிறிதொன்றையும் சேர்ந்தே இழப்பான் என்பது . இது ஒரு எள்ளல் போல தெரியும் . ஆனால்  சரியான வாய்ப்புகள் முதல் நிலையிலேயே தெரிவதில்லை , தொடர்நிகழ்வுகளினூடாக . சில அற்புத தருணங்கள் தற்செயலாக நிகழ்ந்து பின் பெரிய வாய்ப்புகளாக அவை பரிமாற்றமடைவதை பார்த்திருக்கிறேன். என்னை பெரிய அளவில் வளரவும் , தொகுக்கும் வாய்பளித்தவைகளின் பல சிறிய துணுக்காய், தற்செயலாக நான் கண்டடைந்தவைகளே .

காலை மாணவர் காங்கிரசின் தலைவர் ரஹ்மான் அலைபேசியில் கூப்பிட்டிருந்தான் . கடசிக்குள் எனக்கான சில நண்பர்களில் ஒருவன் . எல்லாவற்றிலும் முரணான பார்வை உள்ளவன் . அவன் என்னிடம் என்ன கோரினாலும் அதை பலமுறை அவதானித்து செய்ய முயற்சிப்பேன் . அவன் அலைபேசியில் என்னிடம் சில விஷயம் பேசவேண்டுமென்றான் . முதிரா இளைஞைனெனும் தனியான அணுகுமுறை எப்போதுமுள்ளவன் . அவன் எனக்கு அணுக்கமானது . தாகூர் கலைக்கல்லாரி மாணவர் தேர்தலின்போது தான் . 

1996 தேர்தலில் கட்சி தோல்வியுற்று ஆட்சியை இழந்த  சமயமது . தலைவரைக்காண நான் சென்றிருந்தபோது உள்ளே ரஹ்மான் தலைவருடன்  கல்லூரி தேர்தலை பற்றி ஏதோ வேகமாக பேசிக்கொண்டிருந்தான் . அவனது முதிரா இளைஞனின் அனுகுமுறையால் தலைவர் அவனை சிறுவனைப்போல நடத்துவது வழமை . அவனது எல்லா செயகைகளும் அப்பிடித்தான் இருக்கும் . நான் உள்ளே சென்றமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் இருவருக்குள் நிகழ்நத பேச்சு ஒரு விவாதம்போலாகிவிட்டது . 

கல்லூரி தேர்தல் விஷயத்தில் நாம் செய்யக்கூடிய சில விஷயங்களை தலைவர்  அவனிடமே சொல்ல அவருடன் முரண்பட்டபடி சென்று கொண்டிருந்தது அவனது பேச்சி . ஒரு கட்டத்தில் அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டு தலைவர் விருட்டென எழுந்து தனது பின் அறைக்குள் சென்றுவிட்டார் . ரஹ்மான் அவரது மனநிலையை உணரவில்லை . என்னிடம் திரும்பி அவருக்கு என்ன சொன்னானோ அதையே என்னிடமும் சொல்ல ஆரம்பித்தான் . 

கட்சிக்குள் பல்வேறு பிரிவுகள் பல தளங்களில் செயல்பட்டுக்கொண்டிருந்தன . அவற்றுடன் இணைந்து செயல்படும் சந்தர்பங்களை நான் தவறவிடுவதில்லை. ஆனால் எனக்கு மாணவர் தேர்தல் மற்றும் தொழிற்சங்க அரசியலிலும் என்றும் நாட்டமிருந்ததில்லை .இரண்டும் வெவ்வேறு அரசியல் முறைமைகளை கொண்டது . எனது அரசியல் முறைமைகள் அந்த பாணி முறைமைகளுடன் ஒத்துப்போவதில்லை . தொழிற்சங்க அரசியல் பகுதிநேர அரசியலன்று . அவர்கள் வேறுவிதமான திரள் . உடலுழைப்பு ,பொருளியல் பற்றாக்குறை, சட்டசிக்கலான நீதிமன்ற வழக்கு நடைமுறைகள் என தினசரி வாழ்வியல் சங்கடங்களில் உழல்பவர்கள் . அதில் அரசியலென்பது அவர்களின் தேவைகளையும் விழைவுகளையும் நிகர் செய்து கொள்வதே . அவர்களை ஒருங்கிணைக்கும் அரசியலையும் கூட ஒரு கட்டத்தில் சுமை என நினைப்பவர்கள் . ஒரு அரைநாள் விடுப்பு பெற்றுத்தர இயலாத நிலை வருமானால் சிறிதும் தயங்காது தொழிற்சங்கத்துடன் முரண்பட தயங்காதவர்கள் . 

அரசியல் நுண் புரிதல்களால் ஆனது . நாளை என்கிற ஒன்றை நினைவில் கொண்டேதான் அரசியலை முன்னெடுக்க முடியும் , அனால் தொழிற்சங்கமென்பது இன்றில் மட்டுமே வாழ்வது , அவர்களுக்கு லட்சிய கனவுகளை ஏற்றுவதைப்போல மடமை பிறிதொன்றில்லை . அவர்களின் தலைவன் அவர்களுக்குள்ளிருந்தே எழுந்து வரவேண்டியவன் . வெளியிலிருந்து எவரும் அவனை நிகர் செய்துவிட முடியாது . அவர்களை பேசுமொழியும் அடைதலும் ,விட்டுத்தருதலும் வேறொரு தளத்தை சேர்ந்தது . 

மாணவர் அரசியலென்பது கொள்கை கோட்பாடு என எதையும் அடிபடையாக கொண்டதல்ல . அதுஒரு களியாட்ட போல ,வேடிக்கை சம்பவம்களின் தொகுப்பு . கல்லூரித் தேர்தலென வந்துவிட்டால் . அது ஒருமாத கூத்து ,அதை நிகழ்த்துவதற்கு அவர்களுக்கு தேவை வேடிக்கையான அரசியல் சார்புநிலை என்பது பொருளியல் உதவி ஒன்றே . 
பெரும்பாலும் ஆளுங்கட்சியின் ஆதரவைப்பெறவே அவர்கள் விழைவது வழமை. மாணவரமைப்பு தேர்தலில் கட்சி சாயம் பூசுவது போல மடமை பிறிதொன்றில்லை. தேர்தலுக்கு பின் அவர்களின் நட்பே முன்னிற்கும் . அதுதான் சரியானதும் கூட . 

மாணவர் திரளிலிருந்து அரசியல் அமைப்பிற்குள் தலைவரான எழுந்த வந்தவர்கள் மிக சொற்பமானவர்கள். அவர்களை தாண்டி பிறிதெவரும் கட்சி சார்பாக நின்றாதாக நான் அறிந்த வரை எவருமில்லை . ரஹ்மான் தனக்காக தலைவரிடம் பேசும்படி என்னிடம் சொன்னான் . என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றை நான் விளையாட்டிற்குக்கூட முயற்சித்ததில்லை . உறுதியாக மறுத்துவிட்டேன் . அவன் விடாது என்னிடம் பேசியபடி இருந்தான் . அவனது தொல்லைதங்காது நான் அருகிலிருந்த தினசரி பத்திரிக்கையில் ஒன்றை எடுத்து படிக்க துவங்கினேன் , அவன் சொல்ல வந்ததை நிறுத்தவேயில்லை . சற்று நேரத்தில் திருப்பி வந்த தலைவர், என்னிடம் “என்ன சொல்கிறார் மாணவர் தலைவர்” என்றார் எள்ளலுடன் . நான் பேப்பரை மடித்துவைத்து உங்களிடம் என்ன சொன்னானோ அதையே என்னிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறான் என்றேன் . ரஹ்மான் விடுவதாக இல்லை .தான் விட்ட இடத்திலிருந்து மறுமுறையும் அதையே சொல்ல துவங்கினான்.

ஒரு சந்தர்ப்பத்தில் தலைவர் என்னிடம்மாணவர் தேர்தலில் நாம் இப்பொது ஈடுபடுவதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்என்றார். நான் எனது அபிப்ராயத்தை சொல்லிஅரை டவுசர் பையனகளின் அரசியல்”  என்றேன் . தலைவர் வெடி சிரிப்பாக தான் ஆமோதிப்பதை வெளிப்படுத்தினார் . ரஹ்மான் பரிதாபநிலைக்கு வந்துவிட்டான் . நான் தலைவரிடம், கல்லூரி தேர்தலில்கூட பணியாற்ற வேண்டாம் என சொல்லிவிட்டால் பின் வேறு எங்குதான் அவர் தனது களத்தை கண்டடைவது என்றேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக