ஶ்ரீ:
பதிவு : 205 / 284 / தேதி :- 05 அக்டோபர் 2017
* சீர்குலைந்து போன தொடர்புகள் *
“தனியாளுமைகள் - 31 ”
இளைஞர் அமைப்பின் கருதுகோள்-10
ஒருகட்டத்தில் அவரை சூழ்ந்திருக்கும் என் எதிரணியின் கூட்டத்தின் பெருக்கத்தை வைத்து, நான் அவர் எந்த மனநிலையில் உள்ளார் என்பதை அறிந்துகொண்டேன் . நான் முதலில் எனக்கான இடத்தை வென்றெடுக்க வேண்டும் . அது அவரது அறையில் இல்லை அது களத்தில் உள்ளது , அங்குதான் அதை முடிவு செய்ய வேண்டும் . முதலில் எனக்கெதிரானவர்கள் கையாளும் இந்த சூழ்க்கையை அவரது அறையை விட்டு களத்திற்கு விரட்டவேண்டும் . கள செயல்பாடென்பது மனம் புத்தி உடல் சம்பந்தப்பட்டது . அது அரசூழியர் பணியல்ல . அதில் செயல்பட, வெற்றிபெற களத்தில் பல மனங்களை வென்றெடுக்க வேண்டும் .
களத்தில் செயல்படுவதை இவர்கள் ஏன் தவிர்க்க எண்ணுகிறார்கள்? . எனக்கு அங்கு வாய்ப்புகள் இருக்கும்போது , அது அவர்களுக்கும் இருக்கும் தானே . என பலமுறை குழம்பியிருக்கிறேன் . அவர்களின் பக்கமுள்ள வாய்ப்புகளும் சவால்களும் அவர்களை இப்படி செயல்பட வைக்கிறது . அவர்கள் என்னைவிட அரசியலை மிகச் சரியாக புரிந்து வைத்திருந்தார்கள் . அரசியலதிகாரத்தை குடிமைச் சமூகத்திலிருந்து பெரும் ஆபத்தை அவர்கள் என்னைவிட சரியாக புரிந்திருந்தது . அவர்களிடமிருந்து பெறப்படும் அங்கீகாரம் , அவர்களை நமக்கிணையான அந்தஸ்தை கொடுக்கவல்லது. அவர்களுக்கு சொல்லப்பட்ட அரசியல் குடிமை சமூகத்தின் அங்கீகாரம் அனைத்து அரசியல் முறைமைகளுக்கான தடையை உருவாக்கிவிடும். அரசியலின் செயல்முறைகள் அதிகார அனுபவத்தினால் அவர்களுக்கு வேறொரு கருதுகோளை உருவாக்கிக் கொடுத்திருந்தது. அது “யதார்த்த அரசியல்” அதை அவர்கள் புரிந்திருந்தனர். அது எங்கும் செல்லுபடியாகிக் கொண்டிருந்தது ; பொதுவெளியில் அது உச்சரிக்க படாதுபோனாலும் . அதை போன்ற ஒன்றை திரு.ஜெயமோகன. சொல்கிறார் “ அரசியல் சரிநிலைகள்” என்று .
“ஓர் அரசியல்சூழலில் ஆட்சிசெய்யும் ‘அரசியல் சரிநிலை’கள்தான். ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பது நவீன ஜனநாயகச்சூழலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சொல். ஜனநாயக அரசியல் எப்போதும் கருத்துகளின் மோதலினால் ஆனது. இங்கே ஒருங்குதிரட்டப்பட்ட கருத்துகளுக்கு எல்லை இல்லாத வலிமை உள்ளது.” என்கிறார் திரு. ஜெயமோகன் தனது கட்டுரைத் தொகுப்பொன்றில் .
நான் ஏறக்குறைய இதற்கு எதிர்நிலையில் நின்றிருந்தேன் என நினைக்கிறேன். இளைஞர் காங்கிரசை தலைவர் சண்முகத்தின் கை ஆயுதமாக மாற்றும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். எனது களப்பணி என்பது ஏறக்குறைய தலவர் சணமுகத்தின் மரபாரந்த அரசியல் வழிமுறைகளை ஒத்திருந்தது , அதனால் அவருக்கு என்மீதிருந்த நம்பிக்கை , என் அனுகுமுறை மீதோ நான் உருவாக்க நினைத்த புதிய தலைவர்களின் மீதோ இருந்திருக்கவில்லை . என நினைக்கிறேன் . அது புரிந்து கொள்ளக்கூடியதே .
நான் இளைஞர் காங்கிரசின் நிர்வாக குழு உள்ளே வர இயலாத எதையும் ஆற்றுவது அவர்களின் ஒற்றை செயல்திட்டமாக இருந்தது. சண்முகத்தின் ஆதரவு எனக்கிருப்பதால் அது சாத்தியமாகாது போனது , அது முடியதுபோனால் , என் சிறகுகளை ஒடித்து எனது பயணத்தை குறுக வைப்பது அதன்பின் என் அதிகாரம் குறுகி விடும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது . எனக்கு கால் வைக்கும் இடமெல்லாம் எதிர்ப்புகள் மையம்கொண்டிருந்தன , மனிதர்களின் இயற்கை குணம் என்கிற ஒன்று உண்டு . அது எந்த அரசியல் சூழ்தலுக்கும் உட்பட்டதல்ல . அது ஒரு அனிச்சை செயல்பாடு. நம்மை மீறி நாம் அதை செய்துவிடுவோம் , அதுவே ஊழின் நாற்களம் .
அன்று காலை 6:00 மணிக்கு வல்சராஜ் என்னை அழைத்திருந்தார் ,அலைபேசியை முந்நாள் இரவு அதிர்வில் விட்டுருந்ததால், அந்த இணைப்பை நான் தவறவிட்டிருந்தேன் . அது அவர் என்னை வழைமையாக அழைக்கும் நேரம் . வாரத்தில் மூன்று நான்கு முறையாவது அழைத்து பேசுவது அவரது வழமை , புதுவையில் இருந்தால்தான் என்று மட்டுமல்லாது மாஹே சென்றாலும் அவர் அழைக்க மறப்பதில்லை . முதல் நாள் இரவுதான் அவருடன் பேசிவிட்டு வந்திருந்தேன். மறுபடியும் காலை அழைத்திருந்ததால் , ஏதாவது முக்கிய தகவல் வந்திருக்கலாம் என நான் அவரை அலைபேசியில் அழைத்தேன் .
அழைப்போசை சற்று நேரம் நீண்டு , துண்டிக்க நினைக்கையில் ,மறுமுனையில் வல்சராஜ் எடுத்தார் . தான் சென்னைக்கு வந்துவிட்டதாக சொன்னார் . முன்னிரவு என்னிடம் சொல்லும்போது மறுநாள் காலை 4:00 மணிக்கு சேலம் சென்று அங்கிருந்து ரயிலில் மாஹே செல்வது பற்றி பேசிக்கொண்டிருந்தோம் . அவர் சென்னைக்கு சென்றது எனக்கு வியப்பில்லை , சில சமயம் அவசர அலுவலாக மாஹேவிற்கு விமானமூலம் சென்றதுண்டு .ஆனால் அவர் அங்கிருந்து என்னை கூப்பிட்டிருந்தது தான் வியப்பு
திட்டமிட்ட அரசியல் என்கிற ஒன்று ஏறக்குறைய இல்லை என்றே நினைக்கிறேன். யாருடைய கட்டுப்பாட்டிலும் ஏதுமில்லாத ஒரு நிலையை நோக்கிய பயணமாக அன்றைய அரசியல் இருத்துக்கொண்டிருந்தது . 1991 தேர்தல் களம் ‘அரசியல் சரிநிலை’ என்கிற கருதுகோள் காங்கிரஸ் உட்கட்சி அரசியலின் பதையை வெகுவாக சீர்குலைத்து விட்டிருந்தது . அதன் வீழ்ச்சியின் எல்லையை 1999 ல் பார்க்க முடிந்தது. அதன் பிறகு உட்கட்சி அரசியல் வேறொரு முனையைநோக்கி பயணப்பட்டிருந்தது . இங்கிருந்து பார்த்தால் தலைவரின் கையறு நிலையை தெளிவாக பார்க்க முடிகிறது . எங்களுக்கான அரசியல் களத்தை வென்றெடுத்து தர கூடியவராக எங்களால் நம்பப்பட்டவர் , தனது அரசியல் வல்லமையால் மரபான அரசியலை தரவல்லவராக நம்பப்பட்டவரான தலைவர் , அப்போது முற்றிலுமாக தன்னம்பிக்கையை இழந்துவிட்டிருந்தார் என நினைக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக