ஶ்ரீ:
பதிவு : 220 / 300 / தேதி :- 21 அக்டோபர் 2017
* கனவுகளின் வண்ணங்கள் *
“வாய்ப்புகளில் புரியாமை - 06 ”
கருதுகோளின் கோட்டோவியம் -01.
நான் எனக்கான அரசியல் வாய்ப்பை தலைவரிடமிருந்து துவங்கும்போது இதற்கான ஒரு கோட்டோவியத்தை எங்கோ எனது ஆழ்மனதில் உணர்ந்திருக்க வேண்டும் . திட்டமிட்டதும் தொகுத்துக்கொண்டதும் பின் அதை நோக்கிய பயணத்தை துவங்கியதும் இப்படிப்பட்ட கருதுகோளை தெரிந்து கொள்ளாத காலத்தில்தான் என்பது எனக்கு எப்போதும் ஆச்சர்யமளிப்பது . அன்று நிகழ்ந்தவைகளை இன்று தொகுத்துப் பார்கையில் அவற்றின் வெற்றிகளும் , இடறிய இடங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது . இடறல்களுக்கு அணுக்கமாக எனது ஊழை இன்று அறிந்துகொள்ள முடிகிறது. பிறிதொரு காலத்தில் இவற்றின் பிற பரிமாணங்கள் எழுந்து , எனக்கு மேலும் பல புரிதல்களை கொடுக்கலாம் . இன்றைக்கு இந்த அளவில் மட்டுமே என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது இந்த பதிவு என்னனை நான் அறிந்துகொள்ளும் முகமாக தொகுக்கப்படுவதாக சொல்லுவதற்கு இதைத்தான் காரணமாக சொல்லுவேன் .
எனது போராட்ட முறைமைகள் பல அடுக்குகளை கொண்டதாக எப்போதும் இருந்திருக்கிறது . பாலனுடன் நடத்திய போராட்டங்களுக்கு உட்கூறுகள் மிக தட்டையானவைகள் . கையிலெடுக்கும் காரணத்தை மட்டும் மையப்படுத்தி அதை ஓட்டிய கருதுகோளாக அவை இருக்கும். அதன் பயன்களை சேமிக்கும் கொள்கலன்கள் எங்களிடம் இல்லாததால் அவை சில நாட்களே உயிர்த்திருந்து பின் பயன்படாது மரித்துப் போயின .ஆனால் எனக்கு இங்கு கிடைக்கும் அனுபவங்கள் வழியாக நான் அடைந்த புரிதல்களும் அது எனக்கு கொடுத்த திறப்புகளும் பல செய்திகளை உள்ளடக்கியவையாக இருந்தன. காங்கிரஸை போன்ற அமைப்பிற்கு மத்தியிலும் மாநிலத்திலும் நீண்ட அரசுகளை கொடுத்த அனுபவங்கள் இருந்தாலும் , சில அதீதமாணத் தருணங்களை தவிர , அது மக்களை ஒன்று திரட்டி அவர்களுடன் எப்போதும் தொடர்பிலிருக்கும் வாய்ப்பை அது அடைந்ததிருந்ததில்லை என்றே நினைக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் எந்தக் கட்சியும் ஆட்சியில் அமரும் அந்தந்தருணம் முதல், சரிவை நோக்கியே நகர்கிறது என்பது விதி . ஒவ்வொரு முறையும் மாநில காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்வதற்கு கட்சியை தாண்டி, அது வழமையாக சொல்லும் காரணங்களைத் தவிற்த்து அது அறியாத வேறு பல காரணிகள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது . கட்சியின் நீண்ட அனுபவத்தை பொறுப்பேற்கும் புதுமுகங்களின் தலையில் ஏற்றுவதைப் போல மடமை பிதொன்றில்லை. அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு மாற்றும் செயல் எங்கும் நடப்பதில்லை.
ஆட்சிக்கு வந்ததும் தன்னை பற்றிய மிகை புரிதல்களாலான கோட்டையை கட்டிக்கொண்ட பின் , எப்போதும் அதனுள் இருந்து அவர்கள் வெளிவருவதில்லை . குடிமை சமூகத்தின் அங்கீகாரத்தின் வழியாக மேலே சொன்ன கண்ணுக்கு தெரியாத காரணங்களினால் பெறும் ஆட்சி அவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்ததில்லை . சட்டமன்றத்திற்கு விழைபவரின் தொடர்பிற்கு உட்பட்டதாக இருப்பதாக நேர்ந்துவிடும் அல்லது அவர்களை அதைநோக்கி தள்ளிவிட்டு அது ஒதுங்கி நின்றுகொள்ளும் .
இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கு அரசியல் தேவைகளை கட்சித்தலைமை அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை சார்ந்திருப்பது இயக்கத்தை முன்னெடுக்க எந்தவகையிலும் பயன்படாது . தற்சார்புள்ள பலம்தான் அதை செய்ய வல்லது . அவற்றை குடிமை சமூகத்திடமிருந்தேதான் பெறமுடியும். அவர்களிடம் கொள்ளும் நெருக்கம் அதை ஏற்படுத்தித்தரும். அதற்கு தொடர் போராட்டம் அல்லது சமூக நலம் சார்ந்த உழவரக பணி போன்ற வழிமுறைகளோ அல்லது கூடுகைகளொ சிறந்த வழி . 1) பிரம்மாண்டங்களை கொண்டாதாக அடையாளப்படுத்தி விட்டால் அதை ஒவ்வொரு முறையும் செய்வது சாத்தியமில்லை ,2) அவை மாநில அளவிலானதாக இருப்பதால் அதில் வளர்ந்துவிட்ட தலைவர்களுக்கு மட்டுமே பிரதான ஸ்தானம் இருக்கும் , புதிய தலைவர்களை அதில் அடையாளம் காண இயலாது . 3) சிறு சிறு நிகழ்வில் தான் புதிய தலைமுறை தலைவர்களை தனிப்பட்ட முறையில் அவர்களின் அசலான ஆளுமையுடன் அவதானிக்க இயலும் . 4) தங்களை முன்னிறுத்துவதால் அவர்களின் சிறு அளவிலான செலவுகளுக்கு மாநில அமைப்பை சார்ந்திருக்கும் அவசியமில்லை . 5) சிறு சிறு நிகழ்வில் சந்திக்கும் இடற்களை கண்டு அதன் வழிமுறைகளை மாற்றி அமைக்கும் கணம் , அவை மேலும் கூர்கொள்கின்றன.
என்னை உருவாக்கி எடுக்க ,எனக்கான மனத்தடையை விலக்கும் வாய்ப்பாகத்தான் கடந்த சில வருடங்கங்களாக நான் நிகழ்த்திய சிறு சிறு கூடுகைகள் இருந்திருக்கின்றன .
அப்போதெல்லாம் இளைஞர் காங்கிரஸில் எனக்கான இடம் பற்றியெல்லாம் ஒன்றும் அறிந்திருக்காத காலம் அவை . ஒரு வேகத்தில் செய்யப்போக அது என்னை பிறிதொரு முனைக்கு கொண்டுவிட்டது . எனக்குள் நானறியாத இந்த செயல்முறை பற்றிய கோட்டோவியம் அந்த சிறு கூடுகைகளின் வழியாகத்தான் நான் அடைந்திருக்க வேண்டும் . அதன் பின் நான் அமைத்துக்கொண்ட உட்கூறுகள் இதனின் நீட்சி மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக