ஶ்ரீ:
பதிவு : 358 / 539 / தேதி :- 03 ஜூலை 2018
* சூழும் குரல்கள் *
“ நெருக்கத்தின் விழைவு ” - 51
விபரீதக் கூட்டு -04.
இன்று நிகழ் அரசியல் தரம் தாழ்ந்ததாகி விட்ட நிலையிலும் அதன் பொருள் கேலிக்குறியதாக இருப்பினும் . அதிலிருந்து தான் குடிமை சமூகம் தனக்கான விமோசனத்தை நாளும் எதிர் நோக்குகிறது. தனக்கான எதிர்காலத்தை அது உருவாக்கித் தரும் என உறுதியாக நம்புகிறது. அதன் பொருட்டே காலம் நடத்தப்படுகிறது. அரசியல் தலைமை அதை சேவை என கருதும் இடத்திலிருந்து மாறாது இருக்குமானால் . அது இன்றும் வணக்கத்திற்குறியதே . அதனிடம் முறையிடப்படும் வார்த்தைகள் , அதனிலிருந்து எழும் வலிகளை உணருகையில் ஏற்படும் புரிதல் இலக்கியம் கொடுக்கும் அதே பல்லாயிரம் வாழ்வின் தருணங்களை கொடுக்கவல்லது என்றால் அது மிகையல்ல . தனக்குள் அதை உணரும் எவரும் , சற்றேனும் அவற்றை தொட்டு மீள்கிறார்கள்.
நண்பர் மயிலாடுதுறை பிரபு , தன்னிடம் ஒரு அரசியளார் “ஏன் தனக்கு காவியங்கள் தங்களை திறந்து கொடுப்பதில்லை ” என்கிற கேள்வியை முன்வைத்தபோது . “எதையும் முன்முடிவுடன் அனுகும் வழமை ஒரு தடையாக இருக்கலாம் என்று பதிலளித்ததாக” சொன்னார் . அதன் பிறிதொரு கோணத்தைத்தான் நான் பார்க்கிறேன். நான் ஒரு கட்டத்தில் எதையும் வாசிக்க இயலாத அந்த தருணத்திலிருந்து மீண்டு வந்தது , எனக்கு அதற்குறிய விதையை அளித்திருக்கிறது என நினைக்கிறேன் .அரசியலாளன் தன்னை நோக்கி கேட்கப்படுகிற கேள்வியின் கணத்தில் , கேள்வியை விடுத்து கேட்பவனை அவதானிக்கத் தொடங்கி அங்கிருந்து அந்த கேள்வியை நோக்கி செல்ல முயற்சிப்பது ஒரு தடையாக பார்கப்படுவதாக அது இருக்கலாம். கேள்வியை கேட்டவர் நம்மிடம் மறைக்கும் உண்மையையும் அது வெளிக் கொண்டு வந்துவிடலாம்.
வல்சராஜ் மிக அடியிலிருந்து முளைத்து இந்த இடத்திற்கு வந்துவிட்டவர் . இந்த வலியை அவரும் மிக அணுக்கமாக உணர முடியும் . உணர்கிறார் என நினைக்கிறேன் . ஆனால் அவர் பிடுங்கி நடப்பட்ட செடியைப்போல . அது மண் மாற்றத்திற்கு ஏற்ப வளர்ந்தாலும் அந்த மண்ணுக்கு அது அன்னியம்போல ,சூம்பிதான் நிற்கும் .
எனக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற உக்ரம் தீவரமாக எழுந்துவிட்பிருந்தது . என்னை கடந்து சென்ற பல கசப்பான நினைவுகள் எல்லாம் என் கண்முன் நிழலாட , எவ்வளவு நேரம் அந்த விடுதியின் புல்வெளியில் அமர்ந்திருந்தேன் என நினைவில்லை . உடலின் ஏறியிருந்து உஷ்ணம் அங்கு நிலவிய குளிரை ஒன்றுமில்லாது செய்துவிட்டது . அறைக்கு திரும்பி படுக்கும்போது இரவு 2:00 மணியை கடந்து விட்டிருந்தது . மெல்ல சப்தம் கட்டாது வந்து படுத்துக்கொண்டேன் . அந்த கட்டிலின் வலப்புறம் படுத்திருந்த வல்சராஜ் மெல்லிய குறட்டை ஒலியுடன் எந்த குற்ற உணர்வுமில்லாது தூங்கிக்கொண்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக