ஶ்ரீ:
பதிவு : 685 / 874 / தேதி 01 அக்டோபர் 2025
* வளர்வதின் பாதை *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 83.
முதல்வர் ரங்கசாமி நண்பர் ஜெயபாலை அனுப்பி என்னை ஞாயிற்றுக்கிழமை அழைத்து வர சொல்லுவார் என எதிர்பார்க்கவில்லை. நான் அதற்கு மறுநாள் இரவு கோரிமேடு விளையாட்டு மைதானத்தில் அவரை சென்று சந்திப்பதாக திட்டமிட்டிருந்தேன். சட்டமன்ற அலுவலகமும் அவரது இல்லமும் தொண்டர்களின் கூட்டத்தால் எப்போதும் நிறம்பி வழியும் அங்கு தனிப்பட்ட பேச்சிற்கு வாய்ப்பில்லை என்பதால் அது முக்கிய சந்திப்பிற்கு உகந்த இடமில்லை என்பது என் எண்ணம் . அவர் திடீரென என்னை அழைத்ததால் முக்கிய வியூக நகர்வாக அவர் ஏதாவது முடிவு செய்திருக்கலாம் என்பதால் அடுத்த கட்ட நகர்வாக அது இருக்கப் போகிறது என ஊகித்தேன். வல்சராஜின் ரங்கசாமியை பதவி நீக்கம் செய்யும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என மூத்த தலைவர்கள் நினைத்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருந்தது. ஆனால் யாரும் எதிர்வினையாற்றும் முயற்சியில் இல்லை. அது புதிதல்ல அவர்பள் எப்போதும் கூடி கூடி பேசுவார்கள் கொந்தளிப்பார்கள். சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் குறுகி நின்று நலம் விசாரிப்பார்கள். பரிதாபத்திற்குறியவர்கள்.
எனது எண்ணத்தை முதல்வரிடம் முதலில் சொன்ன போது அவர் அப்போது பதில் எதுவும் சொல்லவில்லை அதே சமயம் அதை மறுக்கும் போக்கும் அவரிடம் இல்லை. நீண்ட சிந்தனைக்கு பிறகு இப்போது அது பற்றி விவாதிக்க நினைத்திருக்கலாம்.
மூத்த தலைவர்கள் பலர் நான் முதல்வரை சந்தித்த செயல்களுக்கு நேரில் ஆதரவும் பின்னர் குறுங்குழுவாக நின்று எதிர்ப்பும் சொன்னார்கள். அரசியலின் ஆரம்ப படிநிலை இது. வேடிக்கை மனிதர்கள் அவர்களின் பேச்சை எப்போதும் பொருட்படுத்தியதில்லை . ஒவ்வொரு முறையும் அவர்களை நிராகரித்தே எனது முன்னகர்வு நிகழ்ந்திருக்கிறது. அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதுவே என்னை இது போன்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் துணிவையும் நம்பிக்கையையும் கொடுத்தது. அதே சமயம் நான் மீண்டும் என்னிடம் கேட்டுக் கொண்டேன் எல்லோரும் அமைதி காக்கும் போது உனக்கு மட்டும் ஏன் இது என்று. மனம் உறுதியாக மறுத்தது வல்சராஜின் முயற்சிகள் அரசியலின் வகை போல தோற்றமளிப்பது ஆனால் அதில் அதிகார விழைவை முன்வைத்த தன்னை மட்டும் முன்னிலை படுத்தும் தன்மய திட்டம். கட்சி அரசியலில் இதுவரை எந்த பங்கும் வகிக்காது மாஹே சட்டமன்ற உறுப்பினராக மட்டும் தன்னை முன்னிறுத்தியவர் இப்போது அனைவருக்குமானதாக தோற்றமளிக்கும் ஒன்றை கையெடுத்துள்ளார். ஆனால் அது அப்படிப் பட்டதல்ல மேல் மட்ட அரசியலில் ஈடுபடும் ஒருவர் ஆதார அமைப்பிற்கு எதையும் செய்ய முயலுவதில்லை. அத்தகைய செய்கை அதுவரை இருந்து வந்த கட்சி அரசியல் சமன்பட்டை குலைத்து அதன் இணைப்பை துண்டித்துவிடும். தன்மய அரசியலில் அவர் வெற்றி பெற்றால் பொது அரசியல் சூழலிலும் தனிப்பட்ட எனது அரசியலில் என்னென்ன இழக்க வேண்டும் என்பது பற்றி எனக்கொரு அவதானிப்பு இருந்தது. எந்த அரசியல் செயல்பாடும் அதன் பின்விளைவுகளுடன் எழுந்து வரும் என்பதை அறிந்திருந்தேன். எனவே அதன் பின்விளவுகள் என்ன நிகழ்ந்தாலும் அதை பொருட்படுத்தாது திட்டமிட்டதை செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
முதன்மை காரணம் பிளவுபட்டுக் கொண்டிருப்பது நான் கடந்த பத்து ஆண்டுகளாக வளர்த்தெடுத்த அமைப்பு .அது சிதறுவது உடனடியாக தடைபட்டாக வேண்டும் மற்ற காரணங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். மேலும் நான் விழைந்தது இளைஞர் காங்கிரஸை முதல் கட்ட கட்சி அமைப்பிற்குள் செலுத்துவது என்கிற பல பத்து வருட கனவிற்கு மிக அருகே நான் நின்று கொண்டிருக்கிறேன். சண்முகம் தலைமையில் நடைபெற இயலாது சிதைந்த போன திட்டத்திறகு இப்போது பிறிதொரு வாய்ப்பு ரங்கசாமியின் தலைமையில் கிடைத்திருக்கிறது. முன்பிருந்ததை விட மிக வலுவாக அந்த திட்டத்தை இப்போது என்னால் முன்னெடுக்க முடியும். எனக்கு மரபான அரசியல் அணுகுமுறையை தொடரும் சண்முகத்திடம் கட்சி அரசியலை முழுமையாக பேச இயலாத மனத்தடை எனக்கு ரங்கசாமியிடம் இருக்கப் போவதில்லை. அவர் எனது முயற்சியை ஏற்றால் அதுவே எனக்கு வெற்றிக்கான இரண்டு வாய்ப்பை வழங்கும். அதன் விளைவாக ஒன்று ரங்கசாமி அசைக்க முடியாத பலத்துடன் முதல்வராக தொடர்வார் . இரண்டு அந்த முயற்சி தோற்றாலும் கட்சி அரசியலில் நான் நிகழ்த்த நினைத்து பின் இழந்த இடத்தை மீண்டும் பெறும் வாய்ப்பை உருவாக்கித் தரும்.
முதல்வராக ரங்கசாமி இப்போது எதிர் கொள்ளம் சிக்கலுக்கு என்னால் ஆகக்கூடியது என்ன என்பது பற்றி இளிவரலாக அன்று எல்லோராலும் அலசப்பட்டது . அது எப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருப்பது. அரசியலில் பார்வையாளர்களாக தங்களை நினைப்பவர்கள் கடந்த சென்ற நிகழ்வை விளக்கும் பொருட்டு தினசரி பத்திரிக்கைகள் சொன்னதை தங்கள் சொந்த அவதானிப்பு போல பெருமை கொள்ள பேசுவார்கள். அதில் இருக்கும் பலருடைய முயற்சிகளின் தோல்வியை எப்போதும் முன்னிறுத்துவார்கள். அதற்கு மாற்றாக என்ன செய்திருக்க வேண்டும் என்கிற கேள்வியை எதிர் கொள்ள தெரியாதவர்கள். அரசியலில் பத்திரிக்கை செய்திகளில் அரசியலின் உண்மை தன்மை ஒரு போதும் வெளிப்பட்டதில்லை வெளிவருபவை ஒரு போதும் அரசியலில் நிகழ்ந்தது இல்லை. அவர்களை நான் ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. நான் வல்சராஜின் திட்டமும் அதன் பின்புலமும் அறிந்தவன் என்பதால் அதனால் விளையும் ஒழுங்கிண்மையும் சிதறிப் போகும் உட்கட்டமைப்பு பற்றிய பதட்டத்தில் இருந்தேன். அரசியலில் பதவியின் பொருட்டு உள்நுழைந்து அதை அடைந்தும் அடையாது போனவர்கள் ஒரு குழுவென பிரித்தால் அவர்களை தவிர மீதமுள்ளவர்கள் எந்த அர்த்தமோ பொறுத்தமோ இல்லாத பல வேடிக்கை மனிதர்கள்.அரசியலில் அவர்கள் ஆற்ற வேண்டியது என ஒன்றில்லலை.
அரசியல் உள்கட்டமைப்பு மாபெரும் Zic saw படப் புதிர் போல மிக பிரம்மாண்டமானது. முழு உருவையும் கற்பனையில் வளர்த்தெடுக்க வேண்டும் பின் அதை இணைக்கும் பல நூறு பகுதிகள் சிதறிக் கிடப்பது போல அரசியலில் நான் தேடிய இளந்தலைவர்கள் மாநிலம் முழுவதும் பரவிக் கிடந்தனர். அவர்களை ஒருங்கு திரட்டுவதுனூடாக அரசியலில் எனது இடத்தை உருவாக்கிக்கொண்டேன். ஒவ்வொருவரும் அவரின் பங்கு என்னவாக இருக்கும் என்பது பற்றி அவர்களை விட என்னால் மிக அருகில் என பார்க்க முடிந்தது. மிகுந்த சிரமத்தை முன்னிட்டு அவர்களை கண்டடைந்திருக்கிறேன். அவர்களில் சிலர் நாராயணசாமிக்கு ஆதரவாக பாண்டியனை தேர்ந்தெடுத்து விட்டனர். அது ஒரு தற்காலிக பின்னடைவு சரி செய்ய இன்னும் ஒரு வாய்ப்பு இப்போது.என்னுடைய அரசியலுக்கு ஆதரவானவர்களை புதுவை முழுவதும் இருந்து ஒருங்கு திரட்ட இயலும். அது ரங்கசாமியின் மாநில அரசியலில் அவரது இடத்தை சொல்லும். அவர் சொல்லுவதில் இருக்கும் கள எதார்த்தம் தில்லி மேலிடத்தால் ஏற்கப்படவில்லை. இப்போது ஒருங்கிணைந்த பலத்தை வெளிப்படுத்து மூலம் கட்சியில் அவருக்கு உள்ள செல்வாக்கை விளக்கும். சிதறி கிடக்கும் அமைப்பு மீண்டும் நிலைபெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக