ஶ்ரீ:
பதிவு : 688 / 877 / தேதி 10 அக்டோபர் 2025
* தன்மயம் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 85.
புதுவை மாநில கட்சியின் தலைவர் சண்முகத்தின் தொடர்பில் உள்ள அனைவரும் அவரை எப்போது வேண்டுமானாலும் நேரில் சந்தித்து தங்கள் எண்ணங்களை தடையற்று சொல்லலாம் இடையே மட்டுறுத்த எவரும் இல்லை போன்ற எளிய நடைமுறை இருந்தாலும் கூட்டம் என வருகிற போது கண்களுக்கு புலனாகாத மேல் கீழ் அடுக்குகள் அங்கே இருந்து கொண்டிருக்கும். அனைவரும் அவரவர்களுக்கு உரிய இடத்தில் சென்று அமர்வது விடுவார்கள் . அரசியலில் அது ஒருவித குரு சிஷ்ய பாவனை போல எங்கும் பேணப்படுகிறது. சண்முகத்தை முன்னிறுத்திய நிரையில் அவருக்கு பின்னால் நாராயணசாமி , வல்சராஜ் என தொடங்கி என்னை கடந்து நான் உருவாக்கிய இளம் தலைவர்கள் வரை சென்றடைகிறது. அரசு அதிகார இருப்பு நிலைகள் அதற்கு கீழ் என அமைந்துள்ளதால் அமைச்சர்கள் கூட அதன் கீழ் சென்றுதான் அமரமுடியும். வெளிப்படையாக தெரியாது போனாலும் கட்சிக்குள் எப்போதும் உணரப்படும். சண்முகம் நாராயணசாமி உறவு மிக வலுவானதாக பல வருடம் நீடித்தது. சண்முகத்தால் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டவர் நாராயணசாமி. அவரை நாடாளுமன்ற உறுப்பினராகி தில்லியில் தனது முகமாக சண்முகம் வைத்திருந்தார் . புதுவையின் அரசியல் பொருட்டு தில்லியில் சண்முகத்தின் தேவைகள் கணக்குகள் என பல ஊடுபாவுகளினால் ஆன செயல்பாடுகள் அவரின் அரசியல் வெற்றியாக பார்க்கப்பட்டது. அவற்றின் பின்னால் நாராயணசாமி இருந்தார் . பல வருடங்கள் சண்முகம் சொல்படி இயங்கிக் கொண்டிருந்தவர் பின் எங்கோ ஒரு புள்ளியில் சண்முகத்துடன் ஊடி பூசல் உருவாகி மனம் கசப்படைந்திருக்கலாம் . அதற்கு பின்னால் உள்ள நாராயணசாமியின் “தன்மய” அரசியலாக இருந்திருக்கலாம். அதை உறுதியாக சொல்ல முடியும் என நினைக்கிறேன்.
நான் அவரை அறிந்த வரை அவருக்கு தனது தனிப்பட்ட அரசியல் நோக்கம் மற்றும் திட்டம் தாண்டி பிறர் என யாரும் அவரின் வாழ்வில் இல்லை. அந்த மனநிலை உள்ளவர் சண்முகத்திடம் நீண்ட காலம் ஒன்றி இருக்கும் வாய்ப்பு மிக குறைவு. அவர்கள் இருவருக்கு இடையேயான முரண் 1997 களில் வெளிப்படையானது. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அந்த இடைவெளியை அதற்கு முன்பே உணர்ந்திருந்தார்கள். நான் அதை மிக ஆழமாக வேறு வகையில் புரிந்திருந்தேன். நாராயணசாமியுடனான எனது அனுபவம் அவரை அரசியல் தலைமைபண்பு சற்றும் இல்லாதவராக என் ஆழ்மனம் கணித்திருந்தது. மாநில அரசியல் என்பது மனித சமன்பாட்டை மையமாக கொண்டது. அவர்களை கொண்டு கொடுத்து அவர்களது உழைப்பின் வழியாக தனக்கான எதிர்காலத்தை திட்டமிட வேண்டி இருந்தாலும் அவர்களின் சுக துக்கங்களில் உயர்வு வீழ்ச்சிகளில் பங்கெடுக்கும் கடமை இருக்கிறது. என தலைமை உணர்வதும் அதை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என பிறர் நினைப்பதில் இருந்து துவங்குகிறது . தில்லி அரசியலில் நிலை கொண்டுவிட்ட ஒருவருக்கு மாநில அரசியலில் ஆற்ற ஒன்றில்லை எனபதால் நாராயணசாமிக்கு யாரும் ஒரு பொருட்டில்லை. மாநில அரசியல் சமன்பாடுகளை பேணுவது அவருக்கு ஒருவித எரிச்சலை கொடுத்திருக்க வேண்டும். தனக்கு கீழ் உள்ளவர்களால் தனக்கு ஆவதென்ன. அனைவரின் அரசியலின் பலனை கொடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவரான தனக்கு, தன்னிடம் கையேந்தும் ஒருவனால் என்ன பயன் என்கிற தடையை தாண்ட முடியாது. அவருடன் செல்பட்ட மிக குறுகிய கால அளவில் அவருடனான அனுபவத்தின் மூலம் பல நுண் அவதானிப்பின் வழியாக சென்றடைந்தேன் என்பதால் அதில் மிக உறுதியாக இருந்தேன். இன்றளவும் அதற்கு மாற்றுக் கருத்தில்லை.
முதன் முறையாக நாராயணசாமியின் மீறலாக சண்முகத்தை எதிர்த்து வெளியானது 1997 களில் நாடாளுமன்ற தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டாம் என தலைவர் சண்முகம் அபத்தமாக முடிவெடுத்த போது நிகழ்ந்தது. அதற்கான அரசியல் வீயூகமாக சண்முகத்தால் எதையும் முன்வைக்க முடியவில்லை என்பது அவரின் அரசியல் பிழை. அதை மிகச் சரியாக பயன்படுத்தி நிர்வாக கமிட்டியில் பெரிய பிளவை உருவாக்கினார். அன்று காலை என்னை தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் அனந்தபாஸ்கரன் தலைவர் சண்முகத்தின் முடிவை சொன்னார். அவரது எண்ணம் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டும். நாராயணசாமி வேண்டாம் என்றால் வேறு வேட்பாளரை தெரிவு செய்யலாம் என சொன்னார். அனந்த பாஸ்கரனுக்கு அந்த தேர்தலில் ஒரு கண் என்பது அனைவரும் அறிந்தது. தலைவர் சண்முகம் அதை ஒரு நாளும் ஏற்கப் போவதில்லை என்பதால் நான் பதில் ஏதும் சொல்லவில்லை. அவரிடம் “காலை நடக்க இருக்கும் கூட்டத்தில் அதை வெளிப்படுத்த வேண்டாம் . முடிந்தால் அவரை இன்று காலை வீட்டில் சந்திக்கும் போது பேசி பார்க்கிறேன்” என்றேன்.
சில ஆண்டுகளாகவே சண்முகம் நாராயணசாமி மீது நம்பிக்கை இழந்திருந்தார். தில்லி அரசியல் களம் ராஜீவ் காந்தியின் மரணம் அதையொட்டி நரசிம்மராவ் பிரதமர் என சட்டென அகல இந்திய கட்சி நிர்வாகத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. நரசிம்ம ராவ் பின்னர் சீத்தாராம் கேசரி தலைவராகி பின்னர் அவர்கள் விலக்கப்பட்டு சோனியாகாந்தி தலைமை ஏற்றது என எல்லாம் ஆறு ஏழு வருடங்களில் உருவான தலைக்கீழ் மாற்றம்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் நரசிம்மராவ் மற்றும் சீத்தராம் கேசரியின் ஆதரவாளர்கள் என கருதப்பட்ட பல மூத்த தலைவர்கள் அகில இந்திய நிர்வாக கமிட்டியில் இடம்பெறாமல் மிக கவனமாக விலக்கப்பட்டார்கள். சண்முகத்திற்கு சாதகமான பல தலைவர்கள் காணாமலாயினர். நரசிம்ம அணுக்கராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நாராயணசாமி அந்த வளையத்தில் சிக்காமல் தன்னை காத்துக் கொண்டார் நாராயணசாமி. அகில இந்திய அளவில் கட்சி நிர்வாக அனுபவமற்றற முற்றும் சிறுவயது தலைவர்களை அகில இந்திய கட்சி நிர்வாகத்திற்குள் கொண்டு வந்திருந்தார்கள். சண்முகம் தனக்கான தில்லி இடத்தை மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டி இருந்தது. அது அயர்வளிக்கும் செயல்பாடுகளால் ஆனது. தில்லியில் அரசியல் அதிரடி மாற்றத்தையொட்டி நாராயணசாமி தன்னை முழுமையாக தகவமைத்துக் கொண்டு இருக்க வேண்டும். மாறிய சூழலில் அங்கு சண்முகத்திற்கான வாய்ப்புகள் மிக குறைவு. தில்லியில் செயல்பட வேண்டிய நடைமுறையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு மிக இயல்பாக தோன்றி இருக்க வேண்டும். தனக்கு பலம் சேர்பவராக இருந்தவரை நாம் பேண வேண்டிய சூழல் எழும் போது நிகழும் உதாசீனம் இங்கு நிகழ்ந்தது .
அதே சமயம் சண்முகத்தால் நாராயணசாமியை விலக்கி தன்னை முன்வைக்கும் களம் என அங்கு தில்லியில் ஒன்றில்லை. மூப்பனாரின் விலகல் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளின் மாநில பிரதிநிதித்துவம் பாதிக்க துவங்கிய பிறகு புதிய நிர்வாகிகளின் உருவாகி வந்தனர் அந்த. வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினரான நாராயணசாமிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளர் பதவி கிடைத்த போது நராயணசாமி தன்னை மிறி வளர்ந்துவிட்டார் என்பதும் தான் கைவிடப்பட்டவராகவும் நினைத்திருக்க வாய்ப்புண்டு. அவர் மீண்டும் தில்லி செல்வது தனது அரசியலுக்கு நல்லதல்ல என முடிவெடுத்திருந்தார். அவரது தனிப்பட்ட அரசியல் காரணத்திற்காக என்றாலும் 1997 களில் நிகழ இருந்த நாடாளுமன்ற தேர்தலில் நிற்காமல் இருப்பது அரசியலில் பின்னடைவை உருவாக்கும் என்று உணர்ந்த பிறகும் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர் ஆனால் என் போன்றவர்களுக்கு அது நல்ல அரசியல் யுக்தியாக தெரியாது போனாலும் நாராயணசாமி நின்று வெற்றி பெற்றால் அது ஆளும் திமுக கூட்டணி அரசின் நம்பிக்கை கோரும் வாக்கிற்கு இணையானது. ஆட்சி கவிழும் வாய்ப்பு அது நழுவ கூடாது என நினைத்தேன். அந்த சூழலில் வல்சராஜ் என்னிடம் சொன்ன அனைத்து அரசியல் கருத்தும் மிக சரியானதாக இருந்தது. தேர்தலில் நாராயணசாமியின் வெற்றிக்கு இளைஞர் காங்கிரஸ் ஈடுபட வேண்டும் என சொன்ன போது நான் அதை மறுக்கவில்லை. அன்று தொடங்கி இரண்டு வாரம் கடுமையான வேலை. தேர்தல் நெருக்கத்தில் வென்றுவிடுவார் என்பதற்கான சமிக்ஞைகள் உருவாகின. ஆனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சட்டமன்ற கட்சி நிலவரப்படி ஆறு ஓட்டில் தோற்க வேண்டியவர் ஒரு ஓட்டில் தோற்றது அனைவரையும் திகைக்க வைத்தது. அதிமுக அந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. அதன் மூன்று ஓட்டுகளை பெற்றிருந்தால் நாராயணசாமி உறுதியாக வென்றிருப்பார்.
அங்கிருந்து சண்முகம் உருவாக்கி இருந்த குரு சிஷ்ய முறை உறவுமுறை சிதைவுற ஆரம்பித்திருந்தது. என் போன்றவர்களுக்கு அது அதிர்வலைகளை உருவாக்கியது. பெரிய தலைவர்கள் தங்களுக்குள் பிளவு பட்டு நின்றால் முதலில் சிதைவது அதுவரை இருந்து மேல் கீழ் அமைப்பு. காரணம் அரசியலில் ஈடுபடும் யாரும் தங்களை யாரின் கீழும் கொண்டு வைப்பதை விரும்புவதில்லை என்றாலும் தலைவரின் ஆளுமை என்கிற கண்களுக்கு அகப்படாத மெல்லிய சரடு அந்த அடுக்குகளை பிரிக்கிறது, நிர்வகிக்கிறது என்பதால் அவர்கள் கட்டுப்பட்டு நிற்க முயல்கிறார்கள். எந்த அமைப்பும் தங்களது மீறலுக்கான காலத்திற்கு காத்திருக்கிறது. தலைமைக்கு எதிராக ஒரு அறைகூவல் எழுமானால் அதுவே அவர்கள் எதிர் நோக்கும் தருணம். அமைப்பு கோஷ்டியாக கோஷ்டியாக பிரிந்து மீளவும் புது மேல் கீழ் அமைப்பு உருவாகிறது. அந்த தருணம் அனைவருக்குமான எதிர்ப்பு மிக இயல்பாக தோன்றிவிடுகிறது. தனிப்பட்ட கணக்குகளை தீர்த்துக் கொள்ள முயல்வார்கள்.
அது மூடி கழன்று எழுந்த பூதம் போல மீளவும் அதை பழைய ஜாடியில் ஒரு போதும் அடைபடாது .
நாராயணசாமிக்கு அடுத்த நிலையில் இருந்த வல்சராஜ் போன்றவர்களும் தலைவர் சண்முகம் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். அதை பல சந்தர்ப்பங்களில் அவர்கள் என்னிடம் சொல்ல பிறரிடம் வெளிப்படுத்தவும் அவர்கள் தயங்கியதில்லை. இவையெல்லாம் 1997 களில் ராஜயசபை தேர்தலில் நிற்க வேண்டாம் என்கிற சண்முகத்தின் வியூகத்தை நாராயணசாமி மறுத்து அந்த தேர்தலில் நின்ற போது துவங்கியது. அந்த தேர்த்லில் நாராயணசாமி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். அப்போதே சண்முகத்திற்கு எதிராக வலுவான காரணங்கள் முன்வைக்கப்பட்டன. சண்முகம் அதிமுக ஜெயலலிதாவுடான தனது நல்லுறவை பயன்படுத்தி இருந்தால் அவர்களின் மூன்று ஒட்டுக்கள் கிடைத்திருக்கும் நாராயணசாமி தோற்றிருக்க மாட்டார் என எல்லோரும் பேச அன்று அது பெரிய அரசியல் அலறாக உருவெடுத்தது. ராஜ்யசபை தேர்தல் தோல்விக்கு பிறகு நாராயணசாமி சண்முகத்தை சந்திப்பதை தவிர்த்தார். சட்டென ஒரு தருணத்தில் நாராயணசாமி ஒருங்கிய இளைஞர் அமைப்பு கூட்டம் புதுவை காங்கிரஸ் கட்சி அரசியலில் பெரிய அதிர்வலையை கிளப்பியது. அதை முன்னின்று நடத்தியது அவரது ஆதரவு அமைப்பான “வெண்புறா சேனை” பாண்டியனை தலைவராக கொண்டது. அந்த அமைப்பிற்கு சுவாரஸ்யமான ஒரு பின்னணி உண்டு. புதுவையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாயத்து தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ராஜீவ் காந்தியின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தால் உருவானது. புதுவை போன்ற மிக சிறிய மாநிலத்தில் அது அரசியல் சமன்பாட்டை குலைக்கும் என சண்முகம் நினைத்தார் நாராயணசாமி மூலம் முகம் தெரியாத சிலர் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் ஜாதிய உள் ஒதுக்கீடு வேண்டும் என்கிற சிக்கலான கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தை நாட பஞ்சாயத்து தேர்தல் ரத்தானது. அந்த முகம்மில்லாதவராக அறிமுகமாகி உருவாக்கிய அமைப்பு “வெண்புறா சேணை”. அதன் தலைவராக நாராயணசாமியின் ஆதரவாளரான பாண்டியன் இருந்தார். பின்னர் அவர் வல்சராஜ் தலைமையிலான இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் இணைசெயலாளராக நியமிக்கப்பட்டார்.
நாராயணசாமி கூட்டிய இளைஞர் மாநாட்டிற்கு இளைஞர் காங்கிரஸில் இருந்து அனைவருக்கும் அழைப்பு அனுப்பட்டது. என்னை மிக கவனமாக தவிர்திருந்தார்கள். அன்று ஹோட்டல் மாஸ் விடுதியில் கலந்து கொண்டவர்களில் 100 சதவிகிதம் புதுவை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள். இளைஞர்களை ஒருங்கி அரசியல் ரீதியான ஒரு கூட்டம் நடத்த வேண்டுமானால் அதை இளைஞர் காங்கிரஸ் கூட்டமாகவே அவரால் நடத்தி இருக்க முடியும் என் போன்னவர்களால் அதை எதிர்த்து எதுவும் செய்திருக்க முடியாது காரணம் நாராயணசாமி அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அது அவர் கட்சி அமைப்பை ஒருங்கும் அதிகாரத்தை அளித்திருந்தது. பின் எதற்காக செயல்படாத ஒரு அமைப்பை அவர் கூட்ட வேண்டிய நிர்பந்தம் இருந்தது என்பதை அந்த கூட்டத்தில் அவர் அறைகூவிய செய்தி சொல்லிற்று . அந்த கூட்டத்தில் நாராயணசாமியின் முழக்கம் “மூத்தவர்கள் விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” சண்முகத்தை வெளிப்படையாக குறிவைத்தது என்பது. எதிர்பார்த்தது போல புதுவை அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில் விந்தை அதன் பிறகு நாராயணசாமி வெளிப்படையான எந்த பிளவு அரசியலுக்குள்ளும் நுழையவில்லை தனது ஆதரவாளர்களுக்கு அடுத்த கட்ட செய்தி என்ன என்பது குறித்த வரையறை செய்யாமல் தில்லி சென்றார் . அவர் புதுவையில் தங்கி பிளவு அரசியலில் தங்களை உற்சாகப் படுத்துவார் என எதிர்பாரத்த அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இது அவர் விளையாடும் தொடர்பில்லாத அரசியல் செயல்பாடுகள். அதன் பின்னால் சமரசங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டிருக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக