ஶ்ரீ:
பதிவு : 691 / 880 / தேதி 20 அக்டோபர் 2025
* இலக்கற்ற ஓட்டம் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 88.
1988 மற்றும் 1991 தேர்தல் சூழலில் சபாபதி தனது வழமையான இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் எடுத்திருந்தார் அது சண்முகத்தையும் மரைக்காயரையும் சமதூரத்தில் வைத்திருப்பதென. அவர் சண்முகத்தை எப்போதும் நம்பியதில்லை மரைக்காயரின் சிபாரிசு அவருக்கான நிர்பந்தம் என்கிற புரிதலில் இருந்தார். அரசியலில் எடுக்கக் கூடாத ஒரு நிலைப்பாடு கட்சிக்குள் கோஷ்டி மாறுவது. இங்கு அது வேறு கட்சிக்கு தாவுதலை விட மிக ஆபத்தானதாக பார்க்கப்படுவது . அதன் வழியாக 1991 சட்மன்ற தேர்தல் சமையத்தில் மரைக்காயர் சபாபதியை நிராகரித்து பாலனுக்கு ஆதரவளித்தார். அதில் அவருக்கு உள்கணக்கு இருந்திருக்கக் கூடும் என பின்னாளில் உணர்ந்து கொண்டேன் . அரசியலில் பாலனை சார்ந்திருந்த எங்களைத் தவிற பிற அனைவருக்கும் தெரியும் முதலியார் பேட்டை சட்டமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெறப் போவதில்லை என. மரைக்காயரை பொறுத்தவரை பாலன் களத்தில் சபாபதி அமைச்சராகாது தடுக்கும் வெட்டுக்காய் மட்டுமே.
1991 மேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மரைக்காயர் தன்னை முற்றாக கைவிட்டதை நினைத்த சபாபதி மீளவும் கடும் குற்றச்சாட்டுடன் மரைக்காயரை விட்டு விலகி சண்முகத்தின் ஆதரவாளரானார். சபாபதி அரசியலில் யாருக்கும் உண்மையானவராக இருக்கவில்லை என்பது எனது எண்ணம். தனது இருப்பு மற்றும் இடம் குறித்த புரிதல் கொண்டவராக அவரை நான் நினைக்கவில்லை. நிலை சக்திகள் எதிரும் புதிருமாக இயங்கி ஒரு முழமையான வட்டத்தை உருவாக்கினாலும் மைய கருவின் தன் இடம் இழந்தால் அதை சுற்றியுள்ள அனைத்தும் அதன் பொருளை இழந்துவிடும். ஒரு காலத்தில் புதுவை அரசியலில் “கவுண்டர்” என மரியாதையான அடைமொழியுடன் சொல்லப்பட்டடு பலமான ஆளுமையாக அறியப்பட்டவர் அதன் பின் அனைத்தையும் இழந்தவாராக அரசியல் மைய செயல்பாட்டில் இருந்து விலகினார். ரங்கசாமியின் தலைமையை ஏற்ற போது அவருக்கு தான் தரப்போவதாக நினைத்த அடையாளம் அவரிடம் இருந்து முன்பே பறிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ரங்கசாமி ஜாதிய அடையாளங்களுக்கு அப்பால் தன்னை நிறுவிக் கொண்டார்.
தலைவர் சண்முகத்திற்கு மிக அணுக்கமாக நான் செயல்பட்ட கலங்களில் சபாபதியுடான எனது தொடர்பு எப்போதும் ஒரு எல்லைக்கு உட்பட்டது அதை கடந்து செல்ல நான் ஒருபோதும் முயலவில்லை. நான் அவரை எவ்வாறோ அறிந்திருந்தேன் அவர் எப்போதும் பழைய கணககுகளில் கனவுகளில் வாழ்பவர் ஒருபோதும் புதியவைகளை கற்கும் பொருட்டு செல்லாதவர். அவரிடம் என்மீதான அந்த பழைய காழ்ப்பின் மிச்சம் இருப்பதை மிக நுண்மையாக அவர் வெளிப்படுத்த தயங்கியதில்லை. தலைவர் சண்முகம் முதல்வரான சூழலில் நாராயணசாமி தலைவராக வந்தமர்ந்தார் அதன் பின்னர் அவர் என்னை அழைத்து இனி இளைஞர் காங்கிரஸ் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை பயன்படுத்த வேண்டாம் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். நான் முன்பே அது குறித்து முடிவெடுத்திருந்தேன் என் எண்ணமும் அதுவாக இருந்தது. சட்டமன்ற அலுவலகத்தில் தற்செயலாக சந்தித்த போது அது பற்றி சபாபதியிடம் ஒரு தகவலுக்காக சொன்னது எனது குற்றமாக இன்று நினைக்கிறேன்.
அவரிடம் பேசியபோது சொன்னார் “எப்படி நாராயணசாமி அந்த முறையில் கூற முடியும் நான் வருகிறேன் என்னை வைத்துக் கொண்டு இதுபற்றி அவரிடம் விவாதிக்கலாம்” என்றார். அவருடன் சென்று நாராயணசாமியை சந்திக்கும் எண்ணம் முற்றாக எனக்கில்லை என்பதுடன் சபாபதி நாராயணசாமி போன்றவர்களுக்கு எதிரே கொள்ளும் குறுகல் நான் பார்த்திருக்கிறேன். அவருடன் சென்றால் அந்த குறுகல் எனக்குமானதாகவும் மாறும் அந்த அபத்த சூழலில் சிக்க எனக்கு உடன்பாடில்லை. அவரது சொல்லில் எனக்கு ஏற்பில்லை என்றாலும் அந்த சூழலில் அவரை மறுக்க வேண்டாம் என நினைத்தேன். பின்னர் வேறு வேலையில் அந்த உரையாடல் பற்றி முற்றாக மறந்துவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு. அப்போது சபாபதியிடம் இது பற்றி கேட்ட போது “தலைவராக வந்து அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்” என கூறிய போது அவர் சண்முகத்தை விட்டு விலகி நாராயணசாமி நோக்கிய மனச்சாய்வு கொண்டவராகி இருந்ததை உணர முடிந்தது. அந்த சூழலில் என்மீதல்ல அவருக்கு சண்முகம் மீதிருந்த காழ்ப்பு என்னை நிராகரிக்கச் சொன்னது .
சபாபதியிடம் நான் உணர்ந்த சிக்கல் அவர் தன்மீது கொண்டிருந்த மிகை மதிப்பு அவருக்கான இடத்தை ஒருவரும் அவருக்கு அளிக்கவில்லை என்பதை அவர் ஏன் உணரவில்லை? என வியந்ததுண்டு. எது அவரை பிறர் பொருட்படுத்தாது கடந்து செல்ல வைக்கிறது . அவரது உரையாடல் பாணி , அணுகுமுறை மற்றும் உடல்மொழி போன்றவை அவரது தனது ஆளுமையாக நினைப்பதற்கு முற்றிலும் எதிரானது. அவர் கொண்டிருந்த மிகை தன்மதிப்பிற்கு அது எந்த உதவியையும் செய்யவில்லை மாறாக அவரை தனது தகுதியை மீறி பேச மற்றும் செயல்பட கூடியவராக பிறரால் வரையறை செய்யப்படுகிறது . பிறிதொரு காரணம் எங்கும் நிலை கொள்ளாமல் மாறி மாறி எடுத்த முடிவானால் தன் மீதான நம்பிக்கை குறித்து ஆழமான கேள்வியை எழுப்பிக் கொண்டார். 1991 தேர்தலில் யாருக்கும் கட்டுப்படாமல் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார். அந்த சூழலில் ஒன்றை நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியலில் ஊழ் எல்லா சமயங்களில் மிக வினோத கோட்பாடு கொண்டதாக இருக்கிறது. அந்த தேர்தலில் சபாபதி காங்கிரஸ் கட்சியில் நின்று வென்றிருந்தால் அவரது வாழ்நாள் கனவான அமைச்சரவையில் இடம் பெறுவது நிகழ்ந்திருக்கும். அதற்கு முன்னாள் 1985 தேர்தலில் வண்ணியர் சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் பற்றி உரக்க கேள்வியெழுப்பட்டு அதில் சபாபதியை கண்ணன் வென்றார். 1991 தேர்தல் அனைத்திலும் வேறுபட்டு புதிய கோட்பாடுகளை சமரசங்களை கொண்டதாக உருவெடுத்திருந்தது. முதல் முறையாக சண்முகம் மற்றும் மரைக்காயரின் தேர்தல் களம் மாறி அமைந்து சண்முகம் சட்டமன்றத்திற்கும் மரைக்காயர் பாராளுமன்றத்திற்கும் போட்டியிட்டனர். சண்முகத்தால் கண்ணன் தனது சொந்த காசுகடை தொகுதி இழந்து மரைக்காயரின் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட வேண்டி இருந்த கடுப்பில் அவரின் ஆதரவாளர்கள் சண்முகத்தை நிராகரிக்க அவர் தேர்தலில் தோல்வியுற்றார் இது ஊழின் ஒரு கணக்கு என்றால் பிறிதொன்று சபாபதி முதலியார்பேட்டை தொகுதியில் பாலன் அவரை எதிர்த்து போட்டிட கட்சியைவிட்டு வெளியேறிய சபாபதி சுயேட்சையாக போட்டியிட்டு அங்கு வென்றிருந்தார். இருவரும் வண்ணியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். தோற்றவர் வென்றவர் இருவரும் அமைச்சாராகும் வாய்ப்பை இழந்தனர். மூன்றாமவர் ரங்கசாமி விவசாயத்துறை அமைச்சரானார். அது வண்ணியருக்கு ஒதுக்கப்பட்டது என்றனர். பின் ரங்கசாமி தனது ஜாதி அடையாளத்தை தள்ளி பிறிதொருவராக வெளிப்பட்டு முதல்வரானார். ரங்கசாமி கட்சியைவிட்டு வெளியேறி புதிய கட்சி துவங்கியபோது அவருடன் சபாபதி நாராயணசாமியை நிராகரித்து அவருடன் சென்றார். வியூக அடிப்படையில் அது தவறான நகர்வு , அதன் பலன் தன்னை வண்ணியர் தலைவராக முன்வைத்ததில் இருந்து கிடைத்த அனைத்து அடையாளங்களில் இருந்து இறங்கி அதை முற்றாக ரங்கசாமியிடம் இழந்தார்.
1996 களில் சபாபதியின் நண்பர்கள் அனைவரும் வல்சராஜ் இளைஞர் காங்கிரஸ் தலைவரானதும் இழந்த செல்வாக்கை பெற நினைத்தனர். அந்த சூழலில் காழ்ப்பு அரசியலை கைவிட மனமில்லாதவர்களாக பாலனின் நிர்வாக கமிட்டியில் இருந்த யாரும் புது கமிட்டியில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டனர். முதல் முறையாக சண்முகத்தின் கட்டுப்பாட்டில் இளைஞர் காங்கிரஸ் வந்தமைந்ததால் அவர் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பலரிடம் அவர்கள் ஆவாளர்களின் பெயர்களை கேட்டு நிர்வாக கமிட்டியில் சேர்த்தார்தார் அது அமைப்பின் மைய கருத்தியல் உத்தியில் இருந்து விலகி நிர்வாக கமிட்டியை உறைநிலைக்கு கொண்டு சென்றது . நான் சந்தித்த முதல் பெரும் சிக்கலும் சவாலுமாக இருந்தது புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் யாருக்கும் இளைஞர் காங்கிரஸின் வரலாற்று பின்புலம் அறியாதவர்கள். கட்சியில் அதன் தேவை மற்றும் இடம் அதில் தங்களின் பங்கு மற்றும் அதன் வழியாக சென்றடையும் வாய்ப்புள்ள தங்களின் அரசியில் எதிர் காலம் குறித்து ஏதும் தெரியாதவர்கள் .அதே சமயம் அவர்களுக்கு அதில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம் அதன் வழியாக கிடைக்கும் வாய்ப்புகள் பற்றி அவர்களுக்கு புரியவைக்க என்னால் முடியவில்லை. முதல் நிர்வாக கூட்டம் வல்சராஜின் தங்கு விடுதி அறையில் நிகழ்ந்த போது நிர்வாகிகளில் பலர் கலந்து கொள்ளவே இல்லை என்பது முதல் முரண். அவர்களுக்கு நிர்வாக கமிட்டி அளிக்கும் தங்கள் இடம் என்ன என்பது பற்றி தெரியவில்லை . நிர்வாக கமிட்டில் தங்கள் பெயரை சிபாரிசு செய்த தங்களின் உள்ளூர் தலைவரை கடந்து கட்சி அரசியலுக்கு வர விரும்பாதவர்கள் அல்லது அவர்களின் உள்ளூர் தலைமை அதை விருப்பாது என தெரிந்தவர்கள்.
அந்த சூழலில் என்னால் இதற்கு முன்பு கூடிய மாநில நிர்வாக கமிட்டி கூட்டத்தை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. இளைஞர் காங்கிரஸ் அலுவலக வாசலில் நின்றிருக்கும் கூட்ட நெரிச்சல் நிர்வாக கூட்டம் நடைபெறும் அறைக்கு வெளியே அங்கு நிகழ்வது குறித்து அறிந்து கொள்ள கூடி கொப்பளித்து திரண்டு நிற்கும் திரளும் அந்த கூட்டத்தில் பங்கு கொள்ள இயலாது குறித்த ஏக்கமும் கொண்டது. அதை கடந்து கூட்டம் நிகழ இருக்கும் அறையை அடைவது எளிதல்ல. இடையே நின்றிருக்கும் திரளில் முகமறிந்தவர் நம்மை பார்த்தவுடன் பாய்ந்து வந்து நம்முடன் ஓரிரு வார்த்தகளை பேச முயலும் ஆர்வம். பின் அவருடன் சிறிது உரையாடல் கடந்து பிறகே அந்த கூட்ட அறைக்குள் நுழைய முடியும். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்து கூட்ட துவக்கம் முதல் நிறைவுவரை அனைவரையும் இணக்கும் மின்சாரம் போல பாய்ந்து அனைவரையும் உற்சாக மனநிலையில் வைத்திருக்கும். எந்த அதிகாரமும் இல்லாமல் அரசியலின் பொருட்டு கூடும் கூட்டம், எல்லாவித அதிகாரம் கொண்ட ஒரு அமைச்சரை கூட்டத்திற்கு இணையானது போல உணர்வு பொங்க நெறி வகுத்து திட்டமிடப்பட்டி நிகழ்வதை பார்த்திருக்கிறேன். அதன் பின்னால் இருக்கும் தங்களது எதிர்கால குறித்த திட்டமும் கனவும் அதில் இழை இழையென பின்னப்பட்டிருக்கும். ஆனால் வல்சராஜ் தலைமையில் நிகழ்ந்த முதல் நிர்வாக கூட்டத்தில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்ட பலர் கலந்து கொள்ளாததும் கலந்து கொண்டவர்கள் எந்த உணர்வும் இல்லாமல் அமர்ந்திருந்தது எனக்கு இந்த கமிட்டி குறித்த ஆழ்ந்த அவநம்பிக்கை உருவாக்கியது . இவர்கள் வாழைமட்டை போல இருப்பதாக அதில் எதையும் ஏற்ற முடியாது . அதை சம்பிரதாயமான கூட்டம் என்கிற வகைமையில் கூட என்னால் வைக்க இயலவில்லை.
கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக இளைஞர் காங்கிரஸை தங்களது வாழ்வின் அங்கமென நினைத்து உழைத்த அனைவரும் கைவிடப்பட்டிருந்தனர் பாலனால் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட அவர்கள் யாரும் வல்சராஜிற்கு அறிமுகமில்லை என்பதால் அபத்தமாக இளைஞர் காங்கிரஸை வழி நடத்த அவருக்கு தனது ஆதரவாளர்களான பச்சைமுத்து மற்றும் திருநாவுக்கரசு போன்றவர்களை உதவ சென்னார் சபாபதி . அவர்களில் முக்கியமானவர் பச்சைமுத்து. அவர் கண்ணன் மற்றும் பாலனுடன் இணைந்து இளைஞர் காங்கிரஸை வழிநடத்தியவர். அடுத்தடுத்த பிழை நகர்வுகளால் கண்ணன் மற்றும் பாலனிடம் முரண்பட்டு அடையாளமழிந்து சபாபதியின் ஆதரவாளர் என குறுகி நின்றவர். இயல்பாக பழைய இளைஞர் நிர்வாகிகள் மீது கொண்ட காழ்பின் காரணமாக அவர்களில் பலர் மீண்டும் நிர்வாகத்திற்குள் வரலாகாது என பார்த்துக் கொண்டார் . நான் அறிந்த பச்சைமுத்து வயது முதிர்ந்து இளைஞர் காங்கிரஸில் இருந்து விலகி இருபது ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. அவருக்கு அந்த கால கட்டங்களில் நிகழ்ந்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பு அரசியல் மாற்றம் பற்றி எந்த அறிமுகமில்லாதவராகி இருந்தார். வல்சராஜின் நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க அவருக்கு உதவியர் பச்சைமுத்து. இதில் வினோதம் நான் எப்படி முதன்மை பொதுச் செயலாளராக ஆனேன் என்பது எனக்கு முதலில் விளங்கவில்லலை என்றாலும் அது ஊழ் . அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் வல்சராஜ் சொன்னார்.
முதலியார்பேட்டை சபாபதியின் தலைமையில் பச்சைமுத்து போன்றவர்கள் பெரும் திரளாக சண்முகத்தை சந்தித்து முழு மாநில நிர்வாகிகளின் பட்டியலை அளித்தனர். அதில் பச்சைமுத்து 50 அகவைக்கு மேல் என்பதால் அவரால் நிர்வாகத்திற்குள் வர இயலவில்லை . அவர்கள் அனைவரும் இணைந்து வையத்தரசு என்பவரை முதன்மை பொதுச் செயலாளராக அறிவிக்க வேண்டும் என சொல்ல சண்முகமும் அதே பட்டியலை வல்சராஜிற்கு அனுப்பி வைத்தார்.
இளைஞர் காங்கிரஸிற்கு உள்ளேயே பாலானை ஏற்காத குழு ஒன்று அப்போதைய முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சபாபதியின் ஆதரவாளர்கள் என்கிற அமைப்பில் இருந்தது. பாலனுடன் மிக நெருக்கமாக நான் பணியாற்றியதால் எனக்கு எதிரான மனநிலையில் அவர்கள் இருந்தார்கள். அந்த எதிர்ப்பை கடந்து என்னால் அமைப்பில் நிலை கொள்ள முடிந்தது ஆனால் பாலனுடன் இணைந்து பல ஆண்டு காலம் அரசியலில் பயணித்த பலர் அவர்களின் உழைப்பு எங்கும் பொருள் கொள்ளப்படாமல் காணாமலானது மிகுந்த வருத்தத்தை அளித்தது . அவர்களில் சிலரை மட்டுமே என்னால் திரும்பவும் அமைப்பின் சார்பில் கொண்டு வர முடிந்தது. ஆனால் யாருக்கும் மாநில அளவிலான பதவியை பெற்றுத் தர இயலவில்லை. அதன் பின்னணியை அவர்களுக்கு விளக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனதால் விலக்கப்பட்ட மற்றவர்களும் எனக்கெதிரான மனநிலைக்கு சென்றனர் . எனக்கான வாய்ப்பு உருவானபோதும் அவர்கள் மீளவும் அமைப்பிற்கு திரும்பும் மனநிலையில் இல்லை. பலமுறை அவர்களுக்கு விடுத்த அழைப்பு அவர்களால் நிராகரிக்கப்பட்டது. நான் புதிய நண்பர்களை கண்டடையும் முயற்சியில் இறங்கினேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக