ஶ்ரீ:
பதிவு : 687 / 876 / தேதி 07 அக்டோபர் 2025
* செய்திகளுக்கு வெளியே *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 85.
வல்சராஜ் ரங்கசாமிக்கு எதிராக அணி சேர்த்து அவரை முதல்வர் பதவி நீக்கும் முயற்சியில் இருந்தார் .சண்முகத்திற்கு பிறகு இது அவரது இரண்டாவது முயற்சி. முதல் முயற்சி கொடுத்த வெற்றி உற்சாகத்தில் இப்போது இது. இந்த முறை அவரது முயற்சி வெற்றி பெற கூடாது என நினைத்தேன். முதல் முயற்சியின் பயனாக சண்முகம் வெளியேற்றம் கட்சி ஒருங்குணரவை முற்றாக அழித்துவிட்டது. இரண்டாவது வெற்றி பெற்றால் பின் ஒரு போதும் மீட்டெடுக்க இயலாத இடத்தை சென்றடைந்து விடும் கட்சியின் மூத்த தலைவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. முதல்வர் தனது தொகுதி தாண்டி பிற மாநில கட்சித் தலைவர்களை அறிமுகம் செய்து கொள்ளவில்லை ஏனோ அவருக்கு அதில் ஆர்வமில்லை. சிலர் தனிப்பட்ட முறையில் அவரை தங்கள் தேவையின் பொருட்டு அணுகி இருந்தாலும் யாரும் அவரிடம் அமர்ந்து கட்சி விஷயங்களை பேசியதில்லை. ரங்கசாமிக்கு இருந்தது நிர்வாகத்திற்கு தேவையான சிலைத்த முகம் அவரை
நல்ல உரையாடல்காரர் அல்ல என்பது அவர்களது எண்ணமாக உருவாக்கி இருந்தது. ஆனால் அவரது தனிப்பட்ட வட்டாரத்தில் எப்படியோ அப்படி தான் என்னிடம் உரையாடினார் .
கட்சி மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் என்ன காரணத்தினாலோ கட்சி உள் விஷயங்களை அவரிடம் பேச தயக்கம் இருந்தது. நான் கட்சியின் மூத்த பொதுச் செயளாலர் முன்னாள் சக அமைச்சர் காந்திராஜிடம் முதன் முதலில் ரங்கசாமியிடம் கட்சி விஷயமாக பேசலாம் நேரம் கேளுங்கள் என்ற போது அவர் உறுதியாக மறுத்து விட்டார். ஏதாவது சொல்லி ஒதுக்கினால் அது தனக்கு மரியாதை குறைவாகி விடும் என அவர் அஞ்சுவது தெரிந்தது. நான் எனது அலைபேசியில் முதல்வர் ரங்கசாமியின் தனி எண்ணிற்கு அழைத்தேன். சற்று நீண்ட நேரம் அழைப்பி ஒலி கேட்டது அவர் உதவியாளர் யாராவது அதில் பேசுவார்கள் என எதிர்பார்த்தேன். சற்று நேரத்தில் முதல்வர் ரங்கசாமியின் குரல் கேட்ட போது ஆச்சர்யமாக இருந்தது. நான் அவரிடம் காந்திராஜ் உடன் இருப்பதை சொல்லிவிட்டு கட்சி விஷயமாக நாளை அவரை எப்போது சந்திக்கலாம் என கேட்டேன் “நேரமிருந்தால் நாளை மதியம் சட்டமன்றத்திற்கு வாருங்கள் பேசலாம் ” என்றார். இதை எதிர்பாராத அதிர்ச்சியில் காந்திராஜ் உறைந்திருந்தார்.
முதல்வர் சொன்னது போல அவரை அடுத்த நாள் மதியம் சட்டமன்ற அலுவலகத்தில் சந்திக்க சென்றோம். எனக்கு சற்றும் உடன்பாடில்லாத இடம் அங்கு மந்தனமாக எதையும் பேச இயலாது. ஆனால் அங்கு வந்து சந்திக்க சொன்னதால் எனக்கு வேறு வழியில்லை. மதியம் 2:00 மணிக்கு அவரை சந்திக்க நானும் முன்னாள் அமைச்சர் காந்திராஜும் அவரது சட்டமன்ற முதல்வர் அறையில் காத்திருந்தோம். சட்டமன்றத்திற்குள் ஒஹ்னகல் கூட்டு குடிநீர் திட்டம் பற்றி காரசாரமான விவதம் போய்க் கொண்டிருந்தது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள ஒலி பெருக்கி வழியாக உள்ளே நடப்பதை கேட்க்க முடிந்தது. என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என நினைவில்லை நான் அங்கு கூடியிருந்த கூட்டத்தில் முதல்வரிடம் எப்படி சொல்லெடுக்க போகிறேன் என திகைத்திருந்தேன். காந்திராஜ் சட்டமன்றத்தில் விவாதங்களை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார். எந்த தீர்மாணமும் எட்டாமல் சபை ஒத்தி வைப்பும் மீண்டும் மதிய உணவிற்கு பிறகு கூடும் என அறிவிக்கப்பட்டது.
இன்று அவரை சந்திக்க இயலாது என நினைத்தேன். முதல்வர் அறையில் சற்று பரபரப்பு கூட கதவை சட்ட மன்ற காவலர் திறக்க ரங்கசாமி உள்ளலே வந்தார். என்னையும் காந்திராஜையும் பார்த்து ஒரு நட்பார்ந்த புண்ணகை. பின் அவரது உதவியாளர் காட்டிய கோப்பில் அவருடன் சிறிய உரையாடலுடன் அதில் கையெழுத்திட்டபடி இருந்தார். நேரம் போய்க் கொண்டேயிருந்தது. நான் பொறுமை இழக்க ஆரம்பித்தேன். காந்திராஜ் என்னிடம் தனது கீழ்குரலில் “கையெழுத்து போட்டு முடித்தவுடன் நான் சம்பிரதாயமாக பேசி துவங்குகிறேன். நீ வந்த விஷத்தைப் பற்றி பேசு” என்றார் நான் உறுதியாக மறுத்து தலை அசைத்தேன். “உன்னிடம் இதுதான் பிரச்சனை அவர் சாப்பிட சென்றுவிட்டால இங்கு எத்தனை மணிநேரம் காத்திருப்பது” என்றார். நான் அவரிடம் “இங்கு பேச வந்திருப்பது அவர் சிக்கலைப் பற்றி குறைந்தது அரை மணி நேராமாவது வேண்டும், ஆனால் தனித்து இந்த தர்மதரிசன கூட்டத்தில் அதை சொல்ல மாட்டேன்” என்றேன். அவர் கோபம் கொள்வது தெரிந்தது. நான் என் நிலையை மாற்றிக் கொள்வதாக இல்லை.
கோப்புகளில் கையெழுத்து போட்டு முடிந்தவுடன் எங்களை பார்த்து புண்ணகைத்தார். காந்திராஜ் அசௌகரியமாக அசைந்து அமர்ந்தார். நான் ரங்கசாமியிடம் “சாப்பிட்டு விட்டீர்களா என்றேன் இல்லை என்றார் சாப்பாட்டிற்கு பிறகு பேசலாம் காத்திருக்கிறேன்” என்றேன் எங்களையும் அழைத்துக் கொண்டு அவரது தனி செயலாளர் அறைக்கு சென்றார். அது மிக சிறிய சிறிய மேஜையில் வாழையிலையில் அவரது மதிய உணவு அவருக்கு பாதி பரிமாறப்பட்டு உள்ளே நுழைந்ததும் அதன் அசைவ உணவு நெடி கலந்திருந்தது. அவர் அமர்ந்ததும் அவரது தனி செயலாளர் பரிமாறத் துவங்கினார். நான் அவருக்கு மரியாதை வணக்கம் செய்வதையும் மறந்து அவர் பரிமாறிக் கொண்டிருந்ததை பாரத்தபடி இருந்தேன் அதற்கு இடையே காந்திராஜை பார்த்து மரியாதை வணக்கம் எனக்கு புண்ணகை.
அது ஒரு நல்ல காட்சி.முதல்வரின் தனி செயலாளர் வசந்தகுமார் ரெட்டி அவர் எனக்கு பழக்கமானது அமைச்சர் அனந்தபாஸ்கரன் சன்டையின் மத்தியில். இருவருக்கும் ஏதோ கோப்பு சம்பந்தமாக அமைச்சர் கேட்ட கேள்விகளுக்கு தயக்கமில்லாத பதில் சொல்லிக் கொண்டிருந்து முறையில் அவரிடம் இருந்த அந்த நிமிர்வு அவரை கவனிக்க வைத்தது. அதன் பின் அவரை பல சந்தர்பங்களில் சந்தித்துக் கொள்ளும் போது அவரின் அந்த நிமிர்வு எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கும் யாருக்கும் பனியாத அந்த நிமிர்வு பற்றி அரசு அதிகாரிகள் பலர் பேச கேட்டிருக்கிறேன். அந்த சமயத்தில் முதல்வர் வைத்திலிங்கத்திடமும் அதே போல கறாரான பேச்சை பார்த்திருக்கிறேன் யாருக்கும் கட்டுப்படாதவராக அவரை அறிந்திருக்கிறேன் அன்று மிக மரியாதையுடன் ரங்கசாமிக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தது எது அவருக்கு இந்த பனிவை உருவக்கி இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். இடையில் அதிமுகசட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வந்து முதல்வரிடம் மிகவும் குழைந்து பேசிச் சென்றார். வெளி மேடைகளில் அரசுற்கு எதிராக முழுங்கும் அன்பழகனிடம் இருந்த மாறுபட்ட காட்சி அனைத்தையும் ஒருவித இயல்பாக கடந்து கொண்டிருந்தார்.
அரசியலில் எனக்கான இடம் என்பது கட்சியின் உள்கட்டமைப்பு முறைகளை உருவாக்குதல் பேணுதல் பாதுகாத்தல் என இருப்பதால் நான் யாரையும் எப்போது வேண்டுமானாலும் சென்று சந்திக்கலாம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலைமையை எனது செயல்பாடுகள் வழியாக நான் உருவாக்கிக் கொண்டேன். கட்சி அமைப்புகளில் வழங்கப்படும் பதவி ஒரு அடையாளம் மட்டுமே அதற்கான அதிகாரத்தை அது ஒரு போதும் அளிக்காது. அவரவர் அதை தங்களின் சொந்த திறமையால் உருவாக்கி வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டியது.
2001 களில் சண்முகம் பதவி விலகிய முறை அமைப்பை முற்றாக குலைத்து விட்டது பல பத்தாண்டுகள் கட்சியை வெற்றிகரமாக செலுத்திய முறைமைகள் அனைத்தும் சிதைவுற்றன. அதுவரை இருந்த வந்த கட்சி அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பு மட்டுமே என் போன்றவர்களை கட்சியில் உயிர்ப்புடன் வைக்க வல்லது ஆனால் இப்போது அவை அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு ஆட்சியில் அதிகார அமைப்பை கைப்பற்ற வல்சராஜ் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றால் சிதையுறும் அமைப்பை அதன் பின் ஒருபோதும் இணைக்க முடியாது. சண்முகம் கட்சி அமைப்பை ஒருவித புரிதலின் வழியாக இணைத்திருந்தார் அதில் நாராயணசாமி வல்சராஜ் மற்றும் என் போன்றவர்களின் கொண்ட நீண்ட நிரை இருந்தது. அதன் எதிர்காலம் சண்முகத்தின் தலைமையில் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கிறது என்கிற நம்பிக்கையை அந்த புரிதலை கொடுத்திருந்தது. 1999 களில் முதல்வர் பதவி சண்டையில் நாராயணசாமி தன்னை கட்சியை தாண்டி முன்வைத்த முறையில் அமைப்பின் முறைமைகளை முதல் முறையாக அவர் வெளிப்படையாக உடைத்து வீசியிருந்தார். அது கட்சி மூத்த தலைவர்களை பதற்றம் கொள்ள வைத்தது.கட்சி தலைவர்கள் மட்டும் அறிந்த அந்த பிளவு 1997 களில் நிகழ்ந்தது.
கட்சியின் நிர்வாக அமைப்பை ஒரு குடும்பம் போல சண்முகம் வளர்த்தெடுத்திருந்தார். அவர் தலைமையிலான அமைப்பில் உள்ள அனைவருடனான அவரது உறவு ஒரு வகை குரு சிஷ்ய பரம்பரை போல. நீண்ட குரு நிரை கொண்டது காமராஜர் காந்தி என அவருக்கு முன்னும் பின்னுமாக நெடிய கொடிவரைவை சென்று தொடக்கூடியது.புதுவையில் மட்டுமின்றி இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் அந்த முறைமை இருந்தது. பல கட்சிகளிலும் இன்றுவரை நீடிக்கும் அந்த முறைமைகள் காரணமாக கட்சியில் மேல் கீழ் என அடுக்குகள் உருவாகி நிர்வகிக்க எளிது என்பதுடன் அந்த நிரையில் வருபவர் தன்னை இன்னாரென முன் நிறுத்துவதுடன் அந்த நிரைக்கு நியாயம் செய்யும் கடமை கொண்டவராகிறார். தனிப்பட்ட மதிப்பீடுகள் அவரை நோக்கி எழுவதில்லை என்பதால் அவரிடம் குறைந்தபட்ச அற விழுமியங்களை எதிர் நோக்கலாம் என புரிந்து கொள்ளப் பட்டிருந்தது . அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் என்னை சண்மகத்தின் வழி தொடர்பவனாக முன் வைத்த போதெல்லாம் பல கதவுகள் கேள்விகள் ஏதுமின்றி திறந்து கொண்டதை கண்டிருக்கிறேன்.
தில்லியில் புதுவை அரசியலில் அறிந்த ஆளுமைகள் இருவர் ஒருவர் சண்முகம் பிறிதொருவர் மரைக்காயர். இருவரையும் தில்லி தலைவர்கள் உரிய இடம் வழங்கியிருந்தாலும் அவை வெ்வேறு தளங்களை சார்ந்தவை என்பதால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவர் முன்னெடுக்கப்பட்டு அவரின் அரசியல் வென்றிருக்கிறது. சண்முகம் கட்சியின் முகமாக நீண்ட சிஷ்ய மரபை கொண்டவராக அறிப்பட்டார். உட்கட்சி விவகாரங்களில் இறுதி சொல் சண்முகத்திற்கானது. மரைக்காயர் இஸ்லாமிய குரலாக பார்க்கப்பட்டார். அதற்கான தேவை அகில இந்திய அரசியலில் தேவைபட்டது. தேர்தல் களத்தில் அதற்கு பெரிய முக்கியத்தும் உண்டு என்பதால் அங்கு சண்முகத்தின் குரல் சற்று பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மரைக்காயரை தில்லி தலைமை ஒரு போதும் கட்சியின் குரலாக எடுத்துக் கொண்டதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக