ஶ்ரீ:
பதிவு : 689 / 878 / தேதி 12 அக்டோபர் 2025
* நினைவை தொடர்பவை *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 86.
சண்முகம் மற்றும் நாராயணசாமிக்கு இருவருக்குமான தனிப்பட்ட அரசயல் கணக்குகள் அவர்களுக்கு இடையே பல நூறு ஊடுபாவுகளுடன் ஓடிக் கொண்டிருந்தது . எதிலிருந்து அவர்களின் முரண் கிளைத்தது என சொல்வது கடினம். அரசியலில் நான் கற்றவை பல அவற்றில் முதன்மையானது தலைமைக்கு எப்போதும் புதிய தளங்களில் தடையறாது நீள அகலமாக வளர்ந்து கொண்டே இருக்கவேண்டிய பொறுப்பும் அரசியல் தரிசனமும் இருக்கிறது . எந்த இடத்தில் ஒரு தலைமையின் வளர்ச்சி தேங்கிவிடுகிறதோ அங்கு அதன் கீழ் இருக்கும் பிற நிலை தலைவர்களின் வளர்ச்சிக்கு தடையாக அவர்களே அந்த தலைவர்கள் மீது உட்கார்ந்திருக்க நேர்ந்து விடுகிறது. தங்கள் முன்னேற்றத்தை முக்கியமாக கருதுபவர்கள் அவரை புறந்தள்ளி கடந்து செல்ல தயங்கியதில்லை. தலைமை அவர்களுக்கு முற்காலாத்தில் செய்த எந்த உதவியும் அப்போது அவர்களால் பொருட்படுத்தப் படுவதில்லை. இது அரசியலில் அங்கீகரிக்கரிக்கப்பட்ட விளையாட்டு என்பதால் அது துரோக கணக்கில் வருவதில்லை. அவரவர் தங்களின் வளர்ச்சி குறித்து அதை செய்யும் தகுதி கொண்டவர்களாக பார்க்கப் படுவது பிறரின் இயல்பு. இன்றுவரையில் பெரிய ஆளுமைகளை ஆதரித்தும் நிராகரித்தும் பிற தலைவர்கள் வளர்ந்துள்ளனர்.
சண்முகம் திமுக கூட்டணி அரசை கவிழ்க்க விரும்பவில்லை அதற்கு பல காரணம் சொல்லப்பட்டாலும் முதல்வர் ஜானகிராமன் சண்முகத்தின் சமூகத்தை சேர்ந்தவர் என்பதே மிக முக்கியமாக ஒவ்வொரு தருணத்திலும் அவருக்கு எதிராக முன்வைக்க பட்டது. அது அவர் சொன்ன பிற காரணங்களை நிராகரித்தது. 1997 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்கிற அறிவிப்பு இந்த பின்புலத்தில் வைத்தே புரிந்து கொள்ளப்பட்டது. 1999 களில் நாராயணசாமி தலைவர் சண்முகம் முதல்வராக வருவதற்கான வாய்ப்பில் நாராயணசாமி தடையை உருவக்கிய போது வல்சராஜ் போன்றவர்கள் அதை ஆதரித்து அமைதி காத்தனர் என்பது புரிந்து கொள்ளக் கூடியது. அவர்கள் அப்போதே ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்கள் ஆனால் அவர்கள் எப்போதும் போல தலைவரை சந்தித்தாலும் யாரும் சென்று தொடாத பகுதியாக அதீத முரண் அங்கு இருந்து கொண்டிருந்தது . அந்த சூழலில் கட்சியின் அடுத்த நிலையில் உள்ளவர்கள் அதற்கு எதிர் வினை ஆற்ற வேண்டிய பொறுப்பில் வருகிறார்கள். அது போன்ற அசாதரான சூழலில் யாரும் பிற எவர்க்கும் அடுத்து செய்ய வேண்டியது என்ன என சொல்லுவதில்லை. அவர்கள் எப்போதும் அப்படித்தான் . அரசியலையும் அதை முன்னிறுத்தி ஆடுபவர்களை பற்றியும் கிண்டலும் கேலியும் கொண்ட இளிவரல் மனிதர்கள். அவர்களில் இருந்து அடுத்த தலைமுறை தலைவர்கள் ஒரு போதும் உருவாகி வந்ததில்லை. முதல்வர் தேர்வில் நடைபெறுகிற அரசியல் முரணை எதிர் கொள்ள எனக்கிருந்த அரசியல் தொடர்புகளை தொட முடிவு செய்தேன். அதற்கு யாருடைய அறிவுரையோ அனுமதியோ எதிர்பார்த்து நிற்பது எனது இயல்பல்ல. ஆற்றக் கூடியதை முதலில் துவங்குவது பின் என்ன நிகழ்ந்தாலும் அதை எதிர் கொள்வது எனது அரசியலாக எப்போதும் இருந்தது. நான் எப்போதம் திரள் கூட்டத்தில் ஒருவனாக இருந்ததில்லை. அவர்களின் செயல்களுக்கு பார்வையாளனும் இல்லை. எனக்கான அரசியல் பாதைகளை புதிது புதிதாக கண்டடைந்து பயணத்தை தொடர்ந்து செல்கிறேன். இப்போதும் அதையே செய்வது என முடிவு செய்தேன்.
நானும் என் நண்பர்களும் அந்த நடு நிசியில் சென்னை சென்று அதிகாலை மூப்பனாரை சந்தித்து அந்த நாராயணசாமியின் திட்டம் நடக்காது பார்த்துக் கொண்டோம். சண்முகம் முதல்வரானார். பதவியேற்ற முதல் நாள் இரவு அவரது முதல்வர் அறையில் அவருக்கு அணுக்கமான சிலரும் நானும் என விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் அங்கு இருந்தோம். எப்போதும் குளிரூட்டு சாதனப் பெட்டயின் குளிர் கடும் உச்சத்தில் இருக்கும் அறை அது ஏன் அது அப்படி என நினைத்தத்துண்டு. இரவு 10 மணி இருக்கும் மிக இயல்பாக அன்றும் அதற்கு முன்பும் நிகழ்ந்தவைகளை மனதில் ஒட்டிப் பார்த்து அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் சண்முகம் சட்டென ஏதோ நினைவிற்கு வந்தவராக தனது உதவியாளரை அழைத்து ஏதோ சொன்னார். சற்று நேரத்திற்குள் மிக விலை உயர்ந்த சால்வை ஒன்று கொண்டுவரப்பட்டது. முதல்வர் யாரோ முக்கியத்துவம் வாய்ந்த நபரை சந்திக்க செல்கிறார் என அனைவரும் நினைத்தோம். அப்படி ஏதாவது இருந்தால் அவர் தனியாக செல்வதில்லை அது முறையையும் அல்ல என்பதால் எங்களை அழைத்து செல்லப் போகிறார் என நினைத்தேன். சால்வையை பெற்றுக் கொண்டவர் இருக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தார். அந்த பெரிய அலுவலக மேஜையின் எதிர் பக்கம் அதர்ந்திருந்த அனைவரும் அவருடப் கிளம்பிச் செல்ல முனைந்த போது யாரும் எதிர் பார்காது அந்த சால்வையை எனக்கு போட்டார். நான் என்ன நடக்கிறது என ஊகித்தேன். ஒரு மரியாதைக்காக “என்ன இது தலைவரே எனக்கு ஏன்” என்றேன், அவர் சிரித்தபடி “உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் அது அப்படியே இருக்கட்டும்” என்றார். அங்கிருந்த அனைவரும் அறிவார்கள் அது எனது மூப்பனாரின் சந்திப்பிற்கு என்று. ஆனால் ஊழின் விசித்திரம் முதல்வராக வந்த பிறகு சண்முகமே எனது அனைத்து எதிர்கால திட்டத்தையும் முற்றழிக்கும் செயல்களை துவங்கி வைத்தார். கட்சித் தலைவரில் இருந்து முதல்வர் என புதிய ஒருவர் எழுந்து வந்தார்.
வல்சராஜ் எப்போதும் தன்னை பற்றிய சிந்தனை மிகுந்தவர் இப்போதும் பிறிதொருவர் வலி பற்றிய கவலையும் எண்ணமில்லாதவராக துவங்கியது அவரது அரசியல் விளையாட்டு ஒரு புள்ளியில் அவரது அரசியல் களத்தை அழித்து இன்று மையக் களத்தில் இருந்து அவரை விலக்கி வெளியே அமர வைத்துவிட்டது . பல வருடம் கழித்து அவரது பிறந்தநாள் கொண்டத்தில் கலந்து கொள்ள எனக்கொரு அழைப்பு வந்திருந்தது முதலில் ஆச்சர்யத்தை கொடுத்தது. வல்சராஜ் தனது 25 வருட அரசியலில் முதல் முறை சட்டமன்றத்திற்கு தேர்தெடுக்கப்படும் முன்னர் அவரை அறிவேன். பாலன் தலைமையிலான இளைஞர் காங்கிரஸ் கமிட்டியில் அவர் துணை தலைவர் பொறுப்பு வகித்தார். அப்போது அவரை சண்முகத்தின முகமாக அனைவரும் அறிந்திருந்தோம். நீண்ட நாட்களுக்கு பின் அவரது ஆதரவாளர்கள் ஒருங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்விற்கு பிறகு அவரது அரசு இல்லத்தில் சந்திக்க சென்றேன் . சுமார் 10 வருடங்களுக்கு பிறகு அந்த சந்திப்பு. அவரது இல்லம் முழுவதும் நான் பழகிய அதே பழைய முகங்கள். என்னை சந்தித்த மகிழ்வை அவர்களிடம் கண்டேன். எனக்கும் அவர்களை மீண்டும் வேறொரு சூழலில் சந்தித்த மகிழ்வு. வல்சராஜ் உற்சாகத்துடன் இருந்தார். பழைய நினைவுகளை பேசிக் கொண்டிருந்தோம். வல்சராஜிடம் உள்ள அதே நகைசுவை உணர்வுடன் சொன்ன பல பகடிகளுக்கு என்னால் வெடிச் சிரிப்புடன் கலந்து கொள்ள முடிந்தது . மெல்ல அரசியல் குறித்த பேச்சிற்கு வந்தார். நான் அதை முற்றிலும் தவிர்க்க நினைத்தேன். நெடுங்கதை போல பேசி பேசி ஒரு புள்ளயில் தேர்தலில் அவர் முதல் முறை தோற்றது பற்றிய இடத்தில் நின்றது. “அரி அரசியலில் வெற்றி தோல்விக்கு பெரிய பொருளில்லை” என்றார். ஆம் அது அப்படித்தான் என எனக்கும் தெரியும். நான் சொன்னேன் “ நாராயணசாமி முதல்வராக வந்தமர்ந்த அரசில் பங்கேற்றிருக்க வேண்டிய நீங்கள் இம்முறை தோற்றிருக்க கூடாது” என்றேன். ஏதோ செல்லி மறுக்க நினைத்து பின் முடிவை மாற்றிக் கொண்டு “ஆம்” என்றார். அவர் முகத்தில் தெரிந்த வலியை என்னால் உணரமுடிந்தது. எப்போதும் போல என்னை முறுப்பார் என நினைத்த எனக்கு நான் சொன்னதை ஏற்றது வியப்பாக இருந்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக