https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 26 ஜூலை, 2018

வெண்முரசு 16

புதுவை வெண்முரசு கூடுகை -16

வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்
பகுதி 10:  அனல் வெள்ளம் மற்றும்
பகுதி 11 :  முதற்களம்       
48 முதல் 59 வரை
வெண்முரசின் இந்தப்பகுதிகளை காணிக்கல்லாக உருவகித்துக் கொண்டால் மகா பாரதத்தின் முழு வடிவமே மாறியும் முற்றாக வேரொரு உருவத்தை தர வல்லதாகி விடுகிறது . பல நாடகீய தருணங்கள் பீஷ்மர் மற்றும் சகுனி இடையேயான உறவு புதிய பரிமாணம் கொள்ள வைக்கிறது

முதற்கனலின் வெப்பம் தாங்காது தவளைகளின் மன்றாட்டிற்கு காலம் கனிந்து இரு மழைகளை பெய்விக்கிறது , ஒன்று குருதி பிறிதொன்று காட்டாறு வெள்ளமாக .  

மழைவெள்ளம் எப்படி நகரை நிறைக்கிறது? அதன் பெருவிசை அதற்குரிய வழிகளை கண்டடைகிறது. இதுவும் ஒரு வெள்ளமே. நாளைக்காலைவரை காத்திருங்கள். இந்தப்பெருங்கூட்டம் முட்டி மோதி தேங்கி பீரிட்டு தனக்குரிய வழிகளைக் கண்டுகொள்ளும். நாளைக்காலை அதன் வழிகளை எந்தக் காவல்மாடம் மீது ஏறி நின்றாலும் பார்த்துவிட முடியும். அவ்வழிகளை மேலும் தெளிவாக்கி சிடுக்குகளை அகற்றி செம்மைசெய்து கொடுப்பது மட்டுமே நமது பணி" மனித முயற்சிகள் சில நிகழ்வுகளில் திகைபடைகின்றன ,
அப்போது ஊழ் செயலற்ற தன்மையை கைகொள்ளச் சொல்கிறது . விலகி நிற்கும் காலத்தில் அது அதன் முடிவை அறிவிக்கிறது .

சத்ருஞ்சயர் நம்பிக்கை இல்லாமல் தலைவணங்கினார். "நம்புங்கள் சத்ருஞ்சயரே, நாளை நீங்களே காண்பீர்கள்" என்றான் விதுரன் சிரித்தபடி. "அரசு சூழ்பவன் முதலில் அறிந்திருக்கவேண்டியது ஊழை. ஊழின் பெருவலியுடன் அவன் ஆற்றல் மோதக்கூடாது. ஊழின் விசைகளுடன் இணைந்து தனக்குரியவற்றைக் கண்டடைந்து அவற்றை தனக்காக பயன்படுத்திக்கொள்பவனே வெல்கிறான்.”

இவள் சற்று காவியம் கற்றிருக்கலாம் என விதுரன் எண்ணிக்கொண்டான். காவியம் இந்தப் பொய்யுணர்ச்சிகளை மெய்யாகக் காட்டும் சொற்களை அளிக்கும். நம்மைநாமே உச்சங்களில் எவ்வளவுநேரம் வேண்டுமென்றாலும் நிறுத்திக்கொள்ளமுடியும். இப்படி பேதையென உருண்டு கீழிறங்கவேண்டியதில்லை. இல்லை, இவை பொய்யுணர்ச்சிகளல்ல. இவை மெய்யே. ஆனால் அரைமெய். அரைமெய் என்பது அரைப்பொய். அரைப்பொய் என்பது பொய்யை விட வல்லமை மிக்கது. பொய் கால்களற்ற மிருகம். அரைப்பொய் மெய் என்னும் நூறுகைகால்கள் கொண்ட கொலைமிருகம்.”

கபம் முற்றி பசுமைகொள்வதுபோல ஏளனம் இறுகி வெறுப்பாகிறதுஉடல் கூறின் நோயை கடுமை சொல்லுகிறது 

ரதிவிஹாரி. ஆம், தந்தையின் காவியத்தின் சொல் அது. காமத்திலாடுபவன். காமத்திலாடுபவனால் குரோதத்திலும் மோகத்திலும் ஆடவியலாதா என்ன? மானுடம் கண்ட மாபெரும் விளையாட்டுப்பிள்ளையாக அவனிருப்பான். ரதிவிஹாரி. எத்தனை மகத்தான சொல். எங்கே அடைந்தார் அவர்? சுகனின் முன் நின்று அச்சொல்லை அறிந்தாரா? அரதியில் விரதியில் நின்றிருக்கும் தன் மைந்தனைக் கண்ட தந்தை மனம் கொண்ட ஏக்கம்தானா அது?”

உன் பேரென்ன?" "பரிகன்" "பரிகனாக இருந்தால் சேவகனாக இருக்காதே. சேவகனாக இருந்தால் பரிகனாக இருக்கமுடியாது." அவன் மீண்டும் விழித்தான்.”

சகுனி பற்களை இறுகக் கடித்துக்கொண்டு குனிந்தே நின்றான். அவனுடைய ஒரு கால் மட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. பொருளற்ற உதிரிக்காட்சிகள் அவன் அகம் வழியாகக் கடந்துசென்றன. முதுநாகனின் இமையாவிழிகள். நெளியும் கரிய சவுக்கின் நாக்கு. அனல்காற்றுகள் கடந்துசெல்லும் செம்பாலை. மென்மணல் வெளி. பொருளறியா இரட்டை வரி போல அதில் பதிந்து செல்லும் பசித்த ஓநாயின் பாதத்தடம். அதன் அனலெரியும் விழிகள். பசியேயான வாய்க்குள் தழலெனத் தவிக்கும் நாக்கு.”

ஆம், பிறரல்ல, நானே முழுமுதல் குற்றவாளி" என்றார் பீஷ்மர். "என் ஆணவம். நானே முடிவெடுக்கவேண்டும் என ஒருவர் சொல்லும்போதே நான் என்னை முடிவெடுப்பவனாக நிறுத்திக்கொள்கிறேன். நான் காப்பவன் என்றும் வழிகாட்டுபவன் என்றும் என்னை கருதிக்கொள்கிறேன். மீண்டும் மீண்டும் பெருவல்லமைகள் என்னை கூழாங்கல்லாகத் தூக்கிவிளையாடுகின்றன. அதன்பின்னரும் நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இனி இந்த கீழ்வேடத்தை நான் அணியப்போவதில்லை."”

விதுரன் கசப்பான புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். சாமானியர் தங்களுக்கே பேரழிவைக் கொண்டுவருவதானாலும்கூட தீவிரமாக ஏதாவது நிகழவேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை எளியது, மீளமீள ஒன்றே நிகழ்வது, சலிப்பையே மாறாஉணர்வாகக் கொண்டு முன்னகர்வது. அவர்கள் வரலாறற்றவர்கள். அதை அவர்கள் அறிவார்கள். ஆகவே அவர்களின் அகம் கூவுகிறது, இடியட்டும், நொறுங்கட்டும், பற்றி எரியட்டும், புழுதியாகட்டும், குருதிஓடட்டும்... அது அவர்களின் இல்லங்களாக இருக்கலாம். அவர்களின் கனவுகளாக இருக்கலாம். அவர்களின் உடற்குருதியாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று நிகழவேண்டும். மகத்தானதாக. பயங்கரமானதாக. வரலாற்றில் நீடிப்பதாக... அந்தத்தருணத்தில் அவர்கள்”“இருந்தாகவேண்டும், அவ்வளவுதான்.

சாமானியர்களின் உள்ளிருந்து இயக்கும் அந்தக் கொடுந்தெய்வம்தான் வரலாற்றை சமைத்துக்கொண்டிருக்கிறதா என்ன? வாளுடன் களம்புகும் ஷத்ரியனும் நூலுடன் எழும் அறிஞனும் யாழுடன் அமரும் சூதனும் அந்தச் சாமானியனுக்கான நாடகமேடையின் வெற்றுநடிகர்கள் மட்டும்தானா? இங்கே நிகழ்வதெல்லாம் யாருமற்றவனின் அகத்தை நிறைத்திருக்கும் அந்தக் கொலைப்பெருந்தெய்வத்துக்கான பலிச்சடங்குகளா என்ன?

அளவைநெறியற்ற எண்ணங்கள். இத்தருணத்தில் ஒருவனை வல்லமையற்றவனாக, குழப்பங்கள் மிக்கவனாக ஆக்குவதே அவைதான். இங்கே ஒன்றைமட்டும் நோக்குபவனே வெல்கிறான். அனைத்துமறிந்தவன் வரலாற்றின் இளிவரலாக எஞ்சுகிறான். மிதித்து ஏறிச்செல்லும் அடுத்த படியை மட்டுமே பார்ப்பவன்தான் மலையுச்சியை அடைகிறான். சிகரங்களை நோக்குபவனின் திகைப்பு அவனுக்கில்லை. அவனை சிகரங்கள் புன்னகையுடன் குனிந்துநோக்கி தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கின்றன.”


கிருபாநிதி அரிகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக