ஶ்ரீ:
பதிவு : 361 / 542 / தேதி :- 06 ஜூலை 2018
* குறியீட்டுச் சிதைவு *
“ நெருக்கத்தின் விழைவு ” - 55
தேர்தல் அரசியலையே பெரும்பாலானவர்கள் விழைவதால் , அதுவே அரசியல் என்கிற பிழை புரிதலை அது அனைத்து தரப்பினரிடையேயும் ஏற்படுத்திவிட்டது . ஆனால் தன்னை வழி நடத்த பலவிதமான தலைமைகளை எதிர்நோக்குவது அரசியலின் தன்மை . அதில் சரியாக சென்று பொருந்துபவர்கள் , தனி ஆளுமைகளாக பரிமாணம் பெறுகிறார்கள் . அவர்களுக்கென ஒரு முகத்தை உருவாக்கி கொள்வதால் , அதிலிருந்து எளிதில் விலகுவது , அவர்களால் இயலுவதில்லை . இத்தகையவர்கள் அரசியலில் எக்காலத்தும் நிலைத்து இருக்கிறார்கள் . அதை போன்ற யாராவது ஒருவர் ஊழின் கருணையால் பதவிக்கு வருகிற போது , செயற்கரிய செயல்களை செய்கிறார்கள் . உலகம் இன்னும் நம்பிக்கை கொடுப்பதாக இருப்பது அத்தகையவர்களை அடிப்படையாக கொண்டு.
அரசியலில் மட்டுமின்றி சமூகத்தில் அது போல சிலர் இன்னும் இருப்பது வாழ்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஜெயமோகனின் “அறம்” சிறுகதை தொகுப்பில் அத்தகைய மனிதர்களை அறிய நேர்ந்தது , வாழ்வியல் தருணத்தை நம்பிக்கை கொள்ள வைப்பது .
அரசியல் என்பதே தேர்தலில் துவங்குவது என்பது பிழையான புரிதல் , அதுவும் ஒரு பாதை அவ்வளவே , ஆனால் நுன்னரசியல் பல உட்கூறுகளை கொண்டது . தேர்தல் அரசியல் வழியாக உள்நுழையும் எவரும் கட்சி அரசியலுக்கு ஒருநாளும் வர இயலாது , கட்சி அரசியலில் இருந்து தேர்தல் அரசியலுக்கு வந்த பலர் மிக சிறந்த ஆளுமைகளாக வெளிப்பட்டிருக்கிறார்கள் . அவர்களுக்கு சமூக பொறுப்பிருப்பதை பார்த்திருக்கிறேன் , அதிலிருந்து தேர்தல் அரசியலில் நுழைந்த சிலர் மிக அரிதாக வழிமாறிப்போனதும் உண்டு , ஆனால் அப்படிப்பட்டவர்கள் என்ன காரணத்தினாலோ எங்கோ ஒரு கோணல் உருவாகி அவர்கள் பெரும் சிக்கலை உருவாக்குபவர்களாக , ஜனநாயக மாண்பை குலைப்பவர்களாக மாறிப்போவதையும் பார்த்திருக்கிறேன் .
கட்சி அமைப்பின் பொறுப்பிலிருப்பவர்களுக்கு பிறருக்கு பதில் சொல்லும் ஜனநாயக பண்பு கொஞ்சமாவது மிச்சம. இருப்பதை பார்த்ததால் , அரசியலில் அவர்களை இருப்பவர்களுக்கும் சிறந்தவர்களாக முன்வைக்கிறேன். அவர்கள் பல ஏற்ற இறக்கமுள்ள காலங்களைப் பார்த்தவர்கள் என்பதாலும் . தன்னை நிலை நிறுத்துக் கொள்ள உடனடியாக ஏதாவதொன்றை ஆற்றியாக வேண்டும் என்கிற பதைப்பு குறைந்தவர்களாக, இயல்பில் இருப்பது பிறிதொரு காரணமாக இருக்கலாம். தனக்கான களமும் , காலமும் வரும்வரை காத்திருக்க கற்றவர்கள் என்பதால் , இவர்கள் மட்டுமே அரசியலில் எடுத்துப் பேசத் தக்கவர்கள் என நினைக்கிறேன்.
முதல் முறையாக காமராஜர் கட்சியை விட்டு விலகியதும் புதுவையில் சண்முகம் தனித்து விடப்பட்டார் என்கிற அளவிற்கு புதுவையின் முக்கிய தலைவர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறிவிட்டனர் . ஆனால் தொடர்ந்து நிகழ்ந்த திராவிட பரப்பிய அரசியல் தமிழகத்தில் ஏற்படுத்திய தலைக்கீழ் மாறுதல்கள் காமராஜருக்கு அரசியல் ரீதியான தோல்வியும் , அவரது மறைவிற்கு பிறகு ஏறப்பட்ட வெற்றிடத்தை தொடர்ந்து புதுவை காங்கிரெஸ்சை விட்டு விலக்கியவர்களுக்கு திருப்பி வருவதை தவிர வேறு வழியற்று நிலை உருவாக்கி விட்டது. அவர்கள் யாரும் திராவிட அமைப்பை நாடி செல்லாமல் திரும்பவும் காங்கிரசிற்கே வந்து சேர்ந்தனர்.
அவர்களளில் ஒருவராக காங்கிரஸிலிருந்து வெளியேறி பின்னர் திரும்பியவர்தான் கண்ணன் . வயதின் காரணமாக அல்லது இளைஞர் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்த அவர்களின் கருத்தியல் காரணமாக கண்ணன் தனியாக செயல்பட்ட போது , காங்கிரசின் மூத்த தலைவர்களில் பெரும்பான்மையானோர் சண்முகத்தின் மேல் கொண்ட கசப்பினால் கண்ணனை நோக்கிய மனச்சாய்வை அடைந்தார்கள் . சண்முகத்தை எதிர்க்க, தங்களை நிறுவிக்கொள்ள அல்லது அவருடன் பேரம் பேச, ஒரு கருவியாக கண்ணனை பார்த்தனர் . கண்ணன் தனக்கான இடத்தையும், மதிப்பையும் அதற்கான விலையையும் தெரிந்து வைத்திருந்ததால் . தன்னை மிக சிறந்த முதலீடுகளுக்கு உடபடுத்திக்கொண்டார் . அவரை பயன்படுத்த நினைத்தவர்கள் அனைவரையும் அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் பரிபவம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக