https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 21 ஜூலை, 2018

அடையாளமாதல் - 376 * முடிவிலி *

ஶ்ரீ:




பதிவு : 376 / 557 / தேதி :- 21 ஜூலை  2018

* முடிவிலி 


நெருக்கத்தின் விழைவு ” - 71
விபரீதக் கூட்டு -05 .


நல்ல அரசியல், அரோக்கியமான சிந்தனை போக்கை அடிப்படையாகக்  கொண்டது. தன்விழைவு அதில் பெரும்பங்காற்றினாலும் , அரசியல் தலைமை என்பது தான் சார்ந்திருக்கும் அமைப்பின்  விழுமியமும் , குடிமை சமூகத்தின் கருத்ததிகாரமும் முயங்கி, அதன் முரணியகத்தால் விளைவதை கணிக்கும் சக்தியுள்ளவர்கள் , தன் விழைவிற்கான பாதையை அதிலேயே கண்டடைகிறார்கள் . ஆனால் விழைவு நினைவு அளவிலேயே பெரும் போதையைத் தர வல்லது . தொடர் நினைவினால் அதை ஊதிப் பெருக்க முடியும் . சில தவறான கணிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள் ,அந்த பித்து நிலையிலேயே தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு அவர்களுக்கு யதார்த்தை ஒரு நாளும் சொல்லி புரியவைத்துவிட முடியாது.

ஒவ்வொரு கட்டத்திலும் தன் சிந்தனையை , தனது வாய்பை குறித்து தன்னை மீள் பரிசோதனைக்கு உட்படுத்துபவர்கள் மட்டுமே , மனம் நம்மை அறியாது தடம்மாறுவதை உணர்ந்து அதை தடுத்து நிறுத்தி மீளவும் ஆரோக்கியமான சிந்தனைக்கு திரும்ப முடிகிறது . அதற்கு பலவிதமான கற்பிதங்களை எல்லைகளாக இட்டு மனதை ஒருமுகப்படுத்தல்  தேவைப்படுகின்றது  . வாழ்ககையில் வெற்றியும் தோல்வியையும் கலந்து அடைபவர்களே அதை தங்களுக்கு செய்து கொள்ளும் ஆற்றலுள்ளவர்கள் . அவர்கள்தான் எப்போதும்  நல்ல அரசியலுக்கு உள்ளே நிற்கிறார்கள்  என நம்புகிறேன். அதனால் அந்த களத்தில் தோற்றவர்களும் , வென்றவர்களுக்கு இணையான மனநிறைவை அடைகிறார்கள் . தன்னால் இயன்றதை முயற்சித்ததால் அதன் விளைவை பற்றிய கசப்பு அவர்களுக்கு இருப்பதில்லை.மனித மனங்களின் இணைப்பையும் அதில் நிறைவையும் பெற முயற்சித்தவர்களுக்கு வெற்றியும், தோல்வியும் தனிப்பட்ட ஒருவருடையதாக பார்க்கப்படுவதில்லை.

கமலக்கண்ணனை  சிந்தனை திரிந்த முணையை என்னால் உணரமுடிகிறது . அவை அனைத்தும் பாலனிடமிருந்தே துவக்கம் கொள்கிறது . அது பாலன் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக சொன்ன ஒரு அரசியல்சூழ்தலில் இருந்து துவங்கியதுஅந்த வருடம் தில்லியில் கூடிய அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயற்குழுவில் அமைப்பின் உறுப்பினர்களின் வயது அதிகபட்சமாக முப்பத்தைந்து என்றும் தலைவராக வருவதற்கான வயது உச்சவரம்பு நாற்பது என நிர்ணயிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்    நாற்பது வயதை கடந்த பாலன்  தனது பதவி விலகுவதை பற்றி அவர் அறிவித்திருந்தார். இதன் முழு தகவலையும் இவ்வளைப்பூ தளத்தில் முன்னமே பதிவு செய்திருக்கிறேன் .

அந்த தீர்மானத்தை ஒட்டித்தான் தனது பதவி விலகல் திட்டத்தை செயல்படுத்த துவங்கினார் . கமலக்கண்ணனை போக்கு உகக்காத பலர் பாலனிடம் அவரைப்பற்றி முறையிட, அதற்கு மாற்று நபரை தருவதாக சொல்லி என்னை முன்னிலை படுத்தியிருந்தார் . இவை அனைத்தும் , தனது அனுக்கர்களுடன் அவர் நிகழ்த்திய தனிப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் . அப்போது நான் அவற்றை அறிந்திருக்கவில்லை . அமைப்பின் விழாக்களில் நான் கலந்து கொள்கிற போது நிர்வாகிகள் எனக்கு தரும் மரியாதையில் நிறைய மாற்றமிருப்பதை அறிந்து கொண்டேன் . அனைவராலும் ஏற்கப்படுதல் அரசியலில் விரும்பத்தக்கது என்பதால் . நான் அவற்றை வேறு விதமாக அர்த்தம கொள்ளவில்லை. முதன் முதலில் அதை உடைத்து சொன்னவன் ஊசுடு பெருமாள். எனக்கு அது அதிர்வை தந்தது. நான் பெரிய பொறுப்புகளை ஏற்கும் மனநிலையில் இல்லை . அரசியல் பேச்சை மையமாக கொண்ட ஒரு துறைஅதற்கு எனது உடற்குறை பெருந்தடை , நான் அதை கடக்க முடியாது என நம்பினேன்.

பாலனுக்கு பிறகு கமலக்கண்ணன் மாநில தலைவர் என்கிற எண்ணம் பாலனால் முன்மொழியப்பட்டிருந்தது . பாலனின்  அரசியல் தந்திரத்தில் அதுவும் ஒன்று . கமலக்கண்ணன் அது உண்மை என நினைத்து தன் கற்பனையை வளர்த்துக் கொண்டார் . ஆனால் அதற்கு எவ்வித உழைப்பையும் அவர் கொடுக்கவில்லை என்பதுதான் அவரது குற்றம் . அந்த பதவியை அடைந்து விட்ட தோரணை அவரிடம் தேவையற்ற வந்து ஒட்டிக்கொண்டது . கமலக்கண்ணனிடம் காணப்பட்ட திடீர் உடல்மொழி மாற்றம், முக்கிய நிர்வாகிகளின் மனதில் கமலக்கண்ணனை பற்றிய தவறான புரிதலையும் அவரிடமிருந்து மனவிலக்கத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது . தங்களின் ஆதரவை பெற்று தலைமையில்  அமர வேண்டியவர் , தலைமைக்கு வந்துவிட்டவரின் மனப்பான்மையும் , பாவனையும் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே வெளிப்பட துவங்கியது , அனைவரிடமும் அவரைப்பற்றிய கசப்பை உண்டாக்கியது

பாலன் கணக்கிட்டது இதைத்தான் , பிறிதெவரையும் விட அவர் கமலக்கண்ணனை புரிந்திருந்தார். அதுவே நிகழ்ந்ததுகமலக்கண்ணன் தனக்கு ஆதரவான அணியை திரட்டும் சக்தியை தானே முடக்கிக் கொண்டார் . எவ்வளவு முயற்சித்தும் தனக்கான ஆதரவு தளம் உருவாகாததை மிகத் தாமதமாக உணர்ந்த பிறகு தன்னை ஆதரித்த தாமோதரனை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் எழுந்தது . பாலன் தனது அரசியல் பாதைக்கு பலத்ததரபட்டவர்களை வெவ்வேறு உபயோகத்திற்கு தேர்ந்திருந்தார் . இது எல்லா அரசியல் தலைவர்களும் செய்வது . கமலக்கண்ணன் மற்றும் தாமோதரனின் நட்பு நன்றாக இருந்தாலும் அரசியலில் இருவரின் பாதையும் வெவ்வேறானவை

தாமோதரன் பாலனுக்கு பொருளியல் ரீதியான உதவிகளுக்கும் , பஞ்சாயத்துக்களுக்கும் தேவைபட்டவர். அவர் தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்வது பற்றிய சிந்தனையில்லாதவர் , யாரையாவது சார்ந்தே அவரது அரசியல் நிலை பெற்றிருந்தது. பாலனுக்கு பிறகு கமலக்கண்ணன் தான் அவருக்கு சரியான தேர்வு , ஆகையால் எனக்கும் கமலக்கண்ணனுக்கும் இடையே பாலமாக செயலபட்டார் . தனக்கு கிடைத்த வாய்ப்பைக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, பேரத்தில் ஈடுபட்டு தன்னை பலப்படுத்திக் கொள்ள முயற்சித்தார் . கடைசி நிமிடம்வரை அதைத்தான் என்னிடமும் முயற்சித்தார். நான் அந்த ஏற்பாடு அரசியல் ரீதியாக சரிவராது என அதற்கு  உடன்பட மறுக்க அந்த அணி முற்றாக சிதைத்தது . பின்னர் தாமோதரனின் எதிரபாராத மரணம் மிச்சமிருந்த கமலக்கண்ணன் அரசியலை ஒன்றுமில்லாதபடி செய்து விட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்