ஶ்ரீ:
பதிவு : 377 / 558 / தேதி :- 23 ஜூலை 2018
* போகாதவூர் *
“ நெருக்கத்தின் விழைவு ” - 72
விபரீதக் கூட்டு -05 .
கமலக்கண்ணன் தன்னை அடுத்த தலைவரென பாலன் அறிவித்த பிறகு , எங்கும் எதுவும் மாறாதது ஏமாற்றமளிப்பதாக இருந்திருக்க வேண்டும் . வெறும் சொல்லை வைத்து என்ன செய்வது .அரசியலில் காத்திருப்பது என்கிற ஒன்றை அறியாததால் , தனக்கான முறைமகளும் அதற்கான அணிகளும் உருவாகாததற்கு பாலன் மறைமுகமாக ஏதோ செய்கிறார் என்கிற சந்தேகம் முதலில் எழுந்தது .அது ஒரு கட்டம்வரை உண்மையாகக்கூட இருந்திருக்கலாம். தன்னை அவர் ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து அவர் பாலனுடன் முரண்பட்டு செயலிழந்தார் . இந்த சூழலில் எழுவதற்கு முன்பிருந்தே கமலக்கண்ணன் எனது அரசியல் உள்நுழைவுதான் தனது முன்னேற்றம் அனைத்திற்கும் தடை என்ற புரிதலுக்கு வந்திருந்தார் . அது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்கிற புரிதலில் இருந்து அவரால் வெளிவர இயலவில்லை .
அது ஓரளவிற்கு சரியான கணிப்பு. என்னை பாலன் கமலக்கண்ணனுக்கு மாற்றாக பயன்படுத்துவதை முதலில் நான் அறிந்திருக்கவில்லை . கமலக்கண்ணன் செயல்பட மறுத்த போது , அவர் உருவாக்கிய இடைவெளியை பாலன் பயன் படுத்தத் துவங்கினார் . அன்றாட செயல்படாடுகள் தவிற்க இயலாதவைகள் , அவற்றை யாராவது செய்துதான் ஆகவேண்டும் . அது போல எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து கொடுக்க துவங்கிய போது . நான் வேரொரு முணைக்கு வந்து சேர்ந்திருந்தேன்.
அது நான் விழைந்து உருவாக்கியதல்ல . அந்த எண்ணமும் எனக்கில்லை . நான் எனது எல்லை தெரிந்தவன் அதைத் தாண்டி எனது கற்பனைகளை வளர்த்துக் கொள்வதில்லை , எனக்கும் அவருக்குமான ஒரு வலைப்பின்னப்படுவதை அப்போது நாங்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை.
அரசியலில் எனது போதாமைக் காரணமாக எதையும் சொல்லி புரியவைத்துவிட முடியும் என்பது எனது மிகை நம்பிக்கை என காலம் புரியவைத்தது. அரசியலில் தன்னிலை விளக்கத்திற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை அறிந்து கொள்ள எனக்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டன. ஒரு கட்டத்தில் என்னுடன் கமலக்கண்ணன் வெளிப்படையாக முரண்படத் துவங்கிய பிறகே, நான் சூழலை புரிந்து கொண்டேன் . நான் அவருக்கு உண்மையை சொல்லி விளக்க முற்பட்டபோது, அதை அரசியல் சமாளிப்பாக பார்த்தார் . ஒரு கட்டத்தில் கமலக்கண்ணன் என்னிடமிருந்து விலகியபோது நான் மனதளவில் தளர்ந்திருந்தேன் .
பாரம்பரியமான வியாபாரக் குடும்பத்திலிருந்த வந்த எனக்கு அரசியலில் ஒரு ஈர்ப்பு இருந்தது . ஆனால் அரசியல் எனது வாழ்கையல்ல . எனது வாழ்கையின் சிறு பகுதி அது அவ்வளவே . ஒருகாலமும் நான் முழுமையாக ஈடுபடும் துறையாக அதை மாற்றிக் கொள்ள இயலாது என்பதை அவர் உணரவில்லை . ஆனால் ஊழின் கணக்கு பிறிதொன்றாக இருந்தது . எது எனது துறையல்ல என நினைத்திருந்தேனோ பின்னாளில் அதுவே எனது துறையானத்துதான் இன்னும் விந்தை.
தேர்தல் தோல்வி , இளைஞர் காங்கிரஸின் தலைவராக தொடர வயது உச்சவரம்பை கடந்து விட்டது. ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கட்டுப்பாடு போன்ற அடுத்தடுத்த சிக்கல் பாலனுக்கு நிலையிழிதலை கொடுத்திருக்க வேண்டும். அவர் நிதானமிழந்தார். அவர் நினைத்த அரசியல்சூதலுக்கு அவசியமில்லாத எளிய மக்கள் அவர்கள் . பாலனை தாண்டி அவரகளுக்கு கட்சியில் யாரையும் தெரியாது . நான் உள்பட அனைவரும் "அரசியல் அனாதைகள்" என்பதுதான் அன்றைய நிலை . வெளிப்படையான செயல் பாடுகளே அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கும் . அவர் ஏன் அத்தனை சிக்கலுள்ள அரசியல்சூழ்தலுக்கு சென்றார் என்பது அவருக்கும் , சுப்புரானுக்குமே வெளிச்சம் .
அவர் நீண்ட காலத்திற்கு பதவியில் நீடிக்க முடியாது என ஏன் நினைத்தார் என்றும் விளங்கவில்லை. வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஐம்பது வயதை கடந்தவர்களும் தலைவராக நீடித்தார்கள் , அகில இந்திய தீர்மானம் செயல்பாட்டில் வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் . முதல்வர் வைத்தியலிங்கம் அவருக்கு சாதகமாக இருக்கும் சூழலில் அரசாங்கத்தில் ஏதாவதொரு பதவியில் அமர்ந்து விடவேண்டும் என்கிற அவசரமே அனைத்திற்கும் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதுவே எல்லா அனர்த்தத்திறகும் காரணமாகிப்போனது.
தேர்தலை இலக்காக கொண்ட கட்சிப்பணி ஒரு கட்டத்தில் அவருக்கு அலுப்பை உருவாக்கியிருக்க வேண்டும் . பிறதொரு பதவி கிடைக்கும் வரை இருப்பதை விட முடியாது என்கிற நிலை . பாலனின் தோல்வி அமைப்பை சோர்வடைய செய்துவிட்டது . ஏதாவது செய்து அதை நிமிர்த்தியாக வேண்டிய நிர்பந்தம் . அனைவருக்கும் பொதுவான தலைவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள , தனது பதவி விலகலை அறிவித்தார் . இதை பற்றிய விரிவான பதிவை முன்பே செய்து விட்டேன்
கமலக்கண்ணனுக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்ள பாலன் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு பலமாக எழுந்தது. அதை சரிசெய்ய அவருக்கு ஒரு வாய்பபை உருவாக்கிக் கொடுத்தார் . கொடுத்த வாய்ப்பில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மாறாக என்னை உதாசீனமாக நடத்தியது, அவருக்கு சாதகமில்லாத பலரை அதில் ஒதுக்கியது போன்றவை அனைவருக்கும் கமலக்கண்ணன் மீது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதுவரை பாலன் சொன்ன பல அமைப்பு விஷயங்களில் ஈடுபட்டு கமலக்கண்ணனின் நட்பை இழக்க வேண்டாம் எனத் தயங்கிக் கொண்டிருந்த எனக்கு , இனி அதில் யாதொரு பொருளும் இல்லை என்கிற முடிவிற்கு வந்தேன் . இருந்த தயக்கம் மெல்ல விலகி பாலனின் விழைவிற்கு ஏற்ப அமைப்பை முழு அளவில் இணைக்கும் பொறுப்பை ஏற்றேன். குறுகிய காலத்தில் அமைப்பு ஒரு கட்டுக்குள் வந்தது . பாலன் அரசாங்க பதவிக்கு முயறசிக்கையில் ஒருவருக்கு ஒரு பதவி என்கிற தடையை கடக்க தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் தலைவர் சண்முகத்தின் எதிர்ப்பு பாலனால் தனது இலக்கை அடைய முடியாது செய்துவிட்டது . ராஜினாமா செய்த பதவியை திரும்ப பெறுவற்குள் அவருக்கு உயிர் போய் உயிர் வந்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக