https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 17 ஜூலை, 2018

அடையாளமாதல் - 372 * தன்வழிக் காணல் *

ஶ்ரீ:
பதிவு : 372 / 553 / தேதி :- 17 ஜூலை  2018

* தன்வழிக் காணல்  * 


நெருக்கத்தின் விழைவு ” - 67
விபரீதக் கூட்டு -05 .
மாநில செயற்குழுவை கூட்டி அமைப்பு சரியாக இருக்கிறது என்பது வெளிப்பட்டாக வேண்டும் என்றும்  அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யச் சொன்னார் தலைவர்  . அதன் முழு பின் விளவுகளை யோசித்துத்தான் பேசுகிறாரா? என நான் கேள்வி எழுப்ப முடியாது . அவர் என் அரசியல் குரு . இதில் சிக்கல் , ஏதாவது கேள்வியை எழுப்பினால் அதிலிருந்து அவர் பார்வை வட்டத்திறகுள் தெரியும் அனைத்து சிக்கலுக்குரிய  ஆலோசனை சொல்லத் துவங்கிவிடுவார். அது என் கைகளை கட்டும் கயிற்றை நானே எடுத்துக் கொடுத்தது போலாகும் . அரசியலில் முட்டாள் வேடம் மிக சிறந்த தற்காப்பு என கற்றிருக்கிறேன். சிக்கலை முன்னறிந்து தலைவர்களுடன் உரையாடுவது  போல ஆபத்தை வரவழைப்பது பிறிதொன்றில்லை.

அதற்கான தருணம் எழும்வரை அனைவரையும் போல அந்த நேரத்தில் உடன் சேர்ந்து பதறுவது மட்டுமே நான் செய்ய வேண்டியது  . இம்முறை யாரையும் கலந்து எனது முடிவுகளை எடுக்கப் போவதில்லை . அதன் சவால்கள் அனைத்தும் என் எல்லைக்கு உட்பட்டதாக உணர்ந்ததால் , அந்த முடிவை எட்டினேன். என்னவெல்லாம்  நிகழக்கூடும் என்பது நிழல்படம் போல மனதில் ஓடுவதை முதல்முறையாக பார்க்க முடிந்தது . அரசியல் காய்நகர்வு என்பது அமர்ந்திருக்கும் இடம் பொருத்தது போலும் . எனக்குள்ள தொடர்புகளைக் கொண்டு மாநிலம் முழுவதுமாக அனுக்கர்கள் அமைந்தால், அது மேலிருந்து கீழே நோக்குவது போல பார்வை வளையம் மிகப் பெரிதாக விரிந்து கொடுத்தது  . என்ன விளைவு ஏற்பட்டாலும் அதன் பலனை ஏற்கத் தயார் என்கிற மனநிலை , உடலில் சகல புலன்களும் கூர்கொள்வதை அறியமுடிந்தது

இதன் சாதக பாதகங்கள் புலப்படத் துவங்கியதும் மனம் ஆழ் அமைதிக்கு சென்றது . தோல்வி என்ன கொடுத்துவிடும். மரணமா? அதனினும் இனிது பிறிதொன்றில்லை என சொல்லிக் கொண்டேன் . தலைவரின் மாநில செயற்குழு கூட்டத்தை என்னை கூட்டச்சொல்லும் முடிவிற்கு முதலில் நான் திகைத்தாலும் , ஒரு இமைப் பொழுதில் என்னை மீட்டு கண்களில் எந்த மாறுபாடும் தெரியாதபடி உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டேன். தலைவருக்கு அரசியல் களத்தில்யானைஎன்று பெயர் . சிறு அசைவிலிருந்து  அனைத்தையும் புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ளவர் . மாநில செயற்குழு கூட்டச் சொல்லி என்னை கூர்ந்து பார்த்தபோது, நான் எந்த உணர்வையும் வெளிக்காட்டாது, இரண்டு நாளில் அதை செய்வதாக சொல்லி வீட்டிற்கு கிளப்பி சென்றேன். இது ஒரு அரியவாய்ப்பு மிகச் சரியாக இதை இயக்க வேண்டும் என முடிவெடுத்தேன். தனித்து ஆட காத்திருந்த தருணம் வாய்த்திள்ளது , மிகச்சரியாக , திறன்மிக்கதாக அதை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

வீடு திருப்பி மதிய உணவிற்கு பிறகு சிறிது தூக்கம் கொள்ளும் வழமை இருந்தாலும் , அன்று அது முடியாது என தோன்றிவிட்டது . எனக்கு கண்களில் உள்ள சிக்கல் மிக நுட்பமானது . மதிய வேளையில் சிறிது ஓய்வில்லாது போனால் ஏற்படும் பார்வைக் குறைபாடு எளிதில் என்னை சோர்வடையச் செய்துவிடும் , என்பதால் தூக்கம் மட்டுமே என்னை மீளவும் செயல்பட வைப்பது . மெல்ல என்னை தொகுத்துக்கொள்ள துவங்கினேன் இனி எதை செய்வது , எதை செய்யக்கூடாது என்கிற இடத்தை நோக்கி நகர்ந்தேன்

கமலக்கண்ணன் குழு கட்சிலிருந்து வெளியேறியது , ஒரு பெரிய விஷயமே அல்ல அவர்களால் எங்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்து இருப்பதில்லை. என்கிற வினோத பழக்கத்திற்கு வந்து விட்டவர்கள் இனி வாழ்நாள் முழுவதுமாக , இதைபோன்ற பயணத்தை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருப்பார்கள் . வல்சராஜ் இனி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் கூடுகைக்கு கலந்து கொள்ள மாட்டார் என்பதை நான் புரிந்திருந்தேன்


இப்போது செயல்தலைவரைப் போல இயங்கும் வாய்ப்பு . யாரும் எதிர்கேள்வி கேட்காது இயக்கத்தை வழி நடத்தியாக வேண்டும் . எதிர்ப்புகளை சமாளிப்பது அல்லது எதிர்கொள்வது எனது வேலை இல்லை . பொறுப்பிற்கு வர இருப்பவர்களின் களம் அது . இனி யாரையம் பொருட்படுத்தாது எனது பாணியில் பயணிப்பது மட்டுமே இனி நான் செய்யக்க கூடியது , செயல்பாடுகளற்றவனுக்குத் தான் வார்த்தைகளில் பதில் சொல்ல வேண்டிய வேலை. செயல்பாடுகளை வழியாகக் கொண்டவனுக்கு அவனது செயல்பாடுகளே எல்லாவற்றிற்கும் பதில்களாக அமைபவை . அதுவே அனைத்திற்கும் பதில்சொல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக