ஶ்ரீ:
கயா
பதிவு : 441 / தேதி :- 10 . மார்ச் 2018
புதுவையில் கடைத்தெருவில் சவ ஊர்வலம் கடந்து போகும்போது அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடையை ஊர்வலம் கடந்து செல்லலும் வரை எழுந்து நிற்பதை நான் நினைவு கூர்ந்தேன் . அப்பாவிடம் கேட்க . அவர் இது நமது வழமை என்றார் . இந்திய முழுவதுமாக சில அடிப்படை சமஸ்காரங்கள் மாறுபடுவதில்லை என நினைத்துக்கொண்டேன் . மரணித்தவரை சுமந்து வரும்போதெல்லாம் அங்கு தெரு முழுவதும் செறிந்திருந்த சிறு வணிகர்கள் சற்றுநேரம் வியாபரத்தை நிறுத்தி எழுந்து நின்று மரியாதை செய்து பின் தங்களின் தொழிலை தொடர்ந்தது எனது சிறு வயது நினைவை தொட்டு சென்றது.
ஒரு ஊர்வலம் நின்று கொண்டிருந்த எங்களை கடந்து சென்ற போது சடலத்தை எடுத்துவந்தவர்கள் , வழி சிறிதானபடியால் நாலவரல் ஒருவர் சகஜமாய் என்னை தொட்டு ஊன்றி கடந்து போனதும், நான் சற்று சங்கடமாக உணர்ந்தேன் . இனி குளிக்காமல் குழுவிடம் சென்று இணைய முடியாது , குளிப்பது ஒரு சிக்கல் இல்லை , மாற்று துணி இரவு தங்கிருந்த விடுதியில் உள்ளது . சென்று எடுத்து வருவது நடவாது . நான் பக்கத்தில் வேட்டி ஜிப்பா மாதிரி ஏதாவது கிடைத்தால் உபயோகித்துக் கொள்ளலாம் என்கிற திட்டதிலிருந்தேன் .அப்போது பக்கத்தில் நின்றிருந்த சிறிய வணிகர் என்னை நோக்கி ஹிந்தியில் எதோ சொல்ல நான் என்னுடன் வந்தவரிடம் என்ன சொல்லுகிறார் என்றதும் , அவர் “ காசியில் தீட்டு என்று ஒன்றில்லை” என்கிறார் என்றார் .
நான் மனதால் சங்கடப்பட்டதை அவர் எப்படி அறிந்துகொண்டார் என்கிற ஆச்சர்யத்தோடு நாங்கள் ஹரிச்சந்திரா காட் சென்று அடைந்தோம் . அது ஒரு படித்துறை சுமார் ஐம்பது அடி நீளமும் அகலமும் கொண்ட படித்துறை நீள நீளமான பத்து பதினைந்து படிகளாக அவை கங்கையை நோக்கி சென்றன ஒவ்வொரு படியும் ஐந்தடி அகளமிருக்கும் . சில மிக இடுங்கலானவை . ஒவ்வொரு படித்துறையும் தடுப்பு சுவர் ஒன்று பிறிதொரு “காட்” ல் இருந்து பிரித்தது முழுவதுமாக அடர் கோபி மஞ்சள் வண்ணத்தில் , கைப்பிடி, சுர்கள் மற்றும் அனைத்து கட்டுமானங்களும் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது ஒருவித மன அமைதியை தருவதாக இருந்தது.
மணிகர்ணிகா காட் பக்கத்தில் பார்க்கும் தூரத்திலிருந்தா பிறிதொரு “காட்”ல் அமர்ந்து கொண்டோம் . வரிசையாக சடலங்கள் வருவதும் பின்னர் எரிந்த நிலையில் அவற்றை இழுத்து கங்கை விடுவதுமாக தொடர் நிகழ்வுகள் நடந்தபடி இருந்தன . அடுக்கடுக்கான சடலங்கள் வந்துகொண்டிருக்க எந்தவிதமான மனவிகாரமும் இன்றி அதை பார்த்துக்கொண்டே இருந்தோம் .
அங்கிருந்து அடுத்ததாக கயா செல்ல வேண்டும் . காசியிலிருந்து முன் மதியம் கிளம்பினால்தான் இரவுக்குள் கயா சென்று சேரமுடியும் என்கிற முடிவுடன் அங்கிருந்து புறப்பட்டோம் . வாரணாசியிலிருந்து கயா 250 கி.மீ தூரம் 6:00 மணிநேரப்பயணம் என்றார்கள் .மத்திய உணவை வழியில் பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவோடு ஏற்கனவே தயாரித்திருந்த சாப்பாட்டு பாத்திரங்களும், அனைத்தும் சமையல் தட்டுமுட்டு சாமாண்களையும் வண்டியில் ஏற்றப்பட்டு தயாராக இருந்தது .
கயா . இந்திய நாட்டை உலகமெங்கும் கொண்டு சென்ற சில நகரங்களில் ஒன்று . புத்தர் கயாவில் சித்தியடைந்தார் என்பது உலக பௌத்த சம்பிரதாயத்திறகு மிக முக்கியமான ஒரு ஸ்தலம். ஒரு இந்துவிற்கு பித்ரு கார்யம் செயவதற்கான முக்கியமான ஐந்து இடங்களில் முக்கியமானதாக கயா ராமாயண காலத்திலிருந்து பேசப்படுகிறது. தர்பனாதி கிரியைகளை இங்கு பெண்களும் செய்யலாம் என்கிற விதி, சீதை காலத்திலிருந்து கடைபிடிக்கடுவதாக இங்கு கர்ணபரம்பரை கதைகள் உலவுகின்றன. ஒரு இந்து மகன் தனது குல மூத்தோருக்கு அவர்களின் திதியில் வருடந்தோரும் பிண்டப்பிரதானம் இட வேண்டும் என சாஸ்த்ரம் விதிக்கிறது . அதில் முக்கியமாக காசி,கயா, மாயா,பத்திரி,அவந்திகா,காஞ்சி . புண்ணிய ஷேத்திரங்களில் ஆறு இடங்களில் ஏதேனும் ஒன்றில் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை சொல்லுகிறது. ஹிந்துக்களால் முக்கியமான ஒரு தர்மமாக இன்றுவரை நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது . ஐந்தில் விசேஷித்து கயா முக்கியமான ஒன்று .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக