https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 4 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 43 . வாழ்தலில் வாழாமை.

ஶ்ரீ:



வாழ்தலில் வாழாமை



பதிவு :  434 / தேதி :- 03. மார்ச்   2018




லௌகீகனுக்கு உடலும் மனமும் , ஆன்மாவை ஆள்பவை . ஆனால் ஆன்மாவின் பேரால்தான் இங்கு வரவுகளும் செலவுகளும் நடைபெறுகின்றன . கை செலவுக்கு உதவாத அன்னிய செலவானி போல. அவை எங்கோ காலமில்லாத காலத்தில்   வைப்புநிதியாக உள்ளது எனவும்  , அதை கண், கை, காலில்லாத ஆத்மா அனுபவிக்கும் எனவும் அவனுக்கு புரியாத  சாஸ்திரங்கள் சொல்லுகின்றன . மனம் தன் விழைவை உடலிலிருந்து பெறுவதாக பாவனைகொண்டு அதன் விழைவதை நிகழ்த்தி கொள்ள  ஆன்மாவை நிர்பந்திக்கிறது . ஆன்மா  ஒரு அங்கீகரிக்கும் நிழல் மட்டுமே போலும் . அக்கூட்டில் தானும் ஒரு உறுப்பென அது ஏமாற்றப்பட்டே அது நாள்வரை  அனைத்தையும் அங்கீகரிக்கிறது . ஆனால் அது அறிவதில்லை ,பிற இரண்டும்  எத்தகைய நன்றி இல்லாதது என்பதை. அந்தப் புரிதலை அடைகிற தருணம், அது கொடுக்க இயலுவது  தனிமையை மட்டுமே.

சமீபத்தில் புதுவை வந்திருந்த திரு. ஜெயமோகனுடன் நான் சந்தித்த இரண்டு இலக்கிய ஆளுமைகளை பற்றி இப்போது நினைத்துப்பார்க்கிறேன் . ஒருவர் திரு.கி.ரா . பிறதொருவர் திரு.ரமேஷ் பிரேதன் . நடுத்தர வயதில் இருக்கும் திரு.ரமேஷை பார்த்தபோது நான் அறிந்துகொண்டது , அங்கு இருந்த தனிமை எத்தகையது என . தனிமையின் பிற வடிவங்களை வாழ்கையில் சந்தித்திருக்கிறேன். சிலவற்றை என்மேல் நான், வலிந்து ஏறிட்டுக்கொண்டு சில ஆண்டுகள் இருந்ததும் உண்டு . ஆனால் இது மாறுபட்ட தனிமை . அந்த உலகிலிருந்து அவர் அடைய இனி ஒன்றில்லை . வாழ்தலுக்காக , வாழ்தலை நிகழ்த்துதல் மட்டுமே என்பது என்னை திகைக்க வைத்தது . அவர் பேசும்போது சொன்ன அந்த வார்த்தைகள் . தன்னனுடைய செயலிழந்த கை காலை தொட்டு  . தன் உடலின் மரணத்தை தான் பார்ப்பது என்று . அவர் சொன்னது ஒரு வகையில்  சரி. ஒருவருக்கு புறவயத்திலுள்ள எதுவும் பயன்படாத காலம் என்று ஒன்று உண்டு .

சந்திப்பின் பிறிதொரு ஆளுமை 95 வயதான கி.ரா . அன்று மாலை அவர்கள் இருவர் பேசியது , வாழ்வியல் ஒரு கணம் நமக்கு கொடுக்கும் வெறுமை பற்றியது . அது இந்த உலகில் பிறந்த எவருக்குமானது , ஆனால் இந்த இருவர் சொன்னது அந்த வெறுமையின் வாழ்தலும் வாழாமையும் பற்றிய இரு முனைகளை குறித்து  .  கசப்படையாத தன் தன்மையிலிருந்து அவர் பேசிய கடந்த கால நினைவுகளும் , பல நுட்பமான விஷையங்களும் அவரை என்றும் நினைவில் வைத்திருக்கச் செயபவை . அன்று திரு ஜெயமோகனுடன் சென்று நான் பெற்ற அனுபவம் எனக்கு இதைத்தான் சொன்னது . புறவயமான உலகம் நம்முடன் உணர்வுகளுடன் மட்டுமே தொடர்புறுத்துபவை. அவற்றை கருத்துக்களாக மாற்ற இயலாதவனுக்கு அவை கொந்தளிப்பை மட்டுமே அளிப்பவை  . உணர்வுகள் கருத்துக்களாகிற போதுதான்   அர்த்த பூர்வமாகிறது , அவற்றில் அரிதலுக்கும் மாற்றங்கள் செய்வதற்கு  எப்போதுமே வாய்ப்பிருக்கும் . அதிலிருந்து புதிய பாதைகள் நாம் கண்டடைய இயலும் .

திரிவேணி சங்கமத்தில் என்னிடம் சொல்லிச் சென்ற பெரியவரை நினைத்துக்கொண்டேன் .“நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை“ . ஆம் நான் எந்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இவ்வளவு இடர்களை தாண்டி இங்கு வந்தது. அது அந்த நம்பிக்கையிலிருந்து எழுந்தது . பகுத்தறிவதற்கானதில்லை இந்த யாத்திரைபல வருடங்களாக அழுதிக்கொண்டிருந்த , வெறுமையும் நிறைவின்மையிலிருந்து  என்னை மீட்டுக் கொள்ளவதற்கான எண்ணமே , என்னை இந்த யாத்திரைக்கு வரும் விசையை கொடுத்தது . யாத்திரையும்நதிகளின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பும் அதன் நினைவுகளும்  எனக்கு ரிஷிகேஷில் துவங்குகிறது . என் மன மாற்றத்திறகான விதை ஊன்றப்பட்ட இடம் அது , பல காலம் கழித்தே அதை அறிந்து கொண்டேன் . அதை நினைக்கும் ஒவ்வொரு நேரமும் கண்கள் பணிப்பதை நிறுத்த முடிவதில்லை . அதன் நினைவு மட்டுமே என்னை பெரிதும் ஆற்றுப்படுத்துவதாக  நான் எப்போதும் உணர்கிறேன்




என்னைப்போல சிந்தனையாலோ ஆர்வத்தினாலோ  தன்னிலை மறந்த சிலரைத்தவிர மற்ற ஏல்லோரும் ஜீயர் சுவாமி நிகழ்த்திக்கொண்டிருந்த பூஜையில் பங்கேற்க கரைக்கு சென்றுவிட்டனர் . நான் அவர்களுடன் சென்று இணைந்துகொண்டேன்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக