https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 1 மார்ச், 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 41 . முகங்களின் கொலு .

ஶ்ரீ:



முகங்களின் கொலு  





பதிவு :  431 / தேதி :- 01 மார்ச்   2018








செழுமையான நிறத்தில் வருவதைகங்கைஎன்றும் ,அதில் கரிய நிற புகைபோல படருவதை  “யமுனைஎன்றும் அவர் பிரித்துக்காட்டினார். ஆம் , அவர் சொன்ன பிறகு , அவை இருவேறு நிறங்களாக ஓடிவருவதும் , நீரில் இளம் செம்மையான ஒரு தாரையில், கரிய நிறத்தில் ஒரு கறையைப்போல ஒரு பகுதி அந்த நதி நீரில் நிழல் போல நீண்டு படர்ந்து பின் தன் நிறத்தை இழந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அது நேராக நான் நிற்கும் இடத்திற்கு பிரவாகமாக வருவதையும், அவை ஒன்றுடன் ஒன்று முயங்கி கலப்பது போல ஏதோ ஒன்று அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது .

என் ஆர்வம் சரஸ்வதி நதியை பற்றியது .”சரஸ்வதி நதி வேதகாலத்தில் இருந்ததாகவும் . பின்னர் மறைந்து போனதைப்பற்றி சொல்லப்படுகிறதே . சரஸ்வதி நதியை தேடி சிலர் பயணப்பட்டதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்என்றதும் , அவர் சிரித்துக்கொண்டுநம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்என்று சொல்லிவிட்டு,  “நீங்கள்  நின்றிருக்கும் இடத்தில மூச்சை பிடித்துக்கொண்டு  மூழ்கிப்பாருங்கள் , நதி ஓட்டத்தில் ஒரு வித்தியாசனத்தை உணர்வீர்கள் . கங்கையும் யமுனையும் கலந்து ஒரு வேகத்தில் பயணப்படும் போதுஅதன் மத்தியில் வேகமா ஒரு நீரோட்டத்தை உணர்ந்து கொண்டால் ,உங்களால்  பார்க்க முடிந்தால் ,அதன் வெண்மை நிறத்தை உங்களால்  பார்க்கமுடியும்என்றார்




முதலில் மூழ்கி எழுந்த போது உள்ளே என்னால் கண்களை திறக்கவே முடியவில்லை .இரண்டாவது ,மூன்றாவது முறைஓரளவிற்கு கண்களை திறந்து பார்க்க முயற்சித்தபோது நதியின் வேகத்தால் உள்ளே நிற்க முடியவில்லை. ஆழம் வரை செல்ல உடலில் போதுமான எடை இல்லை என்பதும், லாவகமாக ஆழத்தை நோக்கி செல்லும் பயிற்சி இல்லாததால், நீர் மட்டத்திலிருந்து சில அடி ஆழத்திற்கு மேலாக செல்ல இயலவில்லை . சரி இதை முயற்சித்து பார்த்துவிடுவது என்று ஈடுபட்டபோது , கீழே இருந்த வேர் போல ஒன்று பிடிமானத்திற்கு கிடைத்ததும் . அதைப் பற்றிக்கொண்டு என்னால் நீரின் ஆழத்திற்கு முழுமையாக செல்ல முடிந்தது . ஆழத்தில் சற்று நிதானித்து கொண்டதும், என்னால் அந்த நதியில் நீரின் ஒழுக்கில் ஒரு தாரையாக வரும் வேகத்தில் அதி வேகமாக பிரிந்து பாயும் பிறிதொரு தாரையை அறிந்துகொள்ள முடிந்தது

அது ஒரு உற்சாகத்தை கொடுத்ததும் அடுத்தடுத்த முயற்சியில் வண்ண வித்தியாசத்தை அறிய முயன்றேன்  ஆனால் என்ன முயற்சித்தும் நீர் கலங்கலாக ஒரே வண்ணத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது . அவர் சொன்னபடி அதை என்னால் அப்படி பிரித்து இனம் காண முடியாது போனது  . ஆனால் நதியின் ஒழுக்கை கொண்டு மூன்றையும் உணர்ந்து கொண்டதாக  அனுமானித்துக் , “திரிவேணி சங்கமத்தைவணங்கி வெளியே வந்தேன் . என்ன ஒரு அற்புதமான அனுபவம்.

திருவேணி சங்கமத்திலிருந்து எழுந்து வெளியே வந்து உடல் துவட்டி உடை மாற்றிக்கொண்டே, அந்த நதிக்கு அடியில் , அதன் ஒழுக்கை ஒரு தாயின் தடவல் போல ஒன்று உடலில் இருந்து கொண்டே இருப்பதை உணரமுடிந்தது . அங்கே என்ன கண்டேன் ?. என்பதை பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தேன் . என்னால் அங்கு கண்ணை கொண்டு எதையும் பார்க்க முடியவில்லை . ஆனால் நதியின் வேக மாறுபாட்டை நிச்சயமாக உணரமுடிந்தது . அது ஒரு தனித்த நீர்த் தாரையைப்போல  வேகம் மிகுந்ததாக இருந்தது

மேலும் கீழும் வரும் நீரொழுக்கை விட பலமடங்கு விசை கொண்டதாக  ஒரு தனித்த காற்றைப்போல அடர்திதியாக இருந்தது . அது எல்லா நதியில் உள்ள உள்நீரோட்ட ஒழுக்காக அல்லது எனது உளமயக்காக இருக்கலாம் என ஒன்று என்னுள் தர்க்கிக்க துவங்கியது . அந்த தர்க்கம் சரியாகக்கூட இருக்கலாம் . ஆனால் நான் சந்தித்த அந்த மனிதர் முகம் , அவரது நம்பிக்கை எனக்கு அதை விளக்க அவர் எடுத்துக்கொண்ட பிரயாசை,போன்றவை கண்முன் நிழலாடியது . அவரை சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தேன் அவர் சென்றுவிட்டிருக்க வேண்டும் . அனால் அவர் சொன்ன அந்த வார்த்தை மட்டும் காதில் கேட்டக்கொண்டே இருந்தது.


நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை“ . ஆம் நான் எந்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இவ்வளவு இடர்களை தாண்டி இங்கு வந்தது,வெறுமே குளிக்க மட்டுமே என்றால், அதை வீட்டிலேயே செய்திருக்கலாமே . இந்தனை ஆயிரம் மைல் கடந்து வந்திருக்க வேண்டியதில்லையே . மனதிற்கு மிகவும் நிறைவாக ஒரு நிம்மதியை அடைந்தேன் . உள்ளே நெடுங்காலமாய் அழுத்திக்கொண்டிருந்த ஒரு விசை இந்த நதியில் அடித்துக் கொண்டு போய்விட்டதை போல ஒரு எடையின்மை . அது வேரெங்கும் கிடைக்காத ஒரு கரைந்து போதல் . அங்கு இருக்கும் பல்லாயிரம் முகங்களின் தொகுப்பு அதில் தெரியும் அபரிதமான நம்பிக்கை . அது ஒரு உளமயக்காக இருந்தாலும் இப்போது அடைந்திருக்கும் நிம்மதியும் , அதை உணர்ந்த இந்த தருணமும் , எனக்கு வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கும் .அது ஒன்றே இதன் பிரயோஜனம் எனில், ஆம் , அது அவ்வாறே ஆகுக.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்