ஶ்ரீ:
மணிவிழா - 14
03.11.2022
வாழ்கையில் வெற்றி தோல்வி பற்றிய புரிதல் காலத்தால் மாற்றக் கூடியது. அந்த மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் நாற்கள விளையாட்டு. அதில் வெற்றி தோல்வியாவதும் தோல்வி் வெற்றியாவதும் அதை கையாள்பவரின் தற்கால எண்ணம் மட்டுமே. ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழு அமைக்கும் வாய்ப்பு வந்தது ஒரு நல்லூழ். எனது தேடலின் விடையை , பொருளை தேடி அலைவதற்கு பதில் அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ளும் பெரிய வாய்ப்பாக அதை பார்த்தேன். காரணம, அதில் முதல் மாணவன் நான். எனது கூச்சத்தையும் தநக்கத்தையும் கடந்து அந்த நிகழ்வுகளில் அமர்ந்து கற்கும் வாய்ப்பிற்கு காத்திருந்தேன். அனைத்து விதத்திலும் என் தேடலுக்கான கருவிகளை கண்டடைய உருவாக்க எனக்கு அது உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மனம் அமைதி அடையாது தேடலுக்கான கேள்வி உருவாகி வருவதற்கு முன்பு அதற்கான விடையை நோக்கிய பாதை தேர்வது சாத்தியமில்லாதது.
நான் எனது அடிப்படை கேள்விகளை உருவாக்கிக் கொள்ள அதற்கான விடையில் இருந்து துவங்க நினைத்தேன். அதை எனக்கு சொல்லக்கூடிய பெரும் ஆளுமைகளை அணுகும் சந்தர்ப்பத்தை அது கொடுத்துவிடும்.நான் களத்தை உருவாக்கி அந்த ஆளுமைகளின் அருகமர திட்டமிட்டேன். அதன் முதல் பகுதி செறிவாக அமைந்தது. வேளுக்குடி கிருஷ்ணன் போன்றவர்களை மிக எளிதில் அணுகி அமர்ந்து தயக்கமற்ற கேள்விகை வைக்கும் வாய்ப்பை அது கொடுத்தது. ஒரு புள்ளியில் அமைப்பின் பலத்தை அதீத உயரத்திற்கு கொண்டு செல்ல அவரது ஆளுமை உதவியது.
அவருக்கும் என்னை புரிந்திருக்க வேண்டும். அவருடன் நேரடியாக உரையாட முரண்படம் வாய்ப்பை அளித்துக் கொண்டே இருந்தார். எந்த இயக்கத்திலும் பொறுப்பு வகிக்க மறுத்தவர் ஆனால் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் துணைத் தலைவராக வந்து அமர்ந்தார். எனது ஆச்சாரியன் திருக்கோவிலூர் ஜீயர் தலைவராக நான் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளரானேன். புதுவையின் அனைத்து முக்கிய ஆளுமைகளை அதில் கொண்டு வந்தேன். பல உட்பிறிவுகளை உருவாக்கி அதற்கு உரிய தலைமைகளை நியமித்து அது தன்னியல்பில் செயல்பட சற்று ஒதுங்கி நின்றேன். எனது கனவு திட்டம் “திறந்த அரங்கம்” அது மதம் மொழி நம்பிக்கை என எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. அனைத்து தரப்பு ஆளுமைகளும் அதில் பங்கு பெற்று தங்கள் நிலைப்பாட்டை முன் வைக்க முடியும். அதை விவாதம் என்கிற அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும் அதை தொடர்ந்து வழிநடத்தும் மற்றும் மட்டுறுத்தும் குழு நியமிக்கும் முயற்சியில் இருந்த போது முதல் சிக்கலை எதிர் கொள்ள நேர்ந்தது. நான் புதுவையை சேர்ந்த வைணவ அறிஞரும் சமஸ்கிரத விற்பன்னருமான DA. ஜோசப்பை நிர்வாக குழுவில் சேரக்க முயன்ற போது எழுந்த எதிர்ப்பை கண்ட பிறகு நான் எதனுடன் மோதிக் கொண்டிருகிறேன் என அறிந்து கொண்டேன்.
இங்கு DA. ஜோசப்பை பற்றி ஒன்று சொல்ல வேண்டும். அவர என் தந்தை அறிமுகம் செய்து வைத்தவர். அவர்மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். விசிஷ்டாத்வைதம் மீது தர்க்க பூர்வமான நம்பிக்கை உருவாக்கியவர். எனது தந்தை இருதய நோயின் கடுமையால் தனது இறுதி காலத்தை மருத்துவமணைகளில் கழிக்க நேரிட்ட போது பூஜை அறைக்கு வராமலானார். அந்த சூழலில் அவரது நம்மிக்கை சார்ந்து அவருடன் உரையாட இயலாமலானது. அவர் தனது இறுதி காலத்தில் விசிஷ்டாத்வைத சித்தாந்தின் மீது என்ன மாதிரியான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதைப்பற்றிய கேள்விகளை எழுப்பும் சந்தர்பமும் வாய்க்கவில்லை. அந்த காலகட்டங்களில் தத்துவ கோட்பாடுகளின் சந்தேகங்களுக்கு மிக விரிவான பதிலையும் அசையாத நம்பிக்கையையும் DA. ஜோசப் ஏற்படுத்தினார். அவர் மரபான குருவிடம் கற்றிருந்தாலும் தன்னை வைஷ்ணவனாக முன்னிறித்திக் கொண்டாலும் மரபான தோற்றம் மற்றும் பெயர் மாற்றத்தை ஏற்கவில்லை. அதற்கான தர்க்கம் அவரிடம் இருந்தது. அதை அவரது தன்னறமாக நான் உணர்ந்ததால் அவரிடம் கற்க அது எனக்கு தடையாக இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக