ஶ்ரீ:
30.01.2023
* உடல்களின் குவிமுணை *
கனவையும் நினைவுகள் என மிக அருகில் உணர்வதில் உடலைப்போல பிறிதொன்று இல்லை. உடல் பிரபஞ்ச வெளியுடனும் இணைந்திருக்க உள்ளம் இரண்டினூடாக இடைவிடாது தொடர்பு கொண்டுள்ளது. உள்ளம் என்பதை அதில் பெருகி வழியும் சொற் பெருக்கு வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. கூட்டு நனவிலியில் நிலைபெற்று உள்ளவைகளை படிமங்களாக ஆழ்மனத்திற்கு அது கனவின் வழியாக பின் சிந்தனை வழியாக புதிய கற்பனையாக கடத்துகிறது. அவையே பல சமயங்களில் உள்ளுணர்வாக வெளிப்படுகிறது போலும் . நான் என்கிற “ஆணவத்தால்” கட்டுப்படுத்தபட்டுள்ள மனம் சிலந்தியை போல உடல் என்னும் கூட்டிற்குள் அமர்ந்து கொண்டு அதை இடைவிடாது அறிந்து சவால்களை புரியாத நிலையழிவுகளாக மனத்திற்கு கடத்தி வருகிறது. மனம் நான் அல்ல என புரிந்திருக்கிறேன். மனமென்பதை அதன் உள்ளார்ந்து எழும் மொழியின் பெருக்கு வழியாக அறிய முடிகிறது.
உள்ளத்தின் பகுதியாக மனதை புரிந்திருக்கிறேன். மனம் என்கிற தன்னிச்சையாக ஒழுக்கு ஒருபோதும் எனக்கு சாதகமானதல்ல. ஆனால் ஒரு கூறு என்னை அதனுள் அனுமதிக்கும் வரை அது ஒரு நல்லூழ். அனுமதி மறுக்கப்பட்டவர்கள் மனம் பிறழ்ந்தவர்களாக புரிந்து கொள்ளப் படுகிறார்கள் என்றாலும் அனைவரும் ஒருவகையில் “அதன்” நிற பேதங்களில் இருந்து கொண்டிருப்பவர்களே .
மனதை தனது உடற்பாகமாக எண்ணி மயங்கும் தோரும் புறவய உலகின் தொடர்பில் இருக்கும் உடலை அது நிராகரிக்கிறது. உடல் பிறதொரு புரியாத புதிர். ஆனால் அதன் வழியாக வந்து சேரும் தகவல்களை ஆழ்படிமங்களாக தொகுத்த வைக்கிறது. மனம் வாய்ப்பு கிடைக்கும் தோரும் அதிலிருந்து பெரும் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்கிறது.
எனது சிந்தனைகள் அதில் நிகழ்ந்தாலும் உடல் மனம் இரண்டும் நான் இல்லை என புரிந்திருக்கிறேன். இந்த உடலில் நான் யார். ஆத்மா மட்டமே என்பதால் மனதின் ஒரு பகுதியில் என் சிந்தனை நிகழ அது இடமளிக்கிறது. பல சமயங்களில் அது நிகழாதபடி நிராகரிக்கிறது. மனம் உடலை சார்ந்து இயக்கம் கொள்கிறது நான் என உணரும் ஒன்றைவிட ஆகப் பெரியது என புரிந்து கொள்கிறேன்.
மறைந்த அணுக்க நண்பன் நம்பிராஜன். எனது சிக்கல் மிகுந்த நாட்களில் மனசாட்சி போல என்னுடன் எப்போதும் இருந்திருக்கிறான் . எனது சாதனைகளை மனக்குமுறல்களை வருத்தங்களை அவனிடம் கொட்டித் தீர்த்திருக்கிறேன். நான் எனது குமுறமும் எண்ணங்களை விரித்தெடுக்கும் போது அமைதியாக ஒரு சொல் சொல்லாமல் கேட்டபடி இருப்பான். சில சமயங்களில் மகிழ்வான தருணங்களையும் பகிர்ந்து கொண்டதுண்டு. ஒரு முறை தில்லியில் நடைபெற்றி அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தின் இறுதியில் புதுவையின் அடுத்த தலைவராக என்னை தெரிவு செய்து வைத்திருப்பதை அந்த கூட்டத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் என்னிடம் சொன்னார்கள். அதை ஒட்டி அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்க சொல்லி அதற்கான அவரது அனுமதியை பெற்றுத் தந்தனர். மறுநாள் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு அவரது அதிகாரபூர்வ இல்லமான 10, ஜன்பத்தில் சந்தித்தேன்.காங்கிரஸ் அலுவலகத்தில் சந்திக்காமல் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தது பெரிய கௌரவம்.
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்பது எனது வாழ்நாள் கனவாக தலைவர் சண்முகத்திடம் சென்று இடைந்து பின்னாளில் உருவானது . அதன் பொருட்டு பல ஆண்டுகள் என்னை வரையறை செய்து கொண்டு மெல்ல வளர முயன்றேன். இளைஞர் காங்கிரஸில் நுழைந்த போது அப்படிபட்ட எந்த எண்ணமும் எனக்கில்லை. அரசியல் பலம் தரும் கிளர்ச்சி அன்று போதுமானதாக இருந்தது. ஒரு புள்ளியில் அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலன் தனது அரசியல் கணக்கிற்காக தலைவர் பதவிக்கு என்னை தெரிவு செய்தது எனது பேசுதல் குறைபாட்டை மையமாகக் கொண்டதாக இருந்தாலும் எனக்கு நட்பின் அடிப்படையில் அனைவரின் ஆதரவு இருந்தது பிறிதொரு கராணம். அதுவே என்னை பற்றிய அச்சத்தை அவருக்கு விளைத்திருக்கலாம். பின்னாளில் என்னுடன் முரண்படும் போக்கை அவர் எடுத்தது இதன் பின்னணியில் இருக்கலாம்.
தலைவர் கனவுடன் பாலனுடன் பயணித்த கமலக்கண்ணனுக்கும் , தமோதரணுக்கும் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டது அதிர்வளிப்பதாக இருந்திருக்க வேண்டும். கமலக்கண்ணன் எனது பேசுதல் குறைபாடை பற்றிய இளிவரலாக சொன்ன சொல் என்னை மிக கடுமையாக சீண்டியது. அதை ஒட்டி என்னை நோக்கி நான் பார்க்க துவங்கினேன்.
நான் என்னை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொண்டது அதன் பின்னர் நிகழ்ந்தது .பதினைந்து வருடமாக அதை நோக்கிய உடலாலும் உள்ளத்தாலுமான நீண்ட பயணத்தில் இருந்தேன். தில்லியில் தலைவராக நான் முன்மொழிப்பட்ட போது உள்ளம் உணர்ந்தது போல உடலால் அதை உணரவில்லை. உள்ளம் கிளர்தலை போல அன்று உடல் மலர்வது. உள்ளத்தை நம் எண்ணத்தால் கிளர்ந்தெழச் செய்யலாம். ஆனால் புறவய உலகுடன் தொடர்புள்ள உடல் வேறு வழிகளில் தனது வாய்ப்பை அறிந்து உடல் உள்ளே நிகழ்கின்ற ரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது என நினைக்கிறேன்.அதில் உள்ளம் தள்ளி நிற்கிறது. அதன் எதிர் தட்டாக “செல்வாக்கு” என்பது அதிகாரத்தின் பொருட்டு பிறர் மனம் வழியாக உருவாகி கடத்தப்படும் ஒருவகை உடல்ரீதியான முரணியக்க வெளிப்பாடாக இருக்கலாம்.அது பிறரை தன்னளவில் தூண்டுகிறது. பணிதலும் மறுத்தலும் அதன் இரு கூறுகள். அதை உருவாக்கும் ரசாயன மாற்றம் உள்ளத்துடன் தொடர்புற்று இருந்தாலும் அதை உள்ளம் மட்டுமே தனித்து உருவாக்கி விட இயலாது. சுற்றியுள்ளவர்கள் தங்கள் உள்ளத்தால் அதை உருவாக்கி மெருகேற்றுகிறார்கள். அது இன்னதென தெளிவாக வரையறை செய்ய இயலாது போனாலும் அப்படி ஒன்று உண்டு என அதை நெருக்கமாக அறிபவர்கள் இருக்கிறார்கள். உடல் வழியாக நிகழும் மலர்தல் எனக்கு நிகழாததால் நான் தலைவராக வருவது சாத்தியமில்லை என உணர்ந்தேன்.
புதுவை திரும்பிய பிறகு தில்லி அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் நிகழ்ந்தது. அவர்கள் அறிவுறுத்தலின்படி காங்கிரஸில் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தது குறித்து பேசிக் கொண்டிருந்த போது நான் தலைவராக வருவது நிகழாது போலிருக்கிறது என்றேன். அதை மறுத்து நம்பிராஜன் பேசினாலும் இறுதியாக எனது சந்தேகமே உண்மையானது. பல்வேறு அரசியல் சமன்பாடகளால் நான் தலைவராக நியமிக்கப்படவில்லை.